Showing posts with label மரம். Show all posts
Showing posts with label மரம். Show all posts

Monday, November 28, 2016

இயற்கை முறையில் புளியமரம் சாகுபடி


புளியமரம் சகுபாடி குறைந்த செலவில் நீண்ட காலம் பலன் தரக்கூடிய ஒன்றாகும். புளி அணைத்து காலங்களிலும் தேவைப்படும் ஒன்றாகும். ஆடிப்பட்டம் புளி சாகுபடி செய்ய சிறந்த பட்டமாகும். புளி வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
ரகங்கள்
புளி ரகங்களில் உரிகம்புளி என்பது தருமபுரி அருகில் உரிகம் என்ற ஊரின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. பிகேஎம்1, தும்கூர் மற்றும் ஹாசனூர் என்பது மேலும் சில ரகங்கள் ஆகும்.
நாற்று பெறும் முறை
உரிகம் ரகம் தருமபுரியில் உள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் பிகேஎம் ரகம் பெரியகுளம் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறையில் கிடைக்கும். விதைகளை வைத்தும் நாற்று தயாரிக்கலாம்.
நடவு முறை
உரிகம் ரகத்தை நடுவதற்கு 6 x 6 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். அடர் நடவு முறையில் பிகேஎம்1 ரகத்தை 5 X 5 மீட்டர் இடைவெளியில் நடலாம். சித்திரை – வைகாசி மாதங்களில் 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அதில் காய்ந்த இலை தழைகளை போட்டு தீ எரித்து சாம்பலாக்கி வைக்க வேண்டும். பிறகு அந்த குழியில் சிறிதளவு போர் மண், மணல் மற்றும் குப்பை கொண்டு 1 அடி மூடவேண்டும். அதை அப்படியே ஆடி மாதம் வரை ஆறவிட வேண்டும். பிறகு அதில் புளியங்கன்றை நடவு செய்யலாம்.
நீர்ப்பாசனம்
கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு தேவைகேற்ப நீர் பாய்ச்சினால் போதும்.
ஊடுபயிர்
அறுவடைக்கு வரும் வரை கடலை, உளுந்து, எள்ளு, பாசிபயிறு போன்றவைகளை நாம் ஊடுபயிர் செய்யலாம். குறைந்த உயரம் வளரும் பயிர்கள் ஊடுபயிர் செய்ய ஏற்றது.
அறுவடை
உரிகம் ரகம் 5 முதல்  8 வருடம் வரை பூ வைத்து பிறகு காய் பிடிக்கும். இதற்கு பருவநிலை மிகவும் முக்கியம். பிகேஎம் ரகம் 3 வருடம் முதல் பூ வைத்து 5 வருடத்தில் காயப்பிற்கு வரும்.

இயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்

இயற்கை விவசயம் மூலம் முருங்கை சாகுபடி செய்யும் சடையாண்டி கூறுகிறார்
செடிமுருங்கை… நாட்டுமுருங்கை ஓர் ஒப்பீடு
முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். செடிமுருங்கை விதை மூலமும், நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.
காய் விலை பற்றி கவலையே இல்லை!
ஆண்டு முழுவதும் முருங்கைக்கு விலை கிடைக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும். அதில் இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு 240 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட காய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், விதை மூலம் கிடைத்து விடும்.
இலைக்கும் கிராக்கி!
முருங்கை இலைக்கும் (கீரை) தேவை அதிகமாகவே இருக்கிறது. இதைப் பற்றி சொன்ன சடையாண்டி, “இயற்கையில விளையுற முருங்கை இலைக்கும் (கீரை), காய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கு. குறிப்பா முருங்கை இலைக்கு காயை விட அதிகத் தேவை இருக்கு. இலை பறித்தால் காய் மகசூல் குறையும். அதனால, விவசாயிகள் இலை விற்பனையில் கவனம் செலுத்துறதில்லை. இலைக்காக சாகுபடி செய்றவங்க, அடர் நடவு முறையில் 5 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். 40 நாட்களுக்கு ஒரு முறை இலைகளை அறுவடை செய்து விற்பனை செய்யலாம். மதுரை மாவட்டத்துல இலைக்கான வியாபாரிகள் இருக்காங்க. இலைக்கான விற்பனை வாய்ப்பை, விசாரிச்சிட்டு, இலை சாகுபடியில் இறங்கலாம்” என்றார்.

விண்பதியன் முறையில் ஒட்டு நாற்றுகள்!
சடையாண்டி, ‘‘விண்பதியன் முறையில் ஒட்டுக்கட்டி புதிய முருங்கை நாற்றுகளை உருவாக்குவது இப்படித்தான்-
தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து 40% ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும் (ஈரமாக இருக்க வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. இதுதான் ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு).
முருங்கை மரம் பூவெடுக்கும் தருவாயில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில் பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக் காகிதத்தால் காயத்துக்குக் கட்டு போடுவது போல இறுக்கமாக கட்டி வைக்கவேண்டும்.
40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். பிறகு, அந்தக் குச்சியை வெட்டி எடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்றி 60 நாட்கள் வளர்த்து நிலத்தில் நடவு செய்யலாம். விவசாயிகள் இப்படி நாற்று தயாரித்து விற்பதன் மூலமும் வருமானம் பார்க்க முடியும்” என்றார்.

முருங்கை சாகுபடி

தானிய பயிர், பணப்பயிர், சாகுபடிகளைக் காட்டிலும் அதிக லாபத்தை விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடியது நிச்சயம் தோட்டக் கலையின் கீழ் வரும் காய்கறி சாகுபடிதான். காய்கறி சாகுபடியில் விற்பனை விலை எனும் ஒரே ஒரு இடத்தில்மட்டும்தான் விவசாயிகள் பெரும் இன்னலையும் ஏற்ற இறக்கத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது.

மொரிங்கா ஒலிபெரா (Moringa Olefera) எனும் தாவரவியல் பெயருடைய முருங்கை ஆங்கிலத்தில் டிரம்ஸ்டிக் (Drumstick) என்று அழைக்கப்படுகின்றது. தமிழ்ப் பெயரும், ஆங்கிலப்பெயரும் இரண்டுமே காரணப் பெயர்கள்தான். முருங்கை மரத்தின் இலைகள் மிகவும் எளிதில் முறிந்துவிடும் தன்மையை உடையது. இப்படி முறிந்துவிடும் தன்மையை உடைய மரம் என்பதால் முருங்கை மரமானது ட்ரம் எனும் தாள வாத்தியம் வாசிக்கின்ற குச்சிப் போன்ற தோற்றத்தை உடையதால் ஆங்கிலத்தில் டிரம்ஸ்டிக் (Drumstick) எனும் பெயர் இந்த காய்க்கு சூட்டப்பட்டது.
உரைபனி, கொட்டும் பனியை அறவே விரும்பாத முருங்கை ஒரு வெப்ப மண்டல பயிர். லேசான அமிலத்தன்மையுள்ள, தண்ணீர் தேங்காத, வடிகால் வசதியுள்ள நல்ல மண்வளம் உள்ள பகுதியில் செழித்து வளரும். முருங்கை வறட்சியும், வெப்பத்தையும் விரும்புகின்ற மரவகை. இதை மிக எளிதில் சாகுபடி செய்யலாம். இந்தியாவில் உற்பத்தியாகும் சுமார் 1.5 மில்லியன் மெட்ரிக் டன் முருங்கைக் காயின் உற்பத்தியில் முதலிடத்தை பெறுவது தமிழகம் என நினைத்தால் அது தவறு. முருங்கை உற்பத்தியில் முதலிடம் ஆந்திராவிற்கும், இரண்டாம் இடம் கர்நாடகாவிற்கும் கிடைத்தபின் தமிழகத்திற்கு மூன்றாம் இடம்தான். இந்தியாவைத் தவிர தாய்லாந்து, இலங்கை, பிலிபைன்ஸ், தைவான்,மத்திய அமெரிக்கா, ஆப்ரிகா, கரீபியன் தீவுகளிலும் முருங்கை பயிரடப்படுகின்றது.
முருங்கையில் இரண்டே வகைகள்தான் உண்டு. ஒன்று மரமுருங்கை மற்றொன்று செடி முருங்கை. இதில் மர முருங்கை நீண்ட காலப் பயிர். இதனை குச்சி (பொத்து) மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். இது பல்லாண்டு கால நிரந்தர பயிர். சுமார் 1 ½ சுற்றளவும், 40 அடி உயரமும் வளரக் கூடிய மர வகை. செடி முருங்கை என்பது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுபவை. இது குறுகிய காலப்பயிர் மூன்று அல்லது நான்கு காய்ப்புகளுக்குப் பின் காய்க்கும் திறன் குறைவதால் இதனை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு வேறு முறை நடவு செய்ய வேண்டும். இதைச் செடி முருங்கை என பரவலாக அழைக்கின்றனர்.
செடி முருங்கையில் pkm1m pkm2, யாழ்பாண முருங்கை, ரோகிட் 1, துர்கா, கோகன், GKVK 1, GKVK 2, GKVK 3, KM 1, CO2 சாகவச்சேரி என பல்வேறு வகைகள் இருந்த போதிலும் pkm1 எனும் ரகம்தான் சக்கைப்போடு போடுகின்றது.
செடி முருங்கை எல்லாவகையான மண்ணிலும் வளரும் என்றாலும் மணல் கலந்த செம்மண் பூமி, கரிசல் பூமி, வடிகால் வசதியுள்ள வண்டல் நிலம் மிகவும் ஏற்றது. ஜூன், ஜூலை பட்டத்திலும், நவம்பர் டிசம்பர் பட்டத்திலும் நடவு செய்யாமல் எட்டு அடி X எட்டு அடி இடைவெளியில் 1 ½ X 1 ½ X 1 ½ அளவில் குழி எடுத்து ஆறவிட்டு அதில் மக்கிய தொழு எரு, மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து நிரப்பி, இரண்டு அடி வட்டப்பாத்தி அமைத்து வாய்க்கால் பாசனமோ, சொட்டி நீர்ப் பாசனமோ அமைக்க ஏற்பாடு செய்து விதை ஊன்ற வேண்டும். தரமான, நல்ல முளைப்புத் திறன் உள்ள பொறுக்கு விதையாக இருப்பின் ஏக்கருக்கு 300 கிராம் விதை போதுமானது. விதையின் முளைப்புத் திறனை அதிகரிக்க 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பஞ்ச காவ்யா கலந்து அதில் விதைகளை 12 மணி நேரம் ஊற வைத்து குழிக்கு 2 விதைகள் வீதம் விதை சேதமடையாமல் ஊன்ற நீர்ப் பாய்ச்சவேண்டும். மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் நிலத்தின் தன்மை, வெயிலின் அளவு, காற்றின் ஈரப்பதம் போன்ற காரணிகளை அனுசரித்து நீர்ப் பாசனம் மேற்கொள்ளவேண்டும்.

Tuesday, November 17, 2015

‪சீமைக்கருவேல‬ மரங்களை கட்டுப்படுத்தும் மருந்து


‘‘சீமைக் கருவேல மரமானது... வேலிக்காத்தான், வேலிக்கருவை... என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இம்மரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் இந்தியாவில் இல்லை. வெளி்நாடுகளில் மட்டுமே இதற்கான ஆய்வகம் உள்ளன. வெளிநாட்டில் சீமைக்கருவேல மரத்தின் வளர்ச்சி கட்டுப்படுத்தும் மருந்து உள்ளதாக கேள்விப்பட்டோம். எங்கள் அமைப்பும் சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் முயற்சிகளை எடுத்து வந்தது. இயந்திரங்கள் கொண்டு தோண்டிஎடுக்க செலவு கூடுதலானது. இதனால், வெளிநாட்டிலிருந்து அந்த மருந்தை வரவழைத்து, இங்கு சோதித்துப் பார்த்தோம். இந்த மருந்தை தரையில் இருந்து, ஒரு அடி உயரம்விட்டு, பெயிண்ட் அடிப்பது போல அடித்துவிட்டால் போதும்... சீமைக் கருவேல மரம் 7 நாட்களில் கருகி விடுகிறது. தரையில் இருந்து ஓரடி உயரம் விட்டு, மீதியுள்ளவற்றை விறகுக்கு வெட்டிப் பயன்படுத்தலாம்.


