Saturday, October 4, 2014

நோய் மேலாண்மை

பித்தப்பை நோய்

இந்நோய் அனப்பிளாஸ் மார்ஜிநேல், அனாபிபிளாஸ்மா சென்டிரேல் என்ற ஓரணு உயிரியால் மாடு மற்றும் எருமைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள், பேன்கள் மூலம் பரவுகிறது. மேலும் ஊசிகள், கொம்பு நீக்கும் கருவிகள், ஆண்மை நீக்கம் செய்யும் கருவிகள், அடையாளக் குறியிடும் கருவிகள் மூலமும் பரவுகிறது. இந்த நுண்ணுயிரியானது இரத்தச் செல்களை அழிப்பதால் இரத்தசோகை, எடை குறைவு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். அதோடு பாதிக்கப்பட்ட கால்நடையில் காய்ச்சல் அதிகமாகி பின்பு குறையும். பசியின்மை, மூக்கு காய்தல் மற்றும் மருத்துவம் செய்யாமல் அதிக நாட்களானால் மஞ்சள் காமாலை ஏற்படும். வயது முதிர்ந்த மாடுகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

பண்ணையில் ஏதேனும் மாடு இந்நோயினால் பாதிக்கப்பட்டால் உடனே தடுப்பு நடவடிக்கையாக உண்ணிகள், பேன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். முடிந்தவரை நோயின் ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சையளித்தல் சிறந்தது.

தடுப்பு முறை

சிடிசி எனப்படும் ‘குளோர்டெட்ராசைக்ளின்’ அனாப்பிளாஸ்மாசிஸைக் கட்டுப்படுத்துகிறது. இதை 0.5 மிகி / 16 உடல் எடைக்கு அளவு உட்கொள்ளச் செய்யலாம். கிருமி நாசினி மற்றும் பிற மருந்துகள் மூலம் உண்ணி,பேன் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பாக்டீரியா கிருமியால் வரும் நோய்கள்

அடைப்பான் நோய்

இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படும் நோயாகும். மாடுகளை மட்டுமல்லாமல், மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது.  நம் நாட்டில் எல்லா இடங்களிலும் குறிப்பாக வெப்பம் மிகுந்த, ஈரக்கசிவுள்ள, காற்றோட்ட வசதியுள்ள இடங்களிலும் இந்நோய் அதிகம் காணப்படுகிறது.

இந்நோய்க் கிருமிகள் உடலிலிருந்து வெளியேறியவுடன் காற்றுடன் சேர்ந்து விரைவில் அழிக்க முடியாத ஸ்போர்களாக மாறி விடுகின்றன. கிருமிகள் தன் வெளிப்புறமாகக் கெட்டியான கவசத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. கிருமி நாசினிகள் எளிதில் இக்கவசத்தினுள் சென்று நுண்கிருமிகளை அழிக்க முடியாது. இத்தகைய ஸ்போர்கள் நிலத்தில் தங்கி அவ்வப்போது மாடுகளைத் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்துடன் தண்ணீரில் கலந்து நீண்ட தூரம் எடுத்துச் செல்லப்பட்டு பிற மாடுகளுக்கு நோயையும் ஏற்படுத்துகின்றன.
நோய் அறிகுறிகள்
  1. இந்நோயால் மாடுகளில், திடீரென்று வலிப்பு ஏற்பட்டு இறந்து விடும். இறந்தவுடன் மூக்கு, வாய், ஆசனம் போன்றவற்றிலிருந்து கருமை நிறமான இரத்தம் வெளியேறும்.
  2. காய்ச்சல் அதிக அளவு, 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
  3. ஓரிரு நாட்களில் நோயின் வேகம் தணியும் போது காய்ச்சல் இருக்கும். மாடுகளில் உணர்வு இழப்பு ஏற்பட்டு பிறகு இறந்து விடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
    1. நோயுள்ள பகுதிகளில் நோய் ஏற்படும் காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அடைப்பான் தடுப்பூசி போடவேண்டும். நோயில்லாப் பகுதிகளில் தடுப்பூசி தேவை இல்லை.
    2. இந்நோயால் இறக்கும் முன்பு, இரத்தப் பரிசோதனை செய்து நோய் இருப்பதை உறுதி செய்த பின்பு சுகாதார முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். இதற்குப் பின்பு மாட்டின் தோலை உரிக்கவோ அல்லது இறப்பரிசோதனையோ செய்யவோ கூடாது. காரணம் இக்கிருமிகளை வெளியில் காற்றுடன் கட்டுப்படுத்துவதும் கடினம். எனவே மாட்டை ஆழமான குழியில் புதைத்தோ அல்லது எரித்தோ அப்புறப்படுத்தவேண்டும்.
    3. இரத்தக்கசிவுடன் உள்ள பொருட்கள் அனைத்தையும் எரித்துவிடவேண்டும். அந்த இடத்தை 3 சதம் பீனால் கரைசலைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
தொண்டை அடைப்பான்

இந்நோய் பெரும்பாலும் மழைக்காலத்தில் குறிப்பாக நீர்ப்பாசனம், வெள்ளப்பெருக்கு மிகுதியாக உள்ள பகுதிகளில் காணப்படுகிறது. கறவை மாடுகள் குறிப்பாக எருமை மாடுகள், இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. தூரப்பயணத்திற்குப் பின்பும் அதிக நேரம் குளிர் மற்றும் மழையின் பாதிப்பிற்கு பின்பும் இந்நோய் ஏற்படுகிறது. கலப்பினப் பசுக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

நோய் அறிகுறிகள்
  1. கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
  2. கண்கள் சிவந்து வீங்கிக் காணப்படும்.
  3. தலை, கழுத்து, தொண்டை, மார்பு போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படும். வீக்கம் சூடாகவும், வலியோடு கூடியதாகவும் இருக்கும்.
  4. குடற்பகுதி பாதிக்கப்பட்டால் வயிற்றுப் போக்கு காணப்படும். சாணம் இளகி இரத்தம் கலந்திருக்கும்.
  5. நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படும்.
  6. வாயிலிருந்து மிகுதியான உமிழ்நீரும் வழிந்து கொண்டிருக்கும். நாக்கு தடித்துக் கறுப்பாகி விடும்.
  7. மாடுகள் எதையும் விழுங்கவும், மூச்சு விடவும் முடியாமல் திணறும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. எல்லா மாடுகளுக்கும் மழைக்காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தடுப்பூசி போடவேண்டும்.
  2. நோயுற்ற மாடுகளை உடனடியாக மற்ற மாடுகளிடமிருந்து பிரித்து, தகுந்த மருத்துவம் செய்து பாதுகாக்கவேண்டும்.
  3. பொதுச் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்படவேண்டும். தொடக்க நிலையில் ஏற்ற மருத்துவம் செய்வதால், பாதிக்கப்பட்ட மாடுகளைக் காப்பாற்றி விடலாம்.
சப்பை நோய்

இந்நோய் வெப்பம் அதிகமாகவும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாகவும் உள்ள பகுதிகளிலுள்ள மாடுகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது. இதுவும் ஓர் மழைக்கால நோயாகும். நல்ல ஆரோக்கியமான திடமான இளம் மாடுகளை 6 மாத வயது முதல் 3 ஆண்டு வயது வரை அதிகம் பாதிக்கிறது. இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்
  • திடீரென்று கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
  • தொடை அல்லது முன்கால் சப்பையிலோ அல்லது கழுத்து போன்ற சதைப்பிடிப்புள்ள பகுதிகளிலோ வெப்பம் மிகுதியாகவும் வலியோடு கூடியதும், கடினமான தன்மையுள்ள பெருத்த வீக்கம் காணப்படும். இதன் காரணமாக மாடுகள் நடக்க முடியாமல் நொண்டும்.
  • இதன் பிறகு வீக்கம் குறைந்து, வலியற்று, வீக்கத்திற்குள் காற்று இருப்பதாலும், விரல் கொண்டு அழுத்தும் போது நறநறவென்ற சத்தம் வரும். வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்திலுள்ள தோலின் நிறம் கருப்பாக இருக்கும்.
  • நோய்க் கண்ட 48 மணி நேரத்தில் உடனடியாக மருத்துவம் செய்யாமல் போனால், மாடுகள் இறந்து விடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. மழைக்காலத்திற்கு சுமார் 1 மாத்திற்கு முன்பே ஒவ்வொரு ஆண்டும் மாடுகளுக்குத் தடுப்பூசி போடவேண்டும்.
  2. நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் மாட்டைப்பிரித்துத் தனியாக ஒதுக்குப்புறமாக வைத்துக் கண்காணிக்கவேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் மாட்டை உறுதியாகக் காப்பாற்றிவிடலாம்.
  3. சிகிச்சை அளிக்காவிட்டால் நோய்க்கண்ட மாடுகள் 5-7 நாட்களில் இறந்துவிடும். இறந்த மாடுகளைச் சுகாதார முறைப்படி அப்புறப்படுத்தவேண்டும். இறந்த இடத்தை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.
கருச்சிதைவு நோய்

