Showing posts with label தீவனம். Show all posts
Showing posts with label தீவனம். Show all posts

Thursday, December 8, 2016

பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 சாகுபடி முறை

பசுந்தீவனச் சோளம்

  • நல்ல சத்துள்ள, தரமான பசுந்தீவனங்கள் போதிய அளவிலும், சரி விகிதத்திலும் கிடைக்காததே கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவதற்கு முக்கியக் காரணமாகும்.
  • இதனைக் கருத்தில் கொண்டு பசுந்தீவனச் சோளம் (கோ.எப்.எஸ். - 31) பயிரிட்டு கால்நடைகளுக்கு வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்கிறது.
  • பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 ரகத்தின் சிறப்பியல்புகள்: அதிக கிளைக்கும் திறன் கொண்டது. அகலமான இலைகள், கதிர்களில் இருந்து மணிகள் கொட்டாமல் இருக்கும் தன்மை கொண்டது.
  • அதிக புரதச்சத்து (9.86 சதவீதம்) கொண்டதும், அதிக பசுந்தீவன உற்பத்தி கொண்டதுமாகும்.
  • அதாவது 1 ஹெக்டேருக்கு 1 ஆண்டில் 190 டன் என்ற அளவில் அறுவடை செய்யலாம். மறுதாம்பு பயிருக்கு ஏற்றது. சுவையான பசுந்தீவனமாகும். கால்நடைகள் இவற்றை விரும்பி உண்கின்றன.
சாகுபடி தொழில்நுட்பம்
  • இந்த பசுந்தீவனப் பயிரை ஆண்டு முழுவதும் எல்லா மண் வகைகளிலும் பயிரிடலாம்.
  • நிலத்தை இரும்புக் கலப்பைக் கொண்டு 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பிறகு 1 ஏக்கருக்கு 10 டன் என்ற அளவில் மக்கிய தொழு உரம், 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பால்போ பாக்டீரியா கலந்து இட வேண்டும்.
  • பின்னர், 2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 6 மீட்டர் நீளமும், 60 செ.மீ. இடைவெளியும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.
  • மண் பரிசோதனையின் அடிப்படையில் உரங்கள் இட வேண்டும்.
  • மண் பரிசோதனை செய்யாவிடில் ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 8 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
  • மேலுரமாக விதைத்த 25 நாள்கள் கழித்து 12 கிலோ தழைச்சத்து போட வேண்டும்.
  • மறுதாம்புப் பயிரில் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் 18 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
  • 4-ஆவது அறுவடையின் போது ஏக்கருக்கு 18 கிலோ தழைச்சத்துடன் 16 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்தையும் இடுவது நல்லது.
  • ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை பாத்திகளின் இருபுறமும் விதைக்க வேண்டும்.
  • விதைக்கு விதை இடைவெளி 10 முதல் 15 செ.மீ. இருக்க வேண்டும். விதைத்த 20 நாள்கள் கழித்து களை எடுக்க வேண்டும்.
  • தேவைப்பட்டால், 35 முதல் 40-ஆவது நாளில் அடுத்த களை எடுக்கலாம்.

நீர் மேலாண்மை

  • நீர் மேலாண்மையைப் பொருத்தவரை விதைத்தவுடன் ஒரு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.
  • 3-ஆவது நாளில் உயர் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

  • பொதுவாக பயிர் பாதுகாப்பு தேவையில்லை. விதை உற்பத்திக்காக பயிர் செய்தால், குருத்து ஈ காணப்பட்டால் விதைத்த 10-ஆவது நாளில் புரபனோபாஸ் 300 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பசுந்தீவன அறுவடைக்கு 30 நாள்களுக்கு முன் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.

தீவனச் சோளம் கோ எஃப், எஸ் 29, கோ 31 சாகுபடி முறை

விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம்.


பருவம்

இறவைப் பயிராக ஜனவரி - பிப்ரவரி, ஏப்ரல் - மே மாதங்களில் தீவனச் சோளம் பயிரிட உகந்த மாதங்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரிப் பயிராக ஜூன் - ஜூலை, செப்டம்பர் - அக்டோபர் மாதங்களிலும் அனைத்து மாவட்டங்களில் பயிரிடும் வாய்ப்புள்ளது.
ரகங்கள்
கோ எஃப், எஸ் 29, கோ 31 (மறுதாம்பு சோளம்) ரகங்கள் சிறந்தவை. தீவனச் சோளத்துடன் கோ 5, கோ எஃப் சி 8 ரக தட்டைப்பயறு சேர்த்து ஊடுபயிராகப் பயிரிட்டால் சத்தான தீவனம் பெறலாம்.

சாகுபடிக் குறிப்புகள்

தீவனச் சோளம் கோ 31 ரகத்தை ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிரிடலாம். ஒருமுறை விதைத்து பலமுறை அறுவடை செய்யலாம்.
நிலம்
நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும்போது 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். உழும் முன்பு ஹெக்டேருக்கு 25 டன் தொழுவுரம் இடுதல் அவசியம்.
விதையளவு
ஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதும். 30-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும். விதை உற்பத்தி செய்ய 60-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

  • அடியுரமாக தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை 45: 40: 40 என்ற விகிதாசாரத்தில் இட வேண்டும்.
  • விதைத்த 30-ஆவது நாளில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வோர் ஆண்டு முடிவுக்குப் பிறகு 45: 40: 40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டியது அவசியம்.

Wednesday, December 7, 2016

கால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’

பால் உற்பத்தியில் உலகத்தில் முதலாம் இடத்தில் இந்தியா உள்ளது. இந்த நிலையில் பால் மற்றும் பால் பொருட்களின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு, தீவனத்தினால் ஏற்படும் செலவே முக்கிய காரணமாகும். பால் உற்பத்தியில் தீவனத் தேவைக்காக 70 சதவீதம் செலவழிக்கப்படுகிறது. இதனால் தீவன செலவை குறைக்க, புதிய தீவனங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் நிலக்கடலை செடியை, கால்நடைகளுக்கு சிறந்த மாற்று உலர்தீவனமாக பயன்படுத்தலாம்.

நிலக்கடலை செடி

  • இந்தியாவில் கடலை சாகுபடி வெகுகாலமாக நடைபெற்று வருகிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், பணப்பயிராக கடலை பயிரிடப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் நிலக்கடலை எண்ணெய் மிகச்சிறந்த ஏற்றுமதி பொருளாக விளங்குகிறது.
  • கடலை புண்ணாக்கு மிகச்சிறந்த புரதச்சத்து மிக்கதாக காணப்படுகிறது. இது அனைத்து கால்நடை மற்றும் கோழித்தீவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் கடலைச்செடியானது வெயிலில் காய வைக்கப்பட்டு, சிறிய அளவில் போராக அடுக்கி வைக்கப்படுகிறது. அவ்வாறு உலர்த்தப்படும் செடி, அதிக புரதம் கொண்டதாகவும், எளிதாக செரிக்கும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கப்பட்டு வருகின்றன.

நிறைந்துள்ள சத்துக்கள்

  • நன்கு பதப்படுத்தப்பட்ட கடலைச்செடியானது 14 சதவீத புரதத்தையும், உலராத கடலைச்செடியானது 17 சதவீத புரதத்தையும் கொண்டுள்ளன. இதேபோல் கொழுப்புச்சத்து 1 முதல் 2.5 சதவீதம் உள்ளது. இந்த சத்துக்கள் கடலைச்செடியின் ரகங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
  • அதேநேரத்தில் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும், மற்ற உலர் தீவனங்களில், புரதம் மற்றும் செரிமானத்தன்மை குறைவாகவும், செரிமானத் தன்மையற்ற நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், கால்நடைகள் அவற்றை பெரும்பாலும் விரும்புவதில்லை. அவ்வகை உலர் தீவனங்களால் பால் உற்பத்தி குறைவும், உடல் வளர்ச்சி மற்றும் கன்று வளர்ச்சி பாதிக்கப்படும்.

அதிகளவு புரதம்

  • எளிதில் சினைப்பிடிக்காத நிலையும் ஏற்படும். பயறுவகை தீவனமான கடலைச்செடியானது, அதிக அளவு புரதமும், எளிதில் செரிக்கும் தன்மையும் உள்ளதால், கால்நடைகளால் பெரிதும் விரும்பி உண்கின்றன. தற்போது அதிக விளைச்சல் தரக்கூடிய நீண்ட தண்டு, அதிக இலை வளர்ச்சி கொண்ட ரகங்கள் அதிகம் உள்ளன. இது விவசாயிகளுக்கு வருமானத்தையும், கால்நடைகளுக்கு உலர்த்தீவனமாகவும் பயன்தருகிறது.
  • நிலக்கடலை செடியை நன்கு உலர வைத்து, நிலக்கடலையை பிரித்தெடுத்த பிறகு, மீண்டும் நன்றாக உலர வைக்க வேண்டும். ஈரப்பதம் 14 சதவீதத்திற்கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகாலை அல்லது மாலை வேளைகளில் கடலைச்செடியை உலர்த்துவது நல்லது. இதன்மூலம் தேவையற்ற இலை உதிர்வை தடுக்க முடியும்.

பூஞ்சை காளான் பாதிப்பு

  • மழை மற்றும் பனிக்காலங்களில் கடலைச்செடியை தார்பாலின் கொண்டு, மூடி வைத்து பாதுகாக்க வேண்டும். நன்றாக காய வைக்காத செடிகள், மழையில் அல்லது பனியில் நனைந்தால், ஈரப்பதம் 14 சதவீதத்திற்கும் அதிகமாகிவிடும். அதை போராக அடுக்கி வைக்கும் போது, பூஞ்சை காளான்களால் பாதிக்கப்பட்டு, நச்சுப்பொருட்கள் உண்டாகின்றன.
  • இதனால் கால்நடைகளில் செரிமானக் கோளாறு, உடல் கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டு பாதிக்கப்பை ஏற்படுத்தும். உலர்ந்த கடலைச்செடியை சிறு, சிறு கட்டுகளாகக்கட்டி வைக்கலாம். பரண் அமைத்தோ, நல்ல உயரமான இடங்களில் போர் அமைத்தோ, அதன் மேல் பாயை கொண்டு மூடி மழை மற்றும் பனியில் நனையாமல் பாதுகாக்க வேண்டும்.

கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 சாகுபடி முறைகள்

கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4


கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோளத்தட்டை மற்றும் பிற பயிர்களின் செடிகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கண்ட தீவனங்கள் கால்நடைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்நடை வளர்ப்பதற்கு உகந்த தீவன புல் வகையான கோ 4 (கம்பு நேப்பியர்) ஒட்டுப்புல்லினை தீவனமாக கொடுப்பதன் மூலம் கால்நடைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தினை அளிக்கலாம். இது தீவனக்கம்பு மற்றும் நேப்பியர் புல் ஆகிய 2 புல் இனங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது.

கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல்லின் சிறப்பியல்புகள்

  • பெற்றோர் – கம்பு கோ.8 * எப்.டி.461
  • அதிக புரதச் சத்து (10.71%) மற்றும் இனிப்புத் தண்டுகளைக் கொண்டது.
  • அதிக படியான இலை நீளம் (110 – 115 செ.மீ) மற்றும் அகலமுடைய (4 – 5 செ.மீ) இலைகளைக் கொண்டது.
  • அதிக உயரம் (400 – 500 செ.மீ) வரை வளரும்.
  • அதிக (400 – 450 இலைகள்/குத்து) மற்றும் மிருதுவான தன்மை கொண்ட இலைகளை கொண்டது.
  • அதிக இலை தண்டு விகிதம் (0.71)
  • அதிக தூர்கள் (30 – 40/குத்து) மற்றும் சாயாதத் தன்மை உடையது.
  • வருடத்திற்கு ஏழு முதல் எட்டு முறை மறுதாம்பு பயிர் அறுவடை தரக்கூடியது.
  • வருடத்திற்கு ஏக்கருக்கு 150 முதல் 175 டன் வரை தீவன மகசூல் தரக்கூடியது.
  • பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.
  • குறைந்த இடத்தில் குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடியது.
  • கணுக்களைக் சுற்றி உருவாகும் வேர்கள் விரைவாக முளைக்க உதவும்.
  • எல்லா மாவட்டங்களுக்கும் பயிரிட ஏற்றது.
பருவம்
இறவை பயிரை ஆண்டு முழுவதும் பயிரிட உகந்தது.
மண் வகை
அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்

இரும்பு கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்தல் வேண்டும். பின்பு பார் அமைக்கும் கருவியைக் கொண்டு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழுஉரத்தினை கடைசி உழவிற்கு முன்பு இட்டு நன்கு உழுதல் வேண்டும். ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து (130 கிலோ யூரியா), 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர்பாஸ்பேட்) மற்றும் 16 கிலோ சாம்பல்சத்து (27 கிலோ பொட்டாசு) இட வெண்டும். முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்தினையும், 50 சதம் தழைச்சத்தினையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 50 சதம் தழைச் சத்தை நட்ட 30வது நாளில் மேலுரமாக இட வேண்டும். மேலும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும், 30 கிலோ தழைச்சத்தை (65 கிலோ யூரியோ) இடுவதால் அதிக தீவன மகசூல் கிடைக்கும். பரிந்துரைக்கப்பட்ட தழை மற்றும் மணிச்சத்தின் அளவின் 75 சதத்துடன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போக்டீரியம் (ஏக்கருக்கு தலா 800 கிராம்) அல்லது அசோபாஸ் (1600 கிராம்) கலந்து கலவையாக இடும் போது விளைச்சல் அதிகரிப்பதுடன் 25 சதவீதம் உர அளவினைக் குறைக்கலாம்.

வேலி மசால் தீவன பயிர் சாகுபடி

வேலி மசால்


கால்நடைகளுக்குத் தீவனமாக புல்வகை தீவனப் பயிர்களைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயறு வகை தீவனப் பயிர்களையும் கொடுத்தால்தான் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு தானிய புல்வகை தீவனப்பயிர்கள் மற்றும் ஒரு பங்கு பயறு வகை தீவனப் பயிர்களும் வழங்கப்படவேண்டும். அதிக புரதச்சத்து கொண்ட வேலி மசாலை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை போக்க முடியும்.

வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள்

  • பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம்
  • அதிக அளவு புரதச்சத்து (20 -22 சதம்) கொண்டது.
  • ஒரு செடிக்கு 15 முதல் 20 வரையிலான கிளைகள் விடும் தன்மை உடையது.
  • ஒரு செடியில் அதிக காய்கள் (75 – 100) தரக்கூடியது.
  • வருடத்திற்கு ஏக்கருக்கு 50 டன்கள் வரை பசுந் தீவன மகசூல் கிடைக்கும்
  • வருடத்திற்கு ஏழு அறுவடைகள் தரக்கூடியது
  • வருடத்திற்கு ஏக்கருக்கு 200 – 250 கிலோ விதை மகசூல் கிடைக்கும்
  • பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.

பருவம்

இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரி பயிருக்கு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்

இரும்பு கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்பு 50 செ.மீ இடைவெளியில் பார் பிடித்து பார்களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

ஒரு ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் உரத்தினை கடைசி உழவிற்கு முன்பு விட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்து உரமிடலாம் அல்லது ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து (22 கிலோ யூரியா), 16 கிலோ மணிச்சத்து (100 கிலோ சூப்பர் பாஸ்பேட்) மற்றும் 8 கிலோ சாம்பல்சத்து (14 கிலோ பொட்டாசு) உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
பயிர் இடைவெளி
வரிசைக்கு வரிசை 50 செ.மீ, செடிக்கு செடி 20 செ.மீ
விதையளவு
ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள்

வெள்ளாடு தீவன மேலாண்மை

  • வெள்ளாடு மேய்ச்சல் மற்றும் அடர்தீவனம் கொண்டு பராமரித்தால் அதிக பட்சம் வளர்ச்சி கிடைக்கும்.
  • கொளுக்கட்டை புல் , ஸ்டைலோ மற்றும் கோ ரகத் தீவன பயிர்களை அளிக்கலாம்.
  • தீவன மர இலைகளான அகத்தி, சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை வயல் ஓரங்களில் வளர்த்து அளிக்கலாம்.
  • ஒரு ஏக்கரில் வளரும் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களை கொண்டு 15-30 ஆடுகள் வரை வளர்க்கலாம்.
  • அடர் தீவனம் கீழ்கண்டவாறு தயாரிக்கலாம்.

குட்டி தீவனம்
வளரும் ஆட்டு தீவனம்
பால் கொடுக்கும் ஆட்டு தீவனம்
சினை ஆட்டு தீவனம்
மக்காசோளம்
37
15
52
35
பருப்பு வகைகள்
15
37
---
---
புண்ணாக்கு
25
10
8
20
கோதுமை தவிடு
20
35
37
42
தாது உப்பு
2.5
2
2
2
உப்பு
0.5
1
1
1
மொத்தம்
100
100
100
100

  • குட்டிகளுக்கு தினம் 50-100 கிராம் வரை அடர் தீவனம் 10 வாரங்களுக்கு அளிக்க வேண்டும்
  • வளரும் ஆடுகளுக்கு தினம் 100-150 கிராம் வரை அடர் தீவனம் 3-10 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்
  • சினை ஆடுகளுக்கு தினம் 200 கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்
  • தினம் ஒரு கிலோ பால் கொடுக்கும் ஆடுகளுக்கு 300 கிராம் வரை அடர்தீவனம் கொடுக்கலாம்.
  • அதிகம் தாமிர சத்து உள்ள வெள்ளாடுகளுக்கான தாது உப்பு கட்டிகள் கொட்டிலில் தொங்கவிட வேண்டும்


Monday, September 28, 2015

மண் இல்லா விவசாயம் - மண் இல்லா தீவன வளர்ப்பு (Mann Illaa Theevana Valarppu) - Grow fodder with varsity little water and no soil / Hydroponics


ண் இல்லாமல் பயிர் வளருமா? வளராது என்பதே நம்மில் பலருக்கும் தோன்றும் கருத்து. ஆனால், மண் இல்லாமல் பயிர் வளரும் என்பதை அறிவியல் நிரூபித்துவிட்டது. ஆஹா, அப்படியா? அது நிச்சயம் செலவு அதிகம் பிடிக்கும் விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைப்போம்.


கேரள மாநிலம், கோட்டயம் செல்லும் வழியில் பலா என்ற சிறு ஊரின் அருகில் வசிக்கும் என் நண்பர் திரு.டோனி மைக்கேல் அவர்களைச் சந்தித்தபோது, அவர் அப்போதுதான் மண் இல்லா தீவன அமைப்பை நிறுவியிருந்தார். தினமும் 100 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் அந்த இயந்திரத்தின் அப்போதைய (2010-ல்) விலை சுமார் ரூபாய் 6.5 லட்சம். ஏகப்பட்ட கலர் கலர் பட்டன்கள், மீட்டர்கள் என பார்க்கவே பயமுறுத்தின.
சரி, வந்துவிட்டோம். பத்திரிகைக்கு ஒரு பேட்டி எடுக்கலாமே என்று நினைத்து அவரைப் பேட்டி கண்டு, ஒரு வேளாண்மைப் பத்திரிகையில் வெளியிட்டதில், வாசகர்களிடையே அமோக வரவேற்பு. அதற்குப் பின், பல முறை பல தரப்பிலான நண்பர்களுடன் அவரது பண்ணையைப் பார்க்க வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ரூ.6.5 லட்சம் முதலீட்டில், ஒவ்வொரு முறையும் 100 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யக்கூடிய இந்த முறையை, சாமானிய கால்நடை வளர்ப்பவர்களும் எளிய முறையில் பயன்படுத்த முடியுமா என்று பலமுறை யோசித்தேன். அதுபற்றி நண்பர் டோனியிடம் கேட்டேன். முடியாது, நிச்சயம் முடியாது, முடியவே முடியாது என்று அவர் உறுதியுடன் சொன்னபோது, மண் இல்லா தீவனப் பயிர் வளர்ப்பை எளிய முறையில் செய்ய வேண்டும் என்ற உறுதியை என் மனத்தில் விதைத்துக்கொண்டேன்.
2013-ல் கடுமையான தீவன பற்றாக்குறை. மேல் மழையில்லை. கிணறு வறண்டுபோகும் நிலை. போதுமான உலர் தீவனமும் இருப்பு இல்லை. பசுக்கள் தீவனத்துக்கு ஏங்கி இளைத்துவிடும்முன் விற்றுவிடலாம் என முடிவு செய்து பசுக்களை விற்கத் தொடங்கினேன். தலைமுறை தலைமுறையாக மாடு வளர்க்கும் நாம், தீவன விஷயத்தில் எந்த இடத்தில் தோற்றோம் என ஆராய்ந்தேன். கவனக் குறைவு, சரியான திட்டமிடல் இல்லாதது, தீவன சேமிப்பில் அக்கறை காட்டாதது, இயற்கையின் சதி என பல காரணங்கள் வரிசை கட்டி நின்றன.
எல்லாப் பசுக்களையும் விற்க முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. இரண்டு சோனிப் பசுக்கள், ஒரு வண்டிக் காளையை விற்க முடியவில்லை. என் வீட்டோடு தங்கிவிட்ட இந்த மூன்று வாயில்லா ஜீவன்களை காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயச் சூழல். போனதெல்லாம் போகட்டும். இனி இருக்கும் ஜீவன்களை காப்பாற்ற என்ன செய்யலாம் என யோசிக்கும்போது, ஹைட்ரோஃபோனிக்ஸ் என அழைக்கப்படும் மண் இல்லா தீவன வளர்ப்பை எளிய முறையில் செய்து பார்க்கலாமே என்று தோன்றியது.
மனத்தில் ஏற்கெனவே விதைக்கப்பட்டிருந்த உறுதியுடன், இன்டர்நெட்டில் தகவல்களைத் தேடினேன். கென்யாவில் ஒருவர் எளிய முறையில் மண் இல்லா தீவன உற்பத்தியைச் செய்வதாகத் தெரிந்தது. அவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு பேசியதில், தெளிவான பதில் கிடைக்கவில்லை. 2000 அமெரிக்க டாலர் (சுமார் ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்) அனுப்பினால், தொழில் ரகசியத்தைச் சொல்கிறேன் என்றார். அவ்வளவு பெரிய தொகையை யாரோ கண்ணுக்குத் தெரியாத ஆப்பிரிக்கருக்குக் கொடுப்பதைவிட, அந்தப் பணத்தை வைத்து நாமே முயற்சிக்கலாமே என்று முடிவு செய்தேன். இரண்டு மாதங்களுக்கும் மேலாக, மண் இல்லா தீவன வளர்ப்பு முறையைப் பற்றிப் படித்தேன். குறிப்புகள் எடுத்தேன். கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையம் எனப்படும் முகநூல் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் செய்திகள் சேகரித்துக் கொடுத்தனர்.
ஒரு சுபயோக சுபதினத்தில் எனது முயற்சியைத் தொடங்கினேன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும் என்பது மண் இல்லா தீவன வளர்ப்பில் நான் கண்ட உண்மை. முதல் தட்டு தீவனம் உற்பத்தி செய்த நாளில் என் மனத்தில் தோன்றிய உணர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நான் என்ன செய்தேன், என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டேன், எது சரி, எது தவறு? கடைசியில் வெற்றியை ருசித்தது எப்படி...
உங்களுக்கும் சொல்கிறேன்.
இந்த மண் இல்லா தீவன வளர்ப்புக்கு...
      * குறைந்த இடம்
      * குறைந்த தண்ணீர்
      * குறைந்த நேர கவனிப்பு
      * குறைந்த உடல் உழைப்பு
      * குறைந்த முதலீடு
      * பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, ரசாயன உரம் எதுவும்
        தேவையில்லை.
இப்படி குறைவாகப் பயன்படுத்தி, குறைந்த இடத்தில் அதிக அளவில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதுதான் இதில் உள்ள வெற்றியே. இது எல்லாவற்றுக்கும் ஒன்றே ஒன்றுதான் வேண்டும். அது, விடாமுயற்சி.
எங்கள் வீட்டு மாட்டுக்கொட்டகையில் 10 * 8 அடிக்கு ஓர் இடம் இருந்தது. ஓடு வேய்ந்த இடம். ஓட்டுக் கூரை தூசி கீழே விழாமல் இருக்க, சீலிங்குக்குப் பச்சை நிழல் வலை அடித்தேன். உள்ளே வெளிச்சம் வர வேண்டும், ஆனால் உள்ளே இருக்கும் குளிர் நிலையும், காற்றின் ஈரப்பதமும் மாறக்கூடாது என்பதற்காக ஒளி ஊடுறுவும் கனமான பாலிதீன் ஷீட்டால் சுற்றிலும் மூடி, உள்ளே சென்று வர ஒரு கதவு. இதுதான் மண் இல்லா தீவன வளர்ப்புக்காக நான் அமைத்துக்கொண்ட அறையின் அமைப்பு.

Tuesday, September 8, 2015

நாட்டுக் கோழி தீவன கலவை


தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்

1 மக்காச்சோளம் 40 கிலோ

2 சோளம் 7 கிலோ

3 அறிசிகுருணை 15 கிலோ

4 சோயா புண்ணாக்கு 8 கிலோ

5 மீன் தூள் 8 கிலோ

6 கோதுமை 5 கிலோ

7 அரிசித் தவிடு 12.5 கிலோ

8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ

9 கிளிஞ்சல் 2 கிலோ

மொத்தம் 100 கிலோ


புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடுசெய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவுவெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

Friday, June 5, 2015

பழங்கால கோழித் தீவனங்கள் (Palangaala Khozi Theevanangal) - Traditional Poultry Feed Ingredients

பழங்கால (பாரம்பரிய) கோழித் தீவனப் பராமரிப்பு:


தீவனப் பராமரிப்பு
தீவனப் பராமரிப்பு கோழி வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழி வளர்ப்புச் செலவின் 60-70 சதவிகிதம் அளவு தீவனத்திற்காகவே செலவிடப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் தீன வீணாகாமல் முழுமையாக கோழிகளால் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஒரு லாபகரமான பண்ணையை உருவாக்க முடியும். 40க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் கோழிகளுக்கு தேவைப்படுகிறது.

இவை கீழ்க்கண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

நீர், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகும்.

கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களே ஆற்றலுக்கு பிரதானமானவை. கொழுப்பில் கார்போஹைட்ரேட் விட 2.25 மடங்கு ஆற்றல் அதிகமாக உள்ளது. மேலும் இதில் லினோலெயிக், லினோலெனிக், அராக்கிடியோனிக் அமிலம் போன்ற இன்றியமையாத கொழுப்பு அமிலங்களும் உள்ளன. அமினோ அமிலத் தேவையினைப் பூர்த்தி செய்யப் புரதம் அவசியம் ஆகும்.

கோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்
அர்ஜினைன், கிளைசின், ஹிஸ்டிடின், லியூசின், ஐசோலியூசின், லைசின், மெத்தியோனைன், சிஸ்டைன், ஃபினைல் அலனின், த்ரியோனைன், டிரைப்டோபன் மற்றும் வெலைன் இவற்றில் மிக முக்கியமாகத் தேவைப்படுபவை அர்ஜினைன், லைசின் மெத்தியோனைன், சிஸ்டைன் மற்றும் டிரிப்டோபன்.

விட்டமின்களும், தாது உப்புக்களும் ஆற்றலை அளிக்கவில்லை எனினும் உடல் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தேவையான முக்கிய தாதுக்கள்

கால்சியம்,  பாஸ்பரஸ், சோடியம், தாமிரம், ஐயோடின், இரும்பு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம்.

விட்டமின்கள்
விட்டமின் ஏ, விட்டமின் டி3, விட்டமின் ஈ, பைரிடாக்ஸின், ரிபோஃபிளேவின், பேன்டாதொனிக் அமிலம், நியாசின்ஃபோலிக் அமிலம் கோலைன்.மேற்கண்ட ஊட்டச்சத்துக்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கொடுக்க வேண்டும். சரிவிகித உணவே சிறந்த வளர்ச்சிக்கும் அதிக உற்பத்திக்கும் வித்தாகும்.


தீவனக் கூட்டுப் பொருட்கள்
பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தானியப் பயிர்களான அரிசி, சோளம், கோதுமை, ஓட், பார்லே போன்றவையும் மற்றும் உபதானியப் பொருட்களான நெல் / கோதுமை, உமி, தவிடு போன்றவைகளையும் தீனியாகக் கொடுக்கலாம். மேலும் விலங்கு, காய்கறிப் புரதங்களான மீன் தோல்க்கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், சோயாபீன் எண்ணெய்க் கழிவுகள், கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றையும் கோழித்தீவனமாகப்  பயன்படுத்தலாம். இதோடு தாதுக்களும் விட்டமின்களும் கலந்து சரிவிகித உணவாகக் கொடுத்தல் வேண்டும்.

கீழ்க்காணும் தீவனப் பொருட்கள் நம் நாட்டில் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

1.சோளம்
இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரித்தல் எளிதாகிறது. குறைந்தளவு புரதமும், அதிக ஆற்றலும் கொண்டது. லைசின், சல்ஃபர் அமினோ அமிலங்களைப் பெற்றுள்ளது. மஞ்சள் நிறச் சோளத்தில் விட்டமின் மற்றும் சோன்த்தோடஃபில்  நிறமி நிறைந்துள்ளது. இந்த நிறமிகள் தான் சிலவகைப் பறவைகளின் மஞ்சள் தோலிற்குக் காரணம்.

2.பார்லே
இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் 15 சதவிகிதத்திற்கு மேல் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

3.ஓட்ஸ்
ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகமிருப்பதால் 20 சதவிகிதம அளவே சேர்க்கவேண்டும். இதில் மாங்கனீசு சத்து அதிகம் இருப்பதால் கோழிகளில் வரும், கால் பிரச்சினை, இறகை பிடுங்கிக் கொள்ளுதல் மற்றும் தன்னின ஊன் ஊன்றுதல் போன்ற குறைபாடுகளைக் குறைக்க முடியும்.

4.கோதுமை
சோளத்திற்குப் பதில் அதிக ஆற்றல் அளிக்க கோதுமை பயன்படுகிறது.

5.கோதுமை தவிடு
இது மாங்கனீஸ் பாஸ்பரசுடன் சிறிது நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.

Thursday, April 30, 2015

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் (Paal Valathai Perukkm Kambu Neapiar Ottu Pull) - Napier grass for milch cows

பசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் கம்பி நேப்பியர் ஒட்டுப்புல் என அழைக்கப்படும் சி.என். 4 ரகபுல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதால் பால் உற்பத்தியை எளிதாகப் பெருக்கலாம்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த ரகம், குறைந்த பரப்பில் அதிக மகசூல் தரும் புல் ரகமாகும்.


  • இந்த தீவனப் பயிரை உற்பத்தி செய்வதால் குறைந்த இடத்தில் அதிக பசுந்தீவன புல்லை உற்பத்தி செய்து பால் உற்பத்தியைப் பெருக்கலாம் என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்துள்ளார்.
  •  கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், அதிகத் தூர்களுடன் வளரக்கூடிய ஒரு பல்லாண்டு தீவனப் பயிராகும். தண்டுகள் மிகவும் மிருதுவான, இனிப்பான, சாறு நிறைந்த, குறைந்த நார்ச்சத்தைக் கொண்டவை.
  • அதிக தூர்களுடன் (செடிக்கு 30 முதல் 35 தூர்கள்) சாயாத் தன்மை கொண்டது. அகலமான, மிருதுவான இலைகள் அதிக இலை தண்டு விகிதம் கொண்டவை.
  • இவ்வகை பயிரை எளிதில் பூச்சிகள், நோய்கள் தாக்காது. அதிக உலர் தீவன மகசூல், புரதச்சத்து கொண்டவை. ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். இதனால் ஏக்கருக்கு 350 முதல் 400 டன் அளவுக்கு மகசூல் பெறலாம்.
  • கால்நடைகளுக்குப் பசுந்தீவனப் புற்கள் கொடுப்பதால் பால் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் ஏ எனும் உயிர்ச்சத்து கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. கால்நடைகளின் கண்பார்வை, சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படுகிறது. மேலும், கால்நடைகளின் கரு உருவாவதற்கும், உருவான கருவைத் தக்க வைப்பதற்கும் பசுந்தீவனப் புற்கள் வழிவகை செய்கின்றன.
சாகுபடி தொழில்நுட்பம்:
  • ஆண்டு முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம். நிலத்தை இரும்புக் கலப்பையைக் கொண்டு 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
  • மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், 1 ஏக்கருக்கு அடியுரமாக 25 டன் மக்கிய தொழுஉரம், 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம்.
  • பாத்திகள் அமைக்கப்பட்ட நிலத்தில் நன்கு நீர்ப் பாய்ச்சிய பின் தண்டுக்கரணையை 60-க்கும் 50 செ.மீ. இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும்.
  • இவ்வாறு நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 333 கரணைகள் தேவைப்படும். கரணை நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
  • பிறகு 10 நாள்களுக்கு 1 முறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
  • கரணை நட்ட 20ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். நடவுக்குப் பின் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45 நாள்களிலும் தீவனப் பயிர்களை அறுவடை செய்யலாம்.
  • இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால், 1 ஹெக்டேரில் 1 ஆண்டுக்கு 7 அறுவடைகளில் 350 முதல் 400 டன் பசுந்தீவன மகசூல் உற்பத்தி செய்யலாம். எனவே கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது, கோ (சிஎன்) 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை எளிதாக பெருக்கலாம். மேலும் நகர்புற அருகில் உள்ள விவசாயிகள் இப்புல்லை உற்பத்தி செய்து, பசும்புல்லை, ஒரு கிலோ ரூ. 3 வரையில் விற்பனை செய்யலாம். இந்தப் புல்லில் தண்டுக்கரணை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
  • மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியரை 09884402613 என்ற கைப்பேசி எண்ணிலோ, 0442745 2371 என்ற தரைவழி தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, March 18, 2015

கால்நடைகளுக்கு புல் வகை மற்றும் மர இலை தீவனங்கள் (Kaal Nadaigaluku Pul Vagai Matrum Mara Elai Theevanangal) - The Grass and Tree Leaves for Cattle Feed


மது நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒரு சதவீதம் என்ற அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கால்நடைகளிருந்து முழுமையான பலனை பெற வேண்டுமென்றால், அவற்றுக்கு சரிவிகித முறையில் தீவனம் இடவேண்டும். ஆனால் எண்ணிக்கையில் அதிகரிக்கும் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தில் 60 சதவிகிதம், உலர்ந்த நார்த்தீவனத்தில் 60 சதவிகிதம், கலப்பு தீவன வகைகளில் 60 சதவிகிதம் மட்டுமே உற்பத்தி செய்கிறோம்.




தீவனமரங்களின் இலைகளில்
 இதனால் ஊட்டசத்து குறைபாடு ஏற்படுகிறது.  இந்த பற்றாக்குறையை போக்க நாட்டிலுள்ள தரிசுநிலங்களை தீவன உற்பத்திக்காக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இந்த இடங்களில் தீவன மரங்களை வளர்க்க வேண்டும். தானிய வகை தீவனங்களான மக்காச்சோளம், புல்வகை தீவனங்களான கொழுக்கட்டை புல், பாரா, பயறு வகை சேர்ந்த ஸ்டைலோ, தட்டைப்பயிறு, வேலிமசால், சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை சாகுபடி செய்யலாம்.

பொதுவாக தீவனமரங்களின் இலைகளில்20 முதல் 40 சதவிகிதம் உலர்பொருளும், 12 முதல் 32 சதவிகிதம் வரை புரதச்சத்தும் உள்ளன.


மர இலைகள்  

செரிமான புரதச்சத்தும் 60 முதல் 65 சதவிகிதமாக உள்ளது. குறிப்பாக மர இலைகள் தீவனமாக அகத்தி, கிளைரிசிடியா, சவுன்டால், கொடுக்காப்புளி, வாகை, முள்ளு முருங்கை போன்ற மரங்களை பயன்படுத்தலாம். இவை தவிர அன்றாடம் கிடைக்கக்கூடிய அரசமரம், ஆலமரம், மா, பலா, வேம்பு, நுணா, பூவரசு, முருங்கை, உதியன், மந்தாரை, கருவேல் போன்ற மரத்தழைகளை தீவனமாக அளிக்கலாம்.




மர இலைகளில் பிற தீவனப்புற்களில் இருப்பதை விட குறைந்த நார்ச்சத்து, குறைவான செரிக்கும் திறன் கொண்டதால் இவற்றின் மூலமாக கிடைக்கும் எரிசக்தி குறைவாக உள்ளது. மர இலைகளில் தாதுப்பொருட்களான சுண்ணாம்புசத்து அதிக அளவிலும், பாஸ்பரஸ் சத்து குறைந்த அளவிலும் உள்ளது.


வெள்ளாடுகளுக்கு
இந்த நிலையில் கால்நடைகளுக்கு தீவன மரங்களின் இலைகளையும், பிற புல் வகைகளையும் கலந்து அளிக்க வேண்டும். இதனால் ஒன்றில் கிடைக்காத சத்து மற்றொன்றின் மூலம் ஈடுகட்டப்படும். மேலும் அளிக்கப்படும் இந்த வகை தீவனங்கள் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்குதலுக்கு உட்படாதவாறும் இருக்க வேண்டும். உதாரணமாக, வெள்ளாடுகளுக்கு இந்த வகை தீவனங்களை வழங்கும் போது, தழைத் தீவனத்தில் இலைகள் 50 சதவிகிதமும், மீதம் 50 சதவிகிதம் பிற புல் வகைகளும் இருக்கலாம். இவ்வாறு கலந்து அளிப்பதால் வெள்ளாடுகள் தினசரி 45 முதல் 55 கிராம் வரை உடல்வளர்ச்சி அடைகின்றன.