Showing posts with label மிளகாய். Show all posts
Showing posts with label மிளகாய். Show all posts

Tuesday, January 13, 2015

மிளகாய் சாகுபடி

நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும்.
  • ஜனவரி -பிப்ரவரி,
  • ஜூன்-ஜூலை,
  • செப்டம்பர் ஏற்ற பருவங்கள்.
ஒரு ஏக்கருக்கு 400 கிராம் (20,000 நாற்றுகள்) விதை தேவைப்படும்.
மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது. கோ.1, கோ.2, கோ3, பிகேஎம்1, மேலும் சாத்தூர் சம்பா, ராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு ஆகிய நாட்டு வகைகளும் அந்தந்த பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன.
விதைப்பு
ஒரு கிலோ விதைக்கு காப்டான் அல்லது திராம் 2 அல்லது டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். அசோஸ் பைரில்லம் நுண்ணுயிரியை எக்டருக்கு 2 பொட்டலம் வீதம் விதைநேர்த்தி செய்வதால் தழைச்சத்தின் தேவையினை 25 விழுக்காடு அளவுக்கு குறைக்கலாம்.
நாற்றங்கால்:
  • நாற்றங்காலுக்கு மேட்டுப்பாத்திகள் 1 மீட்டர் அகலம், 3 மீ. நீளம், 15 செ.மீ. உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு மக்கிய தொழு உரம் 75 கிலோ இடவேண்டும். பாத்திகளில் விதைகளை 2 செ.மீ. ஆழத்தில் 5-10 செ.மீ. இடைவெளியில் வரிசையில் விதைத்தபிறகு வைக்கோல் அல்லது உலர்ந்த இலைகளைப் பாத்திகளின் மேல் பரப்பி, பூவாளியால் தண்ணீர் ஊற்றவும்.
  • விதைத்த 10-15 நாட்களில் பாத்திகளில் பரப்பியதை அகற்றிவிட வேண்டும்.
  • நாற்றங்காலில் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் புளூகாப்பர் 2.5 கிராம் மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
  • நடவுக்காக நாற்று பிடுங்குவதற்கு 15 நாட்களுக்கு முன் ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 250 கிராம் பியூரடான் குருணைகளை இடுவது நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும்.
  • நடுவதற்கு 40 முதல் 44 நாட்கள் வயதுடைய நாற்றுகளே ஏற்றவை. நேரடியாக விதைக்கப்பட்ட பாத்திகளில் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு தேவையான பயிர் எண்ணிக்கை இருக்குமாறு கலைத்து இடைநிறைவு செய்வது அவசியம்.

மிளகாய் சாகுபடி தொழில்நுட்பங்கள்

மானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மிளகாய் முக்கியப் பயிராகும்.
ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிக பரப்பளவில் மானாவாரியாக சாகுபடியாகிறது. இதில் சம்பா ரகங்களை விட மானாவாரி ரகங்களே அதிகம்.
மானாவாரி மிளகாய் சாகுபடியில் ஆரம்ப கால விதை முளைத்தல், இளம் செடிகளின் வளர்ச்சி ஆகியனவற்றில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் மானாவாரி நாற்றங்காலில் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவையும் முக்கியப் பிரச்னைகளாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி பயிராக சுமார் 2400 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
ரகங்களைப் பொருத்தவரை கே1,கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன. செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இதன் பருவமாகும். மண் நல்ல வடிகால் வசதியுடன் கூடிய இருமண்பாடு கொண்ட 6.5-7.5 வரை கார அமிலத்தன்மை உள்ள நிலம் மிளகாய்க்கு ஏற்றது.

ஏக்கருக்கு விதை அளவு 400 கிராம் போதுமானதாகும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிர் உரத்தை 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து விதைத்த பின் நிலத்தில் போதுமான ஈரம் இருக்கும் போது தூவ வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 52 கிலோ யூரியா, 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் ஆகியன இட வேண்டும்.
நன்கு பொடிபட உழுது தயார் செய்யப்பட்ட நிலங்களில் புழுதியில் விதைகளை கைவிதைப்பாக வரிசையில் பருவ மழைக்கு முன்னர் விதைக்க வேண்டும். மேலும், நடவு சாகுபடி முறையில் சிபாரிசு செய்யப்படும் உர அளவில் பாதி மட்டுமே மானாவாரி மிளகாய்க்கு இட வேண்டும்.
பயிர் முளைத்து 45ஆம் நாள் களை எடுக்கும்போது மேலுரமாக 43 கிலோ யூரியா இட வேண்டும். மேலுரம் இடும்போது மண்ணில் போதுமான அளவு ஈரம் இருக்க வேண்டும்.