இந்நோய், பாக்டீரியா நுண்கிருமியால் ஏற்படுகிறது. இந்நோய், அதிக பால் தரும் கலப்பினப் பசுக்களில் அதிகம் பொருட் சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோயால் கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்திக் குறைவு போன்ற பல் காரணங்களால் இழப்பு ஏற்படுகிறது. இந்நோய் நோயுற்ற மாட்டின் நஞ்சுக் கொடி, இரத்தப் போக்கு போன்றவற்றை தொட்டு சுத்தம் செய்வத மூலமாகவும் மனிதர்களுக்குப் பரவுகிறது. பாலை நன்கு கொதிக்க  வைத்தபின் பருகவேண்டும்.

நோய் அறிகுறிகள்
  1. இந்நோய் காரணமாகச் சினை மாடுகளில் கருப்பையில் நோய் ஏற்பட்டு, கருத்தரித்த 5 முதல் 8 மாத காலம் வரையிலும் கன்ற வீச்சு ஏற்படும்.
  2. கன்று வீச்சு ஏற்பட்டபின் நஞ்சுக் கொடி கருப்பையில் இருந்து வெளி வராமல் தங்கி விடும்.
  3. பசுவின் அறை அல்லது பெண் பிறப்புறுப்பிலிருந்து சீழ் போன்ற திரவம் வடியும்.
  4. கருச்சிதைவுற்ற மாடுகள் சினைக்கு வர கால தாமதம் ஆகும். சினை பிடிக்காது.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாடுகளை இரத்தப் பரிசோதனை செய்து இந்நோய் இருப்பின், பண்ணையிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும்.
  2. மாடுகளைப் புதிதாக வாங்கும் பொது இரத்தப் பரிசோதனை செய்த பிறகே வாங்கவேண்டும்.
  3. நோயுற்ற மாடுகளைக் கொட்டகையில் இருந்து அகற்றிவிடவேண்டும்.
  4. இறந்த கன்று, நஞ்சு, இரத்தம் போன்றவற்றை மிகவம் சுகாதாரமுடன் அப்புறப்படுத்தவேண்டும். பயன்படுத்தப்பட்ட வைக்கோல் போன்ற பொருட்களை எரித்துவிடவேண்டும்.
  5. நஞ்சுக் கொடியை அகற்றும் போது கைக்கு உறை அணியவேண்டும். தேவையான சுகாதார முறைகளைப் பின்பற்றவேண்டும்.
  6. கன்று வீசியவுடன் வாலின் நுனிப்பகுதியில் கர்ப்பப் பையிலிருந்து வெளியேறம் இரத்தம் தங்கி மாடு வாலை வீசும் போது, பக்கத்திலுள்ள தண்ணிர், தீவனத் தொட்டி மற்றும் மாட்டின் கண், வாய், மூக்கில் பட்டு நோய் பரவ நேரும். கன்று வீசிய மாட்டை உடனே தனியாக வைத்துப் பராமரிக்கவேண்டும்.
  7. நோயுற்ற பசுக்கைள இனவிருத்திக்கு அனுமதிக்கக்கூடாது.
  8. எல்லாக் கிடேரிக் கன்றுகளுக்கும் 6-9 மாத வயதில் இந்நோய் வராமல் தடக்க தடுப்பூசி போடவேண்டும்.
வயிறு உப்புசம்:

கறவை மாடுகளின் முன்வயிற்றில் உணவு சேமித்து வைக்குமிடத்தில் மீத்தேன், கார்பன்டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் அடைத்துக் கொள்ளும். இதனால் விலங்குகள் போன்ற திரும்ப உணவை வாய்க்கு எடுத்து அரைக்க முடியாமல் அவதிப்படும். இது ஒரு நுரைபோல் முன்வயிற்றில் கட்டிக்கொள்வதால் உணவைச் செரிக்க இயலாது. பயறு வகை போன்ற சில கால்நடைகளுக்கு ஒவ்வாத பயிர்களை மேய்ச்சலின் போது உண்டு விடுகின்றன. இந்தப் பயிர்களில் உள்ள சில வகைப் புரதங்கள் மேற்கண்ட வாயுக்களை உற்பத்தி செய்கின்றன. ஆல்·பால்பா, சிவப்பு குளோவர் போன்றவை தீவனங்களில் அதிகம் கலக்கமால் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்நோய் பாதித்த கால்நடைகள் காலை அடிக்கடித் தரையில் உதைக்கும். குழப்பத்துடன் காணப்படும்.

கன்று வீச்சுநோய்

இந்நோய் ஐ.பி.ஆர் என்ற நச்சுயிரி (வைரஸ்) நுண்கிருமியால் ஏற்படும் நோயாகும். இந்நோய்க் கிருமி கருவுற்ற கறவை மாட்டின் கர்பப்பையைத் தாக்கி கருச்சிதைவை ஏற்படுத்துகிறது. பொதுவாக 4-7 மாத வயதுள்ள கருவைத் தாக்கி கருச்சிதைவை ஏற்படுத்தும் தன்மையுடையது. கருச்சிதைவிற்குப் பின் கருத்தரியாமையை ஏற்படுத்துகிறது. இதனால் அதிக பொருளாதாரச் சேதம் ஏற்படுகிறது. இந்நோய்க் கிருமி விந்து மூலமாக கறவை மாட்டிற்கு பரவுகிறது. காளையில் இந்நோயிருப்பின் கறவை மாட்டிற்கு பரவுகிறது. இது மட்டுமல்லாமல், மாடு ஒன்றோடு ஒன்று நெருங்கி இருப்பதாலும் இந்நோய் பரவுகிறது. தண்ணீர், தீவனம், காற்று மூலமாகவும் பரவுகிறது. உறை விந்து மூலமாக அதிக அளவு பரவுவதற்கு வாய்ப்புள்ளது.

நோய் அறிகுறிகள்
  1. திடீரென்று 3-7 மாத சினைக் காலத்தில் கருச்சிதைவு ஏற்படும்.
  2. கண் மற்றும் நாசித்துவாரம் வழியாக நீர் போன்ற திரவம் வழியும். அதில் இந்நோய்க்கிருமிகள் அதிக அளவு இருக்கும்.
  3. கன்று இறந்து பிறக்கும். நஞ்சுக் கொடி தங்கிவிடும்.
  4. இத்துடன் மூச்சுத் திணறல், மடிநோய், மூளை பாதிக்கப்பட்டு வலிப்பு, உணவுக் குழல் பாதிக்கப்பட்டு வயிற்றுப் போக்கு போன்ற நோய் அறிகுறிகளும் தென்படும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. நோய் வராமல் இருக்க கறவைமாடுகளுக்கு தடுப்பூசி போடவேண்டும்.
  2. இரத்தப் பரிசோதனை செய்து, நோயுள்ள பொலிகாளைகளையும், கறவை மாடுகளையும் பண்ணையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
  3. பாதிக்கப்பட்ட மாடுகளில் நோய்க் கிருமி தங்கி, அவ்வப்போது வெளியேறி நோயைப் பரப்புவதால் இத்தகைய மாடுகளைப் பண்ணையில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
  4. சுற்றுப்புறச் சுகாதாரம் பராமரிப்பு மேம்பாடு போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
4.பிஎஸ்சி (அ) மாட்டு பித்த நோய்

இது ‘பொவைன் ஸ்பாஞ்சியோஸ்பெர்ம் என்செப்பலோ பதி’ (பிஎஸ்இ) அல்லது ‘மாட்டு பித்த நோய்’ எனப்படும். இது மூளையைப் பாதித்து நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இது மனிதனின் நரம்பியலோடு தொடர்புடைய சிஜேடி எனும் நோயைப் போன்றதாகும். இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு, இதுவரை ஏதும் மருந்து அறியப்படவில்லை. இந்நோய் பாதித்த பின்பு அதன் அறிகுறிகள் தெரிவதற்கு 2-8 வருடங்கள் ஆகலாம். நடுக்கம், அசாதாரணத் தோற்றம், பழக்கம் மற்றும் வளர்ச்சியற்ற நிலை போன்றவை இதன் அறிகுறிகள். இது முதலில் ரேபீஸ் நோய் போன்ற தோன்றலாம். இந்நோய் பாதித்த கால்நடைகளை அழிப்பதே நல்லது.

இறந்த கால்நடைகளின் மூளை செல்களை மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து மட்டுமே இந்நோயை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். உயிருடன் உள்ள கால்நடையில் பரிசோதனை செய்ய இயலாது.

 பிவிடி

இது பொவைன் வைரஸ் ‘டையேரியா நோய்’ எனப்படுகிறது. இந்நோய் செரிமானத்தையும், நோய் எதிர்ப்புப் பகுதி, நிமோனியா கருச்சிதைவு, கன்றுக் கோளாறு போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. பிறந்த கன்றுகளில் இந்த நோயின் தாக்கமானது மூக்குச் சீரம் வெளிவருதல், வயிற்றுப் போக்கு மற்றும் சரியாக நடக்க முடியாத தன்மை போன்ற அறிகுறிகளால் அறியப்படுகிறது.
சரியான வைரஸ் தடுப்பூசி இழப்பைத் தவிர்க்க உதவுகிறது. எம்எல்வி - பிவிடி தடுப்பூசியை கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி கொடுத்தல் நலம்.

கன்றுக் கழிச்சல் நோய்

இந்நோய், இளங்கன்றுகளைத் தாக்கி அதிக அளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோய் கோலிபார்ம் என்ற கிருமியால் ஏற்படுகிறது. குடற்பகுதியிலுள்ள மற்ற பாக்டீரியா நுண்கிருமிக்ள இவற்றுடன் சேர்ந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கன்று ஈன்ற ஓரிரு வாரங்களில் இந்நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படும். சீம்பால் கொடுக்கப்பட வில்லையெனில் கன்ற கழிச்சல் அதிகமாக ஏற்படும். அசுத்தமான தண்ணீர், மோசமான சுற்றுப்புறச் சுகாதாரம், அதிக அளவு பால் கொடுத்தல் போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்
  1. வெள்ளை நிறத்தில் வயிற்றுப் போக்கு தொடர்ந்து இருக்கும்.
  2. கன்றுகள் மெலிந்து காணப்படும்.
  3. நோய்க் கண்ட ஒரு வாரத்தில் கன்று இறந்துவிடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. கன்று பிறந்தவுடன் மடியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சீம்பால் அருந்த விடவேண்டும். அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக அருந்த அனுமதிக்கவேண்டும்.
  2. உடல் எடையில் 10 சதம் பசும்பால் கொடுக்கவேண்டும். இதில் 10 விழுக்காடு சீம்பாலாகத் தரலாம்.
  3. தண்ணீர் மற்றும் திவனத் தொட்டி மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும்.
  4. தரை எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
  5. முதல் இரண்டு வாரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. இல்லையேல் குளோரின் கலந்த தண்ணீரைக் கொடுக்க வேண்டும்.
  6. நோயுற்ற கன்றுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்கவேண்டும்.
கண் புற்றுநோய்

இது கண் புருவம், கருமணி ஆகியவற்றில் கட்டி போன்று ஏற்படுகிறது. உடலின் மற்ற பாகங்களுக்கு இந்நோய் பரவுவதில்லை. எனினும், கண்ணைச் சுற்றிலும் புரை போல் வரும்.

இது நிறமிகளற்ற தோலில் மட்டுமே பாதிப்பு எற்படுத்தும். எனவே தான் கண்ணைச் சுற்றிலும் கட்டி உருவாகிறது. அதனால் இனங்களைத் தெரிவு செய்து வாங்கும் போதே கண் நன்கு கருப்பாக உள்ள கால்நடைகளைத் தேர்ந்து வாங்குதல் நலம். மேலும் மந்தையிலிருந்து இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளையும் அதன் கன்றுகளையும் அகற்றுதல் நன்று. கண் புற்று நோய் 7-8 வருட வயதுடைய கால்நடைகளைத் தாக்குகிறது. 3 வயதுக்கும் குறைவான கால்நடைகளை இது அவ்வளவாகத்  தாக்குவதில்லை.
கால்நடைகளின் கண்களை அவ்வப்போது சோதித்துக் கொள்ளவேண்டும். அறுவை சிகிச்சை, போன்ற சிகிச்சைகள் மூலம் ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும். கால்நடைகளின் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சிகிச்சை மேற்கொள்வதை விட மந்தையிலிருந்து நீக்குவதே நல்லது.நோய் அதிகமான மாடுகளை சந்தைக்கு எடுத்துச் செல்லக்கூடாது. பெரிதான கட்டிக்கல் மற்ற பாகங்களுக்கும் பரவக்கூடும். எனவே கவனமாகக் கையாளுதல் நன்று.

இரத்தக் கழிச்சல் நோய் 

இந்நோய் மிகச்சிறிய ஒரு செல் உயிரிகளால் தாக்கப்படுகிறது. இது ஒரு கன்றிலிருந்து 2 வருட வயது வரை உள்ள கன்றை அதிகம் தாக்குகிறது. மற்ற மாடுகளும் பெரிய மேய்ச்சல் நிலங்களில் மேயும் போது பாதிக்கப்படலாம்.
வயிற்றுப் போக்கு, வறண்ட இருமல், பசியின்மை, எடை குறைதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள். மாடு தன் வால் மூலம் பின்புறத்தை அடிக்கடி அடித்துக்கொள்ளும். இது உடலின் எபிதீலியல் செல்களை அழித்துவிடுகிறது.
பல உயிரிகள் வயிற்றில் பெருகிவிடுகின்றன. நிமோனியாக் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட கால்நடை இறந்து விடலாம். 
மேய்ச்சல் நிலங்களில் ஈரம் அதிகமாக இருந்தால் இந்நொய் எளிதில் பரவும். எனவே மேய்ச்சல் நிலங்களை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர்த் தொட்டி தரையிலிருந்து சற்று உயரத்தில் இருக்கவேண்டும். சதைப்பற்றுள்ள பயிர்களை ஓரங்களில் வளர்க்கலாம்.

காக்சிடியோஸ்டேட் என்ற மருந்தைத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். நல்ல தீவனம் உண்ணும் கால்நடைகளை இந்நோய் அதிகம் தாக்குவதில்லை.

கோமாரி நோய்

‘கால்கானை வாய்க்கானை’ என்றும், ‘கால் சப்பை வாய்ச் சப்பை’ என்றும் இந்நோய்க்கு வேறு பெயர்களும் உண்டு. இவ்வைரஸ், தட்பவெப்ப நிலையைத் தாங்கி அதிக நாள் உயிருடன் வாழும் தன்மை உடையது. இந்நோய்க் கிருமியில் 7 வகைகள் உள்ளன. அவற்றுள் 4 வகைகள் நம் நாட்டில் உள்ளன. ஒவ்வொன்றும் நோய் ஏற்படுத்தும் விதத்தில் வேறுபட்டவை. இதனால் இந்நோயைத் தடுக்க, தகுந்த தடுப்பூசி மருந்து இல்லை. தற்போதுள்ள தடுப்பூசி மருந்து முழு நோய் எதிர்ப்புத் திறனை அளிப்பதில்லை. நோய் எதிர்ப்புத் திறன் காலமும் நான்கு மாதம் தான். எனவே, நான்கு மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி போடவேண்டும்.

உயிர் இழப்பு இல்லையென்றாலும் இந்நோயினால் பாதிப்பு அதிகம். பாதிக்கப்பட்ட மாடுகளின் பொருளாதாரக் குணங்கள் பாதிக்கப்படுவதால் மாடுகள் பயனற்றுப் போகின்றன. இந்நோய், தீவனம், நீர், காற்று, நெருங்கிப் பழகுவதாலும் பரவுகிறது. காற்று வீசும் திசையில் காற்றுத் துகள்கள் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் வரை இந்நோய் பரவும்.
நோய் அறிகுறிகள்
  1. பொதுவாகக் கோடைக்காலத்தில் இந்நோய் அதிகம் பரவுகிறது. ஆரம்பத்தில் காய்ச்சல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
  2. வாயிலிருந்து சளி போன்ற நுரையுடன் கெட்டியான உமிழ்நீர், கயிறு போன்று தொங்கிக் கொண்டிருக்கும். நோய் கண்ட மாடுகள், தொடர்ந்து வாயைச் சப்பிய வண்ணம் காணப்படும்.
  3. வாயைத் திறந்து பார்த்தால் நாக்கின் மேல்புறம், மேலண்ணம், வாயின் உட்பகுதி முதலியவற்றில் மெல்லிய, நீர் கோர்த்த கொப்பளங்கள் காணப்படும். ஓரிரு நாட்களில் ஆங்காங்கே கொப்பளங்கள் தொங்கிய வண்ணம் இருக்கும். இதனால் தீவனம் உட்கொள்ள முடியாது.
  4. கால்களில் குளம்புகளுக்கிடையே உள்ள தோலிலும், குளம்புகளுக்குச் சற்று மேற்புறமுள்ள தோலிலும் புண்கள் உண்டாகும். வலி காரணமாக மாடுகள் அடியெடுத்து வைக்க அஞ்சும். குளம்புகள் நாளடைவில் கழன்று விழ நேரிடலாம்.
  5. நோய் கண்ட பசுக்களில் பால் அருந்தும் கன்றுகள் இறந்துபோகும்.
  6. மடி, காம்பு போன்றவற்றில் கொப்பளம் தோன்றி பின்பு புண் ஏற்பட்டு, பால் கறக்க இயலாது. மடிநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
தடுப்பும் பாதுகாப்பும்
    • கன்றுகளுக்கு 8 வார வயதில் முதல் கோமாரி நோய்த் தடுப்பூசியும், 12 வார வயதில் இரண்டாவது தடுப்பூசியும், 16 வார வயதில் மூன்றாவது தடுப்பூசியும் பின்பு 4 மாதத்திற்கு ஒரு முறை கோமாரி நோய்த்தடுப்பூசியையும் தவறாமல் போட வேண்டும். நோய் ஏற்படும் காலத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தடுப்பூசி போடவேண்டும்.
    • பால் கறப்பவர், வெளியிலிருந்து வருபவராக இருந்தால் அவர் மூலம் இந்நோய் பண்ணைக்குள் வர வாய்ப்புள்ளது.
    • மற்ற மாடுகள், பண்ணைக்கு உள்ளே எந்தக் காரணம் கொண்டும் வரக்கூடாது. அதே போல், பண்ணை மாடுகள் வெளியில் செல்லக்கூடாது. பார்வையாளர்கள் மற்றும் வாகனங்கள் உள்ளே வரக்கூடாது. இதை நன்கு கண்காணிக்க வேண்டும்.
    • சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் பொட்டாசியம் ஹைக்ட்ராக்சைடு கிருமி நாசினி மருந்தை 3-4 சதம் கரைசலாக்கி தரையில் தெளிக்கவேண்டும். சோடியம் கார்பனேட் பவுடரை தரையில் தூவலாம். பீளீச்சிங் பவுடரை தரையில் தூவி கிருமியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
    • நோய் ஏற்பட்டால் நோயுற்ற மாடுகளை ஒதுக்குப்புறமாக வைத்து சிகிச்கையளிக்கவேண்டும். பாதிக்காத மாடுகளோடு தொடர்பு இருக்கக்கூடாது.
    • நோயுற்ற மாட்டின் பாலை, கன்றுகள் அருந்த அனுமதிக்கூடாது.
    • இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.
    • நோய்க்கிருமி தொழுவத்தில் அதிக நாள் உயிருடன் இருக்கும் திறன் கொண்டமையால், கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
    • நோய்ப்பரவியுள்ள சமயத்தில், மாடுகளை சந்தையில் வாங்கவோ, விற்கவோ கொண்டு செல்லக்கூடாது.

குளம்பு சிதைவு நோய்

ஃபுளுசோபாக்டீரியம் நெக்ரோபோரம், பாக்டீரியாய்டஸ் மெலனினோஜெனிகாய் என்ற பாக்டீரியாக்கள் மூலமே இந்நோய் பரவுகிறது. இது எல்லா வயது கால்நடைகளையும் பாதித்தாலும், வயது முதிர்ந்த மாடுகளில் பாதிப்பு அதிகம். குளிர் கோடை காலங்களில் இது அதிகம் பரவுகிறது.
காலில் உள்ள ஏதேனும் புரை / புண்கள் மூலம் பாக்டீரியாக்கள் நுழைந்து விடுகின்றது. ஆரோக்கியமான நோயில் இது உட்புகுவதில்லை. எனவே குளம்புகளை அவ்வப்போது கவனித்து வெட்டிவிடவேண்டும். இது ஈரமான சாணம், சேற்றில் நன்கு தங்கி வளரும் இயல்புடையது.
திடீரென கால் முடங்கிவிடும். ஒரு கால் மட்டுமே பாதிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட கால் சிறிது எடை அதிகரிக்கும். 103-105 டிகிரி பாரன்ஹீட் கொண்ட சாதாரணக் காய்ச்சல் ஏற்படுகிறது. சரியாக மூடப்படாத கால் இடுக்குகள், குளம்புப் பள்ளங்கள் வழியே பாக்டீரியா உட்புகுகிறது.
சரியான சிகிச்சை அளிக்காவிடில் கால் முடக்கம் பல வாரங்கள் வரை நீடிக்கும். பென்சிலின், டெட்ராசைக்ளின், சோடியம் சல்ஃபோடிமிடின் போன்ற கிருமி நீக்கிகள் பயன்படுத்தலாம். ஜிங்க் ஊட்டம் நல்ல பலனைத்  தரும். சிகிச்சையளித்த கால்நடைகள் முற்றிலும் குணமாகும் வரை உலர்ந்த தரையிலேயே இருக்கவேண்டும். 0.5 மிமி /16உடல்எடை அளவு குளோரோ டெட்ராசைக்ளின் பாத அழுகல் நோயைப் போக்கும்.

புல் வலிப்பு நோய்

கால்நடையின் இரத்தத்தில் உள்ள மெக்னீசியம் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. இது ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். இது ‘கோதுமைப் புற்கள்’ நோய் எனவும் அழைக்கப்படுகிறது. இது இளங்கன்றுகளின் பால் ஊட்டத்தைக் குறைக்கிறது. எல்லா வயது மாடுகளையும் இது தாக்குகிறது. சதைப்பற்றுள்ள. வளர்ச்சியடையாத புற்களை மேய்வதால் இந்நோய் ஏற்படுகிறது.
பொட்டாசியம் மற்றும் அலுமினியம் அதிகம் உள்ள மண்ணில் நிறைய நைட்ரஜன் உரங்கள் இடுவதால் மெக்னீசியத்தின் தேவையைக் குறைக்கலாம். வசந்த மற்றும் குளிர்க்காலங்களில் இது அதிகம் பரவுகிறது. இது கவனிக்காமல் விட்டால் கோமா, இறப்பு போன்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. எதிர்ப்புச் சக்தி வாய்ந்த மாடுகளை இது போன்ற புல்வளர்ந்த இடங்களில் மேய விடலாம். 4 மாதத்திற்கும் குறைவான வயதுடையவை நோயைத் தாங்கும் சக்தியற்றவை. மேய்ச்சல் நிலங்களில் டோலமைட், அதிக மெக்னீசியம், சுண்ணாம்புச் சத்து நிறைந்த உரங்களை இடவேண்டும்.  கால்நடைத் தீவனத்திலும் எல்லாச் சத்துக்களும் சரிவிகிதமாக இருக்குமாறு தரவேண்டும்.

சிவப்பு மூக்கு (IBR)

பொவைன் ரினேடிரேச்செய்புஸ் தொற்று என்று அழைக்கப்படும் இந்நோய் வைரஸால் தோற்றுவிக்கப்படுகிறது. இது தலையில் வாயுக்களை உருவாக்குகிறது. மேலும் பசு மாடுகளின் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். தடுப்பூசி கொடுக்கப்படாவிட்டால், இந்நோய் தாக்கிய கால்நடைகளைக் காப்பாற்றுவது கடினம். நாசி வழியே செலுத்தும் தடுப்பூசியைச் சினை மாடுகளுக்குக் கொடுத்தல் அவசியம். கலப்பிற்கு 30-60 நாட்கள் முன்பு இளம்பசுக்களுக்குத் தடுப்பூசி அளித்தல் அவசியம்.
ஐபிஆர், பிஐ3, பிவிடி போன்ற பல கலவை தடுப்பூசிகள் உள்ளன.

வெளிப்புற ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்கள்

உண்ணி, பேன், தெள்ளுப்பூச்சி, சொறிப்பூச்சி, ஈக்கள், கொசு முதலியவற்றால் மாடுகள் பெரிதும் தொல்லைக்கு உட்படுவதோடு, இரத்த இழப்பால் நலிவடைகின்றன. உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய உண்ணிகள் சில கொள்ளி நோய்களைப் பரப்பவும் உதவுகின்றன.

சிறு ஈக்கள்

இவை வீட்டு ஈக்களைவிட மிகச்சிறியவை. சாம்பல் நிறம் கொண்டவை. இவ்வகை ஈக்கள் தோள் மற்றும் பின் பகுதியில் ஒட்டிக் கொண்டு நாள் முழுவதும் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும். ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் மாட்டை விட்டு சிறிது பறந்து, பின் மீண்டும் மாட்டிடமே வந்து ஒட்டிக் கொள்ளும். இவை முட்டையிடுவதற்கு மட்டுமே ஈரமான சாணங்ளைத் தேடி செல்லும். மற்ற நேரங்களில் மாட்டின் மேல் அமர்ந்து அதன் நுண்ணிய நீண்ட வாய்ப்பகுதியில 20-30 இடங்களில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பதால் விலங்குகள் அடிக்கடி தேய்த்துக் கொண்டிருப்பதோடு மிகுந்த இரத்த இழப்பு ஏற்படும்.

முக ஈக்கள்

வீட்டு ஈக்கள் போலவே இருக்கும் . இவை கூட்டமாக மாட்டின் முகத்தின் மேல் அமர்ந்து கொண்டு கண், வாய், உதடுகளில் சுரக்கும் திரவங்களை உறிஞ்சிக் கொண்டிருக்கும். இவை இரத்தத்தை உறிஞ்சுவதில்லை. ஆனால் வெளிர் சிவப்புக் கண் நோயைப் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைப் பரப்புகிறது. இந்த ஈக்களைக் கட்டுப்படுத்துவது கடினம்.

மாட்டு ஈக்கள்

இவை அளவில் வீட்டு ஈக்களை விடப் பெரியவை. கடிக்கும் வீட்டு ஈக்கள் எனவும் இவைகள் அழைக்கப்படுகின்றன. இது கால் மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது. கூர்மையான வாய்ப்பகுதி கொண்டு இதன் வயிற்றில் இரத்தத்தை நிரப்பிக் கொண்டு, நிழலான இடங்களில் சென்று இரத்தத்தை செரிக்கச் செய்யும். இதில் இரத்தக் குழம்பு அதிகமாக இருக்கும்.

உண்ணிகள்
இவை இரத்தத்தை அதிக அளவு உறிஞ்சும் எனவே மாடுகள் ஓய்வின்றி இருக்கும். உண்ணியைக் கட்டுப்படுத்துதல் மிகவும் கடினம். அதிக அளவு உண்ணிகள் பெருகிவிடின் தடுப்பு முறைகள் பலன் தராது. இது அதிகமாக மேய்ச்சல் பகுதிகளில் காணப்படும். மாட்டின் மேல் மற்றும் தொழுவத்தில் உள்ள உண்ணிகளை இராசயன மருந்துகள் தெளித்துச் சரி செய்யலாம் அல்லது கால்நடைகளை மருந்தில் நனைத்தும், காது அடையாளக்குறிகளை சுத்தம் செய்தும் தூசிகளைச் சுத்தம் செய்தும் பரவலைத் தவிர்க்கலாம்.

பேன்கள்

தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.  தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுகிறது. காதுகளைச் சுற்றி அதிகமாகக்  காணப்படும். இதனால் மாடுகள் பசியின்றி எடைக் குறைந்து வளர்ச்சியற்று இருக்கும். இது குளிர் காலங்களில் வழக்கத்தை விட அதிகமாகப் பெருகும். எனவே குளிர் காலம் தொடங்குமுன் பேன் பரவலைத் தடுக்க, மருந்து நடவடிக்கைகளைச் செய்யவேண்டும். 3 வாரங்கள் தொடர்ந்து மருந்து அளிக்கப்படவில்லையெனில் சில முட்டைகள் சாகாது. தெளிப்பு முறை (அ) விலங்குகளின் முதுகில் ஊற்றுவதன் மூலம் மருந்து கொடுக்கலாம்.

தெள்ளுப்பூச்சி

இது தோல் நோயைத் தோற்றுவிக்கிறது. இதன் தொடர்ச்சி தோல் முழுவதும் பரவுகிறது. இத்தொழு நோய் சார்கோப்டிக், பூச்சிகளால் ஏற்படுகிறது. கோரியோப்டஸ், டெமோடெக்ஸ் மற்றும் சாரா கேட்ஸப் பூச்சிகள் லேசான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. இது தொடர்பு மூலம் பரவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளின் தோல் கடினமாகி முடி உதிர்ந்து விடும். இப்பூச்சி அதிக அளவு பெருகினால் கால்நடை நலிவடைந்து விடும். இவை குழியில் மறைந்து கொள்ளுவதால், கட்டுப்படுத்துவது கடினம். எனவே ஊசி மூலம் உட்செலுத்தும் மருந்துகளை உபயோகித்து நீக்கலாம். பேன் கட்டுப்பாட்டு முறை போல இதிலும் 2 (அ) 3 முறை பயன்படுத்தவேண்டும்.

உட்புற ஒட்டுண்ணி நோய்கள்

ஜோனீஸ் கழிச்சல் நோய் 

இது ‘யோநீஸ் நோய்’ என்றும் ‘பாராடியூபர்குளோசிஸ் நோய்’ எனவும் அழைக்கப்படுகிறது. இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளாசிஸ்என்னும் பாக்டீரியவினால் வயதான மாடுகள், ஆடுகள், மான், காட்டெருமை மற்றும் சில விலங்களுகளில் தோற்றுவிக்கப்படுகிறது.
இந்த ஜான்ஸ் நோயானது இளம் கள்றுகளிலேயே தோன்றிவிட்டாலும் அதன் உணவு செரிமானக் குழலில் தங்கிவிடுகிறது. இதன் அறிகுறிகள் 2-5 வயது ஆன மாடுகளிடமே வெளிப்படும். அதிக எடையிழப்பு, வயிற்றுப்போக்கு, பால் அளவு குறைவு போன்றவை இதன் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட கால்நடை நிறைய தீவனம் எடுக்கும். நல்ல தோற்றத்துடன் இருந்தாலும் வளர்ச்சி இருக்காது. இந்நோய் தாக்கினால் பின்பு குணப்படுத்த இயலாது.
இதை ஆரம்பத்திலேயே கண்டுணர முடியாததால் சிகிச்சையளிக்க முடியாது. நல்ல கால்நடை மருத்துவர் உதவியுடன் பாதிக்கப்பட்ட மாடுகளை மந்தையிலிருந்து அகற்றி பிற மாடுகளுக்குப் பரவாமல் தடுக்கலாம். இது பொதுவாக அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது.

லெப்டோநோய்

இந்நோய் லெப்டோஸ்பைரா பொமோனா என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. சினை மாடுகளில் இந்நோயால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுகிறது. மஞ்சள் நிறத் திரவமும், இரத்தம் கலந்த சிறுநீரும் இதன் அறிகுறிகள் ஆனால் இது அவ்வப்போது மட்டுமே வெளிப்படும். இந்நோய் பாதித்த மாட்டின் பால் கெட்டியாகவும், இரத்தத் துளி கலந்தது போல் இருக்கும். பாதிக்கப்பட்ட 2 வாரங்களில் 7 மாத வயதில் கருச்சிதைவு ஏற்படுகிறது. இரத்தப் பரிசோதனை மூலம் இந்நோய் இருப்பதை அறியலாம்.
சினைப் பருவத்திற்கு 30-60 நாட்கள் முன்பு தடுப்பூசி போடுதல் வேண்டும். ்விப்ரியோசிஸ்் தடுப்பூசிகள் இந்நோய்க்கு சிறந்த தடுப்பான்.

கழல் நோய்

இந்நோய் கண்ட மாடுகளில் காய்ச்சல் அதிகமாக இருக்கும். கருச்சிதைவு 7-9 மாதத்தில் நிகழும். நஞ்சுக் கொடி எளிதில் விழாது. இதுலிஸ்டிரியா மோனோசைட்டோஜீன்ஸ் என்னும் பாக்டீரியத்தினால் ஏற்படுகிறது. இந்த உயிரி மண், சாணம், புல் போன்ற எல்லா இடங்களிலும் இருக்கும். இந்த உயிரி மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. கால்நடை மட்டுமின்றி ஆடுகள், பன்றி, நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளிலும் ஏற்படுகிறது. அமைதியின்மை பசியின்மை, மிகுந்த காய்ச்சல் போன்றவை சுற்றிச்சுற்றி வருவதால் இது ‘சுற்று நோய்் எனப்படுகிறது. அறிகுறிகள் தெரிந்த 2-3 நாட்களுக்குப்பின் பாதிக்கப்பட்ட விலங்கு இறந்து விடும். கால்நடையாயின் 2 வாரங்கள் வரை உயிர் வாழும்.
கொட்டகைகளில் மாடுகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். செலேஜ் (பதப்படுத்தப்பட்ட) தீவனம் அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். நல்ல எதிர்ப்புச் சக்தி உள்ள ஆரோக்கியமான மாடுகள் இந்நோயினால் பாதிக்கப்படுவதில்லை. ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்துக் குணப்படுத்தவேண்டும்.

தொடை வீக்க நோய் (Lumpy Jaw) 

இந்நோய் ஏக்டினோமைசில் போவிஸ் என்ற உயிரியால் பரவுகிறது. இது பெரிய நகர்த்த முடியாத அளவு கட்டியை மாடுகளின் தொடையில் உருவாக்குகிறது. செம்புல் போன்ற புற்கள் உண்ணும் போது, அவை மாடுகளின் வாய் ஓரங்களில் சிறிது கிழித்துவிடுகிறது. இந்த இடுக்கு வழியே இவ்வுயிரி புகுந்து விடுகிறது. இந்தக் கட்டி பெரிதாகி தெரியுமளவு வர சில மாதங்களாகும். இதற்குள் இது சற்று முதிர்ந்து விடும். இந்தக் கட்டியில் மஞ்சள் நிற சீழ் போன்ற திரவம் எலும்பு இடுக்குகளில் தேங்கும். கவனிக்காவிடில் கட்டி பெரிதாகி உடைந்து அதிலிருந்து மஞ்சள் நிற சீழ் வெளிவர ஆரம்பித்துவிடும்.
நாசி எலும்புகளை பாதிப்பதால் மூச்சுவிடுவது சிரமமாக இருக்கும். மெல்வதற்குக் கடினமாக இருப்பதால் மாடு உணவு உட்கொள்ளாது.
இதற்குப் பயன்படுத்தப்படுவது அயோடின் முறை «øÄР  டெட்ராசைக்ளின். கட்டி ஏற்பட்டால் உடனே கால்நடை நல்ல நிலையிலிருந்தாலும் உடனே மந்தையிலிருந்து அகற்றி, தனியே வைத்து சிகிச்சை அளிக்கவேண்டும். இல்லையெனில், கட்டி உடலின் பிற பாகங்களுக்குப் பரவ ஆரம்பித்து விடும்.

வெளிர் சிவப்புக் கண்

பெயருக்கேற்றார் போல் இந்நோய் பாதித்த மாடுகளின் கண்கள் வெளிர் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இது உயிர்க்கொல்லி நோய் இல்லாவிடிலும் பாதிப்பு பொருளாதார ரீதியில் அதிகம்.
கண் விழியின் கார்னியா திரை மூடப்படுவதாலும், நிறைய நீர்  கண்களிலிருந்து வடிவதாலும் கண்ணைத் திறக்க முடியாமல் மூடிக்கொள்ளும். ஒரு கண்ணோ «øÄР  இரண்டுமோ பாதிக்கப்படலாம். கார்னியாவின் நடுவே வட்டவடிவமான அரிக்கப்ப்டட் பகுதி உருவாவதால் எரிச்சல் இருக்கும். கண் மூடிக்கொள்வதால் சரியான தீவனமன்றி எடை குறையும். 4-8 வாரங்கள் அல்லது அதற்கு மேலும் இந்நிலை நீடிக்கும் சரியான சிகிச்சையளித்துக் குணமடைய ஆரம்பித்தால் இதில் உருவான வெளிறிய பகுதி மறைந்து விடும். பாதிப்பு அதிகமானால் இவ்வெளிர்நிறம் சரியாகக் குணமடையாமல் அடிக்கடி பார்வையைத் தொந்தரவு செய்யும். மேலும் பாதிப்பு அதிகரித்து நோய் எல்லா கார்னியாவின் எல்லா அடுக்குகளையும் பாதித்தால் கருவிழிறைச் சுற்றியுள்ள திரவம் வற்றிவிடும். இது  நிரந்தர பார்வை இழப்புக்குக் காரணமாகும்.

  • இந்நோய் பல வகைகளில் பரவுவதால் நல்ல தடுப்பு முறை அவசியம். ஈக்கள் மற்றும் கொசுக்களைக் கட்டுப்படுத்துதல் வேண்டும். காதைச் சூழ்ந்த உறைகள் பிளாஸ்டிக் உறை போன்றவை அணிவிக்கலாம். பொடித்தூவுதல், மருந்து தெளித்தல் மூலமாகவும் இவைகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • மேய்ச்சலின் போது உயர வளர்ந்த புற்கள், விதைகள் மாடுகளின் கண்களில் பட்டு எரிச்சல் அடையச் செய்யும். எனவே புற்களை அவ்வப்போது வெட்டிவிடவேண்டும்.
  • சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் காலநடைக்கன்றுகளை பாதிக்கலாம். எனவே எப்போதும் நிழலில் வளர்ப்பதே சிறந்தது.
  • சரியான மருந்து கிருமி நாசினியை அவ்வப்போது அளித்தல் நல்ல பலனைக் கொடுக்கும்.
படர் தாமரை 

தொடர்பினால் பரவக்கூடிய இந்நோய், டிரைக்கோஃபைட்டான் வெருகோசம் என்னும் ஸ்போர் உண்டாக்கும் பூஞ்சைகளால் தோற்றுவிக்கப்படுகிறது. இது மனிதர்களையும் தாக்குகிறது. அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாது. இப்பூஞ்சையின் ஸ்போர்கள் முளைத்து கால்நடையின் தோல், முடி போன்றவற்றை பாதிக்கிறது. பாதித்த பகுதியிலிருந்து சாறு போன்ற திரவம் வெளிவந்து தோல் பகுதியோடு சேர்ந்து புண்ணை உண்டாக்குகிறது. தோலைச்சுற்றிலும் வெளிச்சாம்பல் நிறம் தோன்றும். தலை மற்றும் கழுத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. இது முடியற்ற ஒரு வட்டவடிவ வெண்சாம்பல் நிறத்தில் பல அறிகுறியை உடல் முழுதும் ஏற்படுத்துகிறது.
இந்த படர் தாமரை நோய் தானாகவே சரிசெய்யக்கூடியது, அல்லது 2 சதவிகிதம் தைபெண்டலோஸ் பசைக்கரைசலை, உபயோகித்துக் குணப்படுத்தலாம்.

டிரிகோமோனியாசிஸ்

டிரிக்கோமோனாஸ் ஃபீட்டஸ் என்னும் புரோட்டோசோவாவினால் தோற்றுவிக்கப்படும் இந்நோய், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது மாடு மற்றும் காளையின் இனப்பெருக்க உறுப்பில் மட்டுமே காணப்படுகிறது. இந்த உயிரியானது காளையிடமிருந்து பசுவின் யோனிக்குழாயை அடைந்து பின்பு கருப்பைக்கு இடம் பெயர்கிறது. பாதிப்பு ஆரம்பித்தவுடன் ஒரு வெள்ளை நிறத் திரவம் பசுவின் இனப்பெருக்கப் (கன்று ஈனும்) பகுதியிலிருந்து வடிகிறது. 90 சதவிகிதம் மாடுகளுக்கு எளிதில் பரவக்கூடியது. கலப்பு பயனின்றிப் போவதால், சினையாக முடியாத தன்மை ஏற்படும்.
இதற்கென எந்த தடுப்பூசியும் கிடையாது. ஆனால் செயற்றைக் கருத்தரிப்பின் மூலம் இது பரவுவதைத் தடுக்கலாம். காளைகளை கலப்பிற்கப் பயன்படுத்தும் முன்பு நன்கு பரிசோதிக்கவேண்டும். இது காளையினால் பரவுவதாகையால் ஒரு முறை பாதித்தால் அது கடைசி வரை காளைக்குள்ளேயே தங்கிவிடும்.

விப்ரியோ கருச்சிதைவு நோய்
கருவைக் கலைக்கம் மற்றொரு நோய் விப்ரியொசிஸ் ஆகும். இதுவும் காளையிடமிருந்து கலப்பின் போது பசுவிற்குப் பரவி அதை மலடாக்குகிறது. இதற்குத் தடுப்பு மருந்து உள்ள போதிலும், அதை யாரும் பயன்படுத்துவதில்லை. இந்நோயுள்ள காளையுடன் கலப்பு செய்யப்படும், தடுப்பூசி கொடுக்கப்படாத மாடுகள் மலட்டுத்தன்மை அடைகின்றன.
இதில் பசுவின் யோனிக் குழாய், கருப்பை பாதிக்கப்படலாம். ஆனால் வெளியில் அறிகுறிகள் இருக்காது. பாதிக்கப்பட்ட பசு கருத்தரித்தாலும் 5-6 மாதங்களில் கருவானது சிதைந்து பிறந்து விடும். இதன் பின்பே பசு பாதிக்கப்பட்டுள்ளதை அறிய முடியும்.
எனினும் 1 வருடத்தில் மீண்டும் பசு குணமாகிவிடும். 2 தடுப்பூசிகள் போடப்படவேண்டும். அதுவும் கலப்பிற்கு 4 வாரங்கள் முன்பு லெப்டோஸ்பைரோசிஸின் தடுப்பு மருந்துடன் கலந்து கொடுக்கலாம். செயற்கைக் கருத்தரிப்பு முறையும் இந்நோய்க்கு ஏற்ற மாற்று ஆகும். ஆனால் அதன் விந்துக்கள் விப்ரியோஸ் மற்றும் லெப்டோஸ்பைரோசிஸ், டிரைக்கோமோனியாஸிஸ் பரிசோதனைக்கு உட்பட்டிருக்கவேண்டும்.

மருக்கள் 

பாப்பிலோமாவைரஸ் என்னும் வைரஸ் நோயை ஏற்படுத்துகின்றன. இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. இது இளம் கன்றுகள் 1-2 வயதுள்ள கன்றுகளை பாதிக்கிறது. நோய் தோன்றி 1-6 மாதங்கள் கழித்து அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
பொதுவாக இந்த மருக்கள் விலங்குகளுக்கு ஒரு அருவருப்பான தோற்றத்தைத் தரும். இது தானாகவே சுருங்கி சில மாதங்களில் விழுந்து விடும். அல்லது வீடுகளில் பழங்காலத்திலிருந்து செய்வது போல் ஏதேனும் எண்ணெய், பிரஷ் கொண்டு தேய்த்தாலும் போய்விடும். கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றை வைத்தும் நீக்கலாம்.
இந்த மரு அதிக அளவு பரவிவிட்டால் இந்தக் காயங்களில் இருந்து எடுத்த மருந்தில் தடுப்பூசி அளிக்கலாம்.


மரநாக்கு நோய்

இது உருண்டை வடிவ ஆக்டினோபேசில்லஸ் லிக்னீரிசி என்னும் பாக்டீரியாவினால்  பரவுகிறது. இந்த பாக்டீரியாவானது நாக்கின் மடிப்பு மற்றும் காயங்கள் வழியே திசுக்களுக்குள் உட்புகுகிறது. ஏதேனும் கடினமான தண்டு அல்லது தீவனம் கொடுக்கும்  போது அது நாக்கில் காயம் ஏற்படுத்தி இது போன்ற பாக்டீரியங்கள் நுழைய ஏதுவாகிறது. இது நாக்கின் மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. இதன் பாதிப்பு உடனடியாக நாக்கு தடித்தல் மூலம் வெளிப்படுகிறது. தடித்த நாக்கில் வலி இருக்கும். இது உள்ளே சற்று வளர்வதால் மாடுகளால் இயல்பாக அசை போட முடியாது. நாக்கில் புண்கள் தோன்றுவதால் எதுவும் உண்ணவோ, அருந்தவோ இயலாது. இது கவனித்தால் எளிதில் குணப்படுத்தக்கூடியதே.

சிகிச்சையின் அறிகுறி தெரிந்த உடனே ஆரம்பித்தால் நன்று. அயோடின் மற்றும் டெட்ராசைக்ளின் மருந்துகள் அளிக்க வேண்டும். நோய் முத்திவிட்டால் அறுவை சிகிச்சையும், தினசரி அயோடின் தடவ வேண்டியும் இருக்கும்.

மாட்டம்மை

இந்நோய் கண்ட மாடுகளில் முதலில் லேசான காய்ச்சல் இருக்கும். பின்னர் மடியிலும், காம்புகளிலும் கொப்புளங்கள் ஆரம்பித்து. கடைசியில் சுருங்கி, கருகி, உதிர்ந்து விடுகின்றன. பால் கறக்கும் போது கொப்புளங்கள் இரணமாகி மாடுகளுக்கு வேதனையை அளிக்கும். இந்நோயோடு நுண்ணுயிர்க் கிருமிகளும் சேர்ந்து தாக்காமல் இருந்தால், மாட்டம்மை நோய் இரண்டு அல்லது மூன்று நாட்களில் குறைந்து விடும்.

தடுப்பு முறை

பால் கறக்கும் தொழுவத்தைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். பால் கறக்கும் முன் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீரில் மடியினைக் கழுவிய பின்னர் தினமும் பால் கறக்கவேண்டும் கொப்புளங்களுக்குக் கிருமி நாசினி மருந்து தடவி சிகிச்சை அளிக்கவேண்டும்.

காசநோய்
இந்நோய் மைக்கோபாக்டீரியம் ட்யூபெர்குலோசிஸ் என்னும் ஒரு வகை நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படுகிறது. இக்கிருமிகள் மாடுகளைப் பாதிப்பதோடு மனிதர்களையும் பாதிக்கின்றன. இந்நோய்க் கிருமிகள் நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கிப் பராமரிப்பதாலும் மனிதர்களுக்குப் பரவுகின்றன. ஆகவே இந்நோயைக் குறித்து நாம் எச்சரிக்ககையாய் இருக்கவேண்டும்.

நோய் அறிகுறிகள்
  1. பாதிக்கப்பட்ட மாடுகளில் விட்டு விட்டு லேசான காய்ச்சல் இருக்கும்.
  2. மாடு மிகவும் இளைத்து மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறையும்.
  3. இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும்.
  4. மார்பிலுள்ள நிணநீர் முடிச்சு வீங்கி விடுவதால் அடிக்கடி வயிற்று உப்புசம் ஏற்படும்.
  5. குடற்பகுதி பாதிக்கப்படுமானால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
  6. மடி பாதிக்கப்பட்டால் மடியில் கட்டிகள் ஏற்பட்டு, பாலின் தன்மை கெட்டுப்போகும்.
  7. பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க் கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. தொடர்ந்து இளைத்துக்கொண்டே வரும் மாடுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தி காச நோய் உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும்.
  2. நோயுற்ற மாடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தவேண்டும்.
  3. ஆறுமாதத்திற்கு ஒரு முறை மாடுகளை காசநோய்ப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்.
  4. பாலை, கொதிக்க வைத்து அருந்தவேண்டும்.
  5. சுற்றுப்புறச் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்படவேண்டும்.
  6. மாடுகளுக்குத் தேவையான அளவு, தரமான தீவனம் அளிக்கவேண்டும். போதுமான அளவு பசுந்தீவனம் கொடுக்கவேண்டும். காற்றோட்ட வசதி, நல்ல தீவனம் இவை இரண்டும் இந்நோய்த் தடுப்பில் பெரிதும் உதவுகின்றன. கன்று பிறந்த 10 நாட்களுக்குள் பி.சி.ஜி தடுப்பூசி போடவேண்டும்.
  7. பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க்கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.
ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்கள்

உட்புற மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணிகளால் கறவை மாடுகளில் அதிகமான பொருட்சேதம் ஏற்படுகிறது.

உட்புற ஒட்டுண்ணி நோய்

நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்களால் ஏற்படும் நோய்கள்

கறவை மாட்டின் உணவுப் பாதையில் வாழும் நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள்போன்றவைகளும் காக்சிடியா எனப்படும் ஓரணு வகை ஒட்டுண்ணியும் மாட்டின் ஆரோக்கியத்தை மிகவும் பாதித்து உற்பத்தியைக் குறைக்கின்றன. இத்தகைய ஒட்டுண்ணிகள், மாட்டின் இரத்தத்தை உறிஞ்சியோ அல்லது மாட்டிற்கு சேரவேண்டிய உணவுப் பொருட்களைத் தாம் உண்டோ அல்லது உட்கொள்ளப்படும். உணவு சரிவர குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுத்தோ அல்லது சில நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்து குடற்பகுதியைத் தாக்கியோ மாட்டின் நலத்தைக் கெடுக்கின்றன.

நோய் அறிகுறிகள்
  1. கன்றுகள், மாடுகள் நாளடைவில் மெலிந்து சோகையுற்றுக் காணப்படும்.
  2. சரிவர தீவனம் உட்கொள்ளாது.
  3. பற்களை அடிக்கடி நறநறவென்று கடித்தல், உடலில் அதிக ரோமம் வளர்தல், ரோமம் சிலிர்த்துக் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
  4. வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
  5. சாணம், தண்ணிர் போல இருப்பதுடன் நுரையும் காணப்படும். சிகிச்சை செய்யாவிடில் மாடுகள் இறந்துவிடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. சுகாதார விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். போதிய ஊட்டச்சத்து அளிக்கவேண்டும்.
  2. தண்ணீர், தீவனம், புல் போனறவற்றில் உள்ளுறை ஒட்டுண்ணியின் முட்டையோ அல்லது லார்வாவோ இருக்கக்கூடாது.
  3. சாணத்தை அவ்வப்போது அப்புறப்படுத்தவேண்டும். கம்போஸ்ட் செய்த சாணத்தை எருவாகப் பயன்படுத்தவேண்டும்.
  4. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சாணத்தை, பரிசோதனை செய்து உள்ளுறை ஒட்டுண்ணி இருப்பின் மருந்து கொடுக்கவேண்டும்.
தைலேரியோசிஸ்

இந்நோய் கலப்பினப் பசுக்களைத் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோய், தைலேரியா ஆனுலேட்டா என்ற ஓரணு ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.

இந்நோய், உண்ணி கடிப்பதின் மூலம் ஒரு மாட்டில் இருந்து மற்ற மாடுகளுக்கப் பரவுகிறது. உண்ணி அதிகமாக உள்ள இடங்களில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. நோயுற்ற மாட்டை உண்ணிகள் கடித்து விட்டு நோயில்லா மாட்டை மீண்டும் இரத்தத்தை உறிஞ்ச கடிக்கும் சமயத்தில் இந்நோய் மற்ற மாடுகளுக்கும் பரவுகிறது.
நோய் அறிகுறிகள்
  1. நோயுற்ற மாடுகளில் அதிகக் காய்ச்சல் இருக்கும். சுமார் ஒரு வாரத்திற்கு காய்ச்சல் குறையாது.
  2. தோலின் அடிப்பகுதியிலுள்ள நிணநீர்க் கட்டிகள் வீங்கிக் காணப்படும்.
  3. காது, கழுத்துப் பகுதிகளில் உண்ணிகள் அதிகம் காணப்படும்.
  4. சாணம் முதலில் கெட்டியாகவும், பின்பு இளகளாகவும், இரத்தம் கலந்தும் இருக்கும். வயிற்றுப் போக்கு இருக்கும்.
  5. சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் காமாலை அறிகுறிகள் தென்படும்.
  6. காய்ச்சல் அதிகமிருந்தாலும் மாடு, தீவனம் எடுத்துக் கொண்டிருக்கும்.
  7. சினைப் பசுக்களில் கருச்சிதைவு ஏற்படும்.
  8. இரத்தச் சோகை ஏற்பட்டு மாடு மெலிந்து 10 நாட்களில் இறந்து விடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. இந்நோயைத் தடுக்க உண்ணியைக் கட்டுப்படுத்த வேண்டும். உண்ணியைக் கொல்ல சுமத்தியான், மாலத்தியான் போன்ற மருந்துக் கரைசலை 0.5-1 என்ற அளவில் தெளிக்கவேண்டும். பூட்டாக்ஸ் என்ற மருந்தை 1 லிட்டருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். மாடுகளை இம்மருந்து கொண்டு குளிப்பாட்டலாம். உண்ணி தங்கும் செடி, புதர், சுவற்றின் கீரல், ஓட்டை, சந்து போன்றவற்றில் மருந்தைத் தெளிக்கவேண்டும்.
  2. கூடுதல் தீவனம், நல்ல பராமரிப்பு போன்றவற்ற வழங்கி மாட்டைக் காப்பாற்றி இலாபம் பெறலாம். நோயிலிருந்து தப்பிய மாடுகள், பழைய நிலைக்குத் திரும்ப சில மாதங்கள் ஆகலாம். இரத்தச் சோகைக்கு மருந்து கொடுக்கவேண்டும்.
பெபிசியோசிஸ்

இந்நோய், பெபிசியா பைசெமினா என்ற ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும். இது, உண்ணிகள் கடிப்பதால் ஏற்படும் நோயாகும். உண்ணிகள் அதிகமாக உள்ள இடங்களில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. கலப்பினப் பசுக்களில் இந்நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளது.

நோய் அறிகுறிகள்
  1. காய்ச்சல் அதிகமாக இருக்கும்.
  2. சிறுநீர், காப்பி நிறத்தில் வெளிவரும்
  3. மாட்டின் கழுத்துப்பகுதியில் உண்ணிகள் அதிகமாக இருக்கும்.
  4. இரத்தச்சோகை ஏற்பட்டு மாடு மெலிந்து 7-10 நாட்களில் இறந்து விடும்.
 தடுப்பும் பாதுகாப்பும்
  1. உண்ணியைக் கட்டுப்படுத்த வேண்டும். மேற்கூறிய உண்ணிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
  2. நோயுற்ற மாடுகளுக்கு மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்ளலாம்.
  3. இரத்தச்சோகைக்கு மருந்து கொடுக்கவேண்டும்.
  4. உண்ணிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றவேண்டும்.

No comments:

Post a Comment