Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Tuesday, April 28, 2015

முப்போகம் பலன் தரும் திசு வாழை (Thisu Vaalai) - Effective Banana Tissue Culture


விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்லாம் அவற்றை பிளாட் போட்டு விற்று வருகின்றனர். விளை நிலத்தை சீரமைத்து வாழை விவசாயம் மூலம் வருமானத்தை பெருக்கி வருகிறார் காரைக்குடி, அரியக்குடி வளன் நகர் விவசாயியும் முன்னாள் ராணுவ வீரருமான ஆரோக்கியசாமி.

மொத்தமுள்ள 4 ஏக்கரில் ஒரு ஏக்கரில் வாழை, 1.5 ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் தென்னை விவசாயம் மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் வாழ்வாதாரத்தை வாரி வழங்கும் வெண்டை, கத்தரி விவசாயத்தை அரை ஏக்கரில் செய்து வருகிறார். திசுவாழை பயிரிட்டுள்ள இவர் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் லாபம் பார்த்து வருகிறார்.

அவர் கூறியது:
ஜி-9 வகை திசு வாழை தோட்டக்கலை துறை உதவி வேளாண் அலுவலர் மங்களசாமி மூலம் எனக்கு கிடைத்தது. கன்றுகள் நம்முடைய வாழை போன்று அல்லாமல் சிறிய செடி போல இருக்கும். 11 மாதத்தில் காய்ப்பு எடுக்க ஆரம்பித்து விடலாம். பச்சை பழ வாழை பயிரிட்டுள்ளேன். ஒரு தாரில் 135 முதல் 140 காய்கள் இருக்கும். தற்போதைய நிலையில் தார் ஒன்று ரூ.500 முதல் 600 வரை விற்பனையாகிறது.

ஒரு வாழை காய்த்து முடிந்தவுடன் அதை வெட்டிவிட்டு, அதன் பக்க கன்று மூலம் அடுத்த வாழை உருவாகிறது. ஒரு வாழை வைத்தால், மூன்று முறை மகசூல் பெற முடியும். ஆறு அடிக்கு ஒரு கன்று நட வேண்டும். 15-வது நாளில் ஒரு வாழைக்கு 5 கிலோ மாட்டு சாண உரம், 200 கிராம் டி.ஏ.பி., 200 கிராம் பொட்டாஷ் இட வேண்டும். 40-வது நாள் இதே அளவு உரம் இட வேண்டும்.


150-வது நாள் 10 கிலோ மாட்டு சாணம் மட்கியது வைக்க வேண்டும். திசு வாழையை பொறுத்தவரை நீர் சத்து அதிகம் தேவை. இதனால் சொட்டு நீர் பாசனம் சிறந்தது.

இந்த வாழை 6-வது மாதம் பூக்கும். 8-வது மாதம் காய்க்க துவங்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் செலவாகும். ஆனால், வருமானமோ ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் லாபமாக கிடைக்கும். வாழையின் ஊடே காய்கறி விவசாயமும் மேற்கொள்ளலாம்.

அதே போல், நெல் விவசாயம் உரம் போடாமல் இயற்கை விவசாயம் மூலம் மேற்கொண்டு வருகிறேன். நெல் நடவுக்கு முன்பு, வேம்பு இலை, வாகை இலை ஆகியவற்றை நிலத்தில் போட்டு உழுது அதன்பிறகு நடவு பணி துவங்குகிறது. இதனால், இயற்கையான அரிசி நமக்கு கிடைக்கிறது, என்றார்.

இவரை தொடர்பு கொள்ள 09487413100.
–டி.செந்தில்குமார், காரைக்குடி.

வாழையில் வாடல் நோய் (Vaalaiyil Vaadal Nhooi) - Banana wilt disease

வாழையில் ஏற்படும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார். 

அறிகுறிகள்
  • தாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் திடீரென முழுவதும் பழுத்து, தண்டுடன் சேரும் இடத்தில் சுற்றிலுமாக ஒடிந்து, மடிந்து வாழைத் தண்டைச் சுற்றிலும் துணி கட்டியதுபோல் காட்சியளிக்கும்.
  • பின் தண்டின் அடிப்பாகத்தில் மண்ணிலிருந்து மேல்நோக்கி நீள வாக்கில் வெடிப்பு ஏற்படும்.
  • கிழங்கினைக் குறுக்கே வெட்டிப்பார்த்தால், செம்பழுப்பு நிறத்தில் வட்ட வட்டமாக இப்பூஞ்சாணம் தாக்கி அழிந்துள்ள பகுதிகளைக் காணலாம்.
  • செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் ரகங்களை இந்நோய் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. நூற்புழு பாதிப்பு இருக்கும் தோட்டத்தில் வாடல் நோயின் அறிகுறிகள் அதிக அள வில் காணப்படுகின்றன.
  • வாடல் நோயின் வித்துக் கள் மண்ணில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது.
  • பூஞ்சாண வித்துக்கள் முளைத்து பக்க வேர்கள் மூலமாக கிழங்குப் பகுதியைத் தாக்கும். நோய் தாக்கிய கிழங்குகள் மூலமாகவும், பாசன நீர் மூலமாகவும் இந்நோய் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பரவுகிறது.
மேலாண்மை முறைகள்:
  • வாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூவன் (கதலி), ரொபஸ்டா, கை போன்ற வாழை ரகங்களைப் பயிரிடலாம்.
  • வாழைக் கன்றுகளை நோய் தாக்காத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். விதைக்கிழங்குகளைப் பரிசோதித்து செந்நிறப் பகுதிகள் இல்லாதவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
  • கிழங்குகளை நடுவதற்கு முன் களிமண் குழம்பில் நனைத்த கிழங்கின் மீது பத்து கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் பூசணக்கொல்லியினைச் சீராகத் தூவ வேண்டும்.
வாழை பனாமா வாடல் நோய் தடுக்க
  • ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 20 கிலோ உலர்ந்த சாண எரு அல்லது மணலுடன் கலந்து ஒவ்வொரு வாழைக்கும் தூர்ப் பகுதியைச் சுற்றிலும் இடவேண்டும்.
  • காப்சூல் எனப்படும் மாத்திரை குப்பிகளில் 50 மில்லி கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் நிரப்பி நட்ட ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில் கிழங்கினுள் செலுத்த வேண்டும்.
  • வாழைக்கிழங்கில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ. ஆழ துளையிட்டு உள்ளே செலுத்த வேண்டும். வாழைத்தண்டில் செலுத்தினால் பயன் இல்லை. குப்பியினைச் செலுத்தியபின் களிமண் உருண்டை கொண்டு துளை வாயிலை மூடிவிடவும்.
  • மாத்திரை குப்பி வைப்பதை தக்க ஆலோசனை பெற்று வைக்க வேண்டும். நோய் தாக்கிய மரங்களை கிழங்கோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும். அக்குழியில் போதிய அளவு சுண்ணாம்பு (குழிக்கு 1-2 கிலோ) இடவேண்டும்.

  • கடலூர் மாவட்டத்தில், சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையில் குறிப்பாக நாடு மற்றும் ஏலக்கி ரகங்களில் புதிய வகை வாடல் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
  • நோய் தாக்கப்பட்டு குலை தள்ளும் நிலையிலுள்ள வாழை மரங்களில் இலைகள் பழுத்து காணப்படும்.
  • வாழை மரத்தைத் தொட்டவுடன் இற்றுப்போய் சாய்ந்து விடும்.
  • தாக்கப்பட்ட மரங்களை வேருடன் அகற்றிவிட்டு குழிகளில் 50 கிராம் வீதம் பிளீச்சங் பவுடர் தூவ வேண்டும்.
  • அருகாமையிலுள்ள மரங்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பிளீச்சிங் பவுடர் என்ற அளவில் கலந்து மரத்தைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
  • இந்த நோய் விரைவில் பரவும் தன்மையுள்ளதால் வாழை விவசாயிகள் தனி கவனம் செலுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும்.
  • மேலும், விவரங்களுக்கு அருகாமையிலுள்ள தோட்டக்கலை துறை, வட்டார மையங்களில் களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • முனைவர்
    எஸ்.ஜெயராஜன் நெல்சன்,
    ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.

மக்காச்சோள விவசாயத்தில் மாநில சாதனை (Makka Chola Vivasayathil Maanila Saathanai) - The state record in maize agriculture

வறட்சியிலும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, மக்காச்சோளம் சாகுபடியில் ஒரு எக்டேருக்கு 12 டன்கள் (120 மூட்டைகள்) வரை மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார் பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி எஸ்.ராமசாமி. மாநிலஅளவில் முதலிடம் பிடித்த இவருக்கு வேளாண்மைத்துறை மூலம் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தனது சாதனை குறித்து ராமசாமி கூறியதாவது:
ஒரு எக்டேரில் சாகுபடி செய்வதற்கு உரம், வேலையாட்கள் கூலி, நீர் பாசனத்திற்காக ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்தேன்.


பொதுவாக ஒரு எக்டேருக்கு 8 டன்கள் தான் மகசூல் கிடைக்கும். வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், 12 டன்கள் வரை கிடைத்துள்ளது. தற்போது ஒரு மூடை ரூ.1,350 விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ.1.35 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.

பயிரிடும் முறை:
  • மக்காச்சோளத்தை ஐப்பசியில் பயிரிட்டேன். விதைப்பதற்கு முன்பாக நிலத்தில் கட்டிகள் இல்லாதவாறு தொடர்ந்து பலமுறை உழவு செய்ய வேண்டும்.
  • மண் பொலிவாக இருந்தால் தான் வேர் வெகுவாக கீழே செல்லும். மண் பரிசோதனைப்படி உரமிட்டால், உரம் வீணாவதை தவிர்க்கலாம். ஒரு எக்டேருக்கு அடியுரமாக 135 கிலோ டி.ஏ.பி.,- 30 கிலோ யூரியா, 85 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.
  • தொடர்ந்து 12.5 கிலோ நுண்ணூட்ட சத்துகளை 20 கிலோ மண் கலந்து இட வேண்டும். நான், 52/11 என்ற வீரிய ரக விதைகளை பயன்படுத்தினேன். ஒரு எக்டேருக்கு 12.5 கிலோ வரை விதைவேண்டும்.
  • அஸ்சோஸ்பைரில்லம் மூலம் விதை நேர்த்தி செய்தால், வேருக்கு தேவையான தழைச்சத்தை பெற்று தரும். ஒரு கிலோ 10 கிராம் டிவிரிடி அஸ்சோடோமோனசில் பூஞ்சன விதை நேர்த்தி செய்தால், நோய் தாக்குதல் ஏற்படாது.
  • 60 X 20 செ.மீ., இடைவெளியில் விதைகள் நட வேண்டும். களைகொல்லி பயன்படுத்தினேன். களையெடுக்கும்போது, மேலுரமாக 150 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும்.
  • பால் பிடிக்கும் தருணத்தில் 75 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும். நான், கிணற்று பாசனம் மூலம் நீர் பாய்ச்சினேன். சொட்டுநீர் பாசனம் பயன்படுத்தினால், நீரை மிச்சப்படுத்தலாம். 15 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும், என்றார்.
இவருடன் பேச: 09362686204

இ.ஜெகநாதன், திண்டுக்கல்.

Friday, April 17, 2015

இனிப்பு மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள் (Enippu Makka Cholam Saagubadi) - Sweet Corn Cultivation



  • இனிப்பு மக்காச்சோளம்: இதன் வயது 90 நாட்கள். இதை அனைத்து மண் வகையுள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதி அவசியம். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
  • ரோட்டோ வேட்டர் மூலம் ஓர் உழவும், கொக்கி கலப்பை மூலம் ஓர் உழவும் செய்து களைகளை அகற்றி, ஏக்கருக்கு 3 டிப்பர் என்ற அளவில் தொழுஉரம் கொட்டி கலைத்து விட வேண்டும். ஓர்அடி இடைவெளியில், ஓர் அடி அளவுக்கு பார் அணைத்து அதன் மையத்தில் ஓர் அடிக்கு ஒரு விதை வீதம் ஒரு அங்குல ஆழத்தில் நடவு செய்து தண்ணீர் கட்ட வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும்.
  • விதைத்த 3ம் நாள் முளைக்க ஆரம்பிக்கும். அன்று ஒரு தடவை தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் கட்டினால் போதும்.
  • 20ம் நாளில் களை எடுத்து பரிந்துரைக்கப்பட்ட உரம் வைக்க வேண்டும்.
  • தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். வேறு எந்த பராமரிப்பும் தேவையில்லை.
  • பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது.கதிர் வருவதற்கு முன்பாக பூச்சிகள் தாக்கினால் மூலிகை பூச்சி விரட்டி தெளிக்கலாம்.
  • 55ம் நாளில் ஆண் பூவெடுக்கும் 60-ம் நாளில் பெண் பூவெடுத்து, கதிர் உருவாகும். 75ம் நாளிலிருந்து கதிர்முற்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து 90ம் நாள் வரை தினம் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 6 டன் அளவிற்கு கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரும் அரை அடி நீளத்தில் இருக்கும். கிலோவுக்கு 3-4 கதிர்கள் நிற்கும்.
  • அனுபவ விவசாயி சேகர், திருவண்ணாமலை மாவட்டம், சு.கீழநாச்சிப்பட்டு கிராமம், தினமும் 200 கிலோவில் இருந்து 300 கிலோ அளவுக்கு அறுவடை செய்து 1 கிலோ 20 ரூபாய்க்கு உழவர் சந்தையில் விற்பனை செய்கிறார். 1 ஏக்கரில் கிடைக்கிற 6 டன் கதிர் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் எடுக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் செலவு போக 90 ஆயிரம்  ரூபாய் லாபம் கிடைக்கிறது. கமிஷன் கடைகளுக்கு அனுப்பினால் 50 ஆயிரம் ரூபாய் தான் லாபம் கிடைத்திருக்கும் என்கிறார். தொடர்புக்கு : சேகர், போன்: 09787600991.