தென்னை செழித்தால்.. பண்ணை செழிக்கும் என்று கிராமத்தில் சொல்வார்கள். அதை உண்மையாக்கி, தனது வாழ்க்கையையும் செழிப்பாக்கி இருக்கிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி ராஜேந்திரன். பொள்ளாச்சி பகுதியே செழிப்பான பூமி. அதிலும் ஆழியார் அணையை ஒட்டிய பகுதி என்றால், கேட்கவா வேண்டும், இங்கே இருக்கும் புளியங்கண்டி பகுதியில்தான் பசுமை கட்டி நிற்கிறது, ராஜேந்திரனின் தென்னந்தோப்பு.
இங்கு மட்டுமல்ல பகுதி முழுக்கவே தென்னந்தோப்புகள் செழிப்பாகத்தான் நிற்கின்றன. ஆனால், தென்னையில் பெரிதாக லாபம் இல்லை என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் குரலாக இருக்கிறது. அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போலத்தான் தேங்காயின் விலை நிரந்தரமாக 2 ரூபாய் 3 ரூபாய் என்றே நீடித்துக் கொண்டிருக்கிறது! ஏதோ வரவுக்கும் செலவுக்கும் சரி என்கிற வகையில்தான் பலரும் தென்னை விவசாயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய நிலையில், ராஜேந்திரன் மட்டும் எப்படி தென்னை விவசாயத்தில் லாபத்தை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்? மஞ்சளும், பச்சையுமான இளநீர் குலைகளை ஆட்கள் லாரியில் ஏற்றிக்கொண்டிருக்க அதைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்த ராஜேந்திரன், லாரிகளை அனுப்பிவிட்டு வந்து, நம்மிடம் அமர்ந்தார்.
பொள்ளாச்சி காய்க்கு நல்ல கிராக்கி!
எனக்கு பூர்வீகமே இந்த ஊர்தான். எங்க பகுதியில் விளையும் தேங்காய்க்கும், இளநீருக்கும் தமிழ்நாடு முழுக்க நல்ல வரவேற்பு இருக்கு. பொள்ளாச்சி மண்ணிற்கும், இங்கே கிடைக்கும் தண்ணீருக்கும், சீதோஷ்ணத்திற்கும் தென்னை நன்றாக வளர்கிறது. அதிலும் இளநீர் சக்கைப் போடு போடுதுங்க என்றார். ஊரைச்சுற்றி எனக்கு நிறைய தென்னந்தோப்பு இருக்கிறது. ஒரு இடத்தில் இருக்கும் ஆறு ஏக்கர் தோப்பில் 30 வயதில் நாட்டுத் தென்னை மரங்கள் இருக்கு. அதில் கிடைக்கும் காயை கொப்பரைக்கு பயன்படுத்துகிறோம்.
இந்த இடம் ஆறரை ஏக்கர். இதில் முன்னாடி டி.ஜே. ரகத்தைத்தான் வைத்திருந்தேன். ஏழு வருடத்திற்கும் முன் ‘ராம் கங்கா’ ரகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, 200 கன்றுகளை வாங்கி நடவு செய்தென். இது மூன்று வருடத்தில் காய்ப்பிற்கு வரும் ரகம். இதில் வருடத்திற்கு சராசரியாக 300 தேங்காய் கிடைக்கிறது. கொப்பரை உற்பத்தி, இளநீர் தேவை இரண்டிற்கும், ஏற்ற ரகம். பொதுவாக இளநீரை வெட்டும் போது, ஒரு மரத்திலிருந்து … 200 காய்கள்தான் கிடைக்கும். ஆனால், ராம் கங்கா ரகத்தில் 400 காய்கள் வரைக்கும் கிடைக்கும். அதுதான் இந்த ரகத்தோட சிறப்பம்சம். திராட்சைக்குலைபோல் காய் தொங்குவதைப் பாருங்கள்’ என்று சந்தோஷத்துடன் சொன்ன ராஜேந்திரன் .. ராம் கங்கா ரக தென்னை மரங்களை நோக்கி கை நீட்டினார். மரம் கொள்ளாத அளவுக்குத் தொங்கிக் கொண்டிருந்தன காய்கள் !
சொன்னால் நம்பமாட்டீங்க… இந்த ரகத்தை உருவாக்கினது நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த உமாபதி என்ற விவசாயிதான். என்று ஆச்சரியப்படுத்திய ராஜேந்திரன், தென்னை பராமரிப்பு விஷயங்களைச் சொல்லத் தொடங்கினார்.
நேரடி விற்பனையில் கூடுதல் லாபம்!
இந்த ரகத்தில் ஒரு மரத்திற்கு தினமும் 150 லிட்டர் தண்ணீர் கொடுத்தாக வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு தடவை 5 கிலோ கோழி எருவையும், 5 கிலோ தொழுவுரத்தையும் கொடுக்கிறேன். யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மூன்றையும் கலந்து வருடத்திற்கு ஒரு முறை கொடுக்கிறேன்.
ஊசி வண்டு, காண்டாமிருக வண்டுகளை இனக்கவர்ச்சிப் பொறி மூலமாக கட்டுப்படுத்திடுவேன். 25 நாளுக்கு ஒரு முறை இளநி வெட்டுகிறேன். ஒரு இளநி 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரைக்கும் விலை போகிறது. வால்பாறை சாலையிலிருந்து நானே ஒரு இளநி கடை வைத்திருக்கிறேன். அங்கு ஒரு இளநி 20 ரூபாய் என்று விற்கிறேன். தினமும் 200 இளநி வரைக்கும் விற்றுவிடுகிறது. தென்னை விவசாயிகள், மொத்ததையும் முற்ற விட்டு தேங்காயாக விற்காமல், 25 சதவிகித அளவுக்கு இளநீராக வித்தா நல்ல லாபம் பார்க்க முடியும். இதை என்னுடைய அனுபவத்தால் சொல்கிறேன். இளநியாக விற்பதினால்தான் எனக்கு தென்னையில் நல்ல லாபம் கிடைக்கிறது என்றார் ராஜேந்திரன்.
இயற்கை பாதி, செயற்கை பாதி என்று விவசாயம் செய்கிறேன். முழுக்க முழுக்க இயற்கை முறையில் இதற்கான மாற்று வழி இருந்தால்… நிச்சயம் அதைக் கடைபிடிக்க நான் தயாராகவே இருக்கிறேன். ஏன்னென்றால்.. அதன் மூலம் இன்னும் கொஞ்சம் செலவு குறைந்தால்… கூடுதல் லாபம்தானே என்றார்.
இதைக் கேட்டதுமே, நாம் இயற்கை விவசாய வல்லுநர். மது. ராமகிருஷ்ணன் மற்றும் அரசூர் சோமசுந்தரம் ஆகியோரிடம் உடனடியாக செல்போன் மூலமாக ராஜேந்திரனிடம் பேச வைத்தோம். அவர்கள் இயற்கைத் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக அவருக்கு எடுத்துரைத்தனர். அதையெல்லாம் கேட்டுக் கொண்டு நம்மிடம் பேசிய ராஜேந்திரன், இதுவரைக்கும் அவங்க சொன்ன அத்தனை விஷயங்களுமே ரொம்ப திருப்திகரமனதாக இருக்கிறது. அவர்களுடைய பண்ணைக்கு நேரில் போய் பார்த்துவிட்டு வந்து நானும் முழு இயற்கை விவசாயியாக மாறப்போகிறேன் என்றார்.
இவர் இயற்கை விவசாயியாக மாறுவதன் மூலம் இவருக்கு மட்டுமல்ல.. நாட்டிற்கே.. ஏன் உலகிற்கே லாபம்தான் இடுபொருட்கள் என்கிற பெயரில் செயற்கை உரங்களைப் போட்டு பணத்தை இழப்பது தடைபடுவதோடு… சுற்றுச்சூழலுக்கும் கேடு வராதுதானே!
