Showing posts with label கறவைமாடு வளர்ப்பு. Show all posts
Showing posts with label கறவைமாடு வளர்ப்பு. Show all posts

Thursday, July 9, 2015

பால் உற்பத்தியில் சுகாதாரம் பேணுவது எப்படி? (Paal Urpathiyil Sugaadhaaram) - Milk Production

பால் உற்பத்தியில் சுகாதாரமும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ள நிலையில், அதைப் பின்பற்றும் எளிய முறைகள் குறித்து கால்நடை பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் ச.சரஸ்வதி, ப.ராஜேஷ்குமார், ஆர்.ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்த யோசனைகள்:


பால் கறக்கும் முறை:
  • பசுக்கள்இடப்பக்கத்திலிருந்தே பால் தரும் இயல்புடையவை. இவற்றின் மடியில் பால் கறக்கும்போது முன்னிரு, பின்னிரு காம்புகளிலோ அல்லது பக்கங்களில் உள்ள காம்புகளிலோ இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கறப்பது நல்லது.
  • முதல் சில துளிகளை பாத்திரத்தில் விடாமல் பீய்ச்சிக் கீழே விட்டுவிட வேண்டும். இத்துளிகளில் அதிகமாக பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
  • இரு விரல்களை பயன்படுத்தியோ, முழு விரல்களையும் பயன்படுத்தியோ பால் கரக்கலாம். இரு விரல் முறையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து சிறிது அழுத்தம் தந்து கீழே இழுப்பதன் மூலம் பால் கறக்கலாம். முழு விரல்களைப் பயன்படுத்தும்போது, ஒரு கை விரல்களால் காம்பினைப் பிடித்து உள்ளங்கையின் மீது அழுத்துவதால் கன்றுக்கு ஊட்டுவது போல் எல்லாப் பக்கமும் ஒரே அழுத்தம் ஏற்பட்டு பால் கறக்கும்.
  • இருவிரல் முறையில் ஒரே அழுத்தம் கிடைக்காது என்பதால் காம்பின் மேல்பாகம் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காம்புகள் மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே இருவிரல் முறையைப் பயன்படுத்துவது நல்லது. மிக முக்கியமாக ஈரமான கைகளால் பால் கறப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 சுத்தமான பால்:
  • பசுவின் மடியில் அதிகம் அழுக்கு சேரும். எனவே பால் கரப்பதற்கு முன் மடியை நன்றாக கழுவ வேண்டும். பால் காம்புகளும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். முடிந்தால் நல்ல துணி மூலம் கழுவிய மடியை துடைப்பதும் நல்லது. ஒருமுறை பயன்படுத்தும் கைதுடைப்பு காகிதங்களை பயன்படுத்துவது சிறந்தது.
  •  பால் கறக்கும்போது உரோமங்கள் பாலில் விழுவதைத் தவிர்க்க அவ்வப்போது குளிப்பாட்டும்போது நன்கு தேய்த்து உடலில் உதிரும் ரோமங்களை அகற்ற வேண்டும். மாட்டுச் சாணத்தால் ஈக்கள் மொய்க்கும்.
  •  எனவே மாட்டுத் தொழுவம் அவ்வப்போது கிருமிநாசினியால் கழுவப்படுவதன் மூலம் அப்பகுதி சுகாதாரத்தைப் பேண முடியும். முக்கியமாக பால் கரக்கும் பாத்திரம் ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். கொதிக்கும் நீரை பால் கறக்கும் பாத்திரத்தில் ஊற்றினால் 2 நிமிடத்தில் பாத்திரத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து பாத்திரம் சுத்தமாகிவிடும்.
  •  இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் பாலில் பாக்டீரியாக்களின் பாதிப்பை தவிர்த்து சுத்தமான பாலை நுகர்வோருக்கு அளிக்க முடியும். பால் கெடாத தன்மை நீண்டநேரம் நீடிக்கும்.
  • மாடுகளுக்கும், தொழுவம் முழுவதும் அவ்வப்போது சாம்பிராணி போடுவதன் மூலம் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க முடியும்.
  • மாட்டுத் தொழுவத்தின் மிக அருகே தண்ணீர் தேங்கினால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். எனவே மாட்டுத் தொழுவம் சற்று மேடான இடத்தில் அமைவது நல்லது.
  • பால் கறக்கும்போது மணம் வீசும் தீவனங்களை மாடுகளுக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் பாலில் அந்த வாடை எளிதில் தொற்றிக் கொள்ளும்.
 மனித சுகாதாரம்:
  • மாடுகளை பராமரிப்போர், பால் கறப்போர் காச நோய், டைஃபாய்டு, டிப்தீரியா போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக மாடுகளிடம் நெருங்கக் கூடாது. இது மாடுகளுக்கும், சுகாதாரமான பால் கறவைக்கும் நல்லது.
  • பால் கறப்பவர்கள் கண்டிப்பாக விரல் நகங்களை வெட்டி, விரல் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 பால் பாத்திரங்கள்:
  • பால் கறவை, பால் சேமிப்புக்கான பாத்திரங்கள் இடுக்குகள், மடிப்புகள் இன்றி எளிதில் தூய்மை செய்யக் கூடிய வகையிலான அமைப்பில் இருக்க வேண்டும்.
  • அயோட்போர் போன்ற ரசாயனக் கலவை மூலம் அடிக்கடி இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதும் அவசியம். பாலைக் கறந்ததும் அதை மிதமான வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதிக வெப்பநிலை உள்ள இடத்தில் வைத்தால் எளிதில் கெட்டுவிடும்.

Saturday, March 7, 2015

சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்

சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்:சினைப் பருவத்தில் பசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் என்.நர்மதா, வே.உமா, மொ.சக்திவேல் ஆகியோர் கூறியது:
கறவை மாடு வளர்ப்பில் சினைப் பசுக்களுக்கு உரிய பராமரிப்பு செய்யாவிட்டால், கன்று வீசுதல், குறைமாதக் கன்றை ஈனுதல், பால் உற்பத்திக் குறைதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டு நஷ்டத்தை உருவாக்கும்.

இந்தப் பாதிப்புகளைத் தடுக்க சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், மிரட்டுதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது.

கருவிலுள்ள இளங்கன்று வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை கொடுக்க வேண்டிய தாலும், பால் உற்பத்திக்குத் தேவையானச் சத்துக்களை உடம்பில் சேமிக்க வேண்டியதா லும் சினை மாட்டுக்கு சத்தான தீவனம் கொடுக்க வேண்டும்.

ஏழாம் மாதம் சினை முடிந்ததும் சினைப் பசுவைத் தனிக் கொட்டகையில் வைத்து பராமரிப்பதுடன், 45 நாள் முதல் 60 நாள் வரை பால் வற்றச் செய்ய வேண்டும்.

45 நாள்களுக்குக் குறைந்த வற்றுக்காலம் உள்ள பசுக்களுக்கு மடி சரியான அளவு சுருங்காமலும், 60 நாள்களுக்கு மேல் வற்றுக் காலமுள்ள பசுக்களில் அதிக நாள்கள் பால் கறக்காமல் இருப்பதாலும் அடுத்த ஈற்றில் குறைவான அளவே பால் கிடைக்கும்.

அதன்படி, பால் வற்றுக் காலத்தில் தீவன அளவில் 50 சதம் குறைத்து ஒரேடியாக பாலை வற்றச் செய்ய வேண்டும்.

பகுதியளவு பாலைக் கறப்பதும், ஒருநாள் விட்டு ஒரு நாள் பாலைக் கறப்பதும் பால் வற்றக் கூடுதல் நாள்களாவதுடன், மடி நோயையும் உண்டாக்கக் கூடும்.

பால் வற்றச் செய்வதால் வளரும் கருவுக்கு தகுந்த ஊட்டச்சத்துகள் கிடைப்பதுடன், கறவை மாடுகள் நல்ல உடல் நிலையை அடையும்.

மடி சரியான விகிதத்தில் சுருங்கி அடுத்த கறவையில் நல்ல செயல் திறன் பெறும்.
தொற்று நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள், உணவு மண்டல நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

Friday, October 10, 2014

பால் பண்ணை தொழில்

விவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமுறைகளும் கீழே காணலாம்.
இந்தியாவில் உள்ள மாட்டு இனங்கள்

கறவை இனங்கள்:

சாஹிவால்
அதிகமாக பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், டெல்லி, பீஹார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காணப்படுகிறது.
சாஹிவால் பசு
பால் உற்பத்தி – கிராம சுழலில் : 1700 கிலோ – வணிக பால்பண்ணை சூழலில்: 2100 கிலோ
32-36 மாதம் முதல் கன்று ஈனுகிறது
கறவை கால இடைவெளி – 15 மாதம்.
கிர்

தெற்கு கத்தியவாரில் உள்ள கிர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

கிர் வகை பசு
பால் உற்பத்தி – கிராம சூழல் : 900 கிலோ வணிக பால்பண்ணை சூழல் : 1600 கிலோ
தார்பர்கர்
ஜோத்பூர், கச் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
தார்பர்கர்
பால் உற்பத்தி – கிராமசூழல் :1660 கிலோ – வணிக பால் பண்ணை: 2500 கிலோ

Saturday, October 4, 2014

நோய் மேலாண்மை

பித்தப்பை நோய்

இந்நோய் அனப்பிளாஸ் மார்ஜிநேல், அனாபிபிளாஸ்மா சென்டிரேல் என்ற ஓரணு உயிரியால் மாடு மற்றும் எருமைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள், பேன்கள் மூலம் பரவுகிறது. மேலும் ஊசிகள், கொம்பு நீக்கும் கருவிகள், ஆண்மை நீக்கம் செய்யும் கருவிகள், அடையாளக் குறியிடும் கருவிகள் மூலமும் பரவுகிறது. இந்த நுண்ணுயிரியானது இரத்தச் செல்களை அழிப்பதால் இரத்தசோகை, எடை குறைவு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். அதோடு பாதிக்கப்பட்ட கால்நடையில் காய்ச்சல் அதிகமாகி பின்பு குறையும். பசியின்மை, மூக்கு காய்தல் மற்றும் மருத்துவம் செய்யாமல் அதிக நாட்களானால் மஞ்சள் காமாலை ஏற்படும். வயது முதிர்ந்த மாடுகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

பண்ணையில் ஏதேனும் மாடு இந்நோயினால் பாதிக்கப்பட்டால் உடனே தடுப்பு நடவடிக்கையாக உண்ணிகள், பேன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். முடிந்தவரை நோயின் ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சையளித்தல் சிறந்தது.

தடுப்பு முறை

சிடிசி எனப்படும் ‘குளோர்டெட்ராசைக்ளின்’ அனாப்பிளாஸ்மாசிஸைக் கட்டுப்படுத்துகிறது. இதை 0.5 மிகி / 16 உடல் எடைக்கு அளவு உட்கொள்ளச் செய்யலாம். கிருமி நாசினி மற்றும் பிற மருந்துகள் மூலம் உண்ணி,பேன் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பாக்டீரியா கிருமியால் வரும் நோய்கள்

அடைப்பான் நோய்

இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படும் நோயாகும். மாடுகளை மட்டுமல்லாமல், மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது.  நம் நாட்டில் எல்லா இடங்களிலும் குறிப்பாக வெப்பம் மிகுந்த, ஈரக்கசிவுள்ள, காற்றோட்ட வசதியுள்ள இடங்களிலும் இந்நோய் அதிகம் காணப்படுகிறது.

இந்நோய்க் கிருமிகள் உடலிலிருந்து வெளியேறியவுடன் காற்றுடன் சேர்ந்து விரைவில் அழிக்க முடியாத ஸ்போர்களாக மாறி விடுகின்றன. கிருமிகள் தன் வெளிப்புறமாகக் கெட்டியான கவசத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. கிருமி நாசினிகள் எளிதில் இக்கவசத்தினுள் சென்று நுண்கிருமிகளை அழிக்க முடியாது. இத்தகைய ஸ்போர்கள் நிலத்தில் தங்கி அவ்வப்போது மாடுகளைத் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்துடன் தண்ணீரில் கலந்து நீண்ட தூரம் எடுத்துச் செல்லப்பட்டு பிற மாடுகளுக்கு நோயையும் ஏற்படுத்துகின்றன.
நோய் அறிகுறிகள்
  1. இந்நோயால் மாடுகளில், திடீரென்று வலிப்பு ஏற்பட்டு இறந்து விடும். இறந்தவுடன் மூக்கு, வாய், ஆசனம் போன்றவற்றிலிருந்து கருமை நிறமான இரத்தம் வெளியேறும்.
  2. காய்ச்சல் அதிக அளவு, 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
  3. ஓரிரு நாட்களில் நோயின் வேகம் தணியும் போது காய்ச்சல் இருக்கும். மாடுகளில் உணர்வு இழப்பு ஏற்பட்டு பிறகு இறந்து விடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
    1. நோயுள்ள பகுதிகளில் நோய் ஏற்படும் காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அடைப்பான் தடுப்பூசி போடவேண்டும். நோயில்லாப் பகுதிகளில் தடுப்பூசி தேவை இல்லை.
    2. இந்நோயால் இறக்கும் முன்பு, இரத்தப் பரிசோதனை செய்து நோய் இருப்பதை உறுதி செய்த பின்பு சுகாதார முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். இதற்குப் பின்பு மாட்டின் தோலை உரிக்கவோ அல்லது இறப்பரிசோதனையோ செய்யவோ கூடாது. காரணம் இக்கிருமிகளை வெளியில் காற்றுடன் கட்டுப்படுத்துவதும் கடினம். எனவே மாட்டை ஆழமான குழியில் புதைத்தோ அல்லது எரித்தோ அப்புறப்படுத்தவேண்டும்.
    3. இரத்தக்கசிவுடன் உள்ள பொருட்கள் அனைத்தையும் எரித்துவிடவேண்டும். அந்த இடத்தை 3 சதம் பீனால் கரைசலைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
தொண்டை அடைப்பான்

இந்நோய் பெரும்பாலும் மழைக்காலத்தில் குறிப்பாக நீர்ப்பாசனம், வெள்ளப்பெருக்கு மிகுதியாக உள்ள பகுதிகளில் காணப்படுகிறது. கறவை மாடுகள் குறிப்பாக எருமை மாடுகள், இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. தூரப்பயணத்திற்குப் பின்பும் அதிக நேரம் குளிர் மற்றும் மழையின் பாதிப்பிற்கு பின்பும் இந்நோய் ஏற்படுகிறது. கலப்பினப் பசுக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

நோய் அறிகுறிகள்
  1. கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
  2. கண்கள் சிவந்து வீங்கிக் காணப்படும்.
  3. தலை, கழுத்து, தொண்டை, மார்பு போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படும். வீக்கம் சூடாகவும், வலியோடு கூடியதாகவும் இருக்கும்.
  4. குடற்பகுதி பாதிக்கப்பட்டால் வயிற்றுப் போக்கு காணப்படும். சாணம் இளகி இரத்தம் கலந்திருக்கும்.
  5. நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படும்.
  6. வாயிலிருந்து மிகுதியான உமிழ்நீரும் வழிந்து கொண்டிருக்கும். நாக்கு தடித்துக் கறுப்பாகி விடும்.
  7. மாடுகள் எதையும் விழுங்கவும், மூச்சு விடவும் முடியாமல் திணறும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. எல்லா மாடுகளுக்கும் மழைக்காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தடுப்பூசி போடவேண்டும்.
  2. நோயுற்ற மாடுகளை உடனடியாக மற்ற மாடுகளிடமிருந்து பிரித்து, தகுந்த மருத்துவம் செய்து பாதுகாக்கவேண்டும்.
  3. பொதுச் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்படவேண்டும். தொடக்க நிலையில் ஏற்ற மருத்துவம் செய்வதால், பாதிக்கப்பட்ட மாடுகளைக் காப்பாற்றி விடலாம்.