மழை அதிகம் பெய்த நிலையில் சில பயிர்களில் பூச்சிகளும், நோய்த்தாக்குதலும் காணப்படுவதுண்டு. இது குறித்து பார்க்கலாம்.
நெல்
மழைக்குப் பின் நெல் பயிரில் இலைப்பேன் தாக்குதல் குறைவாக இருக்கும். ஆனால் படைப்புழு மற்றும் கூண்டுப்புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும். இதில் படைப்புழுவால், குன்றுகள், காடுகள், வாய்க்கால்களை ஒட்டி அமைந்துள்ள வயல்களுக்கு சேதம் ஏற்படலாம். படைப்புழு பகலில் பதுங்கியிருந்து இரவில் நெற்பயிரை தாக்கும். இந்த புழுவின் தாக்குதலால், பயிர்கள் ஆடு, மாடு மேய்ந்தது போல் இலைகள் வெட்டப்பட்டு காணப்படும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மில்லி குளோரிபைரிபாஸ் மருந்தினை இருநூறு லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நனையும்படி மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
கூண்டுப்புழு
வடிகால் வசதியில்லாமல் தண்ணீர் அதிகம் தேங்கும் வயல்களில் கூண்டுப்புழு சேதம் ஏற்படும். இலை நுனிகள் வெட்டப்பட்டும், இலைகளில் வெண்ணிறமாக அரிக்கப்பட்டது போல் காணப்பட்டால் கூண்டுப்புழு தாக்குதலால் ஏற்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ளலாம். கூண்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வயலின் குறுக்கே கயிற்றை இழுத்து கூண்டுப்புழுக்களை நீரில் விழச்செய்ய வேண்டும். பின்னர் தண்ணீரை வடிக்க வேண்டும்.
வடிகாலில் வைக்கோல் பிரி அல்லது சாக்கு வைத்து மிதந்து வரும் கூண்டுப்புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். வயிலில் இருந்து தண்ணீரை முழுவதும் வடித்த பின்னர் தான் மருந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 400 மிலி மனோகுரோட்டோபாஸ் மருந்து தெளித்து கூண்டுப்புழுவினை கட்டுப்படுத்தலாம்.
தென்னை
குருத்தழுகல் நோய்
பெருமழை பெய்து மழைநீர் சில நாட்கள் தங்கியுள்ள தென்னந்தோப்புகள், குளங்கள் அருகிலுள்ள தோப்புகள் மற்றும் ஊடுபயிராக நெல் பயிரிடப்பட்ட தோப்புகளில் தென்னை மரங்கள் குருத்தழுகல் நோய் என்ற பூசண நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குருத்தழுகல் நோய் பாதித்த தென்னையில் குருத்து வாடி அழுகித் தொங்கும். முழுவதும் பாதிக்கப்பட்ட குருத்து பிடித்து இழுத்தால் கையோடு வந்து விடும். குருத்தின் அழுகிய பகுதியை அறுத்து எடுத்து விட்டு போர்டோ பசை தடவ வேண்டும். அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு எனப்படும் புளு காப்பர் மருந்தை பசை போல் கரைத்து தடவ வேண்டும். மேலும் கலவையினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை கிராம் வீதம் குறுத்து மற்றும் அருகில் உள்ள மட்டை இடுக்குகளில் தெளிக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட மரத்துக்கு அருகில் உள்ள மரங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக தெளிக்க வேண்டும்.
வாழை
மழைக்குப் பின் வாழைப் பயிரில் இலைப்புள்ளி நோய் தோன்றும். இதனை கட்டுப்படுத்த அதிகம் பாதித்த இலைகளை அறுத்து எடுத்து அப்புறப்படுத்தி எரித்து அழிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இலைப்புள்ளி நோய் அடுத்த இலைக்கு பரவுவது தடுக்கப்படும். காற்றோட்டமான தோட்டங்களில் நோய் விரைந்து பரவாது. இந்த நோயின் தொடக்க அறிகுறிகள் இலைகளில் தென்பட்டவுடன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் கார்பன்டாசிம் அல்லது இரண்டரை கிராம் காப்பர் மாங்கோசெப் அல்லது இரண்டு கிராம் குளரோதலோனில் மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பதினைந்து நாட்களுக்கு பின்னர் மீண்டும் தெளிக்க வேண்டும்.
பூச்சி மற்றும் பூசணக் கொல்லி மருந்துகள் பயிரின் மீது நன்கு பரவி படிவதற்காக வேளாண்மைக்கான திரவ சோப்புகளான சாண்டோவிட், இண்ட்ரான், பைட்டோவெட் ஆகியவற்றில் ஒன்றை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி என்ற அளவில் வாழைக்கு சேர்த்து கலக்கி கொள்வது அவசியம்.
No comments:
Post a Comment