Thursday, March 5, 2015

அசோலா வளர்ப்பும் - அதன் பயன்கள்

அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர்.


இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% அமினோ அமிலம் கார்போஹைட்ரேட் எண்ணெய் சத்துக்கள்.

தேவையான பொருட்கள்:
(6’X3’, தினம் 500கி-1 கிலோ உற்பத்தி செய்ய போதுமானது)
1. செங்கல் - 30-40 கற்கள்
2. சில்பாலின் பாய் - 2.5 மீ நீளம், 1.5மீ அகலம் (அ) 6’X3’
3. செம்மண் - 30 கிலோ
4. புதிய சாணம் - 30 கிலோ
5. சூப்பர் பாஸ்பேட் - 30 கிராம் (அ)
அசோஃபெர்ட் - 20 கிராம்
6. தண்ணீர் - 10 செ.மீ. உயரம் (சராசரியாக 6-9 குடம்)
7. அசோலா விதை - 300-500 கிராம்
8. யூரியா சாக்கு - தேவையான எண்ணிக்கை (6’X3’ ச.அடியை நிரப்ப)


அசோலா வளர்ப்பு முறை:
இடத்தைத் தயார் செய்தல்:
1. மர நிழலில் (நேரடி சூரிய ஒளி ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது) இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.
2. இடத்தின் அளவு 6’X3’ இருக்க வேண்டும்.
3. புல் பூண்டுகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
4. இடம் குண்டும் குழியுமாக இல்லாமல் சம தளமாக்க வேண்டும்.
5. புல் பூண்டுகள் வளருவதை தடுக்க யூரியா சாக்கினை பரப்பவும்.


செய்முறை:
1. செங்கலை குறுக்கு வாட்டில் தயார் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.
2. அதன் மேல் சில்பாலின் பாயை பரப்பி விட வேண்டும்.
3. சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பி விட வேண்டும்.
4. தண்ணீரின் அளவு 10 செ.மீ உயரம் வரும் வரை சுமார் 6-9 குடம் ஊற்ற வேண்டும். ஊற்றுவது குடிநீராக இருக்க வேண்டும்.
5. புதிய சாணம் 2 கிலோ மற்றும் 20 கி அசோஃபெர்ட் (அ) 30 கி சூப்பர் பாஸ்பேட் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
6. 500-1000 கிராம் சுத்தமான அசோலா விதைகளை போட்டு அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்கவும்.



வளர்ச்சி:
1. விதைத்த 3 நாட்களில் எடை மூன்று மடங்காக பெருகும்.
2. பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்.
3. 15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.



பராமரிப்பு:
1. தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும்.
2. தண்ணீன் அளவு 10 செ.மீ. க்குக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. 5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 20கிராம் அசோஃபெர்ட் (அ) 10 கிராம் ( ஒரு தீப்பெட்டி அளவு) சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
4. 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும்.
5. மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலித்த செம்மண்ணை இட வேண்டும்.
6. 6 மாதத்திற்கு ஒரு முறை அசோலா விதைகளை தவிர அனைத்து இடுபொருட்களையும் வெளியேற்றி புதியதாக இட வேண்டும்.



தீவனம் அளிக்கும் முறை:
1. தினமும் 500கிராம்- 1 கிலோ அசோலாவை எடுத்து நீரில் அலசிக்கொள்ள வேண்டும்.
2. பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.
3. உணவு உப்புடன் சேர்த்தும் அளிக்கலாம்.
4. வைக்கோலுடன் சேர்த்தும் அளிக்கலாம்.


பயன்கள்:
1. 1 கிலோ அசோலா 1 கிலோ புண்ணாக்கிற்கு சமம்.
2. அசோலாவை உட்கொள்வதால் பால் உற்பத்தி 15-20% அதிகரிக்கும்.
3. பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத சத்துக்கள் அதிகரிக்கிறது.
4. கோழிக்கும், வாத்திற்கும் தீவனமாக பயன்படுத்தலாம். அதிக எடை கிடைக்கும்.
5. உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றியின் எடை கூடுவதுடன் இறைச்சி தன்மையும் நன்றாக இருக்கும்.
6. முயல்கள் அசோலாவை விரும்பி உண்ணும்.
7. அசோலா வளர்க்கும் இடத்தில் கொசுத் தொல்லை இருக்காது.


வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்
1. தண்ணீர்:
அசோலாவனது தண்ணீர் ஊற்றி வறண்டுவிட்டால் உடனே இறந்து விடுகிறது.

2. ஈரப்பதம்:
காற்றின் ஈரப்பதம் 85-90% இருக்கும்போது அசோலா நன்கு வளர்கிறது. ஈரப்பதம் 60%ற்கு குறையும்போது வறண்டு இறந்துவிடுகின்றது.

3. சூரிய ஒளி:
கோடைக் காலங்களில் பகல் நேரங்களிலுள்ள அதிக சூரிய ஒளி அசோலாவை பழுப்பு நிறமாக மாற்றிவிடுகின்றது.

4. காற்று:
வேகமாக வீசும் காற்றானது பாத்திகளிலுள்ள அசோலாவை ஒரு பக்கமாகக் கொண்டு சேர்த்துவிடும். இதனால் அசோலாவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

5. மண்ணின் கார அமிலத் தன்மை:
காரத் தன்மையுள்ள மண்ணில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துக்களுக்கு ஏற்ப அசோலாவின் வளர்ச்சி மாறுபடுகின்றது.



கால்நடை, கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா
அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன் மூலம் நல்ல உற்பத்தி பெறலாம்.

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் க. சுப்பிரமணியன் மற்றும் உதவிப் பேராசிரியர் வெ. தனுஷ்கோடி கூறியது: "அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதை விவசாயிகள் உயிர் உரமாக நெல் வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது.

அசோலா உற்பத்தி முறைகள்: நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ. அளவுக்கு மண் இட்டு சமப்படுத்தவும். இதன்மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ அசோலா தாய் வித்து இடவேண்டும். நாள்தோறும் காலை அல்லது மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும்.

15 நாள்களில் ஒரு பாத்தியில் (10ஷ் 2ஷ் 1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தாயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாள்களுக்கு 1 முறை பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகள் அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.


அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது கால்நடைகள் அவற்றை உண்பதற்கு தயக்கம் காட்டலாம். ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் தவிடு, புண்ணாக்கு அல்லது பிற அடர் தீவனத்துடன் கலந்து மாடுகளுக்குத் தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும்.

அசோலாவின் பயன்கள்: அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.

அதிசயம் தந்த அசோலா
அசோலாவில் புரதம், அமினோ அமிலம், கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன. அசோலாவில் காய்ந்த நிலையில் 30 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் 20 சதம் அமினோ அமிலம் உள்ளதால் கால்நடைகளுக்கு செரிமானச் சக்தி தருகிறது.

விளைநிலங்களுக்கு: அண்டை மற்றும் மேலை நாடுகளில் நெல் விளையும் பகுதிகளில் அசோலாவையும் பயன்படுத்தி தழைச்சத்தை நிலைப்படுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். நஞ்சை நிலத்தில் விளையும் நெல்லுக்கு அசோலா உயிர் உரமாக பயன்படுகிறது. இது ஒரு ஏக்கருக்கு 3-4 கிலோ வரை தழைச்சத்தை தரும். இது காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து நெற்பயிர்களுக்கு கொடுக்கும். வயல்களில் களை வளராது. மேலும் யூரியாவினால் எந்த அளவு பயன் உண்டோ அந்த அளவிற்கு பயன் உண்டு. மேலும் மற்ற உரங்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக அசோலா பயன்படுத்துவதன் மூலம் இயற்கை நெல் உற்பத்தி செய்வதுடன் மண்வளமும் பாதுகாக்கப்படும்.

இனிவரும் காலங்களில் இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு அதிகம் விலை கிடைக்கும். மேலும் சப்போட்டா, மாதுளை செடிகளுக்கும் அடி உரமாக அசோலாவைப் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது அதிகப் படியான மகசூல் கிடைக்கும். மேலும் விளைச்சல் பல மடங்கு பெருகும்.

ஆக நெல் விவசாயிகள் மற்றும் பழவகை உற்பத்தியாளர்கள் செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரமான அசோலாவை பயன்படுத்தலாம். இது எல்லா வகையிலும் பயன்படுவதாக அமையும். செலவுகுறைவு. மண்வளம் காத்தல் போன்றவயாகும்.

கால்நடைகளுக்கு: மீன்: மீன் பண்ணைகள் இப்பொழுது பலர் வைத்துள்ளனர். அசோலா அங்கும் பெரும்பங்கு வகிக்கின்றன. மீன் குஞ்சு விட்ட 35 நாட்களுக்கு மேல் 1000 குஞ்சுகளுக்கு தினமும் 2 கிலோ வரை பரவலாக தூவ வேண்டும். இதில் கெண்டை வகை மீன்கள் 100 நாட்களைத் தாண்டும்பொழுது முக்கால் முதல் ஒரு கிலோ வரை எடைகூடும்.

முயல், பன்றி: முயல் பண்ணை வைத்திருப் பவர்களும் அசோலாவைப் பயன்படுத்தலாம். இதனால் பசுந்தீவன பிரச்னை தீரும். ஒரு முயலுக்கு 75-100 கிராம் வரை தரலாம். இதனால் அதிக ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு உதவியாய் இருக்கும். பன்றிகளுக்கு தரும்பொழுது அதிக எடை தரக்கூடியதாக இருக்கும். அதிக லாபம் பெற முடியும்.


மாடு, ஆடு, கோழி: மாடுகளுக்கு அசோலா தினமும் ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை கொடுக்கலாம். அதனால் அதிகப்படியான பால் கிடைக்கும். மாடுகள் அதிகம் ஆரோக்கியமாக இருக்கும். தவிடு மற்றும் வைக்கோலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக 40 சதவீதம் அசோலா பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தி செலவு குறைவு. பொருட்செலவு கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக லாபம் கிடைக்கும். செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பவர்கள் அசோலாவைப் பயன்படுத்து வதன்மூலம் அதிகப்படியான வளர்ச்சி மற்றும் அதிக எடை கிடைக்கும். கோழிகளுக்கு கொடுக்கும்போது முட்டை அதிக எடை கிடைக்கக்கூடும்.

மனிதர்களுக்கு: மனித வாழ்வின் மாற்றத்தை தரப்போகும் அசோலா கால்நடைகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் இதை ஒரு வகை கீரை எனக்கூறலாம். (பெரணி) மேலும் வைரஸ் காய்ச்சல்களை பரப்பும் கொசுக்களை அழிக்கும். இதை வீடுகளில் கூட சிறிய அளவில் வளர்க்கலாம்.


வளர்க்கும் முறை: 2 மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம் கொண்ட சில்பாலிதீன் கவர். அதை ஒரு அரை அடி உயரம் கொண்ட பாத்திபோல் அமைத்து அதில் சலித்த செம்மண் ஒரு இஞ்ச் அளவிற்கு சம அளவில் பரப்ப வேண்டும். மேலும் 3 இஞ்ச் அளவிற்கு நீர் நிரப்பி அதில் 10 கிலோ பசுஞ்சாணம் நன்கு கரைத்து விடவேண்டும். பிறகு அசோலா விதைகளை அதில் தூவ வேண்டும். இது 6-7 நாட்களில் அந்த பாத்தி முழுவதுமாக வளர்ந்துவிடும். நமது தேவைக்கேற்ப பாத்திகள் அமைக்கலாம்.

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete