Friday, March 27, 2015

எருமை மாட்டின் பால் உற்பத்தி (Erumai Maattin Paal Urpathi) - Livestock Buffalo Milking

பால் கறக்கும் காலமும் அளவும்
எருமையானது கன்ற ஈன்றவுடன் பால் கறக்க ஆரம்பிக்கிறது. முதல் ஓரிரு வாரங்களில் கறக்கும் பாலிலிருந்து அந்த எருமையின் பாலின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.  5-6 வாரங்களில் அதிக அளவு பால் தரும். இந்த அளவு சில வாரங்களில் வரை தொடர்ந்து பின் குறைய ஆரம்பிக்கும். பின்பு கறவையின் பால் வற்ற ஆரம்பித்துவிடும்.

எருமைகள் நான்காவது கன்று ஈனும் போது அதன் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். பின்பு குறைந்து விடும். பால் கறக்கும் கால அளவு தீவனம், பராமரிப்பு, பால் கறக்கும் இடைவெளி, நோய்த்தாக்கம் போன்ற காரணிகளைப் பொறுத்தது. பல்வேறு இன எருமைகளின் பால் உற்பத்திக் காலம் அட்டவணை 10ல் கொடுக்கப்பட்டுள்ளது. முர்ரா இன எருமைகளில் பால் உற்பத்திக் காலம் 262-295 நாட்கள் வரை ஆகும்.


எருமையில் பால் கறத்தல்

பால் உற்பத்தியானது மரபியல் மற்றும் இதர பிற காரணிகளைச் சார்ந்துள்ளது. மரபியல் காரணிகளான இனங்கள், இனப்பொருக்கத் திறன், சினையாகும் திறன், அடுத்தடுத்த கன்று ஈனும் இடைவெளி போன்றவற்றைச் சாாந்து வேறுபடுகிறது. மேலும் இவை தவிர பராமரிப்பு, தீவனத்தின் தரம், அளவு, வளர்ப்பாளரின் சூட்டைக் கண்டு சினைப்படுத்தும் திறன் போன்றவற்றவைப் பொறுத்தும் பால் உற்பத்தி அளவும், காலமும் வேறுபடுகிறது.

தேவையான அளவு ஆற்றல், புரதம், தாதுக்கள், நீர் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ள தீவனம் முறையாக அளிக்கப்படவேண்டும். அதே போல் எருமைகளில் எந்த அளவு கன்று ஈனும் இடைவெளி உள்ளதோ, அந்த அளவு பால் கறக்கும் காலமும், அளவும் அதிகமாக இருக்கும். எனினும் மொத்தம் ஈனும் கன்றுகளின் அளவு குறைவாக இருக்கும்.

பால் கறக்கும் இடைவெளி பால் அளவு மற்றும் தன்மையைப் பாதிக்கும். முர்ரா இன எருமைகளில் நாளொன்றுக்கு இரு முறை பால் கறப்பதை விட 3 முறை கறக்கும் போது பாலின் அளவு 31 சதவிகிதமும், பால் கொழுப்புச் சத்தின் அளவு 26 சதவிகிதமும் அதிகமாக கிடைக்கிறது.

பால் வற்றிய காலம்


எருமைகளில் 2-3 மாதங்கள் அடுத்த கன்று ஈனும் முன்பு பால் வற்றிவிடும். அந்த இடைவெளியில் மடிக்கு ஓய்வு கொடுத்து புண்பட்ட செல் மற்றும் திசுக்களை புதுப்பித்துக் கொள்ளும்.



அதிக பால் உற்பத்தி கொண்ட எருமை மந்தைகளில் (நாளொன்றுக்கு  10 கி.கி அதிகமாக) அடுத்த கன்று ஈனுவதற்கு 3 மாதங்கள் முன்பே பால் அளவு நாளொன்றுக்கு 2.5 கி.கி குறைந்து பின்பு வற்றிவிடும். இது போன்று வற்றும் கறவையில் புதிதாக பிறந்த சில கன்றுகளை ஊட்டச் செய்யலாம். ஒரு எருமையில் பிறந்து சில வாரங்களான 1 அல்லது 2 கன்றுகளை ஊட்டச்செய்யலாம்.


எருமைப்பாலில் உள்ள முக்கிய நுண்ணுட்டச் சத்துக்கள்
முக்கிய நுண்ணூட்டச் சத்துக்கள்


சோடியம்
750
317
பொட்டாசியம்
1390
908
கால்சியம்
2030
1880
மெக்னீசியம்
200
91.9
இரும்பு
-
0.325
பாஸ்பரஸ்
1290
-
ஜிங்க்
-
626
தாமிரம்
-
0.303

சீம்பாலின் சத்துக்கள்
கன்று ஈன்ற முதல் மூன்று நாட்களில் எருமையானது சீம்பாலைச் சுரக்கும். இதில் கன்றுக்கு அவசியமான இம்யூனோ குளோபுலின் நோய் எதிர்ப்பொருளும், சாதாரண பாலில் உள்ளதை விட தாமிரம், இரும்புச்சத்துக்கள் அதிக அளவிலும் உள்ளன.


அட்டவணை 2 சீம்பாலின் ஊட்டச்சத்துக்கள்
நீர் (சதவீதம்)
கொழுப்பு (சதவீதம்)
மொத்த புரதம் (சதவீதம்)
லேக்டோஸ்
(சதவீதம்)
விட்டமின் எ மைக்ரோ கிராம் / கி.கி
68
15
13.6
3.1
-
73
9.55
9.59
7.54
1.8

பாலின் தன்மை மாறுதல்
பாலின் தன்மை பால் பீய்ச்சும் முன்போ, அல்லது எருமையின் மடியிலேயே மாறலாம். பாலானது பீய்ச்சும் போதே தன்மை மாறி இருந்தால், அது ஏதேனும் நோய்த்தாக்கம் அல்லது நோயைக் குணப்படுத்த அளித்த மருந்தின் ஒவ்வாமையாக இருக்கலாம். சில சமயங்களில் சூழ்நிலை மாற்றம், தீவன மாற்றம் கூட பாலின் தன்மை மாறக் காரணமாக இருக்கலாம்.


தீவனத்தின் தன்மை
உலர்தீவனங்கள் பால் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். அதே வேளையில் அடர் தீவனங்கள் அதிகமாகக் கொடுத்தால் புரப்பியோனிக் அமிலம் உண்டாகி பாலின் கொழுப்பு அளவைக் குறைக்கும். அதிக நார்ச்சத்துள்ள உலர் தீவனங்களில் அசிட்டிக் அமிலம் சுரப்பதால் தான் பாலின் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது.

அதிக ஆற்றல் உள்ள தீவனங்கள் பாலின் உறையும் (கெட்டி) தன்மையை அதிகரிக்கிறது.


கடுகு எண்ணெய் மற்றும் அக்குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களை கால்நடைகளுக்கு அளிக்கும் போது அதில் உள்ள குளுக்கோஸினேட்ஸ் (Glucosinolates) கால்நடைகளின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளால்

ஹைட்ரோலஸ் (Hydrolize) செய்யப்பட்டு தையோசையனேட், ஐசோ தையோசையனேட் போன்ற பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இப்பொருட்கள் வயிற்றில் அதிகமாகும் போது அதன் பாலை அருந்தும் மனிதர்களுக்கு தைராய்டு வீங்குதல் போன்ற விளைவுகள் ஏற்படுகிறது. எனவே கடுகுத் தாவரங்களையோ அல்லது புண்ணாக்கையோ அதிக அளவில் கால்நடைகளுக்குக் கொடுக்கக்கூடாது.

நோய்களும் மருந்துகளும்
கால்நடை நோய்கள் பால் அளவையும், தன்மையையும் பெரிதும் பாதிக்கின்றன. நோய் எதிர்ப்பொருள் இரசாயனங்கள் கிருமி நாசினிகள் பயன்படுத்தும் போது அவை பாலுடன் கலக்கின்றன. உதாரணமாக டையஸினான் என்ற மருந்தை வெளிப்புற ஒட்டுண்ணிகள் நீக்க பயன்படுத்திய பிறகு 48 மணி நேரம் கழித்து கறந்த பாலில்  அம்மருந்தின் இராசயனத் தன்மை கலந்திருந்தது.

பால் கறத்தல்



பல நூற்றாண்டுகளாக எருமைகள் பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எருமைகளைப் பராமரித்தல் எளிது. மேலும் இதன் பால், மாட்டுப் பாலை விட தரமானது. எருமை மடியின் இயக்கம் மற்றும் உள்ளமைப்பியல் மாடுகளிலிருந்து வேறுபட்டிருப்பதால் பால் கறத்தல் எளிதாகிறது.


எருமைகளின் காம்பு,மடியின் உள்ளமைப்பு மற்றும் உடற்கூறியல்:
எருமையின் மடி கால்நடையின் மடியை ஒத்திருந்தாலும் காம்புகள் அளவில் சற்று பெரியவை. நான்கிற்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் கன்று பிறந்த, ஓரிரு வாரங்களுக்குள் நீக்கிவிடவேண்டும். உருளை வடிவக் காம்புகளே பெரும்பாலும் முர்ரா இன மாடுகளில் காணப்படுகின்றன. முன் இரு காம்புகள் 5-8 செ.மீ, 6.4 செ.மீ வரை நீளமும் அதன் சுற்றளவு 2.5-2.6 செ.மீ வரையும் இருக்கும். இதே போன்று பின் இரு காம்புகளும் 6-9 - 7.8 செ.மீ மற்றும் 2.6 - 2.8 செ.மீ அளவு கொண்டுள்ளன.முன்பக்க மடியை விட பின்பக்கமானது சற்று அளவில் பெரியது. பாலும் இதில் அதிக அளவில் இருக்கும். கால்நடை அளவீட்டின் படி 60:40 என்ற அளவில் பின் மடி மற்றும் முன்மடியில் முறையே பால் அளவு இருக்கும். பால் அதிகம் இருப்பதால் பின்பாகத்தைக் கறந்து முடிக்க அதிக நேரம் ஆகும்.


அதோடு எருமையின் காம்புகளில் பால் வரும் துளையைச் சுற்றியுள்ள தசைகளும், எபிதீலியத் திசுக்களும் சற்று தடிமனானவை. எனவே எருமையில் பால் கறக்க மாட்டை விட சற்று அதிக விசையுடன் அழுத்தவேண்டும். கன்று ஊட்டிய பின்னர் இநத அழுத்தத்தின் அளவு சற்று குறையும். 



மாடுகளில் அல்வியோலை என்ற தொகுக்கப்பட்ட பாலானது குழாய் போன்ற வெளியேற்றும் அமைப்புகளிலும், மெமரி (Memory) சுரப்பிகள் மற்றும் காம்புகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஆனால் எருமைகளில் அவ்வாறில்லாமல் பீய்ச்சும் போது உள்ளிருந்து வெளித்தள்ளப்படுகிறது. சீனாவின் மஞ்சள் மாடுகள் மற்றும் எருதுகளில் இவ்வாறு பாய்ச்சப்படுகிறது.



எருமைகளில் குழாய் அமைப்புகளில் சேகரித்து வைக்கப்படாததால் காம்புகள் பால் கறக்கும் தருணத்தில் தளர்ச்சியாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால் மாடுகளில் அப்படி இருப்பதில்லை.


கால் கறக்கும் முறை
மாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் பால் கறப்பது கடினமான, மெதுவாகச் செய்யக்கூடிய செயலாகும். இதில் காம்புகள் சற்று தடிமனாக இருப்பதால் அதிக அழுத்தம் தேவைப்படுகிறது. பால் கறக்க எருமையில் ஆகும் நேரம்  2-10 நிமிடங்கள் ஆகும்.இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எருமையில் காம்பின் துளை சிறியது. அதிக ஆற்றல் செலுத்த வேண்டி இருக்கும். மாடுகளைப் போல் பால் முதலிலேயே குழாயில் சேகரித்து வைக்கப்பட்டிருக்காது. எனவே கறக்கும் போது தான் சிறிது சிறிதாக வெளிவரும்.

பால் கறக்கும்போது கொடுக்கும் அழுத்தமானது சிறிது சிறிதாக அதிகரித்து பின்பு மெதுவாகக் குறைய வேண்டும். இந்த அழுத்தமானது கால்நடையைப் பொறுத்தும் பால் கறப்பவரைப் பொறுத்தும் வேறுபடுகிறது.சுரக்கும் பாலின் அளவு அதிகமாக இருக்கும் போது கறக்கும் வேகமும் அதிகரிக்கிறது. எனவே எருமை மாடுகள் வாங்கும் போது மடி, காம்பின் தன்மை போன்றவற்றைப் பார்த்து, கவனித்து வாங்குதல் வேண்டும்.

பால் சுரப்பைத் தூண்டுதல்
கன்றை சிறிது நேரம் பால் ஊட்ட விடுவதன் மூலமோ அல்லது கையினால் காம்பினைத் தடவி விட்டோ காம்பானது பால் சுரப்பிற்குத் தூண்டிவிடப்படுகிறது. ஏனெனில் இவ்வாறு காம்பைத் தடவி விடுவதால் மடியின் கீழேயுள்ள ஆக்ஸிடோசின் ஹார்மோனைச் சுரக்கும் நாளங்கள் தூண்டப்பட்டு, பால் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் ஆனது இரத்தத்தின் வழியாக மெமரி (Memory) சுரப்பிற்குக் கடத்தப்படுகிறது. ஏனெனில் ஹார்மோனும், நரம்பு நாளங்களும் பாலை வெளித் தள்ளுவதில் ஈடுபடுகின்றன. எனவே இவை நரம்பு ‘உட்சுரப்பு செயல்’ எனப்படுகிறது. ஆக்ஸிடோசின் ஆல்வியோலை குழாயை சுருங்கி விரியச்செய்கிறது. இதனால் குழாயிலுள்ள பால் வெளித்தள்ளப்பட்டு காம்பை வந்தடைகிறது.


இவ்வாறு அல்வியோலை வழியே வரும் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். கன்று பாலூட்டும் போது மடியில் முட்டி மோதும் போதும், கையினால் மசாஜ் செய்வது போல் தடவும் போதும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். அப்போது தான் பால் சுரப்பும் அதிகரிக்கும்.மேலும் கால்நடைகளில் பால்கறப்பதற்கு முன்பு அடர் தீவனமளிப்பது பால் சுரப்பையும், பால் தரும் நேரத்தையும் அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


பால் சுரப்பு தடைபடுதல்
எருமைகள் பொதுவாகவே சுற்றுச்சூழல் மாற்றத்தைப் பொறுத்து எளிதில் பாதிப்படையக்கூடியவை. இவை பயந்தாலோ, ஏதேனும் வலி, மன அழுத்தம் ஏற்பட்டாலோ உடனே பால் சுரப்பு குறையும். ஏனெனில் மேற்கண்ட சூழ்நிலைகளின் போது அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கும். இது இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து மடிக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது. மேலும் இந்த அட்ரினல் ஆனது அல்வியோலையின் மையோஎபிதீலியல் செல்களின் மீது செயல்புரிந்து, அவை ஆக்ஸிடோசினை எடுத்துக் கொள்ள முடியாமல் அடைத்து விடுகிறது. இதனால் பால் சுரப்பு தடைபடுகிறது. எனவே வலி, மனஅழுத்தம் ஏற்படா வண்ணம் எருமைகளை நன்கு கண்காணித்து சிகிச்சை அளித்தல்வேண்டும். பால் கறக்கும் நேரத்தை மாற்றிக் கொண்டே இருத்தல், தவறான கறக்கும் முறையைக் கையாளுதல், பால் கறக்கும் எந்திரத்தை சரியாகப் பொறுத்தாமை போன்றவையும் பால் சுரப்புக் குறைவுக்குக் காரணங்களாகும்.


பால் வெளியேற்றம்
பால் மடியில் நன்கு சுரந்து நிற்கும் போதுதான் எருமைகளில் கறக்கத் தொடங்கவேண்டும். கையினால் (அ) இயந்திரம் பயன்படுத்தினாலும், எந்த வலியும் இன்றி முறையாகக் கறத்தல் வேண்டும். அதிகமாக பால் திரிந்து விடாமல் சரியான நேரத்தில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.


சுகாதாரமான முறை
பால் கறக்கும் கொட்டிலை முறையாக சுத்தம் செய்து தூய்மையாக வைக்கவேண்டும். அதற்கு சில வழிமுறைகள்

