Showing posts with label பப்பாளி. Show all posts
Showing posts with label பப்பாளி. Show all posts

Tuesday, November 29, 2016

இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி


இப்படித்தான் செய்யணும் பப்பாளி சாகுபடி!


ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி செய்யும் விதம் குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக....





பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள் நிலத்தை காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் (சாதாரண கலப்பை) ஒரு சால் உழவு செய்துவிட்டு.. அடுத்த நாள் அரை அடி ஆழத்தில், செடிக்குச் செடி 10 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளி விட்டு அரையடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 436 குழிகள் வரை எடுக்கலாம். (நிலத்தின் அமைப்பைப் பொறுத்து, இவர், 400 குழிகள் மட்டுமே எடுத்துள்ளார்). குழி எடுத்த மறுநாள் ஒரு குழிக்கு அரை கிலோ தொழுவுரம் போட்டு, நடுவிரல் அளவு குழி எடுத்து, பப்பாளி கன்றை வைத்து, மேல் மண் கொண்டு குழியை மூடிவிட வேண்டும். நடவு செய்த உடனே பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.



ஏக்கருக்கு அரை கிலோ விதை!


பப்பாளியை கன்றாக வாங்காமல், விதையை வாங்கி நாமே நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வதுதான் சிறந்தது. 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் நாற்றங்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான அரை கிலோ விதையை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் பஞ்சகவ்யா ஊற்றி அதில் விதையைப் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு,  ஓலைப்பாய் விரித்து, அதில் விதையை கொட்டி, அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதையை நாற்றாங்காலில் தூவிவிட்டு 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைத் தூவிவிட்டு ஒரு முறை கிளறிவிட்டால் விதையும், தொழுவுரமும் கலந்துவிடும். தண்ணீர் பாய்வதற்கு வசதியாக 4 அடிக்கு ஒரு பாத்தி வீதம் 5 பாத்திகள் எடுத்துக் கொள்ளலாம். விதைத்ததில் இருந்து, 8 முதல் 10 நாட்களில் முளைப்பு தெரியும். 30 நாளில் அரை அடி உயரமும், 60 நாளில் ஓர் அடி உயரமும் வரும். 30-ம் நாளிலேயே எடுத்து நடவு செய்யலாம். ஆனால், ஓர் அடி உயரம் வந்தால் நடவு செய்ய வசதியாக இருக்கும். 



15 நாள் இடைவெளியில் பஞ்சகவ்யா!



பப்பாளியை நடவு செய்ததில் இருந்து, 20-ம் நாள் மட்டும் ஒரு களை எடுத்துவிட்டு, 10 லிட்டருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 40 நாளுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 



பூ பூக்கும் நேரத்தில் பிண்ணாக்குக் கரைசல்!



6-ம் மாதம் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் 5 கிலோ பாசிப்பயறு, 5 கிலோ தட்டைப்பயறு, 5 கிலோ கொள்ளுப்பயறு, 5 கிலோ கொண்டைக்கடலை, ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு, அந்தக் கரைசலை ஒவ்வொரு தூரிலும் 500 மில்லி ஊற்றி, மண் அணைக்க வேண்டும். இதனால் பூக்கும் பூக்கள் உதிராமல், காய் பிடித்து நன்கு வளரும். 



பூ பூக்கும் நேரத்தில்தான், பப்பாளியில் ஆண் பெண் அடையாளம் காணமுடியும். கிளைகளுக்கும் தண்டுக்கும் இடையே ஒரே பூ மட்டும் பூத்தால் அது பெண் பப்பாளி எனவும், கொத்தாக பூ காணப்பட்டால் அது ஆண் பப்பாளி எனவும் அடையாளம் தெரிந்து கொள்ளலாம். 



400 பப்பாளி மரங்களில் குறைந்தது 20 ஆண் பப்பாளியாவது இருந்தால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். சில விவசாயிகள் ஆண் பப்பாளி மரங்களை மொத்தமாக பிடுங்கிவிடுவார்கள். இதனால் அயல்மகரந்தச்சேர்க்கை நடைபெறாமல் காய்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது. 



7-ம் மாதம் காய் காய்க்கத் தொடங்கும். 8-ம் மாதம் காய் பறிக்கலாம். 9-ம் மாதத்தில் இருந்து மகசூல் அதிகரிக்கும். 12-ம் மாதம் வரை நல்ல மகசூல் கிடைக்கும். 13-ம் மாதத்தில் இருந்து மகசூல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பிறகு, மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் தரமில்லாமல் இருக்கும்.