ராம் கங்காவிற்கு தனி கிராக்கி
ராஜேந்திரன் தோப்பில் நாம் சந்தித்த மொத்த இளநீர் வியாபாரி சக்திவேல், பொள்ளாச்சி பகுதியில் இருந்து மட்டும் கரூர், திருச்சி, சென்னை என்று தினமும் ஒரு லட்சம் இளநி போகிறது. இவருடைய தோப்பில் மட்டுமே, மாதம் 7 ஆயிரம் இளநி வெட்டுகிறோம். பொள்ளாச்சி இளநிக்கு தனி கிராக்கி இருக்கிறது. இந்த காய்களில் அதிகமாக தண்ணீர் இருப்பதுதான் காரணம். அதிலும் இந்த ராம் கங்கா இளநிக்கு தனி கிராக்கி இருக்கிறது. இந்த காய்களில் அதிகமாக தண்ணீர் இருப்பதுதான் காரணம். அதிலும் இந்த ராம் கங்கா இளநிக்கு தனி கிராக்கி இருக்கிறது. கடைக்காரர்கள் போன் செய்து போன தடவை இறக்கிய அதே காயை இறக்குங்க என்கிறார்கள். இந்த ரக இளநியை கேட்டு வாங்குகிறார்கள். அந்தளவிற்கு இதனுடைய சுவை தூக்கலாக இருக்கிறது. அதனால் இந்த ரகத்திற்குக் கூடுதலாக 50 காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள் என்றார்.
உப்பு நீருக்கும் ஏற்ற ரகம்
ராம்கங்கா ரகத்தை உருவாக்கிய உமாபதி, பல்லடம் அடுத்துள்ள நாவிதன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் இருக்கும் ‘கங்கா பாண்டம்’ என்கிற குட்டை ரகம், அதிக மகசூலைக் கொடுக்கக் கூடியது. அந்த ரகத்தோடு கேரள மாநிலத்தின் மேற்கு கடற்கரைப் பகுதி நெட்டை ரக தென்னையை இணைத்து, நான் உருவாக்கியதுதான், ராம் கங்கா, இது மூன்று ஆண்டுகளில் காய்ப்பிற்கு வருவதுடன் அதிகளவு சுவையான தண்ணீர் உள்ள இளநியைக் கொடுக்கும். முற்றிய தேங்காயில் அதிக கொப்பரையும் கிடைக்கும் (100 தேங்காய்க்கு 18 கிலோ கொப்பரை). உரித்த தேங்காயின் எடை 600 கிராம் அளவில் இருக்கும்.
27 அடி இடைவெளியில் மூன்று கன் அடி அளவிற்குக் குழியெடுத்து அதில் தொழுவுரம் – 5 கிலோ, தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் ஆகியவற்றை இட்டு ஒன்றரையடி ஆழத்தை நிரப்பி, நாற்றை நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் 63 நாற்றுகளை நடலாம். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்வது நல்லது. இது உப்புத் தண்ணீரிலும் வளரக்கூடிய ரகம். அதே சமயம், அதிக தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே இதைப் பயிரிட முடியும்.
மத்திய தென்னை ஆராய்ச்சி நிலையம் இந்த ரகத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒரு நாற்றை உற்பத்தி செய்ய இரண்டு ஆண்டுகள் ஆகும். ஒரு நாற்றை 250 ரூபாய் விலைக்கு விற்பனை செய்கிறேன். இந்த ரகத்தை நடவு செய்த விவசாயிகள் அனைவரும் நல்ல மகசூல் எடுத்து வருகிறார்கள் என்றார் உமாபதி.
தொடர்புக்கு
எஸ்.ராஜேந்திரன், செல்போன் : 98659 – 97070
No comments:
Post a Comment