Tuesday, April 28, 2015

கறவை மாடுகளை தேர்வு செய்வது எப்படி? (Karavai Maadugalai Thearvu Seiyum Murai) - How to choose milch cows?

பால் பண்ணைத் தொழில் மீதான ஆர்வம் விவசாயிகள் மட்டுமன்றி, பலதரப்பட்ட மக்களிடமும் அதிகரித்து வருகிறது. அதனால், பால் பண்ணைகள் அமைத்து லாபகரமாக நடத்திட தரமான பசுக்களைத் தேர்வு செய்து வளர்ப்பது அவசியமாகும்.

தரமான பசுக்களைத் தேர்வு செய்வது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை இணைப் பேராசிரியர் த.ஆனந்த பிரகாஷ்சிங் கூறியது:
  • ஒரு தனிப்பட்ட பசுவின் உற்பத்தித் திறனை பாரம்பரிய உற்பத்தித் திறன், தனி மாட்டின் உற்பத்தித் திறன், சந்ததியரின் குணாதிசயங்கள் ஆகிய மூன்று காரணிகளால் அறிய முடியும்.
  • இருப்பினும், இந்த மூன்று அளவுகோல்களும் எப்போதும் கிடைப்பதில்லை. அத்தகைய சமயங்களில் பசுவின் தோற்றத்தைக் கொண்டு, அதன் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்கலாம்.
  • பால் பண்ணைத் தொழிலுக்கு பண்ணைகளில் பராமரிக்கப்படும் பசுக்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.
  • கறவை மாடுகளை வாங்கும்போது கலப்பின மாடாகவும் (ஜெர்ஸி அல்லது ப்ரிசியன் கலப்பினம்), முதல் ஈத்து மாடாக அல்லது இரண்டாவது ஈத்துக்குத் தாண்டாத மாடாகவும் இருக்க வேண்டும்.
  • பால் மாடுகளில் உற்பத்தித் திறன் இரண்டாவது ஈத்தில் இருந்து 4ஆவது ஈத்து வரை அதிகரிக்கும். அதன்பிறகு, பாலின் அளவு குறையக்கூடும்.
  • எனவே, பால் அதிகம் தரக்கூடிய ஈத்துள்ள 2 முதல் 4ஆவது ஈத்தில் உள்ள மாடுகள் பண்ணையில் இருப்பது அவசியம்.
  • தவிர, மாடுகள் 5, 6 ஈத்துக்களைத் தாண்டும் போது, 8 முதல் 10 வயதைக் கடந்திருக்கும் என்பதால், அவற்றைப் பராமரிப்பது லாபகரமானதாக இருக்காது.
  • மாடுகளை கன்று போட்ட 10 முதல் 15 நாள்களுக்குள் வாங்கிட வேண்டும்.
  • ஒரு மாட்டைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் கண்கள் பிரகாசமாகவும், மாடுகள் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.
  • வெளி உறுப்புகளிலிருந்து எந்தவித திரவம், சீழ் வரக் கூடாது.காயங்கள், புண்கள் போன்றவை இருக்கக் கூடாது.
  • கால்கள் நன்றாக அமைந்து வலுவாக இருக்கவும், மாடு அசை போட்டுக் கொண்டு இருக்கவும், மேல் உதடு ஈரமாக வியர்வைகளைக் கொண்டிருக்கவும் வேண்டும்.
  • பால் மடியானது நன்றாக விரிந்து உடலோடு ஒட்டி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பாலைக் கறந்தவுடன் சுத்தமாக சுருங்கிட வேண்டும்.
  • 4 காம்புகள் இருக்க வேண்டும். அவை சம அளவுகளாகவும், சம இடைவெளிகளுடனும் அமைந்திருக்க வேண்டும்.
  • வயிற்றின் அடிப் பகுதியில் பால் மடிக்கு முன் இருக்கும் பால் நரம்புகள் நன்றாகத் தடித்து வளைந்து நல்ல ரத்த ஓட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
  • பால் மாடுகளின் நெஞ்சுப்பகுதியை விட வயிற்றுப் பகுதி அகன்று இருக்க, கால் முட்டிகளுக்கு இடையே இடைவெளி அதிகமாகவும், வயிற்றுப் பகுதி அகலமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நிறைய தீவனத்தை உள்கொண்டு அதிக அளவு பாலை உற்பத்தி செய்யும்.
  • கறவை மாடுகளை சந்தையில் வாங்குவதைத் தவிர்த்து, மாட்டின் உரிமையாளரின் இடத்துக்கு நேரடியாகச் சென்று மாட்டின் கறவை அளவை தொடர்ந்து மூன்று முறை கறந்து பார்த்து வாங்க வேண்டும்.
  • தவிர, மாடு விற்பனையாளரிடம் மாட்டுக்கு இதுவரை தரப்பட்ட தீவனக் கலவை, தீவனம் அளவு குறித்து தெரிந்து கொண்டு, அதே கலவையில் தர வேண்டும்.
  • மாடுகளுக்கு தீவனத்தை திடீரென மாற்றக் கூடாது. மாற்றினால் ஜீரண சக்தி இழந்து பால் உற்பத்தி குறையக்கூடும்.
  • அதேபோல, மாடுகளுக்கு முறையாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

4 comments:

  1. பால் உற்பத்தி பெருக Snf மற்றும் Fat அதிகரிக்க அனுகவும்.9940072718

    ReplyDelete
  2. Snf fat varavillai ennasayavandum

    ReplyDelete
  3. Snf fat varavillai ennasayavandum

    ReplyDelete
  4. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete