Showing posts with label பூச்சிகள். Show all posts
Showing posts with label பூச்சிகள். Show all posts

Tuesday, November 29, 2016

பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை


ஆவாரை, புங்கன், வேம்பு, எருக்கன், நொச்சி, நித்யகல்யாணி ஆகியவற்றின் இலைகளை தலா 3 கிலோ எடுத்து ஒன்றாகச் சேர்த்து நன்கு இடித்து, இவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீர் ஊற்றி மூடி வைத்து 20 நாட்கள் தினமும் கலக்கி வர வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் வாசனையுடைய 5 கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரைக் கலந்து 20 நாட்களுக்கு ஊற வைக்கவேண்டும். பிறகு இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து.. 100 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம். இது, குருத்துப்பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

வெண்டையில் பூச்சி தாக்குதலுக்கு தீர்வு


10 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா!
விதை நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். 20-ம் நாளிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்யா, செடி வளர சிறந்த பயிர் ஊக்கியாகச் செயல்படும். வேறு எந்த இடுபொருளும் தேவையில்லை.
மாவுப்பூச்சிக்கு இஞ்சி-பூண்டு கரைசல்
வெண்டையில் மாவுப்பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வருமுன் காப்போம் முறையில் நடவு செய்த 25-ம் நாளில் இருந்தே, வாரம் ஒரு முறை பூச்சி விரட்டியைத் தெளித்து வர வேண்டும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றில் தலா அரைக்கிலோ எடுத்து அவற்றை உரலில் இடித்து வெள்ளைத் துணியில் கட்டி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஊறவைக்க வேண்டும். 5 நாட்கள் ஊறிய பிறகு கரைசலை எடுத்து வடிகட்டினால் இஞ்சி-பூண்டு கரைசல் தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும். 2 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பைத் தூளாக்கிப் போட்டுக் கலக்க வேண்டும். அதனுடன், 200 கிராம் கல் உப்பைச் சேர்த்துக் கலக்கி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற கணக்கில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
இந்த இரண்டு கரைசல்களையும் சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை கைத்தெளிப்பானால் தெளித்து வந்தால் பூச்சித்தாக்குதல் இருக்காது. அதோடு சோலார் விளக்குப் பொறிகளையும் அமைத்துவிட்டால் அனைத்து வகையான தீமை செய்யும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தி விட முடியும்.
தவிர, வரப்பில் தட்டைப்பயறு, செண்டுமல்லி, காராமணி ஆகிய செடிகளை நடவு செய்து விட்டால்.. பயிரைத் தாக்க வரும் மாவுப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈ, இலைத்துளைப்பான் ஆகியவை வரப்போரப் பயிரில் அமர்ந்துவிடும். இதனால் முதன்மைப் பயிரான வெண்டையை பூச்சிகளில் இருந்து காப்பாற்றி விடலாம்.

Monday, November 28, 2016

இயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்

இயற்கை விவசயம் மூலம் முருங்கை சாகுபடி செய்யும் சடையாண்டி கூறுகிறார்
செடிமுருங்கை… நாட்டுமுருங்கை ஓர் ஒப்பீடு
முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். செடிமுருங்கை விதை மூலமும், நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.
காய் விலை பற்றி கவலையே இல்லை!
ஆண்டு முழுவதும் முருங்கைக்கு விலை கிடைக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும். அதில் இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு 240 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட காய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், விதை மூலம் கிடைத்து விடும்.
இலைக்கும் கிராக்கி!
முருங்கை இலைக்கும் (கீரை) தேவை அதிகமாகவே இருக்கிறது. இதைப் பற்றி சொன்ன சடையாண்டி, “இயற்கையில விளையுற முருங்கை இலைக்கும் (கீரை), காய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கு. குறிப்பா முருங்கை இலைக்கு காயை விட அதிகத் தேவை இருக்கு. இலை பறித்தால் காய் மகசூல் குறையும். அதனால, விவசாயிகள் இலை விற்பனையில் கவனம் செலுத்துறதில்லை. இலைக்காக சாகுபடி செய்றவங்க, அடர் நடவு முறையில் 5 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். 40 நாட்களுக்கு ஒரு முறை இலைகளை அறுவடை செய்து விற்பனை செய்யலாம். மதுரை மாவட்டத்துல இலைக்கான வியாபாரிகள் இருக்காங்க. இலைக்கான விற்பனை வாய்ப்பை, விசாரிச்சிட்டு, இலை சாகுபடியில் இறங்கலாம்” என்றார்.

விண்பதியன் முறையில் ஒட்டு நாற்றுகள்!
சடையாண்டி, ‘‘விண்பதியன் முறையில் ஒட்டுக்கட்டி புதிய முருங்கை நாற்றுகளை உருவாக்குவது இப்படித்தான்-
தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து 40% ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும் (ஈரமாக இருக்க வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. இதுதான் ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு).
முருங்கை மரம் பூவெடுக்கும் தருவாயில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில் பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக் காகிதத்தால் காயத்துக்குக் கட்டு போடுவது போல இறுக்கமாக கட்டி வைக்கவேண்டும்.
40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். பிறகு, அந்தக் குச்சியை வெட்டி எடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்றி 60 நாட்கள் வளர்த்து நிலத்தில் நடவு செய்யலாம். விவசாயிகள் இப்படி நாற்று தயாரித்து விற்பதன் மூலமும் வருமானம் பார்க்க முடியும்” என்றார்.

முருங்கை பயிரைத் தாக்கும் கம்பளிப்புழு

முருங்கை பயிரைத் தாக்கும் கம்பளிப்புழு தாக்குதலின் அறிகுறிகள்:
  • மரத்தின் தண்டுப் பகுதியில் புழுக்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து காணப்படும்
  • புழுக்கள் கூட்டமாக சேர்ந்து சாப்பிடும்
  • மரப்பட்டையை சுரண்டி சாப்பிடும், தழைகளை பல்லால் கரண்டு சாப்பிடும்
  • தாக்குதல் முற்றிய நிலையில் மரம் இலைகளே இல்லாமல் மொட்டையாகக் காணப்படும்

பூச்சியின் விபரம்:
  • முட்டை: இளம் குருத்து மற்றும் இலைகளில் குவியலாக முட்டையிடும்
  • புழு: புமுக்கள் பழுப்பு நிறமாக வெண்ணிற உரோமங்களுடன் இருக்கும்
  • பூச்சி: மஞ்சள் கலந்து பழுப்பு நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
  • முட்டை குவியல்கள் மற்றும் புழுக்களை சேகரித்து அழிக்கவேண்டும்
  • மழை பொழிந்தவுடன் ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து அந்துப்புச்சிகளை கவர்ந்து அழிக்கவும்
  • தீ பந்தம் கொண்டு தண்டுப்பகுதியில் கூட்டமாகக் காணப்படும் புழுக்களை கொன்று அழிக்கவேண்டும்
  • மீன் எண்ணெய் ரோசின் சோப் 25 கிராம்/லிட்டர் அல்லது கார்பரில் 50 WP 2 கிராம்/லிட்டர் தெளிக்கவும்

Tuesday, August 4, 2015

நன்மை தரும் பூச்சிகளை உற்பத்தி செய்து பயிர்களை காக்கும் விவசாயி - Farmer produces beneficial insects that protect crops

விவசாயத்தில் நோய் பாதிப்பு, பூச்சி தாக்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த ரசாயன உரம், பூச்சிமருந்து பயன்படுத்துகின்றனர். ஆனால் பூச்சி மருந்து பயன்படுத்திய சில நாட்களிலேயே மருந்து வீரியம் குறைந்து நோய் பரப்பும் பூச்சிகள் அதிகரித்துவிடுகிறது. பயிர்களை பாதுகாக்க முடியவில்லை என விவசாயிகள் புலம்பும் நிலை உள்ளது.

குறிப்பாக பயிர்களில் தண்டுபுழு நோய் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் 40 சதவீத மகசூல் குறையும். இப் பாதிப்பில் இருந்து பயிர்களை காக்க இயற்கை வேளாண் முறையில், நோய் ஏற்படுத்தும் பூச்சிகளை அழித்து, நன்மைதரும் பூச்சிகளை உருவாக்கி விற்பனையிலும், விவசாயத்திலும் சாதித்து வருகிறார் தேனி அன்னஞ்சியை சேர்ந்த பட்டதாரி விவசாயி மோகன்குமார்.
இவர் 2011 ல், 4 ஏக்கரில் ஒருபரு கருனைமுறை தொழில் நுட்பத்தில் கரும்பு நாற்று செய்தார். முதல் வெட்டில் ஏக்கருக்கு 60 டன், 2வது வெட்டில் 75டன் மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார். கரும்பில் பாதிப்பு ஏற்படுத்தி தண்டுபூச்சிகளை அழிக்கும் இயற்கை முறையில் “டிரைகோகிராம்மா ஜாப்னிக்” எனும் பூச்சிகள் மூலம் நோய் பாதிப்பை தடுத்து உற்பத்தியில் சாதனை படைத்தார். இவர் பெற்ற பலனை மற்றவர்களுக்கும் சென்றடையும் வகையில், தண்டுபுழுவை கட்டுப்படுத்தும் பூச்சிகளை உற்பத்தி செய்கிறார்.
விவசாயி மோகன்குமார் கூறியதாவது:
  • அதிக முட்டையிடும் “கார்சீரா’ எனும் பூச்சிகள் மூலம் “டிரைகோகிரம்மா ஜாப்பனிக்’ என்ற முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து வரும் சிறிய பூச்சிகளை கூண்டு வலைகளில் பராமரித்து அதிலிருந்து மிக நுண்ணிய முட்டைகளை பெறலாம். முட்டைகளை மஞ்சள்நிற அட்டையில் ஒரு கியூபிக் மீட்டர் அளவில் சிறிய அட்டையில் 15 ஆயிரம் முட்டைகள் ஒட்டுகின்றனர். இந்த அட்டைகளை ஐந்து நாட்களுக்குள் தண்டு புழு பாதித்த பயிரில் கட்டவேண்டும். அட்டையில் ஒட்டிய முட்டைகள் சூரிய வெப்பத்தில் 2 மணிநேரத்தில் பூச்சியாக மாறிவிடும். இப் பூச்சிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் தண்டு புழுக்களை உணவாக எடுத்து, அழித்து, பயிர்களுக்கு நன்மை தரும் முட்டைகளை செடியில் வைத்துவிடும்.
  • கரும்பில் தண்டு பூச்சி பாதிப்பு இருந்தால் நடவு செய்த 4 வது மாதத்தில் 15 நாள் இடைவெளியில் 3 முறை மஞ்சள் நிற அட்டை கட்டினால் நோய் பாதிப்பு இருக்காது.
  • இதுபோன்ற நன்மை செய்யும் பூச்சிகள், கரும்பு, காய்கறி சாகுபடி, காப்பி, ஏலம் பயிர்களில் தண்டுபுழு பாதிப்பை போக்க பெரிதும் உதவுகிறது.
  • பண்ணையில் நாள்ஒன்றுக்கு 120 சிசி பூச்சிகள் உற்பத்தி செய்கிறேன். இதை சர்க்கரை ஆலைகள் அதிகம் கொள்முதல் செய்கிறது. ஒரு அட்டை ரூ.35 விலைக்கு விற்கப்படுகிறது. பயிரை தாக்கும் மற்ற நோயான மாவு பூச்சி, கத்தாளை பூச்சி ஆகியவற்றை ஒழிக்க இயற்கை பூச்சிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
மேலும் விபரங்களுக்கு…09944865516.

Thursday, February 26, 2015

பூச்சிகளை விரட்டுவதற்கு சில இயற்கைக் கரைசல்கள்

உழவுத் தொழிலில் ஒரு சில பூச்சிகள் பயிர்களை அழித்து விடுகின்றது. இதனால் செயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தபடுகிறது இதனால் நாம் உண்ணும் உணவும் மெல்ல நஞ்சாகி விட்டது மற்றும் இயற்கை வளம் முழுமையாக அழிக்கபட்டு வருகிறது. ஆனால் இயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் இயற்கை பூச்சி விரட்டி கையாளப்படுகிறது. இதனால் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக உள்ளது மற்றும் இயற்கை வளம் முழுமையாக பாதுகாத்து வரப்படுகிறது.
பூச்சிகளை விரட்டுவதற்கு சில இயற்கைக் கரைசல்கள் பயன்படுகின்றன. இவற்றில் உள்ள அடிப்படையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்டால் நம்மால் எந்த ஒரு சூழ்நிலையிலும் நல்ல பூச்சி விரட்டியை தயார் செய்து கொள்ள முடியும். பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது. அவற்றை விரட்டுவதே நோக்கம். இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரிங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.
பின்வரும் இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும் :
1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள்- ஆடுதொடா, நொச்சி போன்றவை
2. ஒடித்தால் பால் வரும் இலை தழைகள்- எருக்கு, ஊமத்தை போன்றவை
3. கசப்புச் சுவை மிக்க இலை தழைகள்- வேம்பு., சோற்றுக் கற்றாழை போன்றவை
4. உவர்ப்பு சுவை மிக்க இலை தழைகள்- காட்டாமணக்கு போன்றவை
5. கசப்பு உவர்ப்பு சுவைமிக்க விதைகள்- வேப்பங்கொட்டை. எட்டிக் கொட்டை
இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.

