Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Wednesday, March 18, 2015

மழைக்கு பின் நெல், தென்னை, வாழை பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் நோய்கள் (Malaikku Pin Yaerpadum Puuchi Thaakuthal Matrum Nooigal) - Pest Attacks and Diseases in Crops After Rains


ழை அதிகம் பெய்த நிலையில் சில பயிர்களில் பூச்சிகளும், நோய்த்தாக்குதலும் காணப்படுவதுண்டு. இது குறித்து பார்க்கலாம்.




நெல் 
மழைக்குப் பின் நெல் பயிரில் இலைப்பேன் தாக்குதல் குறைவாக இருக்கும். ஆனால் படைப்புழு மற்றும் கூண்டுப்புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும். இதில் படைப்புழுவால், குன்றுகள், காடுகள், வாய்க்கால்களை ஒட்டி அமைந்துள்ள வயல்களுக்கு சேதம் ஏற்படலாம். படைப்புழு பகலில் பதுங்கியிருந்து இரவில் நெற்பயிரை தாக்கும். இந்த புழுவின் தாக்குதலால், பயிர்கள் ஆடு, மாடு மேய்ந்தது போல் இலைகள் வெட்டப்பட்டு காணப்படும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மில்லி குளோரிபைரிபாஸ் மருந்தினை இருநூறு லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நனையும்படி மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். 

கூண்டுப்புழு
வடிகால் வசதியில்லாமல் தண்ணீர் அதிகம் தேங்கும் வயல்களில் கூண்டுப்புழு சேதம் ஏற்படும். இலை நுனிகள் வெட்டப்பட்டும், இலைகளில் வெண்ணிறமாக அரிக்கப்பட்டது போல் காணப்பட்டால் கூண்டுப்புழு தாக்குதலால் ஏற்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். கூண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வயலின் குறுக்கே கயிற்றை இழுத்து கூண்டுப்புழுக்களை நீரில் விழச்செய்ய வேண்டும். பின்னர் தண்ணீரை வடிக்க வேண்டும்.
வடிகாலில் வைக்கோல் பிரி அல்லது சாக்கு வைத்து மிதந்து வரும் கூண்டுப்புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். வயிலில் இருந்து தண்ணீரை முழுவதும் வடித்த பின்னர் தான் மருந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 400 மிலி மனோகுரோட்டோபாஸ் மருந்து தெளித்து கூண்டுப்புழுவினை கட்டுப்படுத்தலாம்.



தென்னை
குருத்தழுகல் நோய்
பெருமழை பெய்து மழைநீர் சில நாட்கள் தங்கியுள்ள தென்னந்தோப்புகள், குளங்கள் அருகிலுள்ள தோப்புகள் மற்றும் ஊடுபயிராக நெல் பயிரிடப்பட்ட தோப்புகளில் தென்னை மரங்கள் குருத்தழுகல் நோய் என்ற பூசண நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குருத்தழுகல் நோய் பாதித்த தென்னையில் குருத்து வாடி அழுகித் தொங்கும். முழுவதும் பாதிக்கப்பட்ட குருத்து பிடித்து இழுத்தால் கையோடு வந்து விடும். குருத்தின் அழுகிய பகுதியை அறுத்து எடுத்து விட்டு போர்டோ பசை தடவ வேண்டும். அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு எனப்படும் புளு காப்பர் மருந்தை பசை போல் கரைத்து தடவ வேண்டும். மேலும் கலவையினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை கிராம் வீதம் குறுத்து மற்றும் அருகில் உள்ள மட்டை இடுக்குகளில் தெளிக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட மரத்துக்கு அருகில் உள்ள மரங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக தெளிக்க வேண்டும்.





வாழை
மழைக்குப் பின் வாழைப் பயிரில் இலைப்புள்ளி நோய் தோன்றும். இதனை கட்டுப்படுத்த அதிகம் பாதித்த இலைகளை அறுத்து எடுத்து அப்புறப்படுத்தி எரித்து அழிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இலைப்புள்ளி நோய் அடுத்த இலைக்கு பரவுவது தடுக்கப்படும். காற்றோட்டமான தோட்டங்களில் நோய் விரைந்து பரவாது. இந்த நோயின் தொடக்க அறிகுறிகள் இலைகளில் தென்பட்டவுடன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் அல்லது இரண்டரை கிராம் காப்பர் மாங்கோசெப் அல்லது இரண்டு கிராம் குளரோதலோனில் மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பதினைந்து நாட்களுக்கு பின்னர் மீண்டும் தெளிக்க வேண்டும்.

மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி?


கால்நடை வளர்ப்பில் இரண்டு வகைகள் உண்டு. தீவனங்கள் வளர்ந்து கிடக்கும் நிலங்களுக்கு பசுக்களை ஓட்டி சென்று மேய்ச்சலுக்கு விடும் கால்நடை வளர்ப்பு முறை ஒரு வகை. இது தமிழ்நாட்டில் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. பசுந்தீவனம் உற்பத்தி செய்து அதனை மட்டும் பசுக்களுக்கு அளித்து பண்ணை முறையில்வளர்ப்பது மற்றொரு வகை. இப்படி இரண்டு வகையாக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மேய்ச்சல் முறையில் உள்ள கால்நடைகள் மழைக்காலத்தில் அதிகமாக புற்களை உண்டு விடும். இதனால் கழிச்சல் நோய் உண்டாகும். நீண்ட வறட்சிக்கு பின் முளைத்த புற்களை உண்பதால் வயிற்றில் உப்புசம், செரிமான கோளாறு உண்டாகும். 



எனவே மழைக்காலத்தில் அதிகாலை மேய்ச்சலை தவிர்ப்பது நல்லது. முற்பகலில் மேய்த்து பின் பனிக்காலத்தில் மாலை மேய்ச்சலை தவிர்ப்பதும் நல்லது. அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் கால்நடைகளை தீவனநிலங்களில் மேய்ச்சலுக்கு விடவேண்டும். இதற்கு முன்னதாக மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக்கூடாது.

 பண்ணை முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு உணவாக அளித்து வளர்ப்பவர்கள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும் வைக்கோலை யூரியா சத்தூட்டப்பட்டதாக மாற்றி வைத்து குளிர்காலம் முடியும் வரையும், கோடைக்காலத்திலும் கூட தீவனமாக பயன்படுத்தலாம். இதனால் தீவனச்செலவு குறையும். பசுக்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்கும்.

யூரியா சத்தூட்ட வைக்கோல்
அதிகமாக கிடைக்கும் வைக்கோல் மற்றும் மக்காச்சோளத் தீவனத்தட்டையை யூரியா சத்தூட்ட வைக்கோலாக மாற்றினால் அதன் சத்துக்கள் அதிகரித்து தீவன செலவு குறையும். 

இதற்கு 100 கிலோ வைக்கோலை பாலித்தீன் சாக்குகளில் பரப்பி பின் 4 கிலோ யூரியாவை 65 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கோலின் மீது தெளிக்க வேண்டும். பின் காற்று புகாமல் அடைத்து 21 நாட்கள் கழித்து எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம்.



நன்மைகள்
யூரியா சத்தூட்ட வைக்கோல் சாதாரண வைக்கோலை விட 3 மடங்கு சத்து அதிகம் உள்ளது. 

மழைக்காலங்களில் மழையில் நனைந்து வீணாகும் வைக்கோலை சேமிக்க இது ஒரு நல்ல வழி.

மழையில் நனைந்த வைக்கோல் பூஞ்சைகாளான் பரவுவதை தடுக்கலாம்.

குறைவான இடத்தில் மிகுந்த செலவில்லாமல் அதிக புரதம் நிறைந்த வைக்கோலை இந்த முறையில் தயாரிக்க முடியும். 

இத்துடன் பண்ணை முறை கால்நடைகளுக்கு தரப்படும் அடர்தீவனங்கள் நன்கு உலர வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கு இந்த தீவனங்களை தகுந்த முறையில் சேமித்து வரவேண்டும். 

அடர்தீவனங்களை பாதுகாக்கும் நுட்பம்
பால் தரும் பசுக்களுக்கு அடர்தீவனங்களான மக்காசோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகளை ஈரம்படாமல் சேமித்து வைத்து மழை மற்றும் குளிர் நிலவும் காலங்களில் அளிக்க வேண்டும். 

தீவனங்களின் மீது ஈரம் படாமல் பாதுகாக்க தீவன மூடைகளை மரக்கட்டைகளில் அடுக்கி வைத்தல் வேண்டும். 

அடர்தீவன தயாரிப்பை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் மழைக்காலங்களில் செய்வது நல்லது.

மழைக்காலத்தில் தானிய வகைகளான மக்காச்சோளம், கம்பு, கடலைப்புண்ணாக்கும், எள்ளுபுண்ணாக்கு ஆகியவற்றை நன்கு காயவைத்து அரைத்து சேமித்து வைக்க வேண்டும்.