Showing posts with label உரம். Show all posts
Showing posts with label உரம். Show all posts

Thursday, December 17, 2015

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி விரட்டிகள்



அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit

இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

Thursday, December 10, 2015

பண்ணைக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு

செயற்கை உரங்களால் மண் தனது வளத்தை இழந்து வரும் நிலையில், விவசாயிகளின் கவனம் இயற்கை உரங்களின் பக்கம் திரும்பியுள்ளது. செயற்கை உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்களின் விலை குறைவு என்பதை விட அவற்றை விவசாயிகளே உற்பத்தி செய்ய முடியும் என்பதே இதன் தனிச் சிறப்பு.


விவசாயிகள் பண்ணைக் கழிவுகளில் இருந்து அங்கக உரம் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சூழல் அறிவியல் துறை, வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறைப் பேராசிரியர் அ.பரணி கூறியதாவது:

மண்ணின் வளம் இயல்பாக இருந்தால் மட்டுமே பயிர் உற்பத்திக்கு ஏற்ற நிலை உருவாகும். பயிர்க் கழிவுகள், விலங்கினக் கழிவுகள் காலப்போக்கில் ரசாயன மாற்றம் அடைந்து மண்ணின் அங்ககப் பொருளாக மாற்றம் அடைகின்றன. இந்த ரசாயன மாற்றம் ஏற்படுவதற்கு மண்ணில் இயற்கையாக உள்ள ஏராளமான நுண்ணுயிர்கள் உதவுகின்றன.
இதைத் தவிர மண் புழுக்கள், பல்வேறு பூச்சிகள், நத்தை, கரையான், எறும்பு திண்ணி போன்ற பிராணிகளும் மண்ணின் வளம் சிறக்க வழிவகுக்கின்றன. 10 டன் குப்பை உரம் 50 முதல் 70 கிலோ தழைச் சத்தையும், 15 முதல் 20 கிலோ மணிச் சத்தையும், 50 முதல் 70 கிலோ சாம்பல் சத்தையும் தரவல்லது.
திடக் கழிவுகளில் பயிர்களுக்குத் தேவையான எல்லா சத்துகளும் அடங்கி உள்ளன. இந்த பண்ணைக் கழிவுகளைச் சரியான முறையில் பயன்படுத்தினால் அதில் இருந்து அதிக சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றித் தர முடியும்.
மக்க வைத்தல்: மக்கும் நிகழ்வின்போது, கழிவுகளின் துகள்களின் அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்ணைக் கழிவுகளை மக்கச் செய்வதற்கு முன் அவற்றை 2 முதல் 2.5 செ.மீ. கொண்டதாக நறுக்க வேண்டும். கரிமச் சத்து, தழைச் சத்தின் விகிதம்தான் மக்கும் காலத்தையும், வேகத்தையும் முடிவு செய்கின்றன.

எனவே, கிளைரிசீடியா இலைகள், அகத்தி, தக்கைப் பூண்டு இலைகள் போன்ற பச்சைக் கழிவுகளையும், வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புல்கள் போன்ற கரிமச் சத்து அதிகமுள்ள பழுப்பு நிறக் கழிவுகளையும் சேர்த்தால் அது விரைவில் மக்கிவிடும். அதேபோல, கால்நடைகள், பறவைகள், பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளின் கழிவுகளிலும் தழைச் சத்து அதிகம் உள்ளது.

 கம்போஸ்ட் உரம் தயாரிப்பு:

கம்போஸ்ட் உரக் குவியல் அமைக்க குறைந்தது 4 அடி உயரத்துக்கு கழிவுகளை போட்டு அவற்றின் அளவை சமப்படுத்த வேண்டும். மக்க வைக்கும் இடம் சற்று உயர்வாகவும், நிழலாகவும் இருக்க வேண்டும். கழிவுகள் அனைத்தையும் நன்கு கலக்கி விட வேண்டும். கரிமம், தழைச் சத்து நிறைந்த கழிவுகளை மாற்றி, மாற்றி பரப்பி, இடையிடையே கால்நடைக் கழிவுகளையும் கலந்து, போதுமான அளவு நீர் தெளிக்க வேண்டும்.


கழிவுகளைத் துரிதமாக மக்க வைக்க வேளாண் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிரிக் கூட்டுக் கலவையான பயோமினரலைசரை ஒரு டன் கழிவுக்கு 2 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். திடக்கழிவு குவியலில் தேவையான அளவுக்கு உயிர் வாயு இருக்க வேண்டும்.

குவியலை 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறி விடவேண்டும். மக்கும் நிகழ்வு முடிந்த பின் உரத்தின் அளவு குறைந்து, கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும், துகளின் அளவு குறைந்தும் இருக்கும். இதனையடுத்து மக்கிய உரக் குவியலை கலைத்து, சலித்து எடுக்க வேண்டும். மக்காதவற்றை மறுபடியும் உரக்குவியலில் போடலாம்.
மக்கிய உரத்தை செறிவூட்டுவது எப்படி?
அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில், கடினமான தரையில் குவித்து, நன்மை தரக்கூடிய நுண்ணுயிர்களான அசடோபாக்டர், அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா (0.2 சதம்) ஆகியவற்றை ஒரு டன் மட்கிய உரத்துடன் கலக்கவேண்டும்.
இதை 20 நாள்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட. துரிதப்படுத்தப்பட்ட மக்கிய உரத்தில் சாதாரண மக்கிய உரத்தைக் காட்டிலும் ஊட்டச் சத்தின் நிலை அதிகமாவும், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகமாகவும் இருக்கும்.

Thursday, August 27, 2015

வேண்டாம் ரசாயன உரங்கள் மாற்றாக இயற்கை உரங்கள் - Benefits of Using Organic Fertilizers

முதன் முதலாக ரசாயன உரங்கள் அறிமுகப் படுத்தப்பட்டபோது விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
தொழு உரம், தழையுரம், சாண உரம் என்று தேடியலைய வேண்டியதில்லை. காசைக் கொடுத்தால் விதவிதமான ரசாயன உர மூட்டைகள் வீட்டில் வந்து இறங்கிவிடும். எந்தப் பயிருக்கு, எந்த உரத்தை எவ்வளவு இட வேண்டும் என்பதையெல்லாம் விவசாயிகளுக்குப் பாடம் நடத்தின உர நிறுவனங்கள்.

முதல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு விளைச்சல் அபரிமிதமாகத்தான் இருந்தது. மேலும் மேலும் அதிக அளவில் ரசாயன உரங்களைப் போட்டால் இன்னும் அதிக அளவில் விளைச்சல் வருமென்று எண்ணிக் கடன்பட்டுக்கூட ரசாயன உரங்களை வாங்கி வயல்களில் கொட்டினார்கள். அடுத்து விளைச்சல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. மண்ணின் இயற்கை வளம் குறைந்துபோயிற்று. வயலில் போட்ட முதலைக்கூட மீட்க முடியாமல் விவசாயிகள் இழப்புக்கு ஆளானார்கள். உலகம் முழுவதிலும் இதே மாதிரியான பிரச்சினைகள் தலைதூக்கின.
இயற்கை உரங்களின் நன்மைகள்
உலகெங்கிலும் உள்ள விவசாய விஞ்ஞானிகள் செயற்கையான ரசாயன உரங்களால் ஏற்பட்ட விளைவுகளைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினார்கள். பிரான்ஸில் உள்ள இன்செர்ம் எனும் உடல் நல மருத்துவ ஆய்வு நிலையம் தொழு உரம், இலையுரம் போன்ற இயற்கையான நைட்ரஜன் அடங்கிய உரங்களைப் பயிர்களுக்கு வழங்குவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுகிறது.
லெட்டூஸ் செடிகளுக்கு இயற்கை உரங்களை இடும்போது அவற்றின் எடை, விளைச்சலின் அளவு மற்றும் புரத உள்ளடக்கம் ஆகியவை குறைவதில்லை. ஆனால், அவற்றில் தீமை செய்கிற நைட்ரேட் எச்சங்களின் அளவு மிகவும் குறைந்துவிடுகிறது. இதற்கு மாறாக, செயற்கை ரசாயன உரங்கள் ஊட்டி வளர்க்கப்பட்ட லெட்டூஸ் இலைகளில் உட்கவரப்படாத நைட்ரேட் சத்துகள் அதிக அளவில் போய்த் தேங்கிவிடுகின்றன.
பிரான்ஸ் ஆய்வர்கள் ஆமணக்குப் பிண்ணாக்கை ஒரு பாத்தியில் உள்ள லெட்டூஸ் செடிகளுக்கு இட்டார்கள். அதே அளவான இன்னொரு பாத்தியிலுள்ள செடிகளுக்கு அதே அளவு நைட்ரஜன் சத்தைத் தருகிற அளவிலான அம்மோனியம் நைட்ரேட், சோடியம் நைட்ரேட் ஆகிய ரசாயன உரங்களைப் போட்டார்கள். இயற்கை உரத்தை உண்டு வளர்ந்த செடிகளில் இருந்ததைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமான நைட்ரேட் எச்சங்கள் செயற்கை உரமிடப்பட்ட செடிகளின் இலைகளில் காணப்பட்டன.
குடிநீரில் நைட்ரேட் நச்சு
வயல்களில் தூவப்படும் ரசாயன உரங்களின் கணிசமான விகிதம் பாசன நீரில் கரைந்து அடித்துச் செல்லப்பட்டு வெளியேறி, நிலத்தடி நீரிலும் அருகிலுள்ள நீர் நிலைகளிலும் போய்ச் சேர்ந்துவிடுகிறது. இதன் காரணமாக அவற்றில் நைட்ரேட் செறிவு பாதுகாப்பான அளவைவிடக் கூடுதலாகிவிடுகிறது. பிரான்ஸின் குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு இது ஒரு பெரிய பிரச்சினை. எந்த ஒரு ஊரிலிருந்தும் குடிநீரில் நைட்ரேட் நச்சு அளவுக்கு மீறிப் போய்விட்டதாக நுகர்வோர் அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வழக்குத் தொடர ஆயத்தமாக இருக்கிறார்கள்.
நீர்நிலைகளில் ரசாயனங்கள் கலப்பது நீரை மாசுபடுத்தி,(Water runoff) அதில் வாழும் உயிரினங்களுக்கும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனின் செறிவையும் குறைத்துவிடுகிறது. நீர்த்தாவரங்களும் மீன்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. அந்த நீரைப் பருகும் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் உண்டாகும் நீலநிறக் குழந்தை நோய் மற்றும் ரத்த சோகைக் கோளாறுகள் தோன்றுகின்றன.
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உட்கவர்ந்துகொண்டு அதை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்சென்று விநியோகிக்கிறது. ரத்தத்தில் நைட்ரேட்டுகள் புகுந்துவிட்டால் ஹீமோகு ளோபின் மெட்ஹீமோகுளோபினாக மாற்றப்படும். அதற்கு ஆக்சிஜனுடன் இணைகிற திறன் இராது. எனவே, உடலுக்குள் ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டு, உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்.

Tuesday, August 4, 2015

மண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைந்து, அதிக மகசூல் - Soil Test interpretations and fertilizer management

மண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைவதுடன் அதிக மகசூலும் பெற முடியும் என்று வேளாண் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.பெரம்பலூர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவரி பயிராக ஆடிப் பருவத்தில் பருத்தி பயிரிட மழையை எதிர் நோக்கி விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த தருணத்தில் அடியுரம் இடுவது என்பது மிகவும் அவசியம். பொதுவாக பயிர்களுக்கு அடியுரம் இடுவது இரண்டு வகைகளை சார்ந்திருக்கிறது.




அவற்றில் ஒன்று மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிடுவது, மற்றொன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொது பரிந்துரைப்படி உரமிடுவது.

மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிடுவது என்பது பயிர் செய்ய அடியுரம் இடுவதற்கு முன்னர் மண்ணை மண் பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்து அதன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மண்ணில் உள்ள சத்துக்களின் அளவு எஞ்சியது போக மீதம் தேவைப்படும் உரங்களை அடியுரம், முதல் மேலுரம், இரண்டாவது மேலுரம் என பிரித்து இடுவதாகும்.
மற்றொரு முறையான பொது பரிந்துரைப்படி உரமிடுவது என்பது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமானது ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மண் வகைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பயிர்களின் சீரான வளர்சிக்கு தேவைப்படும் உர அளவுகளை துல்லியமாக கண்டறிந்து வழங்கியுள்ளது.

கரிசல் மண் பகுதிகளில் பருத்தி பயிரிடுவதற்கு மொத்தமாக எக்டருக்கு 375 கிலோ சூப்பர் பாஸ்பேட் , 260 கிலோ யூரியா 100 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இடவேண்டும். இவைகளில் எக்டருக்கு 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 130 கிலோ யூரியா, 50 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை அடியுரமாகவும் மீதமுள்ள 130 கிலோ யூரியா மற்றும் 50 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இரண்டாக பிரித்து முதல் மற்றும் இரண்டாது மேலுரங்களாக இட வேண்டும்.
செம்மண் பகுதிகளில் பருத்தி பயிரிடுவதற்கு மொத்தமாக எக்டருக்கு 187 கிலோ சூப்பர் பாஸ்பேட், 130 கிலோ யூரியா, 50 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இட வேண்டும். இவைகளில் எக்டருக்கு 187 கிலோ சூப்பர் பாஸ்பேட், 65 கிலோ யூரியா, 25 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை அடியுரமாகவும் மீதமுள்ள 65 கிலோ யூரியா மற்றும் 25 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை இரண்டாக பிரித்து முதல் மற்றும் இரண்டாவது மேலுரங்களாக இடவேண்டும்.

இவ்வாறு மண் பரிசோதனை பரிந்துரைப்படியோ பொது பரிந்துரைப்படியோ உரமிடுவதால் தேவையற்ற உரங்கள் இடுவதை தவிர்த்து குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம். மேலும் செடிகளின் சரியான வளர்ச்சியை பாதுகாப்பதால் அதிக பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை தவிர்க்க முடிகிறது. அதிக அளவிலான ரசாயன உரங்களால் ஏற்படும் மண் வளம் குன்றுதலை தடுத்து மண் வளத்தையும் பாதுகாக்க முடியும். அத்தோடு மட்டுமல்லாமல் மண்ணில் ரசாயன உரங்களின் தேக்கம் இல்லாததால் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு பயிருக்கும் தொடர்ந்து மண் பரிசோதனை அடிப்படையிலோ பொது பரிந்துரைப்படியோ உரமிட்டு பயிர் செய்தால் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுவதோடு நிலையான மகசூலும் பெறப்படுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் மண் பரிசோதனை அடிப்படையிலோ அல்லது பொது பரிந்துரைப்படியோ உரமிட்டு செலவை குறைத்து அதிக மகசூலுடன் மண் வளத்தையும் பாதுகாக்க வேண்டும்.



மண்புழு உயிர் உர தொழில்நுட்பம் (TNAU) - BIOFERTILIZERS & VERMICULTURE


இந்த புவியியல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, நோய் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.
மண்புழு உரத்தின் தொழில்நுட்பம்
மண்புழு உரத்தின் தொழில் நுட்பமானது, அங்ககக் கழிவுகளை, மண்புழுக்களை கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகளை அந்த இடத்திலேயே மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்துதல்.
மண்புழு உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களை தேர்வு செய்வதற்கு வேண்டிய குணாதிசயங்கள்
  • அங்ககக் கழிவுகளில் அதிக எண்ணிக்கையில் வளரும் தன்மை உடையனவாக இருக்க வேண்டும்.
  • எல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிகஅளவில் உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
மண்புழு இரகங்கள்
வாழும் இடத்தை பொருத்து மண்புழு இரகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன.
  1. மண்ணின் மேற்பரப்பில் அங்ககக் கழிவுகள், மற்றும் கால்நடைக் கழிவுகளில் வளரும் தன்மை உடையது.
  2. மண்ணில் சற்று உள்ளே வளரும் தன்மை உடையது.
  3. மண்ணின் கீழ்பரப்பில் வளரும் தன்மை உடையது.
மண்ணின் மேற்பரப்பில், அங்ககக் கழிவுகளில், கால்நடைக் கழிவுகளில் வளரும் மண்புழுக்களுக்கு, எப்பிஜிக் (Epigeic) என்று பெயர். இந்த மண்புழுக்கள் நிறமானதாகவும், எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உடையதாக இருக்கும். இதற்கு உதாரணம், லும்பிரிக்கஸ் மற்றும் எஹ்சீனியா மண்புழுக்கள். மண்ணில் சற்று கீழே வளரக் கூடிய மண்புழுக்களை, என்டோஜியிக் (Endogeic) என அழைப்பார்கள். இவைகள் மண்ணில் இருந்து 30 செ.மீ ஆழத்தில் வளரும் தன்மை உடையவை. இவை பொதுவாக மண் மற்றும் அங்கக பொருட்களை சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும். இவை மண்ணில் துளையிட்டு செல்லும் தன்மை உடையவை. இதனால் மேல் பாக மண்ணும் கீழ்பாக மண்ணும் ஒன்றாகக் கலந்துவிடும். மண்புழுக்கள் விட்டுச் செல்லும் துளைகளினால் காற்றும், நீரும், வேர்மண்டலத்தை சென்று அடைகிறது. இவ்வகை மண்புழுக்களுக்கு உதாரணம் அபரேக்டிடா (Aporrectedea) ஆகும்.
மண்ணின் கீழ்பாகத்தில் வசிக்கும் மண்புழுக்கள் அனிசிக் (Anecic) என்று அழைக்கப்படும். இவை மண்ணில் நீண்ட ஆழத்திற்கு (3 மீட்டர்) துவாரம் இட்டு செல்கிறது. இவை மண்ணில உள்ள அங்ககப் பொருட்களை மண்ணின் அடிப்பாகம் வரை எடுத்துச் செல்கிறது. இவ்வகை மண் புழுக்களுக்கு உதாரணம் லும்பரிக்கஸ் டெரஸ்டிரில், அபரோகிடா லாங்கா.
மண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா மற்றும் பிரியானிக்ஸ் மண்புழுக்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை.
2. மண்புழு உரம் தயாரிப்பதற்கான பல்வேறு நிலைகள்
நிலை – 1
மட்கக்கூடிய கழிவுகளை சேகரித்தல், சிறு சிறு துண்டுகளாக மாற்றுதல், உலோகம், கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை பிரித்து எடுத்தல்.

நிலை – 2
மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிடுதல். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்கலாம்.

நிலை – 3
மண்புழு உரப்படுக்கை தயாரித்தல். மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுக்கையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்றுவிடும்.

Tuesday, March 31, 2015

மனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண் துறை ஆய்வு (Manitha Siruneer Uram) - Human Urine as Fertilizer


மனித சிறுநீர் எப்படி பின்லாந்த் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உரமாக பயன் படுத்தி காய்கறிகள் பயிர் இடுகிறார்கள் என்றும் முசிறியில் சிறுநீரை பயன் படுத்தி Struvite என்ற உரம் தயாரிப்பது பற்றியும் ஏற்கனவே படித்துள்ளோம்.
Struvite உரம் செய்முறை எப்படி என்று சுவிட்சர்லாந்த் நாடு விஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இப்போது தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் இதை பற்றி ஒரு ஆராய்ச்சி மேற் கொள்ள போவதாக செய்தி வந்துள்ளது:

கடலூர் : பெருகி வரும் மக்கள் தொகையால் உற்பத்தியாகும் மனித கழிவுகளை மேலாண்மை செய்வது என்பது வளரும் நாடுகளில் பெரிய சவாலாக மாறி வருகிறது. பொதுவாக மனித சிறுநீர் நச்சுத்தன்மையற்றது என்றாலும் அதில் உள்ள யூரியா, குளோரைடு மற்றும் சோடியம் உப்புகள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது.
மனித சிறுநீரை உரிய முறையில் பயன்படுத்தினால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பயன்கள் தமிழகத்திற்கும் கிடைக்கச் செய்ய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறை சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறையும் இங்கிலாந்தில் உள்ள தொண்டு நிறுவனமான வேர்எவர் நீட் இணைந்து வேளாண்மையில் மனித சிறுநீர் மற்றும் கழிவுகளை பயன்படுத்துவதால் உண்டாகும் சமூக பொருளாதார தாக்கத்தினை ஆய்வு செய்ய உள்ளன.


இத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது. இதில் கடலூரில் உள்ள பிளஸ் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்படுத்தவுள்ளது. நெல், கத்தரி, மக்காச்சோளம் போன்ற பயிர்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்திட்டம் வாயிலாக மனிதக்கழிவுகள் மூலம் வேளாண்மைக்குத் தேவையான சத்துக்களை சுற்றுச்சூழல் மாசின்றி பெற வாய்ப்புள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராமநாதன், வேளாண்புல முதல்வர் முனைவர் வசந்தகுமார் முன்னிலையில் இத்திட்டத்திற்கான முதல் தவணையாக 2 லட்சம் ரூபாய் காசோலையாக கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேர்எவர் நீட் உலகத் தலைவர் டேவிட் கிராஸ் வெல்லர் இந்திய இயக்குனர் பரமசிவம் மற்றும் பிளஸ் தொண்டு நிறுவனம் தலைவர் அந்தோணிசாமி பங்கேற்றனர்.

Wednesday, March 18, 2015

பயிர்களுக்கு ஏற்ற வேர்பூசண உட்பூசண நுண்ணுயிர் உரம்


கண்ணுக்கு புலப்படாத மிகச்சிறிய உயிரினங்களையே நுண்ணுயிரிகள் என்கிறோம். இவை பயிர்களுக்கு பலவகையான நன்மைகளை செய்கின்றன. குறிப்பாக பயிர்சாகுபடியில் சத்துக்கள் தரவல்லவை நுண்ணுயிர் உரமாகும். இவற்றில் தாவர வேர்களில் கட்டாய கூட்டு வாழ்க்கை நடத்தும் வேர் உட்பூசணம் முக்கியமானதாகும். இந்த நுண்ணுயிர்கள் பயிர்களுக்கு மிகச்சிறந்த நுண்ணுயிர் உரமாக இருக்கின்றன.



வேர் உட்பூசணத் தாவர கூட்டு வாழ்க்கை
வேர் உட்பூசணங்கள் மண்ணில் சிதல்லித்தாகவும், பூஞ்சாண இழைத்தண்டுகளாகவும் காணப்படும். வேர் உட்பூசணம் வளர ஆதாரத் தாவரம் தேவை. அவ்வகை ஒத்த பயிர்கள் மண்ணில் பயிரிடப்படும் போது மண்ணில் இருக்கும் வேர்ப்பூசண வித்துக்கள் முளைத்து மண்ணில் வளரத் தொடங்கும் தாவரத்தின் வேரை சூழ்ந்து கொண்டு தானும் வளரத் தொடங்குகின்றன. வேரில் ஒட்டிக் கொண்டு இவ்வாறு வளரும் உட்பூசணங்கள் அப்ரசோரியா எனும் பூஞ்சாண தொகுப்பை உருவாக்குகின்றன. இதன் மூலம் வேரினுள்ளும் நுழைகின்றன. வேரிலிருந்து பூஞ்சாண இழைகள் மண்ணில் சென்று ஊட்டங்களை கிரகின்றன.

வேரினுள் நுழைந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் பூஞ்சாண இழை முளைத்து பயிர் உயிரணுக்களின் உள்ளே சென்று அர்பஸ்குல்ஸ் என்னும் உறிஞ்சிகளை உண்டாக்குகிறது. இந்த உறிஞ்சிகள் தான் ஊட்டச்சத்தை பரிவர்த்தனை செய்யும் மையமாக செயல்படுகின்றன. 



வேர் உட்பூசண செயல்பாடு
பூசணத்தின் வேர்த்தூவிகள் மண்ணில் வெகு தூரத்திற்கு சுலபமாக பரவி விடுகிறது. ஆகவே, தாவரத்தின் வேர் பரவ முடியாத இடத்திற்கு கூட இந்த பூசணங்கள் பரவி சத்தை கிரகித்து வந்து தாவரத்திற்கு கொடுக்கிறது. குறிப்பாக வேர்களுக்கு எட்டாத மணிச்சத்தை தனது இழைகளின் மூலம் பூசணங்கள் கிரகித்து தனது இழைகளின் மூலம் தான் சார்ந்திருக்கும் தாவரத்திற்கு கொண்டு வந்து தருகிறது. இவ்வாறு மணிச்சத்தை பயிர்களுக்கு கொடுப்பதுடன், கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புச் சத்து போன்றவற்றையும் மண்ணிலிருந்து பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது.



வேர் உட்பூசணம் வளர்க்கும் முறை
இதர நுண்ணுயிர்களை போல் வேர் உட்பூசணத்தை சர்க்கரை கரைசல் ஊடகங்களில் வளர்க்க முடியாது. இது தாவர வேர்களிலேயே இயற்கையாக வளரக்கூடியது.  எனவே, வேர் உட்பூசணம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வெர்மிகுலைட் அல்லது கிருமி நீக்கப்பட்ட மணல் கலந்த பாத்திகளில் வளர்க்கப்பட்ட சோளம் அல்லது புல்வகைகளின் வேரில் வளர்க்கப்படுகிறது. பூசணம் வேரில் நன்கு வளர்ந்த பின் பயிரின் வேரும் வேர் பரவிய மண்ணும் எடுக்கப்பட்டு துகள்களாக்கி பாலிதீன் பைகளில் கொடுக்கப்படுகின்றன. இந்த கலவையை வயலில் இட பரிந்துரைக்கப்படுகின்றது.

உபயோகிக்கும் முறைகள்
ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிராம் வேர் உட்பூசணங்கள் போதுமானது. விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் மண்ணிற்கு கீழே 2 முதல் 3 சென்டிமீட்டர் ஆழத்தில் இடவும். 

பாலிதீன் பைகளில் வளர்க்கப்படும் நாற்றுக்களுக்கு
ஒரு பைக்கு 10 கிராம் வேர் உட்பூசணம் போதுமானது. பைகளுக்கு தேவைப்படும் மண் கலவையை தயார் செய்யும் பொழுது, 100 கிலோ மண் கலவைகளில் 10 கிலோ வேர் உட்பூசணங்கள் கலந்து பாலித்தீன் பைகளில் இடவும்.

வளர்ந்த பயிர்களுக்கு
ஒரு மரத்திற்கு சுமார் 200 கிராம் வேர் உட்பூசணம் தேவைப்படும். வேர் உட்பூசணத்தை வேர் பாகத்தில் இட்டு மண் அணைக்கவும்.

Wednesday, March 11, 2015

பஞ்சகவ்யம் - தயாரிப்பு முறை


பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி நீர்மக்கலவை. இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருள் (உரம்) ஆகும்.


பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் -


1) சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்  6) கரும்புச்சாறு 7) இளநீர் 8) வாழைப்பழம்


இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கிய பூசை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.



தயாரிப்பு முறை:




தேவையான பொருட்கள்
1. பசுஞ்சாணம்-5 கிலோ,
2. பசுவின் கோமியம்-3 லிட்டர்,
3. பசும்பால்-2 லிட்டர்,
4. பசு தயிர்-2 லிட்டர்,
5. பசு நெய்-1 லிட்டர்,
6. கரும்புச்சாறு-1 லிட்டர்,
7. தென்னை இளநீர்-1 லிட்டர்,
8. வாழைப்பழம்-1 கிலோ.



பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.



• 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.



• ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.



