Showing posts with label காய் கனி. Show all posts
Showing posts with label காய் கனி. Show all posts

Tuesday, September 1, 2015

1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம் - Indian Blackberry Fruit

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை, விதை என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்ட காரணத்தாலும், நாவல் மரங்கள் குறைந்து வருவதாலும், அதன் பழங்கள் தற்போது ஒரு கிலோ ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்கள் அரிதாகிவிட்ட நிலையில், நாவல் பழமும், விதைகளும் படிப்படியாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக அறியப்பட்டுள்ளதால், அவற்றின் மதிப்பு தற்போது பன்மடங்கு உயர்ந்துவிட்டது.
நீரிழிவு நோய் தவிர, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் குணமும், தொண்டைப் புண், தொண்டை அழற்சி போன்ற தொந்தரவுகளைப் போக்குவதற்கும் நாவல் மரப்பட்டைகள் உதவுகின்றன.
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவோர் நாவல் பழங்களை பிழிந்து சாப்பிடுவதன் மூலம் குணமடைகின்றனர். நாவல் பழத்துக்கு சிறுநீர் பெருக்கம், பசியைத் தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளைச் சுத்தம் செய்யும் தன்மையும், குடல், இரைப்பை, இதயத்தின் தசைகளை வலுவாக்கும் குணமும் நாவல் பழத்துக்கு உள்ளது.
அதோடு, நாவல் பழச்சாற்றுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணமும், நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு. மேலும், ரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அனைவராலும் மிகச் சாதாரணமாகக் கருதப்பட்ட நாவல் பழத்துக்கு இத்தகைய மருத்துவக் குணங்கள் உள்ளது என்ற விழிப்புணர்வு தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார் இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி.
இதுகுறித்து புதுகை உழவர் சந்தை அருகே பழ வியாபாரம் செய்யும் பெண் கூறியது:
நாட்டு நாவல் மரங்களில் இருந்து ஆடிக்காற்றில் கீழே விழும் பழங்களைத்தான் கிராமங்களில் விற்று வந்தோம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் நாவல் பழங்களுக்கு மிகுந்த முக்கியத்தும் கிடைத்துள்ளது. அதை வாங்குபவர்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுவதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாவல்பழம் உள்ளூரின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாததால், ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சி காந்தி சந்தைக்கு வரும் நாவல் பழங்களை வாங்கிவந்து விற்கிறோம். ஒரு கிலோ ரூ. 200-க்கு வாங்கி ரூ. 250-க்கு விற்க வேண்டியுள்ளது. எனினும், இதை வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றார் அவர்.

Monday, May 25, 2015

பந்தல் இல்லா பாகற்காய் (Panthal Illaa Paagarkaai) - Bitter Gourd

திண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது.

பாகற்காய் சாகுபடி செய்ய பந்தல் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு 100 கல்தூண்கள் ஊன்றி குறுக்கும், நெடுக்குமாக கம்பி வலையை இணைத்து பந்தல் அமைக்க வேண்டும். இதற்கு செலவு அதிகமாகும்.
இதனை குறைக்க புதிய தொழில்நுட்பத்தில் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் கால் ஏக்கரில் பந்தல் இன்றி பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பாத்திக்கும் 2 இரும்பு குழாய்களை ஊன்றி கட்டு கம்பிகள் மூலம் இணைத்துள்ளனர்.
ஒவ்வொரு பாத்திக்கும் போதிய இடைவெளி இருப்பதால் காய்களை பறிப்பது எளிது. நீர் பாய்ச்சுவதும் எளிது.
மேலாளர் பெருமாள் கூறியதாவது:
  • இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் பாத்திகள் அமைக்கப்பட்டு ‘மல்சிங் சீட்’ (Mulching sheet) மூலம் மூடப்படும். ‘சீட்’ (Sheet) இடைவெளியில் விதைகள் ஊன்றப்படும். இதனால் களைகள் வளராது.
  • இந்த தொழில்நுட்பத்தில் இதுவரை மிளகாய், தக்காளி, வெண்டை சாகுபடி செய்தோம்.முதல்முறையாக பாகற்காய் சாகுபடி செய்துள்ளோம்.
  • மேலும் பந்தல் செலவை குறைக்க மற்றொரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம். சாதாரணமாக ஏக்கருக்கு பந்தல் அமைக்க ரூ.1.2 லட்சம் செலவாகும். புதிய முறையில் ரூ.10 ஆயிரம் போதும். செடிகளுக்கு தேவையான நீரும், சத்துக்களும் சீராக கிடைப்பதால் காய்கள் பெரிதாக இருக்கும். ஏக்கருக்கு 12 டன்னுக்கு அதிகமாக கிடைக்கும், என்றார்.

Thursday, March 12, 2015

கொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள்


மரங்களை வளைத்துக்கட்டுதல் :
ஓரளவு வயதான கொய்யா மரங்களில் (சுமார் 10 முதல் 15 ஆண்டுகள்) கிளைகள் ஓங்கி, உயரமா வளர்ந்து, உற்பத்தியைக் குறைத்து விடும்.


இதனைச் சரி செய்ய மேற்படி கிளைகளை வளைத்து அவற்றின் நுனி பாகத்தை மண்ணுக்குள் ஒரு அடி ஆழத்தில் பதித்து அதன்மேல் கல் ஒன்றை வைத்து அவை மேலே கிளர்ந்து வராமல் செய்யலாம்.

அல்லது முன்பே மண்ணில் கனமான குச்சிகளோடு சேர்த்துக் கட்டலாம்.

இதன் மூலம் கிளைகளின் அணுக்களில் உள்ள மொட்டுக்கள் தூண்டப்பட்டு பூக்கள் அதிக அளவில் தோன்றி அதிக தரமான கனிகளை கொடுக்கும்.

மரங்களை மட்டம் தட்டுதல் :
மிக வயதான உற்பத்தி திறன் இழந்த மரங்களை, தரை மட்டத்திலிருந்து 30 செ.மீ உயரத்தில் மட்டமாக வெட்டிவிட வேண்டும்.

பின்னர் அவற்றிலிருந்து தழைத்து வரும் புதிய கிளைகளில் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்கும். உற்பத்தியும் மேம்படும்.

நுண்ணூட்டச்சத்து குறைபாடு :
துத்தநாகச்சத்து குறைபாட்டினால் நரம்புகளுக்கிடையே இடைவெளி குறைந்தும், செடிகள் குத்துச் செடிகள் போல தோற்றம் தருதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

பெரும்பாலும் வடிகால் வசதியற்ற நிலங்களில் இக்குறைபாடு காணப்படும்.

இவற்றைத் தவிர்க்க 500 கிராம் துத்தநாக சல்பேட், 350 கிராம் சுண்ணாம்பு இரண்டையும் 72 லிட்டர் நீரில் கரைத்து மரங்களின் மேல் இரண்டு முறை 15 முதல் 30 நாட்கள் இடைவெளியில் தெளித்து நுண்ணூட்ட குறைபாட்டினைத் தவிர்க்கலாம்.

துத்தநாகம் தவிர மக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், இரும்புச்சத்து குறைபாடும் சில நேரங்களில் காணப்படும்.

இதன் அறிகுறிகளாக இலைகள் வற்றி ஓரங்கள் காய்ந்தும், சிறுத்தும் காணப்படும்.

இதனை நிவர்த்தி செய்ய 25 சதம் துத்தநாக சல்பேட், மக்னீசியம் சல்பேட், மாங்கனீஸ் சல்பேட், 12.5 கிராம் காப்பர் சல்பேட், பெர்ரஸ் சல்பேட் ஆகியவற்றை 5 லிட்டர் நீரில் கரைத்து இலைகளின் மேல் புதிய தளிர்கள் தோன்றும் சமயத்தில் ஒரு தடவையும், அதைத்தொடர்ந்து ஒருமாதம் கழித்து ஒருமுறையும் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

போரான் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டினால் வளர்ச்சி குன்றி தோன்றுவதோடு, பழங்கள் அளவில் சிறுத்து விடும்.

மேலும் பழங்களின் வெடிப்பு தோன்றி, பழத்தின் தரத்தையே குறைத்து விடும்.

இதனைக்கட்டுப்படுத்த 0.5 சதம் போராக்ஸ் (1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் போராஸ்) மருந்தை கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

(தகவல் : முனைவர் பி.பாலசுப்ரமணி, முனைவர் எம்.தமிழ்ச்செல்வன், முனைவர் எம்.பரமசிவன், மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு-630 102. போன்: 04565283 080)