இந்த மருந்தைப் பயன்படுத்தினால், அந்த மரம் மீண்டும் துளிர்த்து வளர வாய்ப்புகள் இல்லை. முற்றிலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட, இந்த மருந்து சீமைக்கருவேல மரத்தை மட்டும்தான் கட்டுப்படுத்துகிறது. மற்ற மரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, இந்த மருந்து பயன்படாது என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியவாதிகளால், தொடங்கப்பட்ட, எங்கள் தொண்டு நிறுவனம் மூலம் லாபம் நோக்கம் இல்லாமல், இந்த மருந்தை விற்பனை செய்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு தேவையான மருந்தின் விலை `4 ஆயிரம் ஆகும்’’ என்கிறார் மதுரையில் செயல்பட்டு வரும், சத்யகிரஹா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரமணன்.

தொடர்புக்கு, செல்போன்: 98658- 78142.

Wednesday, September 30, 2015

டீசலோடு போட்டி போடும் புன்னை (Punnai Maram) - Calophyllum inophyllum / Indian doomba oiltree / Alexandrian laurel


அறிவிக்கப்படாத மின் வெட்டு... தலை விரித்தாடும் டீசல் தட்டுப்பாடு, என்று கடந்த சில மாதங்களாக தமிழகமே திண்டாட்டத்தில் இருக்கிறது. 



பம்ப்செட்டை நம்பியிருக்கும் பயிர்கள் எல்லாம் தாகத்தில் தவிக்கின்றன. ‘இதே நிலை நீடித்தால் விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லை’ என்றபடி விவசாயிகள் பலரும் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள்.

ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவர விவசாயி ராஜசேகரோ.. மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னை... !” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்கு தேவைப்பட்ட போதெல்லாம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.. புண்ணை எண்ணெய் புண்ணியத்துல!

ஆம்.. பம்ப்செட் மோட்டாருக்காக முழுக்க முழுக்க இவர் பயன்படுத்துவது புன்னை எண்ணெயைத்தான்!



இதைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே.. “என்னது புன்னை எண்ணெயில்.. பம்ப்செட் ஓடுதா..?” என்று உற்சாகத் துள்ளல் போட்டபடி கண்டியன் காடு சென்றடைந்தோம். குளிர்ந்தக் காற்றையும், பரந்த நிழலையும் வாரி வழங்கியபடி தோட்டத்தில் நின்றிருக்கும் புன்னை மரங்கள்.. பூமாரி தூவிக்கொண்டிருந்த வேளையில் உள்ளே நுழைந்தோம். சடசடவென புன்னைக்கு ‘வாழ்த்துமாரி’ பொழிய ஆரம்பித்தார் ராஜசேகர் (அலைபேசி : 97510 02370).

சுனாமியில கூட சுழற்ற முடியல !

“டீசல் மோட்டார் பம்ப்செட்டுகளில், டீசலுக்குப் பதிலாக புன்னை எண்ணெயைப் பயன்படுத்தினால் பல மடங்கு செலவு குறையும். கூடுதல் இணைப்பாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் இந்த மரத்தை, இயற்கை நமக்குத் தந்த வரம்ன்னு தான் சொல்லணும். இதுக்கு இலையுதிர் காலம்ன்னு ஒண்ணு கிடையாது. வருஷம் முழுக்க நிழல் கொடுக்கும். மழ வரப்போகுதுன்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடியே நமக்குச் சொல்லிடும். அதாவது, மரத்துல பூ பூத்துக் குலுங்கினா, கண்டிப்பா மறுவாரம் மழை பெய்யும். புயல் அடிச்சாக்கூட சாயாம நிக்கக்கூடிய மரம். இது கடற்கரையோர பூமி, சுனாமி வந்தப்பக்கூட இந்த மரங்களுக்கு ஒண்ணும் ஆகலனா பார்த்துக்கோங்க.. இந்த அளவுக்கு வலுவான மரம். இதுக்கு எத்தனை வருஷம் ஆயுள்ன்னு தெரியல. 70 வருஷத்துக்கும் மேல் வயசுள்ள மரங்கள் கூட விதைகளைக் கொட்டுது என்ற புன்னையை வாழ்த்தித் தள்ளியவர்.

“செடியை நட்ட 5ம் வருஷமே காயாகி, பழம் கிடைக்கும். புன்னை மரம் இருந்தாலே வெளவால் நிறைய இருக்கும். அதுங்க பழத்தைத் தின்னுட்டு, கொட்டையைக் கீழே போட்டுடும். அதனால பழத்தைக் காய வைக்க வேண்டிய அவசியம் இல்ல. தானா கீழே விழுற பழத்தை ஆறு நாளைக்கு வெயில்ல காய வெச்சா.. கொட்டையை உடைச்சி எடுக்கலாம். கொட்டைக்குள்ள இருக்கற பருப்புதான் முக்கியம். அதைத் தனியா எடுத்து, வெயில்ல 10 நாள் காய வைக்கணும். காய்ஞ்ச பருப்பை, செக்குல கொடுத்து ஆட்டினா, 70 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை எண்ணெய் கிடைக்கும். அதாவது, ஒரு கிலோ பருப்புக்கு 700 முதல் 750 மில்லி எண்ணெய் கிடைக்கும். இதுவே மெஷின்ல ஆட்டினா 80 சதவிகிதம் அதாவது ஒரு கிலோ பருப்புக்கு 800 மில்லி எண்ணெய் கிடைக்கும்.

கரும்புகை போகுது.. கமழும் புகை வருது !

5 ஹெச்.பி டீசல் மோட்டார் வெறும் 600 மில்லி புன்னை எண்ணெய்தான் ஊத்துறேன். வேற ஆயில் எதையும் கலக்கறதில்லை. இந்த 600 மில்லி ஊத்தறதுக்கே ஒரு மணி நேரம் ஓடுது. இதுவே டீசலா இருந்தா, ஒரு மணி நேரம் ஓடறதுக்கு 900 மிலி தேவைப்படும்.

ஒரு லிட்டர் டீசலோட விலை 53 ரூபாய் ஆனா, ஒரு லிட்டர் புன்னை எண்ணெய் தயாரிக்க கிட்டத்தட்ட 10 ரூபாய் தான் செலவாகுது. மழை இல்லாத காலத்துல தான் மோட்டார் தேவை. அப்படிப் பார்த்தா வருஷத்துக்கு 5 மாசத்துக்குத் தான் மோட்டார் ஓடணும். அதுக்கு 75 லிட்டர் எண்ணெய் தேவைப்படும் இதைத் தயாரிக்கறதுக்கு 800 ரூபாய் தான் செலவு. இதே அளவு டீசலுக்கு.. 2,666 ரூபாய் செலவாகும் என்று கணக்கு வழக்கோடு சொன்ன ராஜசேகர், தன் தோட்டத்தில் இருக்கும் டீசல் மோட்டாரில் புன்னை எண்ணெயை ஊற்றி இயக்கியும் காட்டினார்.

டீசல் மோட்டாரைப் போல குபுகுபுவென கரும்புகை கண்களை சூழவில்லை. வாடையும் மூக்கைத் தூக்கிக்கொண்டு ஓட வைக்கவில்லை. குறைவான புகையே வெளிப்பட்டதோடு, கோயில்களில் கமழ்வதைப் போன்ற சுகந்த வாடையும் வீசியது.

“புன்னை எண்ணெய்ல நிறைய மருத்துவ குணமிருக்கு. அதனால தான் முன்னயெல்லாம் கோயில்ல விளக்கேத்தறதுக்கு இதைப் பயன்படுத்தினாங்க. இந்தப் புகையில நீங்க நின்னாலும் ஒண்ணும் செய்யாது. ஆனா, டீசல் புகைன்னா, கண் எரிச்சல் ஏற்படும். அந்தப் புகையால பயிரும் மாசுபடும். ஆனா, எல்லாவிதத்துலயும் தொல்லை இல்லாதது புன்னை எண்ணெய்தான் ” என்று அதற்கு விளக்கமும் கொடுத்தார் ராஜசேகர்.

10ஹெச்பி.. 20 ஹெச்.பி..

புன்னை எண்ணெய் பயன்படுத்துவதால் இன்ஜின் துருபிடிப்பதில்லை. இன்ஜின் இயங்கும் சத்தமும் குறைவாகத் தான் கேட்கிறது. மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறார் ராஜசேகர். இதுவரை இன்ஜினில் எந்தப் பிரச்சனையும் வராமல் மோட்டார் நல்லபடியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

இதைப்பற்றி பேசும்போது, “ டீசல் பயன்படுத்தினப்ப.. ஒரு நிமிஷத்துக்கு 750 லிட்டர் தண்ணியை மோட்டார் கொட்டும். புன்னையைப் பயன்படுத்தினாலும் அதே அளவு தண்ணிக் கொட்டுது. 10 ஹெச்.பி ஜெனரேட்டர், 20ஹெச்.பி ஜெனரேட்டர் இதுல கூட புன்னை எண்ணெயை ஊத்திப் பயன்படுத்திப் பார்த்தேன். நல்லாவே ஓடுச்சி.. எந்தப் பிரச்சனையும் இல்லை. 
அதனால.. டீசல்ல ஓடுற வண்டிகளுக்கும் கண்டிப்பாக இதைப் பயன்படுத்த முடியும்ன்னு நம்புறேன். அரசாங்கமும் ஆய்வாளர்களும் தான் அதுக்கான முயற்சியைச் செய்யணும். இதுல நிச்சயம் வெற்றி கிடைக்கும்கிறது என்னோட நம்பிக்கை என்று உறுதியான குரலில் சொன்ன ராஜசேகர், புன்னை வளர்ப்புப் பற்றி பாடமெடுத்தார். அது.

புன்னை வளர்ப்பு !

எல்லா வகையான மண்ணிலும் புன்னை நன்றாக வளரும். குறிப்பாகக் கடலோரங்களிலும் ஆற்றோரங்களிலும் சிறப்பாக வளரும். உப்புத் தண்ணீர் பூச்சி, நோய், கரையான் என எதையும் சமாளிக்கும் வல்லமை இதற்கு உண்டு.

நிழலும், லேசான வெயிலும் கலந்த இடத்தில், ஒரு பாலித்தீன் பேப்பரைப் போட்டு அதில் மணலைப் பரப்பவேண்டும். அதன் மீது விதைகளைப் (முழுக் கொட்டைகளாகப் பயன்படுத்தவேண்டும்) பரப்பி, அவை மூடுமளவுக்கு மணல் போடவேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடவேண்டும். ஒரு மாதத்தில் செடிகள் முளைத்துவிடும். பிறகு, பாலித்தீன் பாக்கெட்டுகளில் மண், மணல் தொழுவுரம் அல்லது மண்புழு உரம் போட்டு, ஒரு பாக்கெட்டுக்கு ஒரு செடி வீதம் ஊன்றி, தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றவேண்டும். இதை நிழலில் வைத்துதான் பராமரிக்க வேண்டும். மூன்றாவது மாதம், நடவுக்குக் கன்று தயாராகிவிடும்.

அரை அடி சுற்றளவு, அதே அளவு ஆழம் கொண்ட குழிகளைத் தோண்டி, ஈரப்பதம் ஏற்படுமளவு தண்ணீர் தெளித்து, அதில் தொழுவுரம் போட்டுச் செடியை நடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 20 அடி இடைவெளிக் கொடுத்து நடவு செய்வதன் மூலமாக 75 மரம் வரைக்கும் வளர்க்கலாம். இரண்டு மாதம் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றவேண்டும். அதன் பிறகு பெரிதாக எந்தப் பராமரிப்பும் இல்லை.

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? (90 Naatkalil Maram Valarppu) - Growing a tree in 90 days


குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக


யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்...

மரம் வளர்க்க பல ஆண்டுகளாகும் நிலையில் 90 நாட்களில் மரம் வளர்க்கும் வித்தையை கண்டறிந்த பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரிய சமூக சேவகர்....

பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் இவரைப்பற்றி பதிவதில் நேர்வழி வலைதளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.



90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? 

‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான்’ என்பது கிராமத்து சொலவடை. அதாவது ஒரு மரம் தரும் பலனை, வைத்தவன் அனுபவிக்க முடியாது. அவனின் அடுத்த தலைமுறைக்குத்தான் மொத்த பலனும் என்பது அர்த்தம். மரம் வளர்ந்து தளைக்க அத்தனை ஆண்டுகள் ஆகும். இனி இதுபோல ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவசியம் இல்லை. நட்ட மூன்றே மாதங்களில் மரம் ரெடி என்று நிரூபித்திருக்கிறார், நெல்லை இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன். ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ அமைப்பின் தலைவர் இவர்.

என் சின்ன வயசில அப்பா, அம்மா இறந்திட்டாங்க. உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வறுமை வாட்டி எடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கே நான் படாதபாடு பட்டேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அர்ஜுனன் கண்களில் சோகம் தெரிந்தது.



இது வெப்ப பூமி. வருஷம் முழுக்க உஷ்ணம்தான். அதிலேயும் கோடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். பாலைவனம் மாதிரி தகிக்கிற வெயில்ல, வெளியில தலை காட்ட முடியாது. அப்படி வந்து வெளியில எட்டிப் பார்த்தீங்கன்னா, மருந்துக்குக்கூட மரத்தைப் பார்க்க முடியாது. பச்சையே எங்கேயும் இல்லாததால மழையும் இல்லை. நான் பாலாமடை அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். மரம் வளர்க்குறதுல ஆர்வம் வந்ததுக்குக் காரணம், என்னோட பள்ளித் தலைமையாசிரியர் முகம்மது கனி.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

Tuesday, September 1, 2015

1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம் - Indian Blackberry Fruit

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை, விதை என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்ட காரணத்தாலும், நாவல் மரங்கள் குறைந்து வருவதாலும், அதன் பழங்கள் தற்போது ஒரு கிலோ ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்கள் அரிதாகிவிட்ட நிலையில், நாவல் பழமும், விதைகளும் படிப்படியாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக அறியப்பட்டுள்ளதால், அவற்றின் மதிப்பு தற்போது பன்மடங்கு உயர்ந்துவிட்டது.
நீரிழிவு நோய் தவிர, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் குணமும், தொண்டைப் புண், தொண்டை அழற்சி போன்ற தொந்தரவுகளைப் போக்குவதற்கும் நாவல் மரப்பட்டைகள் உதவுகின்றன.
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவோர் நாவல் பழங்களை பிழிந்து சாப்பிடுவதன் மூலம் குணமடைகின்றனர். நாவல் பழத்துக்கு சிறுநீர் பெருக்கம், பசியைத் தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளைச் சுத்தம் செய்யும் தன்மையும், குடல், இரைப்பை, இதயத்தின் தசைகளை வலுவாக்கும் குணமும் நாவல் பழத்துக்கு உள்ளது.
அதோடு, நாவல் பழச்சாற்றுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணமும், நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு. மேலும், ரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அனைவராலும் மிகச் சாதாரணமாகக் கருதப்பட்ட நாவல் பழத்துக்கு இத்தகைய மருத்துவக் குணங்கள் உள்ளது என்ற விழிப்புணர்வு தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார் இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி.
இதுகுறித்து புதுகை உழவர் சந்தை அருகே பழ வியாபாரம் செய்யும் பெண் கூறியது:
நாட்டு நாவல் மரங்களில் இருந்து ஆடிக்காற்றில் கீழே விழும் பழங்களைத்தான் கிராமங்களில் விற்று வந்தோம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் நாவல் பழங்களுக்கு மிகுந்த முக்கியத்தும் கிடைத்துள்ளது. அதை வாங்குபவர்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுவதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாவல்பழம் உள்ளூரின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாததால், ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சி காந்தி சந்தைக்கு வரும் நாவல் பழங்களை வாங்கிவந்து விற்கிறோம். ஒரு கிலோ ரூ. 200-க்கு வாங்கி ரூ. 250-க்கு விற்க வேண்டியுள்ளது. எனினும், இதை வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றார் அவர்.

Thursday, April 30, 2015

புளி சாகுபடி (Puli Saagupadi) - Tamarind Cultivation


புளி இரகங்கள் :
  • பிகேஎம். 1, உரிகம், தும்கூர் மற்றும் ஹாசனூர்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
  • மணல் கலந்த மண்  இதன் வளர்ச்சிக்கு மிகவம் உகந்தது. வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
  • சராசரி மழை அளவு வருடத்திற்கு 500 முதல் 1500 செ.மீ வரை போதுமானது, மானாவாரியாகப் பயிர் செய்ய ஏற்ற பயிர் ஆகும்.
பருவம் : ஜுன்  – டிசம்பர்
விதையும் விதைப்பும்
இனப்பெருக்கம் : விதை, ஒட்டுக்கட்டிய செடிகள் மற்றும் மொட்டுக்கட்டுதல்.
இடைவெளி : 8-10 x 8-10 செ.மீ
நடவு :
  • 1 மீட்டர் நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்கவேண்டும்.
  • குழிகளில் மேல் மண்ணோடு தொழு உரத்தைக் கலந்து குழிகளின் மத்தியில் செடிகளை நடவேண்டும்.
  • ஒவ்வொரு குழிக்கும் 1.3 சதவீதம் லிண்டேன் மருந்து 50 கிராம் தூவவேண்டும்.
  • செடிகளை நட்டவுடன் கன்றுகளைக் காற்றிலிருந்து பாதுகாக்க குச்சிகளை ஊன்றிக் கட்டிவிடவேண்டும்.
நீர் நிர்வாகம்
  • கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர்ப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
  • மானாவாரிப் பயிராக பயிரிடப்படுவதால் வழக்கமாக உரமிடுவது இல்லை. இருந்தாலும் அங்கக உரங்களை இட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
  • செடிகளின் ஒட்டுக்கு அடிப்பாகத்தில் தோன்றும் வேர்க்குச்சியின் துளிர்களை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.
  • மற்றும் காய்ந்த நோய் தாக்கிய குச்சிகளையும் அகற்றவேண்டும்.
ஊடுபயிர் :
  • கன்றுகள் வளர்ந்து விளைச்சலுக்கு வரும் வரை முதல் 4 ஆண்டுகளில் ஊடுபயிர்களைப் பயிர் செய்யலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
  • இலைத்தின்னும் புழு :எண்டோசல்பான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
  • சாம்பல் நோய் : இந்நோயைக் கட்டுப்படுத்த டைனோகாப் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
  • நான்காவது வருடத்திலிருந்து காய்க்க ஆரம்பித்தாலும் ஒன்பதாவது வருடத்தில் தான் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • பழங்களை ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.
  • மகசூல் : ஒரு வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 150-200 கிலோ.

