Thursday, April 2, 2015

வறட்சிக்கு உதவும் தென்னை நார்க் கழிவுத்துகள் (Varatchiku Uthavum Thennai Naar Kalivugal) - Coconut Coir Helps in Drought

கடும் வறட்சி காரணமாக தென்னைநார்க் கழிவுத்துகள்களின் தேவை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து முதன்முறையாக ஆப்பிரிக்காவுக்கு இக்கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தென்னை நகரான பொள்ளாச்சிப் பகுதியில் சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழைகள் பொய்த்து விட்டன.
இதனால் பொள்ளாச்சிப் பகுதியில் மட்டும் 20 சதவீத தென்னை மரங்கள் முழுமையாகக் காய்ந்துவிட்டன. மேலும் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட மரங்கள் காய்க்கும் திறனை இழந்துவிட்டன.
பொள்ளாச்சிப் பகுதியில் சில ஆண்டுகளாக தென்னை மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் நார் மற்றும் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டிகளின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
இப்பகுதியில் மட்டும் சுமார் 500-க்கு மேற்பட்ட தென்னைநார்த் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
நாளொன்றுக்கு ஒரு தொழிற்சாலைக்கு சுமார் 40 ஆயிரம் மட்டைகள் தேவைப்படுகின்றன. ஏற்றுமதி அதிகரிப்பதால் மட்டைகளின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தேவை அதிகரித்ததால், கடந்த 6 மாதங்களுக்கு முன் 50 பைசாவுக்கு விற்ற தென்னை மட்டை இப்போது ரூ. 2-ஆக விலை உயர்ந்துள்ளது.
இங்கு தென்னை மட்டை கிடைக்காத காரணத்தால், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் 20 லோடு முதல் 40 லோடு வரை தென்னை மட்டைகள் கொண்டு வரப்படுகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து கொரியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக அளவில் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
முதன்முறையாக இந்த ஆண்டு பொள்ளாச்சியில் இருந்து ஆப்பிரிக்காவுக்கும் கழிவுத்துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
வீடுகளின் மாடிகளில் காய்கறித் தோட்டம் அமைக்குமாறு தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. வீடுகளின் மாடியில் தோட்டம் அமைக்கும் பகுதியில் கழிவுத்துகள் கட்டிகளை மண்ணுடன் கலந்து பயிரிடுவதால் மகசூல் அதிகரிப்பதுடன் தண்ணீரின் தேவையும் குறைகிறது.

இதனால் கழிவுத்துகள் கட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் வறட்சியால் வாடும் தென்னை மரங்களைக் காப்பாற்றுவதற்காக மரத்தைச் சுற்றிலும் இக்கழிவுத் துகள்களைப் பரப்புகின்றனர். இதனால், தினமும் தென்னை மரத்துக்குத் தண்ணீர் விடுவதற்குப் பதிலாக, 4 அல்லது 6 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதுமானதாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
தண்ணீரைச் சேமிக்க வேண்டுமானால் கழிவுத்துகள் கட்டியைப் பயன்படுத்துங்கள் என்ற கோஷம், இப்போது புதிதாக பொள்ளாச்சியில் உள்ள கழிவுத்துகள் கட்டி உற்பத்தியாளர்களிடம் எழுந்துள்ளது.
ஒரு கிலோ கழிவுத்துகள் கட்டி 8 கிலோ தண்ணீரைத் தன்னுள் தாங்கும். இதனால் தென்னை மரத்தைச் சுற்றிலும் ஈரம் இருந்து கொண்டே இருக்கும்.
அதற்காகவே கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள், வறட்சியின்போது கழிவுத்துகள்களை தென்னை மரத்தின் வேரைச் சுற்றிலும் பரப்பி ஆயுள்காலப் பயிரான தென்னையைக் காப்பாற்றி வந்தனர்.
பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து மட்டும் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டி ரூ. 250 கோடிக்கு மேல் ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. veetu thottam amaika thennai nor kaluvu kedaikuma ?

    ReplyDelete
  2. காய்கறி பயிரிட 300 கிலோ நார்கழிவு தேவை,
    விலை மற்றும் எங்கு கிடைக்கும்.
    தொடர்புக்கு : 7397023412

    ReplyDelete
  3. வணக்கம். தற்சமயம் எங்கள் குழு மூலம் நாங்கள் நார்கழிவுகள் தயார் செய்து வருகிறோம். விருப்பம் உள்ளவர்கள் அனுகவும்.9444318145

    ReplyDelete