Showing posts with label வெண்டை. Show all posts
Showing posts with label வெண்டை. Show all posts

Tuesday, November 29, 2016

காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் தவிர்க்க பூண்டுக் கரைசல்



கத்திரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் (கோஜலம்) ஊறவைத்து, நன்றாகக் கொதிக்கவைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து பிஞ்சுப்பருவம் மற்றும் காய்ப்பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் செடிகள் நனையும்படி தெளிக்கலாம். செடிகளைத் தாக்கும் பூச்சிகளை விரட்டியடிக்கும் ஆற்றல், இந்த புகையிலை+பூண்டுக் கரைசலுக்கு உண்டு.

நொச்சி, வேம்பு, ஆடுதொடாஇலை (ஆடாதோடை), நிலவேம்பு, பப்பாளி இலை என கிள்ளினால், பால் வடியும் ஐந்து இலைகளையும் சம அளவில் சேகரித்து 2 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் (கோஜலம்) ஒரு நாள் முழுக்க ஊறவைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி விகிதம் கலந்து, அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் செடிகள் மீது தெளிக்கவேண்டும். தொடர்ந்து பிஞ்சுப்பருவம், காய்ப்பருவம் ஆகிய நாட்களில் தெளித்துவர, காய்ப்புழு, அசுவணி, இலைப்பூஞ்சணம் உள்ளிட்ட நோய்கள் அகன்று சீரான மகசூலைப் பெறலாம்.

வெண்டையில் பூச்சி தாக்குதலுக்கு தீர்வு


10 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா!
விதை நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். 20-ம் நாளிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்யா, செடி வளர சிறந்த பயிர் ஊக்கியாகச் செயல்படும். வேறு எந்த இடுபொருளும் தேவையில்லை.
மாவுப்பூச்சிக்கு இஞ்சி-பூண்டு கரைசல்
வெண்டையில் மாவுப்பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வருமுன் காப்போம் முறையில் நடவு செய்த 25-ம் நாளில் இருந்தே, வாரம் ஒரு முறை பூச்சி விரட்டியைத் தெளித்து வர வேண்டும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றில் தலா அரைக்கிலோ எடுத்து அவற்றை உரலில் இடித்து வெள்ளைத் துணியில் கட்டி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஊறவைக்க வேண்டும். 5 நாட்கள் ஊறிய பிறகு கரைசலை எடுத்து வடிகட்டினால் இஞ்சி-பூண்டு கரைசல் தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும். 2 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பைத் தூளாக்கிப் போட்டுக் கலக்க வேண்டும். அதனுடன், 200 கிராம் கல் உப்பைச் சேர்த்துக் கலக்கி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற கணக்கில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
இந்த இரண்டு கரைசல்களையும் சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை கைத்தெளிப்பானால் தெளித்து வந்தால் பூச்சித்தாக்குதல் இருக்காது. அதோடு சோலார் விளக்குப் பொறிகளையும் அமைத்துவிட்டால் அனைத்து வகையான தீமை செய்யும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தி விட முடியும்.
தவிர, வரப்பில் தட்டைப்பயறு, செண்டுமல்லி, காராமணி ஆகிய செடிகளை நடவு செய்து விட்டால்.. பயிரைத் தாக்க வரும் மாவுப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈ, இலைத்துளைப்பான் ஆகியவை வரப்போரப் பயிரில் அமர்ந்துவிடும். இதனால் முதன்மைப் பயிரான வெண்டையை பூச்சிகளில் இருந்து காப்பாற்றி விடலாம்.

Saturday, August 29, 2015

வெண்டை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள்


வெண்டை சாகுபடியில் விளைச்சல் பெருக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
  • ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப சத்து மிகுந்த வெண்டை சாகுபடிக்கு ஆடிப்பட்டம் மிகவும் ஏற்ற தருணம். எனவே, விவசாயிகள் வெண்டை சாகுபடி முறைகளைத் தெரிந்து பயிர் செய்தால் அதிக விளைச்சல் பெறலாம்.
  • வெண்டையில் கோ-2, எம்.டி.யு. 1, அர்கா அனாமிகா,பார்பானி கிராந்தி, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார் ஆகிய சாதாரண ரகங்கள் மற்றும் யு.எஸ். 7902, கோ 3, யு.எஸ்.9ஏ, ஆர்த்தி, வர்ஷா, எம்- 10, எம்- 12, விஜயா, விஷால் ஆகிய வீரிய ஒட்டு ரகங்களும் சாகுபடிக்கு ஏற்றவை.
  • வெண்டையை அனைத்து வகை மண்ணிலும் பயிரிடலாம். நல்ல உரச் சத்துள்ள மண் வகைகளில் நன்றாக வளரும். கார,அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும். வெண்டை பயிரிட ஜூன்- ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி- மார்ச் மாதங்கள் ஏற்றவை.
  • விதையைப் பொருத்தவரை சாதாரண ரகங்களுக்கு ஏக்கருக்கு 3 கிலோவும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஏக்கருக்கு 1.5 கிலோவும் தேவை. மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட வேண்டும்.
விதை நேர்த்தி மற்றும் விதைத்தல் :
  • வெண்டை விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கிலோவுக்கு 2 கிராம் கார்பண்டசிம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை 400 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலரவைக்க வேண்டும். 45 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்து 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் வீதம் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். பத்து நாள்களுக்குப் பின் நன்றாக உள்ள செடியை வைத்துக் கொண்டு மற்றதைக் களைத்துவிட வேண்டும்.
  • விதைத்த பின் வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது உன்னதமானது.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம் :
  • அடியுரமாக ஏக்கருக்கு 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய 27 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
  • விதைத்த 30 நாள்கள் கழித்து 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ் பைரில்லம் மற்றும் 800 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் நேரடியாக இட்டு, தழை மற்றும் மணிச்சத்து உரத் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம்.
இலைவழி உரமளித்தல்:
  • ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா கலந்து பெறப்பட்ட ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30-ம் நாள் முதல் பத்து நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 17 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் கலந்து பெறப்பட்ட ஒரு சத கரைசலை விதைத்த 30, 45 மற்றும் 60 -ம் நாள்களில் என மூன்று முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு இலைவழி ஊட்டம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.
ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம்:
  • காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இனக் கவர்ச்சிப் பொறி வைத்து, தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழித்துவிட வேண்டும். முட்டைகளை அழிக்க ஏக்கருக்கு 40 ஆயிரம் டிரைகோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளை விட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பேசில்லஸ் துரிஞ்சென்சிஸ் என்ற உயிர்ப் பூசணக் கொல்லியை கலந்து தெளிக்கலாம்.
  • ஒரு லிட்டர் நீருக்கு 50 கிராம் வேப்பங்கொட்டைப் பொடி அல்லது 2 கிராம் கார்பரில் நனையும் தூள் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டோபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும். சாம்பல் நிற வண்டுகளைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து ஏக்கருக்கு 5 கிலோ இட வேண்டும்.
  • நூற்புழு தாக்குதல் மண் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், ஏக்கருக்கு 160 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக, பிற உரங்களுடன் கலந்து இட வேண்டும். மேலும் ஏக்கருக்கு 400 கிராம் 3 சத கார்போபியூரான் அல்லது 10 சத போரேட் குருணை மருந்து இடலாம்.
  • அசுவிணியைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. மிதைல் ஓ டெமட்டான் அல்லது 2 மி.லி. டைமிதியேட் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
  • மஞ்சள் நரம்புத் தேமல் நோய்: இது வெள்ளை ஈ எனும் பூச்சியால் வெண்டையில் பரவக்கூடிய ஒரு நச்சுயிரி (வைரஸ்) நோய். எனவே வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வேப்ப எண்ணெய் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டாபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
  • வெள்ளை ஈக்களைக் கவர்ந்திழுக்க மஞ்சள் ஒட்டும் பொறிகளை வயலில் அமைக்கலாம்.
  • கோடைக் காலங்களில் இந்நோய் மிக அதிக அளவில் தாக்குமாதலால் இந் நோயைத் தாங்கி வளரக்கூடிய அர்கா அனாமிகா, யு.எஸ்.9ஏ, ஏ.யு.எஸ்.7902 போன்ற ரகங்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.
  • சாம்பல் நோய்: நோயின் அறிகுறி தென்பட்டவுடனும், பின் 15 நாள்கள் கழித்தும் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை:
  • விதைத்த 45-ம் நாள் முதல் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். 90 முதல் 100 நாள்களில் ஏக்கருக்கு ஆறு டன் வரை மகசூல் எடுக்கலாம். எனவே, வெண்டை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் இந்த ஆடிப்பட்டத்தில் முறையான சாகுபடி முறைகளைக் கடைப்பிடித்து நிறைவான மகசூல் பெற்று பயனடையலாம் என்றார் அவர்.

வெண்டையில் காய்ப்புழு

வெண்டையில் காய்ப்புழு
சேதாரத்தின் அறிகுறிகள்:
  • இளம்புழுக்கள் இளந்துளிர்களை உன்னும்
  • முதிர்ந்தபுழுக்கள் வட்டவடிவில் காய்களில் துளையிடும்.
  • இப்புழுக்கள் காயிணைத் துளைத்து தலைப்பகுதியை உட்செலுத்தி உடலின் பாதிப்பின் பகுதியை வெளியே வைத்தக்கொண்டு சாப்பிடும்.

பூச்சியின் விபரம்:
  • முட்டை : பெண் அந்துப்பூச்சி சொரசொரப்பான வெள்ளைநிற முட்டைகளை தனித்தனியே இளம் இலையின் மேற்பகுதியில் இடுகின்றது.
  • புழு : பச்சை மற்றும் பழுப்பு நிற வேறுபாடுகளை தோற்றுவிக்கும். வளர்த்த புழுக்கள் பச்சை நிறமாகவும் உடலின் பக்கவாட்டில் சாம்பல் நிறக் கோடுகளுடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு :  கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில், மண், இலை மற்றும் பண்ணைக் கழிவுகளில் காணப்படும்.
  • முதிர்பூச்சி : பெண் அந்துப்பூச்சி வெளிர் பழுப்பு நிறமாக இருக்கும். ஆண் அந்துப்âச்சி வெளிர் பச்சை நிறத்தில் V – வடிவக் கோடுகள் இருக்கும்.
  • முன் இறக்கை : பழுப்பு நிற முன் இறக்கையில் V – வடிவக் கோடு இருக்கும்.
  • பின் இறக்கை : ஓரப்பகுதி அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள் :
  • தாக்கப்பட்ட பழங்கள் மற்றும் வளர்ந்த புழுக்களையும் சேகரித்து அழிக்கவும்.
  • நாற்பது நாள் வயதுள்ள ஆப்ரிக்கன் உயர சாமந்தி பூச்செடிகளை கவர்ச்சிப்பயிராக 10 வரிசை தக்காளிசெடிக்கு 1 வரிவை பூச்செடி பயிரிடலாம்.
  • இனக்கவர்ச்சிப் பொறி ஹெலியூர் ஹெக்டேர்க்கு 15 வைக்கவும்.
  • முட்டை ஒட்டுண்ணிப்பான ட்ரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 50,000 எனும் அளவில் வாரம் ஒரு முறையாக 6 முறை விடவேண்டும்.
  • கிரைசோப்பெர்லா கார்னியா எனும் இரை விழுங்கிப் âச்சிகளை நட்ட 30 – ம் – நாள் முதல் வாரம் ஒரு முறை 50,000 முட்டைகள் அல்லது புழுக்களை விட வேண்டும்.
  • ஹெலிகோவெர்பா நிäக்ளியர் பாலிஹிட்ரோசிஸ் வைரஸ் [எச்.எ.என்.பி.வி ] திரவத்தினை ஹெக்டேருக்கு 500 புழு சமன் அளவுடன் பருத்தி விதை எண்ணெய் ஹெக்டேருக்கு 300 கிராம் அளவில் மாலை நேரத்தில் தெளிக்கவும்.
  • கார்பரில் 2 கிராம் / லிட்டர் அல்லது பெசில்லஸ் துருஞ்ஐியென்சிஸ் 2 கிராம் / லிட்டர் அளவில் தெளிக்கவும்.காய்கள் கனிந்ததற்கு பிறகு பூச்சிக்கொல்லிகளை தெளிக்கக்கூடாது.

வெண்டை சாகுபடி - Ladies Finger Farming

தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றான வெண்டை சாகுபடியில் ஒருங்கிணைந்த மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நல்ல மகசூல் மற்றும் சிறந்த வருமானம் பெறலாம்.


இரகங்கள்: கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை: வெண்டை பயிரானது வெப்பத்தை விரும்பும் பயிராகும். நீண்ட நேர வெப்ப நாள்கள் இதற்கு தேவை. பனி மூட்டங்களால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர்காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது.
வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம்.
நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.
பருவம்: ஜூன்- ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி மார்ச்.
விதையளவு: ஹெக்டேருக்கு 7.5 கிலோ தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
நிலம் தயாரித்தல்: மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதை நேர்த்தி மற்றும் விதைத்தல்:
விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும்.
பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும்.
நிழலில் ஆறவைத்த அரிசி கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இந்தக் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும்.
இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல்வேண்டும்.
நீர் நிர்வாகம்:
நட்டவுடன் நீர் பாய்ச்சவேண்டும். பிறகு வாரத்துக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
உரமிடுதல்:
அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து இடவேண்டும்.
நட்ட 30 நாள்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக் கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியமாகும்.
இலைவழி ஊட்டம்:
ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30 நாள்கள் கழித்து 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.
மீயூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டர் நீரில் கரைத்து விதைத்த 30, 45 மற்றும் 60 ஆவது நாளில் தெளிப்பதன் மூலம் விளைச்சலை அதிகப்படுத்தலாம்.
காய்த்துளைப்பான்:
வெண்டையில் காய்த் துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.
காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழித்துவிடவேண்டும். ஹெக்டேருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோ கிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.
கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் அல்லது எண்டோசல்பான் 1.5 மில்லி இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.