Thursday, March 12, 2015

மஞ்சள் நாற்று நடவு

பொதுவாக மஞ்சள் பயிர் கிழங்கின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மஞ்சள் நடவிற்கு விரலி, குண்டு மஞ்சள் பயன்படுகிறது.
விதை மஞ்சள் 25 முதல் 30 கிராமிற்கு குறையாமலும் 3 முதல் 4 பரு கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

ஒரு எக்டருக்கு 2000 முதல் 2500 கிலோ விதைமஞ்சள் தேவைப்படுகிறது.

பவானி சாகரிலுள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விதை கிழங்கிற்குபதிலாக மஞ்சள் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

மஞ்சள் நாற்றை நாம் விதை கிழங்கின் மூலம் சாகுபடி செய்வதைப்போல் சாகுபடி செய்யலாம்.

ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 500 கிலோ மஞ்சள் போதுமானது.



ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 55,000 முதல் 60,000 நாற்றுகள் தேவைப்படுகிறது.

விதைக்கிழங்கினை பயன்படுத்தும்போது 80 சதவீதம்தான் முளைப்புத்திறன் இருக்கும். ஆனால் நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்துவதால் 98 சதவீதம் பயிர்கள் முளைத்திருக்கும்.
நாறறுக்கள் நட்ட 2ம் மாதத்திலேயே கிழங்கு உருவாக ஆரம்பித்துவிடும்.

8ம் மாதத்தில் நன்கு திரட்சியடைந்து 5 முதல் 6 தூர்கள் கொண்ட கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.

மிதமான அளவுக்கு நோய், பூச்சி தாக்குதல் இருக்கும். பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது தகுந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

விதைக்கிழங்கு பயிரிட்டு கிடைக்கும் மகசூலைவிட அதிகபட்சமாக 50 சதவீதம் வரை நாற்றுக்கள் நடுவதன் மூலம் பெறலாம்.
(தகவல்: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்-638 451, போன்: 04295240244). மஞ்சளில் ஒருங்கியணைந்த பயிர் பாதுகாப்பு

செதில் பூச்சி :
இவை மஞ்சளின் கிழங்குப் பகுதியினைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும்.இதனால் கிழங்குகள் சுருங்கி, பின் காய்ந்துவிடும்.

இதனைக் கட்டுப்படுத்த பாசலோன் 1.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் கரைசலில் 15 நிமிடம் ஊறவைத்து, கிழங்குகளை நடவு செய்யவேண்டும்.

செதில் பூச்சியால் பாதிக்கப்படும் சேனைக்கிழங்கு போன்ற பயிர்களை மஞ்சள் பயிரிடும் நிலத்தில் பயிர் செய்யக்கூடாது.

நடவு செய்யப்பட்ட வயலில் செதில் பூச்சிகளை ஒழிக்க டைமீதோயேட் (ரோகார்) 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த வேர்ப்பாகம் நனையும்படி ஊற்றவேண்டும்.

தண்டுத் துளைப்பான் :

இவை தண்டு, கிழங்குப் பகுதியினைத் துளைத்து செல்வதால் நடுக்குருத்து காய்ந்துவிடும்.
இதனைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 0.1 சதம் தெளிக்கவேண்டும்.

தண்டுத் துளைப்பான் விரும்பி உண்ணும் ஆமணக்கு, மாதுளை, பலா, இஞ்சி போன்றவை மஞ்சள் தோட்டத்திற்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இலைப்பேன் :

இலைகளில் சாறை உறிஞ்சி பயிர்களை வாடச்செய்யும்.

மெட்டாசிஸ்டாக்ஸ் மற்றும் டைமெத்ரான் 750 மில்லி , தெளிப்பதன் மூலம் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.

நூற்புழு :

செம்மண் கலந்து மணற்பாங்கான இடங்களில் நூற்புழு தாக்குதல் தென்படும்.

இவை மஞ்சளைத் தவிர புகையிலை, மிளகாய், கத்தரி, வாழை, கானகாம்பரம் ஆகிய பயிர்களைத் தாக்கும். எனவே இவற்றை ஊடுபயிராகப் பயிரிடுவதைத் தவிர்க்கவேண்டும்.

செண்டு மல்லியை ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.

நூற்புழுத் தாக்குதலைக் குறைக்க ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும். மீண்டும் யூரியா இடும்போது 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும்.

நட்ட 5வது மாதத்தில் ஒரு எக்டருக்கு 35 கிலோ கார்போபியூரான் குறுணையை செடியைச் சுற்றி 2-3 செ.மீ ஓரத்தில் இடவெண்டும். பின்பு மணல் கொண்டு மூடி நீர்ப்பாய்ச்சவேண்டும். மஞ்சளில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு.

வணிக ரீதியான பயிரில் மஞ்சள் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மஞ்சள் பயிரில் ஏற்படும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மஞ்சள் மகசூல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் .சங்கீதா, மஞ்சள் பயிரில் ஏற்பட்டுள்ள நுண்ணூட்டச் சத்து குறைபாடு, அவற்றை நிவர்த்தி செய்வது குறித்து கூறியது:
ஓர் ஏக்கரில் சராசரியாக 2 முதல் 2.5 டன் உலர் மஞ்சள் கிழங்கு மகசூல் கிடைக்கும்.

சரியான உர மேலாண்மை, பயிர் வளர்ச்சிப் பருவத்தில் சரியான நீர்ப்பாசன முறைகளைப் பின்பற்றாததால் மஞ்சள் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

பொதுவாக மஞ்சள் பயிரானது மேலோட்டமான வேர் அமைப்பு கொண்டிருந்தாலும், நீண்ட காலப் பயிராக சாகுபடி செய்வதாலும், மிகக் குறைந்த இடத்தில் அதிக அளவு உலர் பொருளை உற்பத்தி செய்யக்கூடிய பயிராக இருப்பதாலும் மண்ணிலிருந்து அதிக சத்துக்களை எடுத்துக் கொள்கிறது.

மேலும், மற்ற பயிர்களைக் காட்டிலும் மஞ்சள் பயிருக்கு உரத் தேவை அதிகம். எந்தவொரு பயிரும் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்க பல்வேறு வளர்ச்சி நிலைகளில் மொத்தம் 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகின்றன.

பயிரின் வளர்ச்சிக்கு அதிகளவில் தேவைப்படும் பேரூட்டச் சத்துக்களான கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், தழை, மணி, சாம்பல், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகச் சத்து மற்றும் மிகக் குறைந்த அளவில் தேவைப்படுக் கூடிய நுண்ணூட்டச் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம், போரான், குளோரின் ஆகியவை தேவை.

தற்போதைய காலகட்டத்தில் அனைத்து வகையான பயிர்களிலும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு அதிக அளவில் காணப்படுகின்றன.

இதற்கு மிக முக்கியக் காரணங்கள் நவீன விவசாய முறையில் பின்பற்றக் கூடிய தீவிர சாகுபடி முறை, அதிக விளைச்சல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரகங்களைப் பயன்படுத்துதல், போதுமான அளவு இயற்கை உரம் அல்லது தொழுவுரம் இடாமை, தொடர்ந்து பேரூட்டங்களை மட்டுமே தரக்கூடிய ரசாயன உரங்களைப் பயன்படுத்துதல், பயிரின் வளர்ச்சி பருவம், காலநிலை மாற்றம் ஆகியவை ஆகும்.

இவற்றால் மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்காததால் பயிரில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான அறிகுறிகள் அதிகளவில் தோன்றுகின்றன.

தற்போது தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள் பயிரில் பரவலாக இரும்பு, துத்தநாக நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாட்டுக்கான அறிகுறிகள் அதிகளவில் தென்படுகின்றன.

எனவே, விவசாயிகள் இந்த நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடு அறிகுறிகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் அதிக மகசூலைப் பெறலாம்.

துத்தநாக சத்து: துத்தநாக சத்துக் குறைபாடு மண்ணின் அமில கார நிலை 7-க்கு மேல் உள்ள நிலங்களிலும் அதாவது களர் நிலங்களிலும், களிமண் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள நிலங்களிலும் அதிகமாகக் காணப்படும்.

மேலும், இந்தச் சத்து குறைபாடானது தண்ணீர் பற்றாக்குறை அதிகமுள்ள காலங்களில் பரவலாகக் காணப்படும்.

இதனால், பயிர்கள் வளர்ச்சி குன்றி, குட்டையாகக் காணப்படும். இலைகள் அளவில் சிறியதாகவும், கணுவிடைப் பகுதியின் நீளம் குறுகியும் காணப்படும்.

மேலும், இளம் இலைகள் மஞ்சள் நிறமாக தோற்றமளிக்கும். இலைகள் மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ வளைந்து காணப்படும்.

நிவர்த்தி முறை:

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை அதாவது 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில், 10 நாள்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரை தொடர்ந்து இலைகள் மீது தெளிக்க வேண்டும்.

அடுத்த சாகுபடி செய்யும் பயிர்களில் துத்தநாக சத்து குறைபாடு வராமல் தடுக்க ஹெக்டேருக்கு 15 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், இதை ஊட்டமேற்றிய தொழுவுரமாக 1:1 என்ற விகிதத்தில் கலந்து மிதமான ஈரப்பதத்தில் 20-25 நாள்கள் வைத்திருந்து பயிருக்கு இடுவதன் மூலம் உரப் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.

இரும்புச் சத்து:

இரும்புச் சத்து குறைபாடானது மணல் பாங்கான நிலங்கள், சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள நிலங்கள், களர் உவர் நிலங்களில் அதிகமாகக் காணப்படும்.

இந்த சத்துக் குறைபாட்டால் புதியதாக வெளிவரும் துளிர்கள் வெளுத்து மஞ்சள் அல்லது வெள்ளை நிறமாக மாறிவிடும்.

இலைகளின் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் வெளிறியும், இலைகள் நரம்புகள் பச்சை நிறமாகவும் காணப்படும்.

இந்த குறைபாடு அதிகமுள்ள நிலங்களில் மஞ்சள் பயிரானது வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும்.

நிவர்த்தி முறை:

இரும்புச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய 0.5 சத இரும்பு சல்பேட் கரைசலை அதாவது, 5 கிராம் இரும்பு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து மாலை நேரங்களில் இலைகளின் மீது நன்றாகபடும்படி தெளிக்க வேண்டும்.

இவ்வாறு 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். மேலும், அடுத்தமுறை பயிர் செய்யும்போது இத்தகைய குறைபாடு தோன்றுவதைத் தவிர்க்க ஹெக்டேருக்கு 30 கிலோ இரும்பு சல்பேட் உரத்தை அடியுரமாக இடவேண்டும் என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு நா.தமிழ்செல்வன், பேராசிரியர் மற்றும் தலைவர் வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது 04342245860 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மஞ்சளில் நோய் மேலாண்மை

தமிழகத்தில் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முக்கியப் பயிராக மஞ்சள் விளங்குகிறது.
பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள் மஞ்சளைப் பரவலாகத் தாக்குகின்றன. பூஞ்சாண நோய்களில் இலைப்புள்ளி, செந்நிற இலைக் கருகல் நோய், வேர் அழுகல் நோய்கள் மஞ்சள் பயிரைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நோய்களின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையப் பயிர் நோயியல் துறை உதவிப் பேராசியர் கி.கல்பனா கூறுவது:
இலைப்புள்ளி நோய்:
கொலிட்ரோடிரைக்கம் கேப்சைசி என்ற பூஞ்சணத்தால் உருவாக்கப்படும் இலைப்புள்ளி நோய், தென் இந்தியப் பகுதிகளில் தீவிரமாகக் காணப்படுகிறது.

பயிர் நட்ட 40-45 நாள்களுக்குப் பிறகு தோன்றும் இந்த நோய், ஈரமான பருவ நிலையில் தீவிரமாகப் பரவுகிறது.

கருமை நிறவளையங்களை உள்புறமாகக் கொண்ட பழுப்பு நிற புள்ளிகள், இலையின் மேல் பரப்பில் காணப்படும். இளம் மற்றும் முதிர்ச்சியடைந்த செடிகளில் வெவ்வேறு அளவுகளில் புள்ளிகள் காணப்படும். முதலில் சாம்பல் நிற உள்புறத்தைக் கொண்ட நீள வடிவப் புள்ளிகளாகத் தோன்றும்.

ஓர் இலையின் எண்ணற்ற புள்ளிகள் தோன்றி நோயின் தீவிரம் அதிமாகும் போது புள்ளிகள் விரிந்து இலையின் முழுப் பரப்பையும் கரும்புள்ளிகளாக ஆக்கிரமித்துக் கொள்கிறது.

தீவிரமாகத் தாக்கப்பட்ட இலைகள் காய்ந்து வாடிவிடுகின்றன.மழைக் காலங்களில் இந்த நோய் தீவிரமாகப் பரவுகிறது.

இந்த நோய் கிழங்குகளின் மகசூலில் 60 சதம் வரை இழப்பை ஏற்படுத்துகிறது.

செந்நிற இலைக் கருகல் நோய்:

செந்நிற இலைக் கருகள் நோயின் தாக்கம் தற்சமயம் மஞ்சள் சாகுபடி செய்துள்ள இடங்களில் பெருமளவு காணப்படுகிறது.

இந்த நோய் டாப்பரினா மேக்கிலன்ஸ் என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் முதிர்ந்த இலைகளில் முதலில் காணப்படும்.

இலை ஓரங்களில் பழுப்பு நிறத்தில் காயத் தொடங்கும். பின்னர் இலையின் மைய நரம்பு நோக்கி பரவும், தீவிரமாகத் தாக்கப்பட்ட செடி வளர்ச்சி குன்றி, சிறுத்துக் காணப்படும். இதனால், மஞ்சளின் தரம் பெருமளவு பாதிக்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

இலைப்புள்ளி மற்றும் செந்நிற இலைக் கருகல் நோய்களைந்ப்க் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றி எரிக்கவும்.

சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவை 0.5 சதம் கரைசலை நடவுக்கு பின் 45 நாள்கள் கழித்து 30 நாள்கள் இடைவெளியில் மூன்று () நான்கு முறை இலைகளின் மேல் பகுதியில் தெளிக்க வேண்டும்.

ரசாயன பூஞ்சாண கொல்லிகளான கார்பண்டாசித்துடன் மேங்கோசெப் 2 கிராம் () கேப்டானுடன் ஹெக்ஸகொனசோல் 2 கிராம் () பென்கொனசோல் 1.5 மில்லி () குளோரோதலோனில் 2 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஒட்டும் திரவம் சேர்த்து இலைகளின் மேல் தெளித்து இலைப்புள்ளி மற்றும் செந்நிற இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

கிழங்கு அழுகல் நோய்:

கிழங்கு அழுகல் நோய் பித்தியம் அபானிடெர்மேட்டம் என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் இலை, தண்டு, கரணைகளில் அதிகளவு காணப்படும்.

முதலில் இந்த நோய் தாக்கிய இலை ஒரங்கள் காய்ந்து பின்பு நடு நரம்பு காய்ந்துவிடும். செடி மேலிருந்து கீழாக காயத் தொடங்கும். தரையை ஓட்டிய தண்டுப் பகுதி வலுவிழந்து காணப்படும்.

மஞ்சள் கிழங்கு அழுகி உருக்குலைந்து பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனால், அதிக மகசூல் இழப்பு ஏற்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

ஒரு ஹெக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவை மற்றும் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா பூஞ்சாணம் துகள் கலவையை 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடலாம்.

சூடோமோனாஸ் பாக்டீரியா துகள் கலவையை 0.5 சதம் கரைசலை 30 நாள்கள் இடைவெளியில் மூன்று அல்லது நான்கு முறை செடியின் தண்டுப் பகுதி மற்றும் செடியை சுற்றியுள்ள மண் நனையும் படி ஊற்றுவதால் கிழங்கு அழுகல் நோய் பெருமளவு குறையும்.

இந்த உயிரியல் கட்டுப்பாட்டு முறையைப் பயன்படுத்துவதால் மஞ்சளில் நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகம் பெறலாம். மஞ்சள் செடிகளை பாதுகாக்க ஊடுபயிராக ஆமணக்கு.

கள்ளக்குறிச்சியில் மஞ்சள் பயிரின் பாதுகாப்பிற்கு ஆமணக்கு செடிகளை ஊடுபயிராக பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கள்ளக்குறிச்சி பகுதி கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இவைகளை பாதுகாக்க நோய் தாக்குதலை முன்கூட்டியே அறிவிக்கும் தன்மை கொண்ட ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் ஊடு பயிராக வளர்த்து வருகின்றனர்.

10 மாத பயிரான மஞ்சள் செடிகளை விதைத்த மூன்றாவது மாதம் முதல் ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் நடுகின்றனர்.

இதன் மூலம் மஞ்சள் பயிரைத்தாக்கும் படைப்புழுவின் தொற்று முதலிலேயே ஆமணக்கு செடிகளின் இலைகள் மூலம் விவசாயிகள் தெரிந்து கொள்கின்றனர்.

பூச்சி மருந்து தெளித்து இரு பயிர்களையும் விவசாயிகள் பாதுகாக்கின்றனர்.

6 மாத பயிரான ஆமணக்கு செடிகள் மூலம் விளக்கெண்ணெய் தயாரிக்க உதவும் ஆமணக்கு கிடைக்கிறது.
ஊடுபயிராக ஒரு ஏக்கர் அளவில் நடப்படும் ஆமணக்கு செடிகள் மூலம் 200 கிலோ ஆமணக்கு கிடைக்கும்.
இதனால் கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் மஞ்சள் பயிருடன் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மஞ்சளில் ஊடுபயிராக செங்கீரை

மஞ்சள் சாகுபடிக்கு உரம் வாங்க ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்து, ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எண்ணத்தில், ஈரோடு மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அதிகளவு மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். கடந்தாண்டில் இருந்தே மஞ்சள் விலை திடீரென கடும் விலைச்சரிவு ஏற்பட்டது.
விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மஞ்சள் பயிருடன் ஊடுபயிரமாக பல்வேறு தானியங்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
வெள்ளோடு, கனகபுரம், டி. மேட்டுப்பாளையம் பகுதியில் மஞ்சளுடன் ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்துள்ளனர்.
டி.மேட்டுப்பாளையம் விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:
மஞ்சள் பத்து மாத பயிர். மஞ்சள் விலை நிலையில்லாமல் சரிவை சந்தித்துள்ளது.

இதன் காரணமாக மஞ்சளுடன் ஊடுபயிராக செங்கீரை சாகுபடி செய்துள்ளேன்.

செங்கீரை மூன்று மாத பயிர். வேப்பம் புண்ணாக்கு, காம்ப்ளக்ஸ் உரம், உப்பு ஆகியவை இடுகிறோம்.

30 நாளில் அறுவடையாகும் கீரையை ஈரோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வோம். கட்டு 1.50 ரூபாய் வரை விலைபோகிறது.

மஞ்சளுடன் கீரை சாகுபடி செய்வது கைச்செலவுக்கு பெரிதும் உதவுகிறது.இவ்வாறு அவர் கூறினார். மஞ்சளுக்கு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி.

மஞ்சள் விலை வீழ்ச்சியால், கோபி சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு மஞ்சள் பரப்பளவு குறைந்துள்ளது.
பருவமழை ஏமாற்றம் மற்றும் மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைக்காததால், விவசாயிகள் மஞ்சளை பயிரிடாமல் இருந்தனர்.

மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டால், ஓரளவுக்கு லாபம் கிடைப்பதால், கோபி சுற்று வட்டாரத்தில் மஞ்சள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

தடப்பள்ளி பாசனப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

கோபி சுற்று வட்டாரத்தில் அதிகளவில் கரும்பு, மஞ்சள், நெல் பயிரிடப்படுகிறது.

சென்ற, 2009ம் ஆண்டில் ஏற்பட்ட மஞ்சள் விலை உயர்வு காரணமாக, கரும்பு விவசாயிகள் பலரும், மஞ்சளுக்கு மாறினர்.

மஞ்சள் விலை தொடர்ந்து சரி வடைந்ததால், மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.

மஞ்சள் விலையை, விவசாயிகளே நிர்ணயம் செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத போதிலும், மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

வெங்காயத்தின் விலை நன்றாக இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படவாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார். மஞ்சளுடன் ஊடுபயிராய் மிளகாய்.

மஞ்சளுக்கு ஊடுபயிராய் மிளகாய் பயிரிடுவதில் பவானிசாகர் பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பவானிசாகர் பகுதியில் கொத்தமங்கலம், ராஜன் நகர், பசுவபாளையம், புங்கார், தொட்டம்பாளையம், எரங்காட்டூர் பகுதி விவசாயிகள் மஞ்சளுடன் ஊடுபயிராய் மிளகாய் பயிரிட்டுள்ளனர். மஞ்சள் பத்து மாதப்பயிர்.

வைகாசி மாதம் நடவை துவங்கி மாசி மாதம் அறுவடை முடியும். ஒரு ஏக்கருக்கு மஞ்சள் பயிரிட 750-800 கிலோ விதை மஞ்சள் தேவைப்படுகிறது.

ஒரு கிலோ விதை மஞ்சள் 30-40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

வெட்டுக்கூலியோடு சேர்த்து ஏக்கருக்கு நடவு செலவு ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு 15-20 டன் வரை அறுவடை கிடைக்கிறது.

சென்றாண்டு மஞ்சள் விலை உச்சியை தொட்டதையடுத்து இம்முறை மஞ்சள் சாகுபடி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மஞ்சள் விளைவிப்பதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும் என்று விவசாயிகள் நம்பி பெருமளவில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர்.

மஞ்சளுடன் ஊடுபயிராக வெங்காயத்தைதான் பெரும்பாலான விவசாயிகள் பயிரிடுவது வழக்கம்.

ஆனால், பவானிசாகர் பகுதி விவசாயிகள் மஞ்சளுக்கு ஊடுபயிராக மிளகாயை பயிரிட்டுள்ளனர். மிளகாய் பயிரிடுவதால் விளைச்சல் அதிகரிப்பதோடு, லாபமும் பெருகுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மஞ்சள் அறுவடைக்கு பின் தொழில்நுட்பம்.

மஞ்சள் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து தர்மபுரி வேளாண் துணை இயக்குனர் (பொ) நாகராஜன் அறிவுரை வழங்கியுளார்.
மஞ்சள் நல்ல வருவாய் தரக்கூடிய பணப்பயிராகும் என்பதால் மஞ்சள் அறுவடைக்குப் பின் வேளாண் தொழில் நுட்ப நேர்த்திகளை கடைபிடிக்க வேண்டும்.

மஞ்சள் சுமார் ஒன்பது முதல் 10 மாதங்களில் அறுவடைக்கு வரும் பயிர்.

இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, காய்ந்து விழும்போது பயிர் முதிர்ச்சியை தெரிந்து கொள்ளலாம்.

மஞ்சள் பயிரின் தண்டை 10 நாட்களுக்கு முன்பாக தரையில் மேல் மட்டத்தில் 10 செ.மீ., விட்டு அறுக்க வேண்டும்.

இதனால் மஞ்சளின் ஈரப்பதம் குறைவதுடன் விரைவில் முதிர்ச்சி அடையும்.

மஞ்சள் கொத்து என்ற கருவியை பயன்படுத்தி மஞ்சளை கொத்தி எடுத்த பின் நேர்த்தியாக பதப்படுத்த வேண்டும்.

ஈர மஞ்சளில் ஐந்தில் ஒரு பகுதி பதப்படுத்திய மஞ்சளாக கிடைக்கும்.

பச்சையான மஞ்சளை சுத்தமான நீரில் வேக வைக்கும் போது மஞ்சள் வாசனை வைத்து மஞ்சள் வெந்து விட்டதை அறியலாம்.

விரல் வைத்து மஞ்சளை அழித்தி வெந்து விட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

மஞ்சள் சரியாக வேகவில்லையென்றால் காயவைக்கும் போது சிறு சிறு துண்டுகளாக உடையும்.

வேகவைத்த மஞ்சளை வெயிலில் ஏழு செ.மீ., உயரத்திற்கு பரப்பி 15 நாட்கள் வரை உலர விட வேண்டும்.

விரலி மஞ்சள் இலகுவாக முறிய கூடாது. காயவைக்கப்பட்ட மஞ்சளில் சிறு, சிறு வேர்களும் செதில்களும் கலந்து இருந்தால் அதனை சுத்தப்படுத்த வேண்டும்.

மஞ்சள் மெருகேற்றுவது மிகவும் அவசியம். மெருகேற்றும் கருவியைக் கொண்டு மஞ்சள் மெருகேற்ற வேண்டும்.

மஞ்சளுக்கு நிறமேற்றுவது மிகவும் அவசியம். 100 கிலோ மஞ்சளை மெருகேற்ற படிகாரம் 40 கிராம், மஞ்சள் தூள் இரண்டு கிலோ, ஆமணக்கு எண்ணெய் 140 கிராம், சோடியம் பை சல்பேட் 30 கிராம் ஹைட்ரோ குளோரிக் அமிலம் 30 மில்லி சேர்த்து தயாரிக்கப்பட்ட கரைசலை கொண்டு நிறம் ஏற்றலாம்.

மஞ்சள் கொடியுடன் ஆல்கஹால் சேர்த்து கரைசல் தயாரித்து மஞ்சளுக்கு நிறம் ஏற்றலாம்.
மஞ்சளை தரம் பிரிப்பதன் மூலம் நல்ல லாபம் பெறலாம்.



No comments:

Post a Comment