வேளாண்மையில் பயன்பாடு
1. பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.

2. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும்
பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.



பயன்படுத்தும் முறை
ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் கைத்தெளிப்பான் கொண்டு பயிர்களுக்கு தெளிக்கலாம்.

Saturday, March 7, 2015

ஈ எம் நுண்ணுயிரி பற்றி

ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி டீரோஹைகா எனும் அறிஞர் 1986 ல் கண்டுபிடித்த இந்த அற்புத கலவையினை தமிழில் திறமிகு நுண்ணுயிரி என அழைக்கலாம. 80 வகையான நுண்ணுயிகளை தேர்வு செய்து அதனை திரவ வடிவத்தில் ஒருங்கிணைத்து செய்யப்படும் பழுப்பு நிறதிரவம் ஈ.எம். 
இக்கலவையில் ஏற்கனவே பிரபலமாக உள்ள அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர், அசிட்டோபேக்டர், ட்ரைகோடர்மா, சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிகளும். லேக்டிக் ஆசிட் பேக்க்டீரியா,ஈஸ்ட்,ஒளிச்சேர்க்கைக்கான பேக்டீரியா, ரே பூசணம், ஆக்டினோமைசிட்ஸ் போன்ற நுண்ணுயிர்களும் உள்ள. ஈஎம் பற்றி அறிமுகம் போதுமானது. இது கால்நடை வளர்ப்பில் என்ன வகையில் பயன் படுகின்றது என்பதை மட்டும் பார்க்கலாம்.
ஈ எம் 1 என அழைக்கப்படுவது தாய் திரவம். இது 6 மாதம் வரை வைத்திருக்கலாம். இதில் உள்ள நுண்ணுயிர்கள் உறக்க நிலையில் இருக்கும். இதனை வெளியில் வாங்குவது எளிது.

உறக்க நிலையில் இருக்கும் இந்த மூலக்கரைசலை உயிருள்ள இரண்டாம் நிலை திரவமாக நாம் தயார் செய்ய வேண்டும்.இதன் பெயர் ஆக்டிவேட்டேட் ஈ.எம் திரவம்.

ஆக்டிவேட்டேட் ஈ எம் திரவம் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
1.ஈ எம் 1 லிட்டர்.
2.குளோரின் கலக்காத தண்ணீர். போர் தண்ணீர் நல்லது [ஆர். ஓ தண்ணீரும் தவிர்க்கவும்] 20 லிட்டர்.
3.ரசாயனம் சேர்க்காத வெல்லம், பனங்கருப்பட்டி மிக நல்லது. தனி கரும்புசாறும் பயன் படுத்தலாம் 1 கிலோ.

செய்முறை.
ஒருகிலோ வெல்லத்தை நன்கு கரைத்து எடுக்கவும், இதற்கு நாம் ஏற்கனவே வைத்துள்ள தண்ணீரில் தேவையான அளவு பயன் படுத்தவும். மீதம் உள்ள தண்ணீர் 1 லிட்டர் ஈ.எம். அனைத்தையும் காற்றுபுக முடியாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வாரம் வைக்க வேண்டும். அப்போது உறங்கும் நிலையில் உள்ள நுண்ணுயிர்கள் உயிர் பெற்று வளரத்துவங்கும். அதன் எண்ணிக்கை பல மடங்குகளாகும். இந்த செயலினால் பிளாஸ்டிக் கலனில் வாயு உருவாகும்.தினசரி அதன் மூடியை திறந்து அந்த வாயுவை வெளியேற்ற வேண்டும்.

மீன் அமிலம் தயாரிப்பு முறை

தேவையான பொருள்கள் + செய்முறை :
ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.
பதம் அறிதல் :
நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.
இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.

பழவாடை அறிதல் :
பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.
பயன்படுத்தும் முறை :
இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.


பயன்கள் :
பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.

வைப்பு :
ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Thursday, February 26, 2015

ஆடுகளின் மூலம் இயற்கை உரம்

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.
அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.
அதேநேரத்தில், ரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. செயற்கை ரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.
ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.
ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.