Wednesday, February 11, 2015

நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே

தமிழகத்தில் விவசாயிகள் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிந்து வருகின்றன. இதன் விளைவாக மகரந்த சேர்க்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் சிக்கலை சந்திக்கிறது என சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கும் விவசாய முறை:
  • பெரும்பாலும் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது பூக்களில் மகரந்த சேர்க்கை வழியில்தான்.
  • இந்த மகரந்தசேர்க்கையில் ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்கு மகரந்தம் செல்வதே அயல் மகரந்தசேர்க்கை எனப்படும்.
  • அரிசி, கோதுமை போன்ற புல்வகை தாவரங்களுக்கு பூக்கள் மிக சிறியதாய், கண்களுக்கு புலப்படாத அளவில் இருக்கும். மென்காற்று வீசும்போது பூக்களின் மகரந்தம் அடித்து செல்லப்பட்டு அடுத்த தாவரத்தில் படியும்.இவ்வாறு இந்த வகை தாவரங்களில் மகரந்த சேர்க்கை இயல்பில் நடைபெற காற்று பெரிதும் துணை செய்கிறது.
  • ஆனால் பல்வேறு காய், கனிகள் சாகுபடியில் குறிப்பாக பூசணி, பரங்கி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கனிகள் விளைச்சல் தரும் பூச்சிகளின் வாயிலான மகரந்த சேர்க்கை மிகவும் அவசியம்.
  • தேனீ, வண்டு, பட்டாம்பூச்சி போன்றவை விவசாயிகளுக்கு நன்மை தரும் பூச்சிகள். இவை, பூக்களில் தேன் எடுக்க ஒவ்வொரு பூவாக செல்லும்போது மகரந்தத்தை எடுத்துச் சென்று அயல் மகரந்தசேர்க்கைக்கு பெரிதும் உதவுகிறது.
சூழலியல் விவசாய முறை:
  • இயற்கையில் தாவர வளர்ச்சி குறித்து அறிந்து, சூழலியல் பார்வையில் நவீன அறிவியல் பயன்பாடே சூழலியல் விவசாயமாகும்.
  • இந்த புதிய விவசாய முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள் எந்த நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு மருந்தை தெளிக்க வேண்டும்.

நன்மை செய்யும் பூச்சிகளைக் காப்போம்

பயிர்களைத் தாக்கி சேதப்படுத்தும் தீமை விளைவிக்க கூடிய பூச்சிகளை அழிக்கக்கூடிய நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன.

 இப்படிப்பட்ட நன்மை தரும் பூச்சிகளை ஒவ்வொரு விவசாயியும் அடையாளம் கண்டு கொள்வதோடு மட்டு மல்லாமல், அதை அழிக்காமல் இருக்க பூச்சிக் கொல்லி மருந்தின் உபயோகத்தைத் தவிர்த்திட வேண்டும்.
கிரைசோபா: இவ்வகை பூச்சிகளில் ஆண் பூச்சிகள் 10 முதல் 12 நாள்களும்,பெண் பூச்சிகள் 35 நாள்களும் உயிர்வாழும். 500 முதல் 600 முட்டைகள் வரை இடும். இது குஞ்சு பருவமாக இருக்கும் போதே தீமை செய்யும் பூச்சிகளைத் தாக்க ஆரம்பித்து விடும். இவை பயிர்களைத் தாக்கும் அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சிகள், முட்டைகள், குஞ்சுகளைத் தாக்கி அழிக்கும்.

 இதன் வாழ்நாளில் 400 முதல் 500 தீமை செய்யும் பூச்சிகளை அழித்து விடும். கிரைசோபா தாய்பூச்சி பச்சை நிறத்தில் கண்ணாடி போன்ற இறக்கை உடையது. இதன் குஞ்சுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

முட்டை ஒட்டுண்ணிகள்: முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா டெலிநாமஸ்,டெட்ராஸ்டிக்ஸ் வகை ஒட்டுண்ணிகள் தன்னுடைய வாழ்நாளில் 20 முதல் 40 முட்டைகள் வரை இடும். இதில் இருந்து வெளிவரும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளைக் காய்புழுக்களின் முட்டைகளின் மீது தன் முட்டைகளை இட்டு இனத்தைப் பெருக்கி, காய்புழுக்கள் வெளிவராமல் தடுக்கிறது. இது தன்வாழ்நாளில் 20 முதல் 40 தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கிறது. இந்த ஒட்டுண்ணிகள் கருப்பு நிறம் கொண்டவை.

அன்சிர்டிட்ஸ் முட்டைப் புழு ஒட்டுண்ணி: இதன் வாழ்நாள் 14 முதல் 17 நாள்கள். தன்வாழ்நாளில் 300 முதல் 400 முட்டைகள் வரை இடும். இது காய்ப் புழுக்களின் முட்டைகளின் மீது தன் முட்டைகளை இடும். முட்டைகளையும், புழுக்களையும் தாக்கி அழிக்கும். இவை பழுப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த சிறிய ஈ போன்றது.

செலானஸ்குளவி: தாய்பூச்சி சிவப்பும் கறுப்பும் கலந்தது. அடி வயிற்றில் மஞ்சள் கோடு இருக்கும். இவை தாய்ப் புழுக்களின் முட்டைகள், புழுக்களையும் தாக்கி அழிக்கும்.