கன்னியாகுமரி மாவட்டம் என்றாலே... தென்னை, வாழை மற்றும் ரப்பர் ஆகியவைதான் கண்முன்னே வந்து நிற்கும். சாதகமான காலநிலை இங்கே நிலவுவதுதான் இதற்குக் காரணம்.
முக்கியப் பயிர்கள் பசுமைக் கட்டி கைகொடுப்பது ஒரு பக்கம் இருக்க... ஏதாவது ஒரு ஊடுபயிர் சாகுபடி செய்வதையும் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். அதிலும்... மார்த்தாண்டம் பகுதியைச் சுற்றியுள்ளவர்களின் முக்கியத் தொழில் விவசாயத்தோடு இணைந்த 'தேனீ வளர்ப்பு'. வீட்டுப் புழக்கடை, தோட்டம் என்று கிடைக்கும் இடத்தில் எல்லாம் தேனீக்களை வளர்த்து வருமானம் பார்க்கிறார்கள்.
சற்றேறக்குறைய 25 ஆயிரம் குடும்பங்கள், இப்பகுதியில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளன. குலசேகரத்தைச் சேர்ந்த அன்புச்செழியனும் அவர்களில் ஒருவர். தேனீ பராமரிப்பில் ஈடுபட்டிருந்தவரை காலைவேளையில் சந்தித்தோம். உற்சாகமாக ஆரம்பித்தவர், ''எங்க அப்பா, 40 வருஷமா குடிசைத் தொழிலா தேனீ வளர்ப்பைப் பண்ணிட்டுருக்காரு. தேனீ வளர்ப்பு பயிற்றுநராவும் இருக்காரு. நானும் பயிற்சி எடுத்துக்கிட்டுதான் இதுல இறங்கியிருக்கேன்.
தென்னை, வாழை, காய்கறி, பூந்தோட்டங்கள்னு வெள்ளாமைக்கு இடையில, தேனீ வளர்த்தா... அதிக அளவுல தேன் கிடைக்கிறதோட, அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு பயிர்கள்லயும் மகசூலும் கூடும். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்ச மாதிரி வருமானம் பார்க்கலாம்.
அரை ஏக்கர்ல வாழை, தென்னை, கமுகு (பாக்கு) மரங்கள் நிக்குது. அதுல ஊடுபயிரா அன்னாசியும் போட்டிருக்கேன். தோட்டத்துல, வீட்டுப் புழக்கடைனு கிடைக்குற இடத்துல எல்லாம் தேனீப் பெட்டிகளையும் வெச்சுருக்கேன். மொத்தம் 70 பெட்டிகள்ல தேன் உற்பத்தி பண்றேன். இதுல கிடைக்கற தேனை நேரடியாவே விற்பனை செய்துகிட்டிருக்கோம்'' என்றவர், தேனீ வளர்ப்பு தொடர்பாக நம்மிடம் அடுக்கிய தகவல்களைப் பாடமாகத் தொகுத்துள்ளோம்.
கவனம் தேவை... பெட்டித் தயாரிப்பில்!
முதலில் தேனீக்களுக்கானப் பெட்டியைத் தயாரிக்க வேண்டும். பல இடங்களில் பெட்டிகளைத் தயாரித்து விற்கிறார்கள். தேக்கு, வேப்பமரம், புன்னைமரம் என்று நல்ல மணம் வீசுகிற மரங்களில்தான் பெட்டியைச் செய்ய வேண்டும். வெளியில் வாங்கும்போது இதையெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது என்பதால், நாமே பெட்டிகளைத் தயார் செய்வதுதான் நல்லது. இப்படிச் செய்வதால் செலவும் குறையும்.