Saturday, October 4, 2014

பால் கறக்கும் இயந்திரம்

மாடுகளுக்கு பாதிப்பில்லாமல், ரூ.14 ஆயிரம் மதிப்பில் கிடைக்கும் பால் கறக்கும் நவீன இயந்திரத்துக்கு கிராமப்புற விவசாயிகளிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.'ஒரு கறவை மாடு இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்து கொள்ளலாம்' என கிராமத்தில் பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. மாடு வளர்ப்போர் கடந்த 15 ஆண்டுக்கு முன் மாடுகளை பராமரிக்கவும், பால் கறக்கவும் பண்ணை ஆட்களை நியமித்து இருந்தனர். நாகரிக வளர்ச்சி, கல்வி அறிவு, வெளிநாட்டு மோகம் ஆகிய காரணத்தால், இத்தொழிலில் ஈடுபடுவதை ஏராளமான கிராமவாசிகள் கவுரவ குறைச்சலாக கருதி வருகின்றனர். அதன் விளைவாக 10 முதல் 20 மாடுகள் வரை இருந்த ஒரு விவசாயி வீட்டில் தற்போது ஒன்று, இரண்டு மாட்டை பார்ப்பதே அரிதாக உள்ளது. மாடுகளில் இருந்து பால் கறக்க ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள நவீன இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். கிராமப்புறங்களில் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு இது சாத்தியமில்லை. பால் கறக்க ஆள் கிடைக்காததால் மாடு வளர்ப்பதை ஏராளமான விவசாயிகள் நிறுத்தி விட்டனர். வீட்டு உபயோகத்துக்கு மட்டும் ஒன்றிரண்டு மாடுகள் வைத்துள்ளனர். இக்கட்டான இந்நிலையில், தமிழகத்தில் முதன் முறையாக விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், குறைந்த விலையில் ரூ.14 ஆயிரத்துக்கு பால் கறக்கும் இயந்திரம் விற்பனைக்கு வந்துள்ளது. மின்சாரம் மற்றும் கையால் இயக்கப்படும் இந்த இயந்திரத்தில் பால் கறக்க, ஒரு மாட்டிற்கு மூன்று நிமிடங்கள் மட்டும் ஆகும். இயந்திரம் இயங்க துவங்கியவுடன் கம்பரஸரில் இருந்து வரும் காற்று, 'ஏர் டேங்கில்' நிரம்பும். டேங்கில் இருந்து டியூப் வழியாக செல்லும் காற்று, மாட்டின் காம்பில் பொருத்தப்பட்டுள்ள கறவை செட் குழாய்க்கு சென்று அங்கிருந்து 'ஏர்' இழுவை திறன் மூலம் பால் காம்பில் சுரக்கும் பாலை கறந்துவிடும்.கறந்த பாலை சேகரிக்க இயந்திரத்தில் 20 லிட்டர் கேன் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு இயந்திரத்தில் 300 லிட்டர் பால் கறக்க முடியும். ஒரே நேரத்தில் இரண்டு மாடுகளுக்கு பால் கறக்கும் இயந்திரமும் உள்ளது. தற்போது ஆள் பற்றாக்குறையை தவிர்க்க, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாடு வளர்ப்போர், குறைந்த விலையில் கிடைக்கும் இந்த சிறிய நவீன கறவை இயந்திரத்துக்கு மாறி வருகின்றனர்.வேலகவுண்டம்பட்டி அருகே அணியார் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனலட்சுமி கூறுகையில், 'பால் கறக்கும் கூலியாட்களுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் கொடுத்தும் ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால் மாடு வளர்க்கும் தொழில் நலிவடையும் நிலையில் இருந்தது. இதற்கு மாற்றாக குறைந்த விலையில் வந்துள்ள கறவை இயந்திரம் நல்ல பலன் தருகிறது.'இயந்திரத்தில் பால் கறக்க மாடுகளை பழக்கப்படுத்த ஒரு வாரம் ஆனது. அதன்பின் தொடர்ந்து எந்த பிரச்னையும் இல்லை. எங்களிடம் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மாடுகளிடம் இயந்திரம் மூலமே காலை, மாலை இரண்டு வேளையும் பால் கறக்கிறோம்,' என்றார்.கறவை இயந்திரம் விற்பனையாளர் முத்துசாமி கூறுகையில், 'விவசாயிகளை முதலில் நம்ப வைப்பது சிரமமாக இருந்தது. தற்போது அந்த பிரச்னை இல்லை, மாடுகளுக்கு பாதிப்பில்லை என் பதை பயன்படுத்துபவர்களிடம் இருந்து உறுதி செய்த பின்னர் பலர் எங்களிடம் இந்த இயந்திரத்தை வாங்கி செல்கின்றனர்' என்றார்.


No comments:

Post a Comment