Showing posts with label எலுமிச்சை. Show all posts
Showing posts with label எலுமிச்சை. Show all posts

Friday, March 27, 2015

விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் தரும் எலுமிச்சை மற்றும் வாழை (Elumichaiyil Uudu Payiraga Vaalai) - Lemon + Banana Intercropping


ஏற்றம் தரும் எலுமிச்சை.. வாரிக் கொடுக்கும் வாழை!


சுவைமிகு கூட்டணி


வேலையாட்கள் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை, தண்ணீர் தட்டுப்பாடு.. என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக இணைத்து சாகுபடி செய்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருக்கும் பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்.

குடை பிடித்துக் கொண்டிருந்த எலுமிச்சை மரங்கள், சாமரம் வீசி வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருந்த வாழை மரங்கள் என, விரிந்து கிடந்த தோட்டத்திலிருந்த சந்திரசேகரன் “பத்தாவது வரைக்கும்தான் படித்தேன். அதற்கு மேல் படிக்கப் பிடிக்காததால், தேங்காய் மண்டியில் வேலைக்குச் சேர்ந்தேன். அதுவும் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால், அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது, கரும்பு சாகுபடி செய்து கொண்டிருந்தோம். நாங்களே வெல்லமாக காய்ச்சி விற்றுவிடுவோம். ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால், போகப்போக மகசூலும் குறைந்துவிட்டது. வெல்லத்தோட விலையும் குறைந்தது. வேறு சாகுபடிக்கு மாறலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தப் போதுதான், ஒரு நண்பர் எலுமிச்சை  போடுவதற்கு யோசனை சொன்னார். அவரும் எலுமிச்சை போட்டிருந்ததால் அவருடைய தோட்டத்திற்குப் போய் நேரடியாக பார்த்து விவரங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு.. இரண்டரை ஏக்கரில் எலுமிச்சை சாகுபடியை ஆரம்பித்தேன். இப்போது பன்னிரண்டு வருடமாகிறது. முதல் மகசூல் கிடைக்க ஆரம்பித்தப்போது, கொஞ்சம் விற்பனைக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு ஏக்கர் வெகுமதி கொடுத்த எலுமிச்சை!
மூன்று வருடம் வரைக்கும் எலுமிச்சைக்கு இடையில் ஊடுயிராக வாழையையும் போட்டிருந்தேன். ஆரம்பத்தில் இது மூன்றிலும் கிடைத்த லாபத்தை வைத்து, ஒரு வீட்டு மனை, இரண்டு ஏக்கர் நிலம் என்று வாங்கிப்போட்டிருக்கிறேன். இப்போது மொத்தம் கையில் 13 ஏக்கர் நிலம் இருக்கு. இரண்டரை ஏக்கரில் தென்னை, 7 ஏக்கரில் மா, எலுமிச்சை, வாழை இருக்கு. ஒரு ஏக்கரை நெல் சாகுபடிக்காக தயார் செய்து வைத்திருக்கிறேன். மீதி இரண்டரை ஏக்கரில் 250 எலுமிச்சை மரங்களும் அதில் ஊடுபயிராக ஆயிரம் கற்பூரவல்லி வாழை மரங்களும் இருக்கிறது என்ற சந்திரசேகரன், எலுமிச்சை மற்றும் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

வடிகால் வசதி அவசியம்!
எலுமிச்சை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்வகைகளும் ஏற்றவை. ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலம், நடவுக்கேற்றப் பருவம். இந்தப் பருவத்தில் நடவு செய்யும் போது, நாற்றுகள் பழுதில்லாமல் நல்ல முறையில் வேர் பிடித்து வளரும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் எலுமிச்சை பதியன் செடிகளை வாங்கி நடவு செய்து கொள்ளலாம். 



20 அடி இடைவெளி!
20 அடிக்கு 20 அடி இடைவெளியில், 2 கன அடி அளவிற்க்குக் குழிகள் எடுத்து ஒரு வாரம் வரை ஆறப்போட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை, குழியின் மையத்தில் ஒரு அடி ஆழத்தில் இருப்பது போல், நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு செடிக்கு அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி, அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.

வாரம் ஒரு பாசனம்!
நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் தண்ணீர் விட வேண்டும். அதற்குப் பிறகு, மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தால் போதுமானது. 3 ஆண்டுகள் வரையில்  எலுமிச்சைச் செடிகளுக்கு இடையில் கனகாம்பரம் போல் ஏதாவது ஒரு பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். 4 –ம் ஆண்டில் எலுமிச்சைக்கு இடையில் வாழையை நடவு செய்யலாம். வாழைக்கு, ஆறரை அடி இடைவெளி விட வேண்டும். 7 அண்டுகளில் எலுமிச்சை மரங்கள் நன்கு வளர்ந்து பரவி விடும். அதனால், அதற்குப் பிறகு இடைவெளி உள்ள இடங்களில் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடிக்கு ஏலக்கி, பூவன், செவ்வாழை, கற்பூரவல்லி போன்ற ரகங்கள் ஏற்றவை. வாழையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அழித்துவிட்டு, புதிய கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா!
எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து, ஒரு அடி இடைவெளிவிட்டு அரையடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து உரம் வைக்க வேண்டும். இப்படி வட்டப்பாத்தியில் உரம் வைப்பதால், மரங்களுக்கு உடனே சத்துக்கள் சென்று சேரும். அதாவது, ஒவ்வொரு வட்டப்பாத்தியிலும் ஒரு  கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம்... யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., ஜிப்சம் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்பகுதியில் இருந்து இரண்டு அடி இடைவெளிவிட்டு இதேபோல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரம் வைத்து வர வேண்டும்.

வாழை மரங்களுக்கு 3-ம் மாதத்தில்... ஒரு மரத்திற்கு ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். 8-ம் மாதத்தில் ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால்கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம் பொட்டாஷ், டி.ஏ.பி., யூரியா, ஜிப்சம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மரத்தில் இருந்து அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 80 லிட்டர் தண்ணீருக்கு.. ஒரு லிட்டர் பஞ்சகவ்யா வீதம் கலந்து ‘ராக்கர்’ தெளிப்பான் மூலம் தேவையான அளவிற்க்கு தெளிக்க வேண்டும். கொசு மற்றும் வெள்ளை ஈ தாக்குதலை சமாளிக்கப் பரிந்துரைக்கப்படும் பூச்சிக் கொல்லியைத் தெளிக்க வேண்டும்.

Friday, February 27, 2015

பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்

பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு தொழில் நுட்பங்கள் குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள போடி தோட்டக்கலை உதவி இயக்குநர் வே.கெர்சோன் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மா மரம்:
• ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும்.
• 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும்.
• பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும்.
• 2 ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுதல் வேண்டும்.
• மா மரத்தில் ஊடுபயிராக 5 ஆண்டு வரையிலும் மரவள்ளி, நிலக்கடலை மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிட்டு கணிசமான வருமானம் பெறலாம்.
கொய்யா:
• கொய்யாவில் புதிய வாதுகளில் இலைகளின் பிரிவில்தான் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும்.
• செப்டம்பர், அக்டோபர் மற்றும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்தைய ஆண்டு வாதுகளில் 10-15 செ.மீ. செடியின் நுனிக்கிளைகளை வெட்டிவிடவேண்டும்.
• இதனால் புதிய தளிர்கள் தோன்றி காய்கள் அதிகம் பிடிக்கும்.
• வெட்டிய காயமுள்ள பகுதியின் மூலம் பூஞ்சாள நோய்கள் பரவி விடாமல் தடுக்க 1 சதவீத போர்டோ கலவை அல்லது பைட்டோலான் 3 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.