  1. பால் கறக்கும் முன்பே சாணங்களை நீக்கி கொட்டிலை சுத்தம் செய்துவிடவேண்டும்.
  2. கைகள் சுத்தமாகக் கழுவப்பட்டு, ஈரமின்றி துணியால் துடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  3. ஒவ்வொரு எருமையின் காம்பையும் கழுவிய பின் தனித்தனி, சுத்தமான துணிகள் பயன்படுத்தி, துடைக்க வேண்டும். இல்லையெனில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய காகிகதங்களை உபயோகிக்கலாம்.
  4. பால் கறந்து முடிக்கும் போது காம்பு மற்றும் மடியை நீரில் கழுவிவிடவேண்டும்.
  5. பால் கறக்கும் பாத்திரங்கள் நன்கு கழுவி சுத்தமாக இருப்பதுடன், மூடியுடன் இருக்கவேண்டும்.
  6. பாலானது சாணம், தீவனம் போன்றவற்றின் வாசனையை எளிதில் ஈர்த்துக் கொள்ளக்கூடியது. எனவே பாலைக் கறந்த உடன் மூடி வைக்கவேண்டும்.
  7. பாலை நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு எட்டாமல் வைத்திருந்து, கூடிய விரைவில் பால் சேகரிப்போரிடம் கொடுத்து விடுதல் நலம்.
பால் கறக்கும் முன்பு செய்யவேண்டியவை
  • பால் கறக்கும் முன்பு மடியை நீரில் கழுவி, காம்புகளைக் கையினால் மெதுவாக நீவி விடுதல்வேண்டும்.
  • மடியை சரியாக கவனித்தால், மடி வீக்கம் அல்லது வேறு ஏதேனும் நோய்த்தாக்கம் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
  • முதலில் வரும் சிறிது பாலை சிறிய பாத்திரத்தில் பிடித்துக்கொள்ளவேண்டும். இதன் மூலம் பாலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருப்பின் அறிந்து கொள்ள முடியும்.
  • எக்காரணம் கொண்டும் பாலை வீணாக கீழே ஊற்றுதல் (பீய்ச்சி கீழே விடுதல்) கூடாது. இவ்வாறு செய்வதால் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
பால் கறந்த பின்னர்
  • பால் கறந்து முடித்த பின்பு ஏதேனும் தொற்றி நீக்கி கலந்த நீரினால் மடியை சுத்தம் செய்யவெண்டும். காம்பின் துளையானது பால் கறந்து சில நிமிடங்கள் வரை மூடாமல் இருக்கும். அந்த நேரத்தில் ஏதேனும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் உட்புகுந்து விடலாம். இதைத் தடுக்கவே தொற்று நீக்கிகளைப் பயன்படுத்துகிறோம். இது காம்பை சுத்தப்படுத்துவதோடு அதன் துளை மூடும் வரை அதில் அடைத்து நுண்ணுயிரிகள் உட்புகாமல் காக்கிறது. இந்தக் கரைசலில் ஏதேனும் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சில சமயம் இந்தத் துளையானது அரைமணி நேரம் வரை மூடாமல் இருக்கும். அப்போது எருமை கீழே படுக்காமல் இருக்கத் தீவனம் அளிக்கவேண்டும்.
  • பால் கறக்க பயன்படுத்திய பாத்திரங்களை உடனக்குடனே நீரில் கழுவி உட்புறம், வெளிப்புறம் இரண்டும் சுத்தமாக இருக்குமாறு துடைத்து வைக்கவும்.
  • கை, மடிகளைக் கழுவப் பயன்படுத்தும் துணிகளும் ஒவ்வொரு முறையும் நன்கு துவைத்துக் காயவைத்த பின்னரே, மறு முறை பயன்படுத்தவேண்டும். இவைகளை கழுவக் குளோரின் கலந்த நீரைப் பயன்படுத்தலாம்.
பால் கறக்கும் முறை
நல்ல பால் உற்பத்திக்கு முறையான கறக்கும் வழிமுறை அவசியமாகும். கையினால் அல்லது இயந்திரம் மூலம் கறப்பதானாலும் கீழ்க்காணும் வழிமுறைகளைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
  • எருமைகளை கட்டி வைத்துப் பால் கறத்தல்வேண்டும். தீவனங்கள் அளிக்கலாம்.
  • சாணத்தை முன்னமே அப்புறப்படுத்திவிடவேண்டும்.
  • கைகளை சோப்பினால் கழுவி, உலர வைக்கவேண்டும்.
  • காம்புகளை சுத்தப்படுத்தி துணியினால் துடைத்து நீவி விடவேண்டும்.
  • முதல் சிறிது பாலை சிறிய பாத்திரத்தில் கலந்து பால் நன்றாக உள்ளதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
இயந்திரம் மூலம் கறக்கும் போது
  1. காம்புப் பிடியை சரியாகப் பொருத்தவேண்டும். குழாய் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.
  2. எருமைகளில் ஏதும் வேறுபாடு காணப்படுகிறதா என்பதைப் அவ்வப்போது பார்த்துத் தெரிந்த கொள்ளவேண்டும்.
  3. பால் முற்றிலும் கறக்கப்பட்டு விட்டதா என்பதை மடியைத் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும்.
  4. ஒருநல்ல தொற்று நீக்கிக் கொண்டு காம்புகளைச் சுத்தம் செய்யவேண்டும்.
  5. பால் கறக்கப் பயன்படுத்திய அனைத்து உபகரணங்களும் சுத்தம் செய்யப்படவேண்டும்.
பால் கறக்கத் தயாராகும் போது இயந்திரம் தயாராக வைக்கப்பட்டிருக்கவேண்டும். சில துளிகள் மட்டும் சிறு பாத்திரத்தில் கறந்து விட்டு உடனே கறக்கும் இயந்திரத்தைப் பொருத்த வேண்டும். இதற்கேற்றவாறு கால்நடைகள் முன்னமே கழுவி தயாராக வைக்கப்பட்டிருக்கவேண்டும்.

கையினால் கறத்தல்
  • இரு விரல்களினால் கறக்கும் முறை காம்பிற்கு அதிக வலி கொடுக்கும். எனவே முழுக் கையையும் பயன்படுத்தும் முறையே சிறந்ததாகும். இதுவே காம்பு முழுவதும் சீரான் அழுத்தம் பாய அனுமதிக்கிறது.
எருமையில் பால் கறக்கும் இயந்திரம்
  • மாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் காம்புகள் சற்று வித்தியாசமானவை. எனவே எருமையில் பால் கறக்க கொத்தாக உள்ள அதிக விசையுடன் கூடிய இயந்திரம் தேவை. இதன் எடை அதிகம். இந்தியாவில் இதன் தொகுப்பு எடையைக் குறைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • அதன் தொகுப்பு எடை மட்டுமல்லாமல் ஒவ்வொரு காம்பிலும் செயல்படும். எடை மற்றும் அழுத்த அளவு ஒரே அளவாக இருக்கவேண்டும். அப்போது தான் கறக்கும் பாலின் அளவு சீராக இருக்கும். எனவே காம்புகளில் பொருத்தும் போது எல்லாவற்றிலும் எடை மற்றும் பிடிப்பு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • பால் இயந்திரத்தின் கடிக்கும் திறன், அதன் வெற்றிட அளவு மற்றும் துடிப்பு அளவைப் பொறுத்தது. எகிப்தியன் எருமைகளில் நடத்திய ஆய்வின்படி 51 கிலோ பாஸ்கல் வெற்றிடமும், ஒரு நிமிடத்திற்கு 55 சுற்று துடிப்புகள் என்ற அளவு 56 கி பாஸ்கல், நிமிடத்திற்கு 65 சுற்று துடிப்புகள் என்ற அளவை விட குறைவாகவே பால் தருகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேற்கண்ட ஆய்வுகள் 50:50 துடிப்பு வைத்து மேற்கொள்ளப்பட்டன.
  • இத்தாலி நாட்டில் எருமை மற்றும் மாடு இரண்டிற்கும் ஒரே இயந்திரத்தைப் பால் கறக்கப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு வெற்றிடம், 40 செ.மீ மெர்க்குரி கொண்ட எளிய மாட்டில் பால் பீய்ச்சும் இயந்திரம் ஆகும்.
  • இந்தியாவில் ஆல்ஃபா லாவல் அக்ரி (Alfa Laval Agri) டியூவாக் மூலம் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெற்றிட அளவு 55 கி பாஸ்கல், 70 சுற்றுக்கள் நிமிடத்திற்கு என்ற அளவில் துடிப்பு 65:35 விகிதமும் நல்ல பால் உற்பத்தி கிடைப்பதாகக் கூறப்பட்டுள்ளன. இதில் கறக்கும் பாலின் அளவு நிமிடத்திற்கு 0.2 கி.கி ஆகும்.
  • மேலும் இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது அது எருமைக்கும் பயன்படுத்துபவருக்கும் எளிதாக இருக்கவேண்டும். எனவே எருமையை நன்கு பழக்கப்படுத்த வேண்டும். எருமை பயந்தாலோ, சரியாகப் பொருத்தாமல் விட்டாலோ, வலி ஏற்பட்டாலோ எருமையானது பாலை விடாமல் அடக்கி வைத்துக் கொள்வதால், உற்பத்திக் குறைய வாய்ப்புள்ளது.


