Tuesday, April 28, 2015

மக்காச்சோள விவசாயத்தில் மாநில சாதனை (Makka Chola Vivasayathil Maanila Saathanai) - The state record in maize agriculture

வறட்சியிலும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, மக்காச்சோளம் சாகுபடியில் ஒரு எக்டேருக்கு 12 டன்கள் (120 மூட்டைகள்) வரை மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார் பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி எஸ்.ராமசாமி. மாநிலஅளவில் முதலிடம் பிடித்த இவருக்கு வேளாண்மைத்துறை மூலம் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தனது சாதனை குறித்து ராமசாமி கூறியதாவது:
ஒரு எக்டேரில் சாகுபடி செய்வதற்கு உரம், வேலையாட்கள் கூலி, நீர் பாசனத்திற்காக ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்தேன்.


பொதுவாக ஒரு எக்டேருக்கு 8 டன்கள் தான் மகசூல் கிடைக்கும். வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், 12 டன்கள் வரை கிடைத்துள்ளது. தற்போது ஒரு மூடை ரூ.1,350 விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ.1.35 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.

பயிரிடும் முறை:
  • மக்காச்சோளத்தை ஐப்பசியில் பயிரிட்டேன். விதைப்பதற்கு முன்பாக நிலத்தில் கட்டிகள் இல்லாதவாறு தொடர்ந்து பலமுறை உழவு செய்ய வேண்டும்.
  • மண் பொலிவாக இருந்தால் தான் வேர் வெகுவாக கீழே செல்லும். மண் பரிசோதனைப்படி உரமிட்டால், உரம் வீணாவதை தவிர்க்கலாம். ஒரு எக்டேருக்கு அடியுரமாக 135 கிலோ டி.ஏ.பி.,- 30 கிலோ யூரியா, 85 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.
  • தொடர்ந்து 12.5 கிலோ நுண்ணூட்ட சத்துகளை 20 கிலோ மண் கலந்து இட வேண்டும். நான், 52/11 என்ற வீரிய ரக விதைகளை பயன்படுத்தினேன். ஒரு எக்டேருக்கு 12.5 கிலோ வரை விதைவேண்டும்.
  • அஸ்சோஸ்பைரில்லம் மூலம் விதை நேர்த்தி செய்தால், வேருக்கு தேவையான தழைச்சத்தை பெற்று தரும். ஒரு கிலோ 10 கிராம் டிவிரிடி அஸ்சோடோமோனசில் பூஞ்சன விதை நேர்த்தி செய்தால், நோய் தாக்குதல் ஏற்படாது.
  • 60 X 20 செ.மீ., இடைவெளியில் விதைகள் நட வேண்டும். களைகொல்லி பயன்படுத்தினேன். களையெடுக்கும்போது, மேலுரமாக 150 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும்.
  • பால் பிடிக்கும் தருணத்தில் 75 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும். நான், கிணற்று பாசனம் மூலம் நீர் பாய்ச்சினேன். சொட்டுநீர் பாசனம் பயன்படுத்தினால், நீரை மிச்சப்படுத்தலாம். 15 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும், என்றார்.
இவருடன் பேச: 09362686204

இ.ஜெகநாதன், திண்டுக்கல்.

No comments:

Post a Comment