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல்


பப்பாளி சாகுபடியில் இரண்டாவது மாதத்தில் இருந்தே உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு மேல்புறம், இலைக்கு பின்புறம் என வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சி தென்படும். மாவுப்பூச்சி எப்போது தென்பட்டாலும் தண்ணீரை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
தண்ணீர் தெளித்த இரண்டு மணி நேரத்துக்குள், 10 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 50 மில்லி, புங்கன் எண்ணெய் 50 மில்லி, இலுப்பை எண்ணெய் 50 மில்லி ஆகியவற்றைக் கலந்து, இதோடு சிறிதளவு காதி சோப் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும்.

பப்பாளியில் வேர் அழுகலைத் தடுக்க சுண்ணாம்பு துத்தநாகக் கரைசல்


சில கன்றுகளின் வேர்ப்பகுதியில் பாக்டீரியாக்கள் தாக்குவதால், கன்றுகள் சரிந்து விடும். இலைகள் பழுப்பு நிறமாகி, கன்று வாடலாகக் காணப்பட்டால், தூர்ப்பகுதியில் லேசாக குழிதோண்டிப் பார்த்தால் வேர் அழுகல் தெரியும். இதைத் தடுக்க 10 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சுண்ணாம்பு, 200 கிராம் மயில்துத்தம் ஆகியவற்றைக் கலக்க வேண்டும்.
மயில்துத்தத்தை நேரடியாகத் தூவினால் பொங்கி, முகத்தில் தெறித்துவிடும். அதனால் ஓரமாகத் தூவி, மெதுவாகக் கலக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மயில்துத்தக் கரைசலைக் கலந்து, ஒரு கன்றுக்கு 100 மில்லி அளவில், தூர்ப்பகுதியைச் சுற்றி ஊற்றினால், வேர் அழுகலைத் தடுக்கலாம்.

Tuesday, August 4, 2015

ரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultivation

ஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி:

கரும்பு, மஞ்சள், வாழை என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல், அவதிப்படுவதை விடுத்து சத்தான சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பது, தொடர்கிறது.

அந்த வகையில், பப்பாளி சாகுபடியில் இறங்கி, லட்சங்களில் வருமனாத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், கோயம்புத்தூர், ‘சின்னக்குயிலி’ கிரமத்தைச் சோந்த முன்னோடி விவசாயி, பாலதண்டாயுதபாணி.
தினமும் வருமானம்! எனக்கு 15 ஏக்கர் நிலமிருக்கு. ஆயிரம் அடிக்கு பேர்வெல் போட்டு தண்ணீர் எடுத்துத்தான் பாசனம் செய்கிறேன். விவசாயம் கட்டுபடியாகுறதில்லை என்பது உண்மைதான். ஆனால், கொஞ்சம் மாற்றி யோசித்து செய்தால், கண்டிப்பாக நல்ல லாபம் பார்க்க முடியும்.

 இந்தப் பக்கம் எல்லாரும் ராகி, சோளம் ,கம்பு என்று விளைவிக்கும் போது.. நான் பருத்தியை விதைத்தேன். அதன் பிறகு, எல்லாரும் பருத்திக்கு மாறினாங்க. அது கொஞ்சம் சுணங்கிய நேரத்தில் திராட்சை சாகுபடியில் இறங்கினேன். அதன்பிறகு அதே பந்தலில், பாகல், புடலை, பீர்கன் என்று சாகுபடி செய்தேன். அடுத்து வாழை விவசாயத்திற்கு மாறினேன். ஒப்பந்த அடிப்படையில் பால் பப்பாளி சாகுபடி செய்தேன்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இப்போது மூன்று வருடமாக பழத்துக்காக பப்பாளி சாகுபடி செய்கிறேன். இதில் தினமும் வருமானம் கிடைக்கிறதே என்றார்.

விற்பனைக்கு பிரச்னை இல்லை! திருப்பூர், கோயம்புத்தூர் பக்கம் இருந்து வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து, பறித்து வைத்திருக்கும் பழங்களை எடை போட்டு வாங்கி கொண்டு போய்விடுவார்கள். இன்றைக்குத் தேதிக்கு கிலோ 7 ரூபாய் விலைக்கு போகிறது. சராசரியாக வருடத்திற்கு மூன்றரை லட்ச ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைத்துவிடும். (மாசத்திற்கு முப்பதாயிரம்).
மகசூல் முடிந்ததும், மரங்களை வெட்டி. ரோட்டா வேட்டர் வைத்து உழுது, நிலத்திற்கே உரமாக்கலாம். ரெட் லேடி பப்பாளிப் பழத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பனைக்குப் பிரச்னையே இல்லை.
பப்பாளிப் பழம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை சரி செய்வதற்கும், பெண்களுடைய மாதவிடாய் பிரச்னைக்கும், இது நல்ல பலன் கொடுக்கும்.

நான் பப்பாளி உற்பத்தியாளர் சங்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். பப்பாளிக்கு அரசாங்கம் தனி வாரியம் அமைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ள ரகங்களை வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கித் தர வேண்டும்.
அரசு நாற்றுப் பண்ணைகளில் பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்றார்.

Thursday, March 12, 2015

சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி

சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்யும் பரப்பு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்துள்ளது.

சர்க்கரை நோய் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குனம் உள்ள பப்பாளி பழத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக மகாராஜகடை மற்றும் வரட்டனப்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை கடந்த, நான்கு ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகின்றனர்.

ஒரு விதை, 10 ரூபாயுக்கு வாங்கும் விவசாயிகள், ஒரு ஏக்கரி,ல் ஆயிரம் செடிகளை நட்டு வைத்து வளர்க்கின்றனர்.

ஆறு மாதத்திற்கு பிறகு அறுவடைக்கு வரும் பப்பாளி காய்களை மொத்த வியாபாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜூஸ் பாக்டரி மற்றும் சென்னை, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.


பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது.

மேலும், மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் உள்ளது.

பொதுவாக மாகாராஜகடை மற்றும் வரட்டனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் அனைத்து விவசாயிகளும் கிணற்று பாசனைத்தை மட்டுமே நம்பியுள்ளர்.

நெல், கரும்பு,வாழை, மஞ்சள் பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவாதல், குறைந்த அளவே தண்ணீர் வருமானம் கொடுக்கும் பப்பாளி சாகுபடிக் இப்பகுதி விவசாயிகள் மாறியுள்ளனர்.இதனால் பப்பாளி சாகுபடி செய்யப்படும் பரப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது.

இந்த பகுதியில் கடந்த ஆண்டு, 200 ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, 500 ஏக்கராக அதிகரித்துள்ளது.

ஒரு கிலே,ா ஐந்து ரூபாய் முதல், ஏழு ரூபாய் வரை மொத்த விற்பனையாளர்கள் தோட்டத்திலே வந்து காய்களை எடுத்து செல்கின்றனர்.

இதன் மூலம் வாரத்துக்கு ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. மற்ற பயிர்களை காட்டிலும் பப்பாளி சாகுபடிக்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது. பப்பாளி பயிரிடும் முறை கனிகளின் சிகரம் என்றும், ஏழைகளின் ஆப்பிள் என்றும் மருத்துவர்களால் வர்ணிக்கப்படுவது பப்பாளி.


தமிழ்நாட்டில் திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, தருமபுரி மாவட்டங்களில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகின்றன.

பயிரிடும் முறை:
மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும்.

மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும்.

ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி பயிரிடலாம் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பப்பாளியின் வயது 24 முதல் 30 மாதங்கள்.

நடவுக் காலத்தில் அதிக மழை இருக்கக் கூடாது.

வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்கக் கூடாது. பப்பாளியில் கோ1, கோ2, கோ3, கோ4, கோ5, கோ6, கோ7 மற்றும் கூர்க்கனி டியூ, சூரியா போன்ற ரகங்கள் உள்ளன.

இவற்றில் கோ2, கோ5, கோ6 ஆகிய ரகங்கள் சாப்பிடச் சிறந்தவை. கோ2, கோ5 பால் எடுப்பதற்கு ஏற்ற ரகங்கள். பால் எடுத்த பிறகு பழங்களைச் சாப்பிடலாம்.

பப்பாளி நாற்று தயாரிக்க ஏக்கருக்கு 500 கிராம் விதை தேவை.

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி, பாலித்தீன் பைகளில் பை ஒன்றுக்கு 4 விதை வீதம் நட்டு நாற்று தயாரிக்கலாம்.

60 நாள்களில் நாற்று தயாராகிவிடும்.

பப்பாளி பயிரிட நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. ல 45 செ.மீ. ல 45 செ.மீ. அளவில் குழிகள் தோண்டி, மண் மற்றும் தொழுஉரமிட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.

வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடாது.