Showing posts with label பூச்சிக்கொல்லிகள். Show all posts
Showing posts with label பூச்சிக்கொல்லிகள். Show all posts

Tuesday, November 29, 2016

வெண்டையில் பூச்சி தாக்குதலுக்கு தீர்வு


10 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா!
விதை நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். 20-ம் நாளிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்யா, செடி வளர சிறந்த பயிர் ஊக்கியாகச் செயல்படும். வேறு எந்த இடுபொருளும் தேவையில்லை.
மாவுப்பூச்சிக்கு இஞ்சி-பூண்டு கரைசல்
வெண்டையில் மாவுப்பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வருமுன் காப்போம் முறையில் நடவு செய்த 25-ம் நாளில் இருந்தே, வாரம் ஒரு முறை பூச்சி விரட்டியைத் தெளித்து வர வேண்டும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றில் தலா அரைக்கிலோ எடுத்து அவற்றை உரலில் இடித்து வெள்ளைத் துணியில் கட்டி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஊறவைக்க வேண்டும். 5 நாட்கள் ஊறிய பிறகு கரைசலை எடுத்து வடிகட்டினால் இஞ்சி-பூண்டு கரைசல் தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும். 2 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பைத் தூளாக்கிப் போட்டுக் கலக்க வேண்டும். அதனுடன், 200 கிராம் கல் உப்பைச் சேர்த்துக் கலக்கி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற கணக்கில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
இந்த இரண்டு கரைசல்களையும் சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை கைத்தெளிப்பானால் தெளித்து வந்தால் பூச்சித்தாக்குதல் இருக்காது. அதோடு சோலார் விளக்குப் பொறிகளையும் அமைத்துவிட்டால் அனைத்து வகையான தீமை செய்யும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தி விட முடியும்.
தவிர, வரப்பில் தட்டைப்பயறு, செண்டுமல்லி, காராமணி ஆகிய செடிகளை நடவு செய்து விட்டால்.. பயிரைத் தாக்க வரும் மாவுப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈ, இலைத்துளைப்பான் ஆகியவை வரப்போரப் பயிரில் அமர்ந்துவிடும். இதனால் முதன்மைப் பயிரான வெண்டையை பூச்சிகளில் இருந்து காப்பாற்றி விடலாம்.

Monday, November 28, 2016

முருங்கை பயிரைத் தாக்கும் கம்பளிப்புழு

முருங்கை பயிரைத் தாக்கும் கம்பளிப்புழு தாக்குதலின் அறிகுறிகள்:
  • மரத்தின் தண்டுப் பகுதியில் புழுக்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து காணப்படும்
  • புழுக்கள் கூட்டமாக சேர்ந்து சாப்பிடும்
  • மரப்பட்டையை சுரண்டி சாப்பிடும், தழைகளை பல்லால் கரண்டு சாப்பிடும்
  • தாக்குதல் முற்றிய நிலையில் மரம் இலைகளே இல்லாமல் மொட்டையாகக் காணப்படும்

பூச்சியின் விபரம்:
  • முட்டை: இளம் குருத்து மற்றும் இலைகளில் குவியலாக முட்டையிடும்
  • புழு: புமுக்கள் பழுப்பு நிறமாக வெண்ணிற உரோமங்களுடன் இருக்கும்
  • பூச்சி: மஞ்சள் கலந்து பழுப்பு நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
  • முட்டை குவியல்கள் மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்கவேண்டும்
  • மழை பொழிந்தவுடன் ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து அந்துப்புச்சிகளை கவர்ந்து அழிக்கவும்
  • தீ பந்தம் கொண்டு தண்டுப்பகுதியில் கூட்டமாகக் காணப்படும் புழுக்களை கொன்று அழிக்கவேண்டும்
  • மீன் எண்ணெய் ரோசின் சோப் 25 கிராம்/லிட்டர் அல்லது கார்பரில் 50 WP 2 கிராம்/லிட்டர் தெளிக்கவும்

Tuesday, August 4, 2015

நன்மை தரும் பூச்சிகளை உற்பத்தி செய்து பயிர்களை காக்கும் விவசாயி - Farmer produces beneficial insects that protect crops

விவசாயத்தில் நோய் பாதிப்பு, பூச்சி தாக்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த ரசாயன உரம், பூச்சிமருந்து பயன்படுத்துகின்றனர். ஆனால் பூச்சி மருந்து பயன்படுத்திய சில நாட்களிலேயே மருந்து வீரியம் குறைந்து நோய் பரப்பும் பூச்சிகள் அதிகரித்துவிடுகிறது. பயிர்களை பாதுகாக்க முடியவில்லை என விவசாயிகள் புலம்பும் நிலை உள்ளது.

குறிப்பாக பயிர்களில் தண்டுபுழு நோய் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் 40 சதவீத மகசூல் குறையும். இப் பாதிப்பில் இருந்து பயிர்களை காக்க இயற்கை வேளாண் முறையில், நோய் ஏற்படுத்தும் பூச்சிகளை அழித்து, நன்மைதரும் பூச்சிகளை உருவாக்கி விற்பனையிலும், விவசாயத்திலும் சாதித்து வருகிறார் தேனி அன்னஞ்சியை சேர்ந்த பட்டதாரி விவசாயி மோகன்குமார்.
இவர் 2011 ல், 4 ஏக்கரில் ஒருபரு கருனைமுறை தொழில் நுட்பத்தில் கரும்பு நாற்று செய்தார். முதல் வெட்டில் ஏக்கருக்கு 60 டன், 2வது வெட்டில் 75டன் மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார். கரும்பில் பாதிப்பு ஏற்படுத்தி தண்டுபூச்சிகளை அழிக்கும் இயற்கை முறையில் “டிரைகோகிராம்மா ஜாப்னிக்” எனும் பூச்சிகள் மூலம் நோய் பாதிப்பை தடுத்து உற்பத்தியில் சாதனை படைத்தார். இவர் பெற்ற பலனை மற்றவர்களுக்கும் சென்றடையும் வகையில், தண்டுபுழுவை கட்டுப்படுத்தும் பூச்சிகளை உற்பத்தி செய்கிறார்.
விவசாயி மோகன்குமார் கூறியதாவது:
  • அதிக முட்டையிடும் “கார்சீரா’ எனும் பூச்சிகள் மூலம் “டிரைகோகிரம்மா ஜாப்பனிக்’ என்ற முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து வரும் சிறிய பூச்சிகளை கூண்டு வலைகளில் பராமரித்து அதிலிருந்து மிக நுண்ணிய முட்டைகளை பெறலாம். முட்டைகளை மஞ்சள்நிற அட்டையில் ஒரு கியூபிக் மீட்டர் அளவில் சிறிய அட்டையில் 15 ஆயிரம் முட்டைகள் ஒட்டுகின்றனர். இந்த அட்டைகளை ஐந்து நாட்களுக்குள் தண்டு புழு பாதித்த பயிரில் கட்டவேண்டும். அட்டையில் ஒட்டிய முட்டைகள் சூரிய வெப்பத்தில் 2 மணிநேரத்தில் பூச்சியாக மாறிவிடும். இப் பூச்சிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் தண்டு புழுக்களை உணவாக எடுத்து, அழித்து, பயிர்களுக்கு நன்மை தரும் முட்டைகளை செடியில் வைத்துவிடும்.
  • கரும்பில் தண்டு பூச்சி பாதிப்பு இருந்தால் நடவு செய்த 4 வது மாதத்தில் 15 நாள் இடைவெளியில் 3 முறை மஞ்சள் நிற அட்டை கட்டினால் நோய் பாதிப்பு இருக்காது.
  • இதுபோன்ற நன்மை செய்யும் பூச்சிகள், கரும்பு, காய்கறி சாகுபடி, காப்பி, ஏலம் பயிர்களில் தண்டுபுழு பாதிப்பை போக்க பெரிதும் உதவுகிறது.
  • பண்ணையில் நாள்ஒன்றுக்கு 120 சிசி பூச்சிகள் உற்பத்தி செய்கிறேன். இதை சர்க்கரை ஆலைகள் அதிகம் கொள்முதல் செய்கிறது. ஒரு அட்டை ரூ.35 விலைக்கு விற்கப்படுகிறது. பயிரை தாக்கும் மற்ற நோயான மாவு பூச்சி, கத்தாளை பூச்சி ஆகியவற்றை ஒழிக்க இயற்கை பூச்சிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
மேலும் விபரங்களுக்கு…09944865516.

Thursday, February 26, 2015

ஆடுகளின் மூலம் குறைந்த செலவத்திட்டத்தில் ஒரு இயற்கை ஈடுபொருள்

இரசாயன பூச்சி கொல்லிகளின் விலையேற்றமும், உரகங்களின் பற்றாக்குறையும் உள்ள இச்சூழலில் அதிக மகசூல் பெறுவது, விவசாயிகளுக்கு எளிதான காரியமன்று. குறைந்த ஈடுபொருள் செலவுதரும் எந்தவொரு மாற்று திட்டத்தையும் ஏற்ற விவசாயிகள் தயாராக உள்ளனர். அதே சமயம் அத்திட்டம் அதிக மகசூல் தருவதாகவும் இருக்க வேண்டும்.இவ்வாறான கருத்து கொண்ட விவசாயிகளுக்கு, இயற்கை செய்முறை திட்டம் சரியாக பயனளிக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல விவசாயிகள், இயற்கை முறை சாகுபடித் திட்டத்திற்கு மாறி வருகின்றனர். இதன் காரணம். இயற்கை ஈடுபொருட்களை குறைந்த முதலீட்டில், மிகுந்த பயனளிக்க கூடியதாகவும், தாங்களாகவே தயாரிக்க முடியும். என்பதாலாகும்.
ஆட்டோட்டம்:
பரவலாக, அனைத்து கிராமங்களிலும் ஆடுகளை காணலாம். பசுவைப் போல் ஆடுகளின் சாணம், சிறுநீர் மற்றும் பாலும் சிறந்த மதிப்புடையதாகும். ஆடுகளின் பால் மற்றும் கழிவுகளின் மூலம் தயாரிக்கப்படும் உரம் ஆட்டோட்டம் எனப்படும் என்று முனைவர். நம்மாழ்வார் கூறுகிறார்.
ஆட்டோட்டம் தயாரிப்பில் உள்ள திரு.வி.எஸ்.அருணாச்சலம் கூறுகையில்” நெல், காய்கறிகள், பருத்தி, மிளகாய், நிலக்கடலை, எள் மற்றும் மலர் செடிகள் ஆகியவற்றிக்கு உபயோகிக்கும் ஆட்டோட்டம், ஒரு சிறந்த வளர்ச்சி ஊக்கியாகும். இது செடி வளர்ச்சியை தூண்டுவதுடன், இலைகள் மற்றும் பழப் பிஞ்சுகள் உதிர்வதை தடுத்து, அதிக எடையுள்ள, சுவையான பொருட்களை தரும்.

ஆட்டோட்டம் செய்முறை:
சுமார் ஐந்து கிலோ தூய ஆட்டு புளுக்கை, மூன்று லிட்டர் ஆட்டுச் சிறுநீர், 1.5 கிலோ கிராம் சோயா அல்லது நிலக்கடலை புண்ணாக்கு அல்லது அரைத்த உளுந்து அல்லது பாசிப்பயிர், ஆகியவற்றை ஒர் இரவு தண்ணீரில் ஊரவிடவேண்டும்.
பின்னர் சுமார் இரண்டு லிட்டர் ஆட்டின் பால், தயிர், இளநீர், கள், கரும்புச்சாறு மற்றும் ஒரு டசன் (dozen)பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை சேர்க்கவும்.
கள்ளுக்கு பதிலாக 50 கிராம் ஈஸ்ட்டை 2 லிட்டர் சுடு தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம். அதே போல், கரும்புச்சாறுக்கு பதிலாக, 1 கிலோ வெல்லத்தை 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கூட்டுப் பொருட்களையும் ஒரு பிளாஸ்டிக் உருளை (drum)யில் வைத்து நன்கு கலக்கவும். அதை பதினான்கு நாட்கள் (இரண்டு வாரம்) நிழலில் வைத்து, பின் அக்கலவையை உபயோகிக்கலாம்

கரைசலை கிளரும் முறை:
ஒரு நாளுக்கு இரண்டு முறை, வலது பக்கமாக 50 முறையும், இடது பக்கமாக 50 முறையும் கிளர வேண்டும். பின் அந்த பிளாஸ்டிக் உருளையை (drum) பூச்சிகளோ, புளுக்களே முட்டை இடாதவாறு நல்ல பருத்தித் துணியைக் கொண்டு மூடிவிடவேண்டும். இந்த கரைசலை மேற்கண்டவாறு நன்கு கலந்து, முறைபடி பாதுகாத்து வைத்தால் ஆறு மாதங்கள் வரை வைத்து உபயோகிக்கலாம்.
மேலும், இந்த கரைசல் சற்று அதிகமான அடர்த்தியில் காணப்பட்டால், இளநீர் அல்லது தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளலாம்.

பூச்சிகளை விரட்டுவதற்கு சில இயற்கைக் கரைசல்கள்

உழவுத் தொழிலில் ஒரு சில பூச்சிகள் பயிர்களை அழித்து விடுகின்றது. இதனால் செயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தபடுகிறது இதனால் நாம் உண்ணும் உணவும் மெல்ல நஞ்சாகி விட்டது மற்றும் இயற்கை வளம் முழுமையாக அழிக்கபட்டு வருகிறது. ஆனால் இயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் இயற்கை பூச்சி விரட்டி கையாளப்படுகிறது. இதனால் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக உள்ளது மற்றும் இயற்கை வளம் முழுமையாக பாதுகாத்து வரப்படுகிறது.
பூச்சிகளை விரட்டுவதற்கு சில இயற்கைக் கரைசல்கள் பயன்படுகின்றன. இவற்றில் உள்ள அடிப்படையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்டால் நம்மால் எந்த ஒரு சூழ்நிலையிலும் நல்ல பூச்சி விரட்டியை தயார் செய்து கொள்ள முடியும். பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது. அவற்றை விரட்டுவதே நோக்கம். இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரிங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.
பின்வரும் இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும் :
1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள்- ஆடுதொடா, நொச்சி போன்றவை
2. ஒடித்தால் பால் வரும் இலை தழைகள்- எருக்கு, ஊமத்தை போன்றவை
3. கசப்புச் சுவை மிக்க இலை தழைகள்- வேம்பு., சோற்றுக் கற்றாழை போன்றவை
4. உவர்ப்பு சுவை மிக்க இலை தழைகள்- காட்டாமணக்கு போன்றவை
5. கசப்பு உவர்ப்பு சுவைமிக்க விதைகள்- வேப்பங்கொட்டை. எட்டிக் கொட்டை
இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.

Monday, December 29, 2014

வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரி என்றால் அது எலிகள் தான். வீட்டிலும், வயலிலும், தானிய சேமிப்பு கிடங்குகளிலும் எலிகள் புகுந்து நாசத்தை விளைவிக்கின்றன. உயிரினங்களில் மிகுந்த புத்திக்கூர்மையும், சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வதிலும் எலிகள் தனித்திறன் வாய்ந்தவை. ஒரு மனிதன் உண்ணும் உணவை ஆறு எலிகள் சேர்ந்து உண்டு அழிப்பதுடன் 20 மடங்கு உணவை வீணடிக்கவும் செய்கின்றன. இவ்வாறு அதிக சேதாரத்தை உண்டு பண்ணும் எலிகளை கீழ்க்கண்ட முறைகளில் கட்டுப்படுத்தலாம்.



வரப்பு வெட்டி அழித்தல்
நெல் அறுவடை முடிந்த ஒரு வாரத்திற்குள் வரப்பில் உள்ள ஈரத்தை கொண்டு வரப்புகளை வெட்டி எலிகளை அவற்றின் குட்டிகளுடன் பிடித்து அழிக்கலாம்.

விஷம் வைத்து அழித்தல்
எலிகள் சந்தேகப் பிராணிகள். தனக்கு வரும் ஆபத்தை எளிதில் கணிக்க வல்லவை. கூச்ச சுபாவம் உடையவை. தனக்கான உணவுப் பொருளில் திடீர் மாறுதல்களை கண்டால் அவற்றை தவிர்க்க கூடியவை. இது போன்ற நிலையில் விஷத்தை பயன்படுத்தும் முன்பாக அவற்றுக்கு அரிசிப்பொறி, கருவாடு, வதக்கிய வெங்காயம் போன்றவற்றை எலி நடமாடும் இடங்களில் அவ்வப்போது வைத்து பழகி வரவேண்டும். பிறகு இந்த உணவில், அதாவது 49 பங்கு உணவுப் பொருளுடன் 1 பங்கு சிங்க் பாஸ்பைடு என்ற அளவில் விஷ உணவு தயாரிக்க வேண்டும். உணவுப் பொருளுடன் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலக்க வேண்டும். ஒரு ஏக்கரில் 30 இடங்களுக்கு குறையாமல் எலி நடமாட்டமுள்ள இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு கொட்டாச்சியில் 10 கிராம் என்ற அளவில் விஷ உணவை வைக்க வேண்டும். இது போல 15 நாட்கள் இடைவெளியில் 5 அல்லது 6 முறை வைத்தால் எலிகள் மடிந்து போகும்.

கிட்டி வைத்து பிடித்தல்
தஞ்சாவூர் கிட்டிகள் அல்லது மூங்கில் கிட்டிகள் ஏக்கருக்கு 20 எண்களை நிலத்தில் வைக்கவும். நிலத்தில் ஓர் அங்குலம் தண்ணீர் இருக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கிட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.