Friday, March 27, 2015

விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் தரும் எலுமிச்சை மற்றும் வாழை (Elumichaiyil Uudu Payiraga Vaalai) - Lemon + Banana Intercropping


ஏற்றம் தரும் எலுமிச்சை.. வாரிக் கொடுக்கும் வாழை!


சுவைமிகு கூட்டணி


வேலையாட்கள் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை, தண்ணீர் தட்டுப்பாடு.. என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக இணைத்து சாகுபடி செய்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருக்கும் பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்.

குடை பிடித்துக் கொண்டிருந்த எலுமிச்சை மரங்கள், சாமரம் வீசி வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருந்த வாழை மரங்கள் என, விரிந்து கிடந்த தோட்டத்திலிருந்த சந்திரசேகரன் “பத்தாவது வரைக்கும்தான் படித்தேன். அதற்கு மேல் படிக்கப் பிடிக்காததால், தேங்காய் மண்டியில் வேலைக்குச் சேர்ந்தேன். அதுவும் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால், அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது, கரும்பு சாகுபடி செய்து கொண்டிருந்தோம். நாங்களே வெல்லமாக காய்ச்சி விற்றுவிடுவோம். ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால், போகப்போக மகசூலும் குறைந்துவிட்டது. வெல்லத்தோட விலையும் குறைந்தது. வேறு சாகுபடிக்கு மாறலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தப் போதுதான், ஒரு நண்பர் எலுமிச்சை  போடுவதற்கு யோசனை சொன்னார். அவரும் எலுமிச்சை போட்டிருந்ததால் அவருடைய தோட்டத்திற்குப் போய் நேரடியாக பார்த்து விவரங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு.. இரண்டரை ஏக்கரில் எலுமிச்சை சாகுபடியை ஆரம்பித்தேன். இப்போது பன்னிரண்டு வருடமாகிறது. முதல் மகசூல் கிடைக்க ஆரம்பித்தப்போது, கொஞ்சம் விற்பனைக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு ஏக்கர் வெகுமதி கொடுத்த எலுமிச்சை!
மூன்று வருடம் வரைக்கும் எலுமிச்சைக்கு இடையில் ஊடுயிராக வாழையையும் போட்டிருந்தேன். ஆரம்பத்தில் இது மூன்றிலும் கிடைத்த லாபத்தை வைத்து, ஒரு வீட்டு மனை, இரண்டு ஏக்கர் நிலம் என்று வாங்கிப்போட்டிருக்கிறேன். இப்போது மொத்தம் கையில் 13 ஏக்கர் நிலம் இருக்கு. இரண்டரை ஏக்கரில் தென்னை, 7 ஏக்கரில் மா, எலுமிச்சை, வாழை இருக்கு. ஒரு ஏக்கரை நெல் சாகுபடிக்காக தயார் செய்து வைத்திருக்கிறேன். மீதி இரண்டரை ஏக்கரில் 250 எலுமிச்சை மரங்களும் அதில் ஊடுபயிராக ஆயிரம் கற்பூரவல்லி வாழை மரங்களும் இருக்கிறது என்ற சந்திரசேகரன், எலுமிச்சை மற்றும் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

வடிகால் வசதி அவசியம்!
எலுமிச்சை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்வகைகளும் ஏற்றவை. ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலம், நடவுக்கேற்றப் பருவம். இந்தப் பருவத்தில் நடவு செய்யும் போது, நாற்றுகள் பழுதில்லாமல் நல்ல முறையில் வேர் பிடித்து வளரும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் எலுமிச்சை பதியன் செடிகளை வாங்கி நடவு செய்து கொள்ளலாம். 



20 அடி இடைவெளி!
20 அடிக்கு 20 அடி இடைவெளியில், 2 கன அடி அளவிற்க்குக் குழிகள் எடுத்து ஒரு வாரம் வரை ஆறப்போட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை, குழியின் மையத்தில் ஒரு அடி ஆழத்தில் இருப்பது போல், நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு செடிக்கு அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி, அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.

வாரம் ஒரு பாசனம்!
நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் தண்ணீர் விட வேண்டும். அதற்குப் பிறகு, மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தால் போதுமானது. 3 ஆண்டுகள் வரையில்  எலுமிச்சைச் செடிகளுக்கு இடையில் கனகாம்பரம் போல் ஏதாவது ஒரு பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். 4 –ம் ஆண்டில் எலுமிச்சைக்கு இடையில் வாழையை நடவு செய்யலாம். வாழைக்கு, ஆறரை அடி இடைவெளி விட வேண்டும். 7 அண்டுகளில் எலுமிச்சை மரங்கள் நன்கு வளர்ந்து பரவி விடும். அதனால், அதற்குப் பிறகு இடைவெளி உள்ள இடங்களில் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடிக்கு ஏலக்கி, பூவன், செவ்வாழை, கற்பூரவல்லி போன்ற ரகங்கள் ஏற்றவை. வாழையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அழித்துவிட்டு, புதிய கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா!
எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து, ஒரு அடி இடைவெளிவிட்டு அரையடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து உரம் வைக்க வேண்டும். இப்படி வட்டப்பாத்தியில் உரம் வைப்பதால், மரங்களுக்கு உடனே சத்துக்கள் சென்று சேரும். அதாவது, ஒவ்வொரு வட்டப்பாத்தியிலும் ஒரு  கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம்... யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., ஜிப்சம் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்பகுதியில் இருந்து இரண்டு அடி இடைவெளிவிட்டு இதேபோல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரம் வைத்து வர வேண்டும்.

வாழை மரங்களுக்கு 3-ம் மாதத்தில்... ஒரு மரத்திற்கு ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். 8-ம் மாதத்தில் ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால்கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம் பொட்டாஷ், டி.ஏ.பி., யூரியா, ஜிப்சம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மரத்தில் இருந்து அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 80 லிட்டர் தண்ணீருக்கு.. ஒரு லிட்டர் பஞ்சகவ்யா வீதம் கலந்து ‘ராக்கர்’ தெளிப்பான் மூலம் தேவையான அளவிற்க்கு தெளிக்க வேண்டும். கொசு மற்றும் வெள்ளை ஈ தாக்குதலை சமாளிக்கப் பரிந்துரைக்கப்படும் பூச்சிக் கொல்லியைத் தெளிக்க வேண்டும்.

Wednesday, March 18, 2015

தென்னையில் அதிக விளைச்சல் பெற (Thennaiyil Athiga Vilachal Pera) - To Increase the Productivity of Coconut


தேங்காயின் விலை முந்தைய காலகட்டத்தை விட அதிகமாக இருக்கிறது. அதிக விளைச்சல் இருக்கும் நிலையில் குறைந்த விலையில் தேங்காய்கள் கிடைக்கும் படி செய்யலாம். பணப்பயிர்களில் அமுதசுரபி போல் திகழும் தேங்காய்களை அதிக விளைச்சல் மூலம் பெற்றிட விவசாயிகள் சரியான உரநிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இயற்கை உரங்களான தொழுஉரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் இலுப்பை புண்ணாக்கு போன்றவற்றுடன் கலந்து ஆண்டுக்கு ஓரிரு முறைகள் இடுவதன் மூலம் அதிகமான விளைச்சலை உறுதி செய்யலாம்.




ரசாயன உரங்களில் பலவகை சத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு சில சத்துக்களே தென்னையில் வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கின்றன. இதில் மணிச்சத்து முக்கியமானது. பலவாறாக இருக்கும் ரசாயன உரங்களில் மணிச்சத்து அடங்கியிருந்தாலும், சூப்பர் பாஸ்பேட் உரத்தில் அடங்கியிருக்கும் மணிச்சத்தானது நிலத்திற்கு எந்த வித கெடுதலையும் செய்யாமல் தென்னைக்கு ஊட்டமளிக்கிறது. சூப்பர் பாஸ்பேட்டில் மணிச்சத்துடன் தென்னை வளர்ச்சிக்கும், நல்ல காய்பிடிப்பிற்கும் அவசியமான கந்தகம், சுண்ணாம்பு, போரான், குளோரின் மற்றும் சோடியம் சத்துக்களும் வேறு பல நுண்ணூட்ட சத்துக்களும் அடங்கியுள்ளன. 

இந்த சத்துக்களில் உள்ள சத்துக்கள் தென்னையின் வளர்ச்சியில் என்ன செய்கின்றன என்று பார்க்கலாம்.

மணிச்சத்து 16 சதவீதம்
இந்த சத்தானது, தென்னை நாற்றிலிருந்து முளைத்து வரும் குருத்தின் பருமனை அதிகரிக்கவும், குருத்திலிருந்து அதிக இலைகள் உற்பத்தியாவதற்கும் உதவுகிறது.

மேலும் தென்னையில் அதிகமான வேர்கள் உருவாகவும், வேர்கள் ஆழமாக நிலத்தில் சென்று பிடிப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதனால் மரத்தின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.

பாளையில் ஏராளமான பூக்கள் உருவாகவும், அவ்வாறு பூத்த பூக்கள் அனைத்தும் தரம் மிக்க காய்களாக மாறுவதற்கும் உதவி செய்கிறது.

தேங்காய் குறுகிய காலத்தில் முற்றவும், கொப்பரையின் பருமனை அதிகரிக்கவும் உதவுகிறது.

கந்தகச்சத்து 11 சதவீதம்
கந்தக சத்தானது தேங்காய் பருப்பு ரப்பர் போன்று ஆகிவிடாமல் கெட்டியாக உருவாக உதவுகிறது.

கொப்பரையில் எண்ணெயின் அளவு கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. சூப்பர் பாஸ்பேட் இடப்படாத தென்னையில் கந்தகச்சத்து குறைபாட்டினால் கொப்பரையில் எண்ணெய்ச்சத்து குறைந்து சர்க்கரை சத்து மட்டுமே அதிகமாக இருக்கும்.

சுண்ணாம்பு சத்து
சுண்ணாம்பு சத்தினால் மரம் வலிமையாக உருவாகும். மேலும் இந்த சத்தானது மரத்தின் கட்டமைப்பில் உள்ள செல்களின் சுவர்களின் அமைப்பில், வேர்களின் வளர்ச்சியில், சர்க்கரை மற்றும் தனிமங்களின் கடத்திலில் பெரும் பங்கு வகிக்கிறது.

மேலும் நொதிப்பொருட்களின் வினையாக்கத்தை தூண்டி தென்னையின் சீரான வளர்ச்சிக்கு அதிகரிக்கிறது. தென்னை பயிரிடப்படும் மணற்பாங்கான அமில வகை நிலங்களில் சுண்ணாம்பு சத்தானது  தழை, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை நல்ல முறையில் கிரகிக்க வழி செய்கிறது.

இது தவிர சூப்பர் பாஸ்பேட்டில் அடங்கியுள்ள தனிமச்சத்துக்களான போரான், குளோரின் மற்றும் சோடியம் போன்றவை தென்னை வளர்ச்சிக்கு அதிக பங்களிக்கின்றன. இந்த சத்துக்களில் போரான் என்ற தனிமச்சத்து, இலைகள் நன்றாக வெளிவரவும், ஓலைகள் திடமாக இருக்கவும், தேங்காய்கள் பருத்து பருப்பின் அளவு அதிகரிக்கவும் உதவுகின்றது.



குளோரின் சத்தானது தழை, மணி, சாம்பல் மற்றும் மக்னீசிய சத்துக்களை தென்னை சீரான அளவில் எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது.

இதில் உள்ள சோடியம் தென்னையின் தொடக்க கால வளர்ச்சியை தூண்டவும், வளர்ந்த தென்னையில் பெண்பூக்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கும், அவை மகரந்த சேர்க்கைக்கு பின் தரமான குரும்பைகளாக உருவாவதற்கும் உதவுகின்றது.

தென்னைக்கு உரமிடும் முறை
தென்னையை நட்ட முதலாம் ஆண்டில் யூரியா 500 கிராம், சூப்பர் பாஸ்பேட் 500கிராம், பொட்டாஷ் 825 கிராம், வேப்பம் புண்ணாக்கு 1250 கிராம், தொழுஉரம் 10 கிலோ என்ற அளவில் இடவேண்டும். இரண்டாவது ஆண்டில் யூரியா 1300 கிராம், சூப்பர் பாஸ்பேட்800 கிராம், பொட்டாஷ் 1625 கிராம், வேப்பம் புண்ணாக்கு இரண்டரை கிலோ, தொழுஉரம் 2 கிலோ என்ற அளவிலும், மூன்றாம் ஆண்டில் யூரியா 1600 கிராம், சூப்பர் பாஸ்பேட் 1200 கிராம், பொட்டாஷ் இரண்டரை கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3 கிலோ 750 கிராம், தொழுஉரம் 3கிலோவும், நான்காம் ஆண்டில் யூரியா 2கிலோ, சூப்பர் பாஸ்பேட் 1 கிலோ 600 கிராம், பொட்டாஷ் 3கிலோ 300 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ மற்றும் தொழுஉரம் 4 கிலோவும் இடவேண்டும்.  

தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்


நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். 



தென்னையில் ரகங்கள்
தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன.  இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால் ஜாவா ஜயண்ட் ரகம் என்பது சாதாரண நெட்டை தேங்காயை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிய காய்கள் கொண்ட ரகமாகும். பருப்பின் கனமும் அதிகமாக இருக்கும். இந்த பருப்பில் 71 சதவீதம் எண்ணெய் பதம் காணப்படுகிறது. 

ஜாவா ஜயண்ட் வகை மரங்களில் ஒரு பூம்பாளையில் 8 முதல் 10 காய்கள் மட்டுமே காணப்படும். இது போன்று அந்தமான் சாதா நெட்டை, அந்த மான் ஜயண்ட் என இரண்டு ரகங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு ரக தேங்காயில் காய் பெரியதாகவும், பருப்பு அதிக கனத்துடனும் காணப்படும். இந்தியாவை பொறுத்த மட்டில் இங்கு மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன. இதில் மேற்கு கடற்கரை நெட்டை நன்கு தடித்து பருமனாகவும், கொண்டை பெரிதாகவும் இருக்கும். ஒரே காலத்தில் 12 முதல் 13 பூம்பாளைகள் காணப்படும். ஒரு ஆண்டில் 80 முதல் 100 காய்கள் காய்க்கும். இது கேரளா பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆந்திரா, ஓரிசா மற்றும் தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மரங்களை கிழக்கு கடற்கரை நெட்டை என்று அழைக்கிறோம். இதன் பருமன், கொண்டை மற்றும் ஓலைகளின் நீளம் சற்று சிறுத்து காணப்படுவதுடன் காயின் பருமனும் சற்று குறைந்து காணப்படும். இந்த வகை மரங்கள் ஆண்டுக்கு 100முதல் 120 காய்கள் வரை காய்க்கும். இது தவிர தமிழகத்தில் அதிக பருப்பு, பெரிய காய்கள் 13 முதல் 16 பூங்குலைகள் உடைய ஈத்தாமொழி நெட்டை, ஐயம்பாளையம் நெட்டை மற்றும் நடுத்தர காய்களை கொண்ட திப்பத்துர் வகை மரங்களும் உள்ளன.

இது போன்று இளநீர் ரகம் எனப்படும் குட்டை ரகங்களும் உள்ளன. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறமுடைய காய்கள் தரும் தனி மரங்கள் காணப்படும். இந்த குட்டை ரகத்தில் பெரிய காய்களை உடைய மலேசிய வகையும், சிறிய காய்களை உடைய சாவக்காடு குட்டை வகையும் உள்ளன. 

தாய் மரங்கள் தேர்வில் கவனிக்க வேண்டியவை
தாய் மரங்களை தேர்வு செய்யும் போது அவை நோய் தாக்குதல் இல்லாததாகவும், சரியான வயதுடையவையாகவும் இருத்தல் வேண்டும். இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் கேரளா அல்லது தஞ்சை வாடல் நோய் இல்லாத மரங்கள் விதை எடுக்க ஏற்றவை. பொதுவாக, தஞ்சை வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் கானோடெர்மாலுசிடம் என்ற பூசாண இழைகள் காணப்படும். இந்த நோய்களில் உள்ள கிருமிகள் மற்றும் பூசாணங்கள் காய்களின் மூலம் கன்றுகளுக்கு பரவும் தன்மை உடையவை. இதனால் இந்த நோய் காணப்படும் மரங்களை தாய் மரங்களாக தேர்வு செய்யக்கூடாது. இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குருத்தழுகல் போன்ற பூசாண நோய்களால் மரங்கள் தாக்கப்படுகின்றன. ஆனால் தோப்பில் ஒரு சில மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. ஆனால் அதே தோப்பில் வேறு பல மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. இந்த வகை எதிர்ப்பு திறனுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.

வயது
விதைக்காக மரங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வயதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது, நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நன்றாக காய்க்க தொடங்கிய பல நூறு மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் சாதாரணமாக காய்க்கின்ற ஒரு சில மரங்களின் ஒரே பூங்குலையில் 70 காய்களும், மீதமுள்ள மற்ற குலைகளில் 5 அல்லது 10 காய்களும் மட்டுமே காய்ப்பதை காண முடியும். இது போன்ற மரங்களிலிருந்து விதை தேங்காய் தேர்வு செய்து கன்றுகளை நட்டால் சீரான காய்ப்பு திறன் இருக்காது. சீரான காய்ப்பு திறனை கண்டறிய சில வழி முறைகள் உள்ளன. உதாரணமாக, விஞ்ஞானிகள் 3 ஆண்டு சராசரி விளைச்சலின் அடிப்படையில் மேற்கு கடற்கரை நெட்டை வகையின் திறன் சராசரி 80 முதல் 100 காய்கள் எனவும், கிழக்கு கடற்கரை நெட்டை வகை 100 முதல் 120 காய்கள் எனவும் கண்டறிந்துள்ளனர். இதற்கடுத்து பல்வேறு தாய்மரங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றின் முளைப்பு திறன் மற்றும் வீரிய கன்றுகள் உருவாகும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தாய்மரங்களை தேர்வு செய்ய வேண்டும். 

இது தவிர காய் முளைக்கும் போது உருவாகும் கன்றுகளின் வளர்ச்சி, வீரியம் ஒரே சீராக இருத்தல் அவசியம். ஒரு சில தாய் மரங்களில் இருந்து எடுக்கப்படும் விதை தேங்காயிலிருந்து உருவாகும் கன்றுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வளர்ச்சி வீரியத்துடன் காணப்படுவது இயல்பு. ஆகவே நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வளர்ச்சி வீரியம் ஒருங்கிணைந்த குணங்கள் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.