புதிய நுட்பம்
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர் தந்தா என்ன... அறுபத்தி நாலு சிலிண்டர் தந்தா என்ன... இதைப் பத்தியெல்லாம் எங்களுக்குக் கவலையே இல்லை. ஏன்னா... நாங்க தோட்டத்துலயே கேஸ் உற்பத்தித் தொழிற்சாலை வெச்சுருக்கோம்ல'' என்று தெம்பாகச் சொல்கிறார்கள், கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள, சாளைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல்-கவிதா தம்பதி!
இவர்கள் அமைத்திருப்பது... சாண எரிவாயுக் கலன். இது, வழக்கம்போல... இரும்புக் கலன், சிமென்ட் தொட்டி என்று இல்லாமல், எளிதாகக் கையாளக் கூடிய வகையில் 'பாலிதீன் ஷீட்’டில் தயாரான புதுவகைக் கலனாக இருப்பது... கூடுதல் சிறப்பு!
''படிச்சு முடிச்சதும் விவசாயத்துக்கு வந்துட்டேன். அதுக்கு தோதா தோட்டத்துலயே வீட்டைக் கட்டி குடிவந்துட்டேன். ஆரம்பத்துல விறகு அடுப்புதான். அப்பறம், புகையில்லாம சமைக்கறதுக்காக கேஸ் சிலிண்டருக்கு மாறினோம். ஆனா, கிராமத்துல சிலிண்டர் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மாசத்துக்கு ஒரு தடவைதான் சிலிண்டர் வண்டி வரும். அன்னிக்கு காலி சிலிண்டரோட மெயின் ரோட்டுல காத்துக் கிடக்கணும். அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வரல. அதனாலதான், மாட்டுச் சாணத்துல இருந்து கேஸ் உற்பத்தி பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன்.
இதைப் பத்தி விசாரிச்சப்ப, 'சாண எரிவாயுக் கலன், இரும்பு டிரம்லதான் அமைக்கணும். பெரியக் கிடங்கு வெட்டி, சிமெண்ட் பூசி பதிக்கணும். அதுக்கு செலவு அதிகமாகும். துருப்பிடிச்சு போச்சுனா பிரச்னை வரும்’னு ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொன்னாங்க. 'என்ன செய்யலாம்?'னு யோசிச்சுட்டு இருந்த சமயத்துலதான் 'பாலிதீன் பயோ கேஸ் ஹோல்டர்’னு ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு, அதை வாங்கிப் போட்டுட்டோம்'' என்ற தங்கவேலைத் தொடர்ந்த கவிதா...
''இதைப் போட்டு ரெண்டு வருஷம் முடிஞ்சுடுச்சு. இதுல சாணம் மட்டுமில்லாம, காய்கறிக்கழிவு, தீவனக்கழிவு எல்லாத்தையும் பயன்படுத்த முடியும். ஒரு கிலோ சாணத்துக்கு ஒரு கிலோ தண்ணிங்கிற கணக்குல கரைச்சு ஊத்தணும். மத்தக் கழிவுகளா இருந்தா... நல்லா நசுக்கி, தண்ணில கரைச்சு ஊத்தணும். தினமும் 20-25 கிலோ அளவுக்கு சாணத்தை ஊத்துறோம். நாள் முழுக்க தட்டுப்பாடு இல்லாம கேஸ் கிடைச்சுடுது. கேஸ் உற்பத்தி முடிஞ்சு வெளியாகுற கழிவை (ஸ்லர்ரி), தென்னை மரங்களுக்கு உரமாக்கிடறோம்'' என்று சொன்னார்.
மனைவியை ஆமோதித்த தங்கவேல், எரிவாயுக் கலனின் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
''இது, பல கொள்ளளவுகள்ல கிடைக்குது. நமக்குத் தேவையான அளவுல வாங்கிக்கலாம். நாங்க, 1 கன மீட்டர் கொள்ளளவு உள்ள ஹோல்டர் போட்டுருக்கோம். 4 அடி நீள, அகலத்தில், 3 அடி ஆழத்தில் குழி எடுத்து, அதுக்குள்ள இந்த ஹோல்டர வெச்சுடலாம். சிமெண்ட் பூச்செல்லாம் தேவையில்லை. வாயு அதிகமா உற்பத்தியாகும்போது, ஹோல்டர் மேலே எழும்பி வராம இருக்கறதுக்காக சுமார் 10 கிலோ எடையுள்ள ஒரு மூட்டையை ஹோல்டர் மேல வைக்கணும்.
நாலு மணி நேரம் தொடர்ந்து எரியுற அளவுக்கான கேஸ், இந்த ஒரு கனமீட்டர் ஹோல்டர்ல இருந்து கிடைக்கும். இது பெரிய பலூன் மாதிரி 'திக்’கான பாலிதீன்ல தயார் பண்ணியிருக்கறதால... வெயில், மழையால பாதிப்பு இல்லாம பத்து வருஷம் வரைக்கும் உழைக்கும்னு சொல்றாங்க. முள், ஆணி பட்டாலும் ஓட்டையாகாது. அப்படியும் ஓட்டை விழுந்தா... பஞ்சர் பாக்கறதுக்கும் வசதி இருக்கு. சாணம் கரைச்சு ஊத்துறதுக்கு ஒரு பெரியத் துளை, கழிவுகள் வெளியேறுறதுக்கு ஒரு பெரியத் துளை, கேஸ் வர்றதுக்கு சின்னத் துளை இது மூணும் இதுல இருக்கு.
முதல்ல அமைக்கறப்போ... 300 கிலோ சாணத்தை, 300 கிலோ தண்ணில கரைச்சு ஊத்தணும். காய்ஞ்ச சாணமாக இருந்தா... கேஸ் வெளிய வர ஒரு மாசம் ஆகும். புது சாணமா இருந்தா... 15 நாள்ல வந்துடும். கேஸ் வர ஆரம்பிச்ச பிறகு, தினமும் 20 கிலோ... இல்லனா... 25 கிலோ சாணத்தை தண்ணில கலந்து ஊத்தணும். இதுக்கு, வீட்டுல ரெண்டு மாடு இருந்தாலே போதும். சாண எரிவாயு தண்ணி அளவு சரியா இருக்கணும். கூடவோ, குறைச்சலாவோ இருந்தா... வாயு உற்பத்தி அதுக்கு தகுந்தபடிதான் இருக்கும்'' என்று சொன்னார்.
நிறைவாகப் பேசிய தம்பதி, ''இப்போல்லாம், 'சிலிண்டர் விலை ஏறிப்போச்சு’னு யாராவது எங்ககிட்ட புலம்பினா, 'கையில வெண்ணெய வெச்சிட்டு நெய்க்கு ஏன் அலையுறீங்க?னுதான் திருப்பிக் கேக்குறோம். இதுக்கு 10 ஆயிரம் ரூபாய்தான் மொத்தச் செலவு ஆச்சு. நாங்க ரெண்டு வருஷத்துலயே 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கேஸ் செலவுல அதை ஈடுகட்டிட்டோம். அதில்லாம இதுல விபத்து நடக்கவும் வாய்ப்பில்லை. இதைப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டா... கேஸ் பத்தின கவலையே இல்லாம இருக்கலாம்'' என்று விடை கொடுத்தனர்.
தொடர்புக்கு, கே. தங்கவேல்,
செல்போன்: 94880-42428.
''நாலு மாடு இருந்தா... நாமதான் நெய்வேலி!''
சுற்றுச்சூழலுக்கு பங்கம் இல்லாத மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்யப்படும் பேட்டரி பைக்கினை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார். ''30 ஆயிரம் ரூபாய் விலையில் வாங்கிய பின்பு 600 லிட்டர் பெட்ரோலை மிச்சம் செய்துள்ளேன்'' எனச் சொல்லும் தங்கவேல், ''மாடுகளை அதிகரித்து, அதன் மூலம் பயோ கேஸையும் அதிகரித்து, என் குடும்பத்துக்குத் தேவையான சமையல் எரிவாயுவையும் மின்சார உற்பத்தியையும் செய்துகொள்ளப் போகிறேன். இனி வரும்காலங்களில் கண்டிப்பாக விவசாயிகள் அனைவரும் இதை நோக்கி வந்தே ஆகவேண்டும். அரசாங்கம் கொடுக்கும் மின்சாரம், சிலிண்டர் எதுவும் நமக்குத் தேவையில்லை. நாலு மாடு இருந்தால், நாமேதான் நெய்வேலி, நாமதான் கூடங்குளம். அதற்கான நேரம் நெருங்கி விட்டது''என்கிறார் அழுத்தமாக.
நகரத்திலும் பயன்படுத்த முடியும்!
'பயோ கேஸ் ஹோல்டர்' விற்பனை செய்து வரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜுன் மோகனிடம் பேசியபோது, ''கிராமப்புற மக்கள், விவசாயிகள் மட்டுமல்ல... நகரவாசிகள்கூட இதைப் பயன்படுத்தி சமையல் எரிவாயுவை உற்பத்தி செஞ்சுக்க முடியும். ஒரு வீட்டுக்குத் தேவையான சின்ன அளவுல இருக்குற கலனை, வீட்டு மொட்டை மாடியிலயே வெச்சுப் பயன்படுத்திக்கலாம். அடிக்கடி வீடு
மாறினாகூட எடுத்துட்டுப் போக முடியும். கிராமத்து வீடுகள்ல அமைக்கறப்போ சின்னதா குழி எடுத்து, அதுக்குள்ள வெச்சுக்கிட்டா... இந்தக் கலன் உருளாம இருக்கும். நகரங்கள்ல அதுக்கு வாய்பில்லாததால... இரும்பு ஸ்டாண்ட் பயன்படுத்திக்கலாம்.
அடுக்குமாடி வீடுகள்ல இருக்குறவங்க... மொத்தமா சேர்ந்து பெரிய அளவுல அமைச்சு, வீணாகுற கழிவுகளைப் பயன்படுத்தியே கேஸ் உற்பத்தி பண்ணி பகிர்ந்துக்கலாம். காய்கறிக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், மனிதக் கழிவுகள், பசும்புல், மல்பெரி, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்... உட்பட மட்கக்கூடிய எல்லா பொருட்களையும் இதுக்குள்ள போட்டு, எரிவாயு உற்பத்தி பண்ண முடியும். எலுமிச்சை மாதிரி சிட்ரிக் அமிலம் உள்ள கழிவுகளை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாதிரியான ஊர்கள்ல காய்கறி மார்க்கெட் பக்கத்துல இருக்கறவங்களுக்கு... அதிகளவுல கழிவுகள் கிடைக்கும். அதை வெச்சு, அதிக எரிவாயு உற்பத்தி பண்ணி கரன்ட் கூட தயாரிச்சுக்கலாம். இரும்பு, சிமெண்ட் மூலம் சாண எரிவாயுக் கலன் அமைக்க மானியம் கொடுக்கறாங்க. ஆனா, இந்த பாலிதீன் ஹோல்டருக்கு மானியம் இல்லை. அரசாங்கம் மனசு வெச்சா... இதுக்கும் மானியத்தைக் கொடுத்து, இந்த முறையைப் பரவலாக்க முடியும்'' என்று சொன்னார்
சாண எரிவாயுவில் இருந்து மின்சாரம்!
'சாண எரிவாயுவைப் பயன்படுத்தி வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை தயாரிப்பதிலும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார், தங்கவேல். அதுபற்றிப் பேசிய தங்கவேல்,
''பழைய அம்பாசிடர் கார் டைனமோவை, சாண எரிவாயு மூலமா சுத்த வெச்சு, கரன்ட் உற்பத்தி பண்ற முயற்சியில இருக்கேன். ஆரம்பக் கட்டம் வெற்றிதான். வீடு முழுக்க இந்த கரன்ட்டை பயன்படுத்துற மாதிரி சீக்கிரமே இதை முழுமையா தயார் பண்ணிடுவேன். அதேமாதிரி, பயோ கேஸ் மூலமாத்தான் என்னோட யமாஹா பைக்கையும் ஓட்டிக்கிட்டிருக்கேன். கேஸை டூ வீலர்ல பயன்படுத்துறதுக்கான கருவியையும் நானே வடிவமைச்சுக்கிட்டேன். வீட்டுல இன்னும் நாலஞ்சு மாடுகள வாங்கிக் கட்டிட்டா... கேஸ் உற்பத்தி தன்னால அதிகரிச்சுடும். அதுக்குப் பிறகு, வீட்டுக்குத் தேவையான கரன்ட், வண்டிகளுக்குத் தேவையான கேஸ் எல்லாத்தையும் நானே உற்பத்தி பண்ணிக்கலாம்னு இருக்கேன். எல்லாரும் இப்படி மாறிட்டாங்கனா, அரசாங்கத்துக்கிட்ட கையேந்த வேண்டிய தேவையே இருக்காதே!'' என்றார் புன்னகையுடன்.
Excellent Mr. Thangavelu Sir. Me too interested to do the same in Mayiladuthurai. My mobile 9488133140
ReplyDelete