பால் கறக்கும் இயந்திரத்தின் பயன்பாடு
  • இந்த இயந்திரமானது அதிக அளவு கால்நடைகள் வளர்க்கப்படும் பண்ணைகளில், பால் கறத்தலை எளிதாக்க வடிவமைக்கப்பட்டது. இதுஅதிக அளவில் பயன்படுத்தப் படாவிடிலும் சரியான கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாண்டால் இதலிருந்து முழுமையான பயனை அடையலாம்.
  • பால் கறப்பவர்க்கு அந்த இயந்திரம் பற்றி அறிந்துகொள்ள அதைப் பற்றி  அறிந்த (அ) அதைத் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து பயிற்சி அளித்தல் அவசியம். பயிற்சி அளிப்பவர் பால் உருவாகும் முறை, இயந்திரத்தைக் கையாளுதல், அதன் அமைப்பு, பராமரிப்பு, பால் கறத்தல் ஆகிய அனைத்தையும் நன்கு தெரிந்தவராக இருத்தல்வேண்டும்.
  • இயந்திரம் மூலம் கறப்பதற்கு ஏற்றவாறு பண்ணையின் பால் கறக்கும் கொட்டில் அமைப்பை மாற்றி அமைக்கவேண்டும்.
  • எருமையின் காம்பு, மடிகள் எந்த பாதிப்போ, காயமோ இன்றி இருக்கவேண்டும்.
  • சில வயது முதிர்ந்த எருமைகள் கையினால் கறப்பதில் பழக்கப்படுத்தப்பட்டவை. புதிய முறையை ஏற்றுக் கொள்ளாது. மேலும் சில இளம் எருமைகளைப் பால் கறக்கப் பழக்கப்படுத்தவே சில நாட்கள் ஆகும். இந்த எருமைகளில் கையினால் கறப்பதே சிறந்தது
  • மிகச் சிறிய அல்லது பெரிய காம்புடைய எருமைகளிலும் கையினால் மட்டுமே கறக்கவேண்டும். சினை மாடுகள் வெப்பமான இயந்திரம் கொண்டு கறப்பதை விரும்புவதில்லை.
  • இயந்திரம் பயன்படுத்துவதன் மூலம் வரும் சிறு இரைச்சல் ஒரு சில கால்நடைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். இது போன்ற எருமைகளில் முதலில் கையினால் பீய்ச்சவேண்டும். ஆனாலும் இயந்திரத்தை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.  சில நாட்களில் எருமைகள் அந்த சப்தத்திற்குப் பழகி விடும். பின்னர் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.
  • எருமையை கட்டி வைத்த பின்னரே இயந்திரத்தைக் காம்பில் மாட்டவேண்டும். இல்லையெனில் அது கட்டுப்படாமல் அங்குமிங்கும் ஓடித் தாவி விடக்கூடும் .
  • முதலில் பீய்ச்சும் போது அந்த இயந்திரத்தை ஒவ்வொரு எருமையாக எடுத்துச் சென்று அது முகர்ந்து பார்த்த பின்னரே பால் பீய்ச்ச அனுமதிக்கவேண்டும். அப்போது தான் எருமைகள் இயந்திரங்களைப் பயமின்றி ஏற்றுக் கொள்ளும்.
  • மேற்கூறிய முறைகளைக் கையாண்ட பின்னரும் இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளாத எருமைகளை கையினால் கறக்கும் முறைக்கே பழக்கிவிடவேண்டும். இல்லையெனில் இந்த ஒரு சில எருமைகள் மொத்த மந்தையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும்.
  • மேலும் பால் கறப்பவர் இயந்திரத்தைப் பொருத்திவிட்டு அங்கேயே நின்று எருமை ஏற்றுக்கொள்கிறதோ, பயப்படுகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். சில நாட்களுக்கு இயந்திரத்தைப் பழக்கப்படுத்தும் வரை எருமையின் அருகிலேயே நின்று மென்மையாகத் தடவுதலும், மெதுவாகப் பேசுதலும் வேண்டும். கால்நடைகள் இயந்திர கறத்தலுக்குப் பழகுவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.


1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete