Showing posts with label சாகுபடி முறை. Show all posts
Showing posts with label சாகுபடி முறை. Show all posts

Thursday, December 8, 2016

பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 சாகுபடி முறை

பசுந்தீவனச் சோளம்

  • நல்ல சத்துள்ள, தரமான பசுந்தீவனங்கள் போதிய அளவிலும், சரி விகிதத்திலும் கிடைக்காததே கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவதற்கு முக்கியக் காரணமாகும்.
  • இதனைக் கருத்தில் கொண்டு பசுந்தீவனச் சோளம் (கோ.எப்.எஸ். - 31) பயிரிட்டு கால்நடைகளுக்கு வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்கிறது.
  • பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 ரகத்தின் சிறப்பியல்புகள்: அதிக கிளைக்கும் திறன் கொண்டது. அகலமான இலைகள், கதிர்களில் இருந்து மணிகள் கொட்டாமல் இருக்கும் தன்மை கொண்டது.
  • அதிக புரதச்சத்து (9.86 சதவீதம்) கொண்டதும், அதிக பசுந்தீவன உற்பத்தி கொண்டதுமாகும்.
  • அதாவது 1 ஹெக்டேருக்கு 1 ஆண்டில் 190 டன் என்ற அளவில் அறுவடை செய்யலாம். மறுதாம்பு பயிருக்கு ஏற்றது. சுவையான பசுந்தீவனமாகும். கால்நடைகள் இவற்றை விரும்பி உண்கின்றன.
சாகுபடி தொழில்நுட்பம்
  • இந்த பசுந்தீவனப் பயிரை ஆண்டு முழுவதும் எல்லா மண் வகைகளிலும் பயிரிடலாம்.
  • நிலத்தை இரும்புக் கலப்பைக் கொண்டு 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பிறகு 1 ஏக்கருக்கு 10 டன் என்ற அளவில் மக்கிய தொழு உரம், 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பால்போ பாக்டீரியா கலந்து இட வேண்டும்.
  • பின்னர், 2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 6 மீட்டர் நீளமும், 60 செ.மீ. இடைவெளியும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.
  • மண் பரிசோதனையின் அடிப்படையில் உரங்கள் இட வேண்டும்.
  • மண் பரிசோதனை செய்யாவிடில் ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 8 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
  • மேலுரமாக விதைத்த 25 நாள்கள் கழித்து 12 கிலோ தழைச்சத்து போட வேண்டும்.
  • மறுதாம்புப் பயிரில் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் 18 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
  • 4-ஆவது அறுவடையின் போது ஏக்கருக்கு 18 கிலோ தழைச்சத்துடன் 16 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்தையும் இடுவது நல்லது.
  • ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை பாத்திகளின் இருபுறமும் விதைக்க வேண்டும்.
  • விதைக்கு விதை இடைவெளி 10 முதல் 15 செ.மீ. இருக்க வேண்டும். விதைத்த 20 நாள்கள் கழித்து களை எடுக்க வேண்டும்.
  • தேவைப்பட்டால், 35 முதல் 40-ஆவது நாளில் அடுத்த களை எடுக்கலாம்.

நீர் மேலாண்மை

  • நீர் மேலாண்மையைப் பொருத்தவரை விதைத்தவுடன் ஒரு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.
  • 3-ஆவது நாளில் உயர் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

  • பொதுவாக பயிர் பாதுகாப்பு தேவையில்லை. விதை உற்பத்திக்காக பயிர் செய்தால், குருத்து ஈ காணப்பட்டால் விதைத்த 10-ஆவது நாளில் புரபனோபாஸ் 300 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பசுந்தீவன அறுவடைக்கு 30 நாள்களுக்கு முன் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.

தீவனச் சோளம் கோ எஃப், எஸ் 29, கோ 31 சாகுபடி முறை

விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம்.


பருவம்

இறவைப் பயிராக ஜனவரி - பிப்ரவரி, ஏப்ரல் - மே மாதங்களில் தீவனச் சோளம் பயிரிட உகந்த மாதங்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரிப் பயிராக ஜூன் - ஜூலை, செப்டம்பர் - அக்டோபர் மாதங்களிலும் அனைத்து மாவட்டங்களில் பயிரிடும் வாய்ப்புள்ளது.
ரகங்கள்
கோ எஃப், எஸ் 29, கோ 31 (மறுதாம்பு சோளம்) ரகங்கள் சிறந்தவை. தீவனச் சோளத்துடன் கோ 5, கோ எஃப் சி 8 ரக தட்டைப்பயறு சேர்த்து ஊடுபயிராகப் பயிரிட்டால் சத்தான தீவனம் பெறலாம்.

சாகுபடிக் குறிப்புகள்

தீவனச் சோளம் கோ 31 ரகத்தை ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிரிடலாம். ஒருமுறை விதைத்து பலமுறை அறுவடை செய்யலாம்.
நிலம்
நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும்போது 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். உழும் முன்பு ஹெக்டேருக்கு 25 டன் தொழுவுரம் இடுதல் அவசியம்.
விதையளவு
ஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதும். 30-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும். விதை உற்பத்தி செய்ய 60-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

  • அடியுரமாக தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை 45: 40: 40 என்ற விகிதாசாரத்தில் இட வேண்டும்.
  • விதைத்த 30-ஆவது நாளில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வோர் ஆண்டு முடிவுக்குப் பிறகு 45: 40: 40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டியது அவசியம்.

Wednesday, December 7, 2016

கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4 சாகுபடி முறைகள்

கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல் கோ (க.நே) 4


கால்நடை வளர்ப்பானது உழவுத் தொழிலின் உப தொழிலாக இருப்பதோடு மனிதர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குகின்ற இன்றியமையாத வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. பொதுவாக கால்நடைகளுக்கு வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோளத்தட்டை மற்றும் பிற பயிர்களின் செடிகள் உணவாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மேற்கண்ட தீவனங்கள் கால்நடைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தினை அளிப்பதில்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தினால் 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்நடை வளர்ப்பதற்கு உகந்த தீவன புல் வகையான கோ 4 (கம்பு நேப்பியர்) ஒட்டுப்புல்லினை தீவனமாக கொடுப்பதன் மூலம் கால்நடைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தினை அளிக்கலாம். இது தீவனக்கம்பு மற்றும் நேப்பியர் புல் ஆகிய 2 புல் இனங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது.

கம்பு நேப்பியர் தீவன ஒட்டுப்புல்லின் சிறப்பியல்புகள்

  • பெற்றோர் – கம்பு கோ.8 * எப்.டி.461
  • அதிக புரதச் சத்து (10.71%) மற்றும் இனிப்புத் தண்டுகளைக் கொண்டது.
  • அதிக படியான இலை நீளம் (110 – 115 செ.மீ) மற்றும் அகலமுடைய (4 – 5 செ.மீ) இலைகளைக் கொண்டது.
  • அதிக உயரம் (400 – 500 செ.மீ) வரை வளரும்.
  • அதிக (400 – 450 இலைகள்/குத்து) மற்றும் மிருதுவான தன்மை கொண்ட இலைகளை கொண்டது.
  • அதிக இலை தண்டு விகிதம் (0.71)
  • அதிக தூர்கள் (30 – 40/குத்து) மற்றும் சாயாதத் தன்மை உடையது.
  • வருடத்திற்கு ஏழு முதல் எட்டு முறை மறுதாம்பு பயிர் அறுவடை தரக்கூடியது.
  • வருடத்திற்கு ஏக்கருக்கு 150 முதல் 175 டன் வரை தீவன மகசூல் தரக்கூடியது.
  • பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.
  • குறைந்த இடத்தில் குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடியது.
  • கணுக்களைக் சுற்றி உருவாகும் வேர்கள் விரைவாக முளைக்க உதவும்.
  • எல்லா மாவட்டங்களுக்கும் பயிரிட ஏற்றது.
பருவம்
இறவை பயிரை ஆண்டு முழுவதும் பயிரிட உகந்தது.
மண் வகை
அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்

இரும்பு கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்தல் வேண்டும். பின்பு பார் அமைக்கும் கருவியைக் கொண்டு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழுஉரத்தினை கடைசி உழவிற்கு முன்பு இட்டு நன்கு உழுதல் வேண்டும். ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து (130 கிலோ யூரியா), 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர்பாஸ்பேட்) மற்றும் 16 கிலோ சாம்பல்சத்து (27 கிலோ பொட்டாசு) இட வெண்டும். முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்தினையும், 50 சதம் தழைச்சத்தினையும் அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள 50 சதம் தழைச் சத்தை நட்ட 30வது நாளில் மேலுரமாக இட வேண்டும். மேலும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும், 30 கிலோ தழைச்சத்தை (65 கிலோ யூரியோ) இடுவதால் அதிக தீவன மகசூல் கிடைக்கும். பரிந்துரைக்கப்பட்ட தழை மற்றும் மணிச்சத்தின் அளவின் 75 சதத்துடன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போக்டீரியம் (ஏக்கருக்கு தலா 800 கிராம்) அல்லது அசோபாஸ் (1600 கிராம்) கலந்து கலவையாக இடும் போது விளைச்சல் அதிகரிப்பதுடன் 25 சதவீதம் உர அளவினைக் குறைக்கலாம்.

வேலி மசால் தீவன பயிர் சாகுபடி

வேலி மசால்


கால்நடைகளுக்குத் தீவனமாக புல்வகை தீவனப் பயிர்களைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயறு வகை தீவனப் பயிர்களையும் கொடுத்தால்தான் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். ஆடு மாடுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு தானிய புல்வகை தீவனப்பயிர்கள் மற்றும் ஒரு பங்கு பயறு வகை தீவனப் பயிர்களும் வழங்கப்படவேண்டும். அதிக புரதச்சத்து கொண்ட வேலி மசாலை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை போக்க முடியும்.

வேலி மசால் தீவன பயிரின் சிறப்பியல்புகள்

  • பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம்
  • அதிக அளவு புரதச்சத்து (20 -22 சதம்) கொண்டது.
  • ஒரு செடிக்கு 15 முதல் 20 வரையிலான கிளைகள் விடும் தன்மை உடையது.
  • ஒரு செடியில் அதிக காய்கள் (75 – 100) தரக்கூடியது.
  • வருடத்திற்கு ஏக்கருக்கு 50 டன்கள் வரை பசுந் தீவன மகசூல் கிடைக்கும்
  • வருடத்திற்கு ஏழு அறுவடைகள் தரக்கூடியது
  • வருடத்திற்கு ஏக்கருக்கு 200 – 250 கிலோ விதை மகசூல் கிடைக்கும்
  • பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.

பருவம்

இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரி பயிருக்கு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்

இரும்பு கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்பு 50 செ.மீ இடைவெளியில் பார் பிடித்து பார்களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

ஒரு ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் உரத்தினை கடைசி உழவிற்கு முன்பு விட்டு நன்கு உழவு செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்து உரமிடலாம் அல்லது ஏக்கருக்கு 10 கிலோ தழைச்சத்து (22 கிலோ யூரியா), 16 கிலோ மணிச்சத்து (100 கிலோ சூப்பர் பாஸ்பேட்) மற்றும் 8 கிலோ சாம்பல்சத்து (14 கிலோ பொட்டாசு) உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
பயிர் இடைவெளி
வரிசைக்கு வரிசை 50 செ.மீ, செடிக்கு செடி 20 செ.மீ
விதையளவு
ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள்

Tuesday, November 29, 2016

இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி


இப்படித்தான் செய்யணும் பப்பாளி சாகுபடி!


ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி செய்யும் விதம் குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக....





பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள் நிலத்தை காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் (சாதாரண கலப்பை) ஒரு சால் உழவு செய்துவிட்டு.. அடுத்த நாள் அரை அடி ஆழத்தில், செடிக்குச் செடி 10 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளி விட்டு அரையடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 436 குழிகள் வரை எடுக்கலாம். (நிலத்தின் அமைப்பைப் பொறுத்து, இவர், 400 குழிகள் மட்டுமே எடுத்துள்ளார்). குழி எடுத்த மறுநாள் ஒரு குழிக்கு அரை கிலோ தொழுவுரம் போட்டு, நடுவிரல் அளவு குழி எடுத்து, பப்பாளி கன்றை வைத்து, மேல் மண் கொண்டு குழியை மூடிவிட வேண்டும். நடவு செய்த உடனே பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.



ஏக்கருக்கு அரை கிலோ விதை!


பப்பாளியை கன்றாக வாங்காமல், விதையை வாங்கி நாமே நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வதுதான் சிறந்தது. 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் நாற்றங்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான அரை கிலோ விதையை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் பஞ்சகவ்யா ஊற்றி அதில் விதையைப் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு,  ஓலைப்பாய் விரித்து, அதில் விதையை கொட்டி, அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதையை நாற்றாங்காலில் தூவிவிட்டு 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைத் தூவிவிட்டு ஒரு முறை கிளறிவிட்டால் விதையும், தொழுவுரமும் கலந்துவிடும். தண்ணீர் பாய்வதற்கு வசதியாக 4 அடிக்கு ஒரு பாத்தி வீதம் 5 பாத்திகள் எடுத்துக் கொள்ளலாம். விதைத்ததில் இருந்து, 8 முதல் 10 நாட்களில் முளைப்பு தெரியும். 30 நாளில் அரை அடி உயரமும், 60 நாளில் ஓர் அடி உயரமும் வரும். 30-ம் நாளிலேயே எடுத்து நடவு செய்யலாம். ஆனால், ஓர் அடி உயரம் வந்தால் நடவு செய்ய வசதியாக இருக்கும். 



15 நாள் இடைவெளியில் பஞ்சகவ்யா!



பப்பாளியை நடவு செய்ததில் இருந்து, 20-ம் நாள் மட்டும் ஒரு களை எடுத்துவிட்டு, 10 லிட்டருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 40 நாளுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 



பூ பூக்கும் நேரத்தில் பிண்ணாக்குக் கரைசல்!



6-ம் மாதம் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் 5 கிலோ பாசிப்பயறு, 5 கிலோ தட்டைப்பயறு, 5 கிலோ கொள்ளுப்பயறு, 5 கிலோ கொண்டைக்கடலை, ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு, அந்தக் கரைசலை ஒவ்வொரு தூரிலும் 500 மில்லி ஊற்றி, மண் அணைக்க வேண்டும். இதனால் பூக்கும் பூக்கள் உதிராமல், காய் பிடித்து நன்கு வளரும். 



பூ பூக்கும் நேரத்தில்தான், பப்பாளியில் ஆண் பெண் அடையாளம் காணமுடியும். கிளைகளுக்கும் தண்டுக்கும் இடையே ஒரே பூ மட்டும் பூத்தால் அது பெண் பப்பாளி எனவும், கொத்தாக பூ காணப்பட்டால் அது ஆண் பப்பாளி எனவும் அடையாளம் தெரிந்து கொள்ளலாம். 



400 பப்பாளி மரங்களில் குறைந்தது 20 ஆண் பப்பாளியாவது இருந்தால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். சில விவசாயிகள் ஆண் பப்பாளி மரங்களை மொத்தமாக பிடுங்கிவிடுவார்கள். இதனால் அயல்மகரந்தச்சேர்க்கை நடைபெறாமல் காய்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது. 



7-ம் மாதம் காய் காய்க்கத் தொடங்கும். 8-ம் மாதம் காய் பறிக்கலாம். 9-ம் மாதத்தில் இருந்து மகசூல் அதிகரிக்கும். 12-ம் மாதம் வரை நல்ல மகசூல் கிடைக்கும். 13-ம் மாதத்தில் இருந்து மகசூல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பிறகு, மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் தரமில்லாமல் இருக்கும்.

இயற்கை முறையில் மல்லிகைப் பூ சாகுபடி


ஆறு மாதத்தில் முதல் வருமானம்!
“நெல், கரும்பு மாதிரியான பயிர்கள்ல சிலசமயம் நஷ்டம் வந்துடும். அதனால, நிரந்தர வருமானம் கிடைக்கணுங்கிறதுக்காக 15 சென்ட் இடத்துல மல்லிகை நடவு செய்யலாம்னு முடிவு பண்ணினேன். ராமேஸ்வரத்துல இருந்து நாற்று வாங்கிட்டு வந்து நடவு செய்தேன். முழுக்க இயற்கை முறையில சாகுபடி செய்றதால, செடியோட வளர்ச்சி சிறப்பா இருக்கு. ஆறாவது மாசத்துல இருந்து வருமானம் எடுத்துக்கிட்டிருக்கேன். நட்டு 14 மாசமாகுது.
ஆரம்பத்துல தினமும் 100 கிராம், 200 கிராம்னு கிடைச்சது. ஆறாவது மாசத்துக்குப் பிறகு ஒரு கிலோ அளவுல கிடைச்சது. ஒவ்வொரு மாசமும் மகசூல் கூடிக்கிட்டே இருக்கு. இப்போ, தினமும் ரெண்டு கிலோவுல இருந்து, பத்து கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்குது. அடுத்த வருஷத்துல தினமும் 25 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.
இடையில ஊடுபயிரா மிளகாய், வெங்காயம் போட்டேன். மிளகாய் மூலம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. வெங்காயத்தை வீட்டுத் தேவைக்கு வெச்சுக்கிட்டோம். ரசாயன உரம் போட்டு சாகுபடி செய்யுற விவசாயிகளுக்கு சிலசமயம் பூ இல்லாம போயிடுது. ஆனா, இயற்கை முறையில எப்பவுமே பூத்துக்கிட்டே இருக்கு. இப்ப, என்னோட ஒரு ஏக்கர்ல 50 சென்ட் கரும்பு, 15 சென்ட் தீவனப்புல், 15 சென்ட் மல்லிகைப்பூ இருக்கு. மீதி 20 சென்ட், நெல் நடவுக்குத் தயாரா இருக்கு. குத்தகை நிலம் ஒரு ஏக்கர்ல நெல் போட்டிருக்கேன்” என்ற செந்தில்குமார் மல்லிகை மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துச் சொன்னார்.

15 சென்ட்டில் மாதம் 150 கிலோ!
“ஒரு கிலோ மல்லிகைப்பூ 50 ரூபாய்ல இருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகும். தினம் சராசரியா எனக்கு 5 கிலோ பூ கிடைக்குது. அந்த வகையில மாசத்துக்கு 150 கிலோ. கிலோவுக்கு சராசரி விலையா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே மாசம் 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். செலவு 5 ஆயிரம் ரூபாய் போக, மீதம் 10 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்” என்ற செந்தில்குமார்,
“ரெண்டு வருஷத்துக்குப் பிறகு தினம் சராசரியா 10 கிலோ வீதம் பூ கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அப்படி கிடைச்சா, மாசம் 20 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். எப்படியும் வருஷத்துல எட்டு மாசத்துக்கு இந்த வருமானம் கிடைச்சுக்கிட்டே இருக்கும்” என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

Monday, November 28, 2016

தினசரி வருமானம் பெற காய்கறி சாகுபடி

வருஷத்துக்கு ஒரு முறை காசை கண்ணால் பார்க்கும் விவசாயிகள் அன்றாடம் காசு பார்க்க அவர்கள் காய்கறிகள் என்னும் அதிர்ஷ்ட தேவதையை கைபிடிக்க வேண்டும்.

உலக அளவில் காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருப்பது சீனா.

2009 ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 7.958 மில்லியன் எக்டரில் 133.74 மில்லியன் டன் காய்கறிகளை நாம் உற்பத்தி செய்கிறோம்.

தமிழ்நாட்டின் மொத்த காயகறி சாகுபடி பரப்பளவு 2.63 லட்சம் எக்டர்

இந்தியாவில் ஒரு எக்டரில் காய்கறி மூலம் கிடைக்கும் சராசரி விளைச்சல் 16.7 டன்.

ஆனால் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன் ஒரு எக்டருக்கு 28.9 டன்

ஒரு நாளைக்கு ஒரு நபர் சாப்பிடும் காய்கறிகளின் அளவு 210 கிராம்
சிபாரிசு செய்யப்படும் அளவு 300 கிராம்.



சுமார் 50 வகை காயகறிகளை நாம் பயிர் செய்கிறோம்

தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, கொடிவகைக் காய்கள், வெங்காயம், முட்டைக்கோசு,பூக்கோசு, கேரட், பீட்ரூ;ட், கிழங்குகள், முருங்கை, கீரைகள் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய காயகறிகள்.

நாம் ஏன் காய்கள் சாகுபடி செய்ய வேண்டும் ?

தினசரி வருமானம், கூடுதல் லாபம், அதிக வேலை வாய்ப்பு, குறுகிய பயிர் வயது, மதிப்பு கூட்டுவதற்கான வாய்ப்பு, ஏற்றுமதிக்கு வாய்ப்பு, இவை எல்லாமே காய்கறி சாகுபடியில் பிரகாசமாக உள்ளது.

அதுசரி, காய்கறி சாகுபடியில் அதிக லாபம் பெற என்ன செய்ய வேண்டும் ?
உயர் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும்.

உயர் தொழில் நுடபங்கள் என்றால் என்ன ?

வீரிய ஒட்டு ரகங்களை தெரிந்தெடுத்தல், குழித்தட்டு நாற்றங்கால் முறையை கையாளுதல்,சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல், பாசனம் அளிக்கும் நீருடன் கலந்து உரமிடுதல் , பசுமைக் கொட்டகையில் சாகுபடி செய்தல், நிழல் வலைக் கொட்டகை அமைத்து பயிர் செய்தல்.

தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, பூசணி, சுரைக்காய், கோவைக்காய் ஆகியவற்றில் என்னென்ன உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு ரகங்கள் உள்ளன என்று பார்க்கலாம்.

கோ.டி.எச். 2 வீரிய ஒட்டுத் தக்காளி

செடிகள் 80 முதல் 85 செமீ உயரம் வளரும். அடர் நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் வெண்மை கலந்த பச்சை நிறமாக இருக்கும். கொத்துக்கு 3 முதல் 5 பழங்கள் தரும். ஒவ்வொரு பழமும் 60 முதல் 70 கிராம் எடையுடன், உருண்டை அல்லது நீள் உருண்டை  வடிவத்தில் இருக்கும். இலை சுருட்டு நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. விளைச்சல் ஒரு எக்டரில் 90 முதல் - 96 டன் தரும்.

கோ.டி.எச். 3 வீரிய ஒட்டுத் தக்காளி

செடிகள் 90 முதல் 95 செமீ உயரம் வளரும். அடர் நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் சிவப்பு நிறமாக இருக்கும். கொத்துக்கு 3 முதல் 5 பழங்கள் தரும். ஒவ்வொரு பழமும் 55 முதல் 60கிராம் எடையுடன், உருண்டை  வடிவத்தில் இருக்கும். இலை சுருட்டு, மற்றும் வைரஸ் நோய்க்கும் எதிர்ப்புத் திறனும் வேர் முடிச்சு நூற்புழுவுக்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது. விளைச்சல் ஒரு எக்டரில் 90 முதல் - 96 டன் தரும்.

இயற்கை முறையில் புளியமரம் சாகுபடி


புளியமரம் சகுபாடி குறைந்த செலவில் நீண்ட காலம் பலன் தரக்கூடிய ஒன்றாகும். புளி அணைத்து காலங்களிலும் தேவைப்படும் ஒன்றாகும். ஆடிப்பட்டம் புளி சாகுபடி செய்ய சிறந்த பட்டமாகும். புளி வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
ரகங்கள்
புளி ரகங்களில் உரிகம்புளி என்பது தருமபுரி அருகில் உரிகம் என்ற ஊரின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. பிகேஎம்1, தும்கூர் மற்றும் ஹாசனூர் என்பது மேலும் சில ரகங்கள் ஆகும்.
நாற்று பெறும் முறை
உரிகம் ரகம் தருமபுரியில் உள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் பிகேஎம் ரகம் பெரியகுளம் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறையில் கிடைக்கும். விதைகளை வைத்தும் நாற்று தயாரிக்கலாம்.
நடவு முறை
உரிகம் ரகத்தை நடுவதற்கு 6 x 6 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். அடர் நடவு முறையில் பிகேஎம்1 ரகத்தை 5 X 5 மீட்டர் இடைவெளியில் நடலாம். சித்திரை – வைகாசி மாதங்களில் 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அதில் காய்ந்த இலை தழைகளை போட்டு தீ எரித்து சாம்பலாக்கி வைக்க வேண்டும். பிறகு அந்த குழியில் சிறிதளவு போர் மண், மணல் மற்றும் குப்பை கொண்டு 1 அடி மூடவேண்டும். அதை அப்படியே ஆடி மாதம் வரை ஆறவிட வேண்டும். பிறகு அதில் புளியங்கன்றை நடவு செய்யலாம்.
நீர்ப்பாசனம்
கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு தேவைகேற்ப நீர் பாய்ச்சினால் போதும்.
ஊடுபயிர்
அறுவடைக்கு வரும் வரை கடலை, உளுந்து, எள்ளு, பாசிபயிறு போன்றவைகளை நாம் ஊடுபயிர் செய்யலாம். குறைந்த உயரம் வளரும் பயிர்கள் ஊடுபயிர் செய்ய ஏற்றது.
அறுவடை
உரிகம் ரகம் 5 முதல்  8 வருடம் வரை பூ வைத்து பிறகு காய் பிடிக்கும். இதற்கு பருவநிலை மிகவும் முக்கியம். பிகேஎம் ரகம் 3 வருடம் முதல் பூ வைத்து 5 வருடத்தில் காயப்பிற்கு வரும்.

புதினா சாகுபடி


புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யகூடிய பயிர்களுள் ஒன்றாகும். இதற்கு பட்டம் எதுவும் கிடையாது.
மண் வகைகள்
வளமான ஈரப்பதம் உள்ள மண், புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும். புதினா களிமண், வண்டல் மண், ஆற்று படுகை மண்களில் நன்றாக வளரக்கூடியது. மிதவெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட்டால், புதினா நன்கு வளரும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்யவேண்டும்.
நீர் மற்றும் உர மேலாண்மை
புதினா சாகுபடிக்கு உப்பு நீரையோ, சப்பை நீரையோ பாய்ச்சினால், அது விளைச்சலைப் பாதிக்கும். எனவே நல்ல தண்ணீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளைப் பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதலோ இருந்தால் இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம். புதினாவிற்கு தொழு உரத்தை தவிர வேறு உரங்கள் தேவையில்லை. ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிடவேண்டும்.
அறுவடை
60 நாட்களில் பறிக்கும் நிலைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோவரை பறிக்கலாம். சீசன் காலங்களில் ரூ.50 முதல் 70 வரை விலை போகிறது. சீசன் இல்லாத காலங்களிலும் ஒரு கிலோவுக்கு ரூ. 30 கிடைக்கும். செலவு போக அதிகபட்சமாக ரூ.1 லட்சம்வரை ஒரு அறுவடையில் லாபம் கிடைக்கும். 4 ஆண்டுகள்வரை தொடர்ந்து 60 நாட்களுக்கு ஒரு முறை புதினாவை அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.

வாழை, கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் ஊடு பயிராகவும் புதினாவை பயிரிட்டு கூடுதல் லாபம் பெறலாம்.