Showing posts with label புதினா. Show all posts
Showing posts with label புதினா. Show all posts

Monday, November 28, 2016

புதினா சாகுபடி


புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யகூடிய பயிர்களுள் ஒன்றாகும். இதற்கு பட்டம் எதுவும் கிடையாது.
மண் வகைகள்
வளமான ஈரப்பதம் உள்ள மண், புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும். புதினா களிமண், வண்டல் மண், ஆற்று படுகை மண்களில் நன்றாக வளரக்கூடியது. மிதவெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட்டால், புதினா நன்கு வளரும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்யவேண்டும்.
நீர் மற்றும் உர மேலாண்மை
புதினா சாகுபடிக்கு உப்பு நீரையோ, சப்பை நீரையோ பாய்ச்சினால், அது விளைச்சலைப் பாதிக்கும். எனவே நல்ல தண்ணீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளைப் பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதலோ இருந்தால் இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம். புதினாவிற்கு தொழு உரத்தை தவிர வேறு உரங்கள் தேவையில்லை. ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிடவேண்டும்.
அறுவடை
60 நாட்களில் பறிக்கும் நிலைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோவரை பறிக்கலாம். சீசன் காலங்களில் ரூ.50 முதல் 70 வரை விலை போகிறது. சீசன் இல்லாத காலங்களிலும் ஒரு கிலோவுக்கு ரூ. 30 கிடைக்கும். செலவு போக அதிகபட்சமாக ரூ.1 லட்சம்வரை ஒரு அறுவடையில் லாபம் கிடைக்கும். 4 ஆண்டுகள்வரை தொடர்ந்து 60 நாட்களுக்கு ஒரு முறை புதினாவை அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.

வாழை, கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் ஊடு பயிராகவும் புதினாவை பயிரிட்டு கூடுதல் லாபம் பெறலாம்.

Thursday, August 6, 2015

புதினா சாகுபடி - Mint Cultivation

புதினாவின் விவசாயப்பணி என்பது மிக எளிமையான சிறந்த தொழிலாகும். நிலவளம் உள்ள ஏழை நிலச் சுவான்தார்கள்கூட இந்தத் தொழிலின் மூலம் பெரும் பணம் திரட்டலாம் வளமான ஈரப்பதம் உள்ள மண் புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும்.

படர்ந்து விரிந்த தென்னந்தோப்புகளில் நன்றாக நிலத்தை உழுதபின் மக்கிய கோழிக் கழிவுகளை ஏக்கருக்கு 5 டன் வீதம் முதலில் இடவேண்டும். இதன்பிறகு ஒரு மூடை டி.ஏ.பி.யும் ஒரு மூடை மூரேட் ஆப் பொட்டாசியமும் அடித்தள உரமாக இடவேண்டும். தென்னை மரங்களிலிருந்து நான்கடி தூரத்தில் 8 x 6 அடி பாத்திகளை வாய்க்கால் வசதிகளுடன் சீராக அமைக்க வேண்டும். ஒன்றரை அடி ஆழத்திற்கு பாத்திகளைத் தோண்டி, கிளறிவிட்டு, நீர் பாய்ச்சி, நடுவதற்கு தயார் செய்ய வேண்டும்.
நடுவதற்காக 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை நீளம் உள்ள புதினா தண்டுகளையும், கிளை விழுதுகளையும் பயன்படுத்தலாம். தண்டுகளைச் செங்குத்தாக நடவேண்டும். சுமார் ஐந்து செ.மீ. பதிந்து இருக்கும்படியும் அதில் ஒன்று அல்லது இரண்டு கணுக்கள் இருக்குமாறும் வேர் விடுவதற்கு ஏதுவாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை, 20 முதல் 25 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். நடுவதற்கு ஏற்ற காலம் ஜூலை மாதம் முதல் ஜனவரி மாதம் வரை உள்ளதாகும்.

நிலத்தின் ஈரத்தன்மையைப் பொறுத்து வாரத்திற்கு இருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். நட்ட 60 நாட்களில் கூரான கத்திகளால் புதினாவை அறுவடை செய்யலாம். வேரிலிருந்து 3 செ.மீ. விட்டு, 25-30 செ.மீ. நீளம் உள்ள தழைகளை அறுவடை செய்யலாம். அதைத் தொடர்ந்து அறுவடைகளை 55-60 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம். அறுவடையைக் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையிலும் செய்யலாம்.
அறுவடை செய்த தழைகளை அதே நாளில் விற்பனைக்கு கொண்டுசெல்ல வேண்டும். மேலும் அறுவடை செய்தவுடன் நிழல் உள்ள அறைகளில் போட்டு தென்னஞ் சோகைகளைக் கொண்டு மூடி, புதினாவின் புதுத்தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.