உலகத்தில் சுமார் 500 மிலியன் வெள்ளாடுகள் உள்ளன. இவற்றில் 41% ஆப்பிரிக்காவிலும், 37% இந்தியத் துணைக் கண்டத்திலும் உள்ளன. இந்த விபரமே ஏழைகளின் பசு வெள்ளாடு என்பதனை விளக்கவில்லையா? அடுத்து ஒரு நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளிலேயே வெள்ளாடுகள் அதிகம் உள்ளன. இது, அவற்றை மேய்ச்சலுக்கு வெளியே அனுப்பாமலே வளர்க்க முடியும் என்பதனை விளக்குகின்றது. வெள்ளாடுகள் மாடுகளைப் போன்ற கொம்புகளை உடையதால், அவை மாடுகளின் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். விலங்கியல் பகுப்பின்படி, நமது வெள்ளாடுகள் காப்ராகிர்க்ஸ் (Capra hircus) எனப்படும். செம்மறி ஆடுகள் ஓவிஸ் ஏரிஸ் (Ovis aries) எனப்படும். ஆகவே இவை ஒன்றோடொன்று இனச் சேர்க்கையாவதில்லை என்றும் தெரியவரும். வெள்ளாடுகளில் 60 மரபுக் கூறுகள் (Chromosomes) உள்ளன. வெள்ளாடுகளின் பெயரில் சில ஊர்கள் உண்டு. ஒரு தீவு கூட உண்டு. சிதம்பரனார் மாவட்டத்தில் நாலாட்டின்புதூர் என்னும் ஊர் உள்ளது தெரியுமா?.வெள்ளாடுகள் ஏன் ஏழைகளால் பெரிதும் விரும்பி வளர்க்கப்படுகின்றன?
- ஒரு மாட்டிற்கு ஆகும் தீவனத்தில் 6-7 வெள்ளாடுகளை வளர்த்து விடலாம்.
- இவற்றை வளர்க்கப் பெரிய வசதியான கொட்டகை தேவையில்லை. மழைக் காலத்தில் வீட்டின் தாழ்வாரங்களிலேயே அவை ஒதுங்கிக் கொள்ளும்.
- ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு நடமாடும் ஆடு, நடமாடும் பணம் போன்றது. நமது நாட்டினருக்கு, மந்தையில் ஆடு முந்தியில் பணம் போன்றது.
- முட்செடிகள் உட்பட எல்லா வகைத் தாவரங்களையும் உண்டு வாழக் கூடியவை. உயர்ந்த மலை, பாறைப் பகுதிகளிலும் ஏறி மேயக் கூடியவை.
- செம்மறி ஆடுகள் போலன்றித் தாமே மேய்ச்சலுக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பிவிடும்.
- வெள்ளாடுகளில் நோய்ப் பிரச்சனைகள் குறைவு.
இறைச்சி, பால், தோல், எரு ஆகிய நான்கு பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகளுக்கு அசையக்கூடிய உறுதியான மேல் உதடுகள் உள்ளதால் முட்செடிகளையும் உண்ணும் வல்லமை பெற்றவை. மேலும் நெருங்கிய கூரிய கடினமான பற்கள் உள்ளதால், சிறிய தானியங்களையும், கடினமான விதைகளையும் அரைத்து உண்ணவல்லன.
பாலை நிலப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு வாரம் மூன்று முறை நீர் வழங்கினால் போதும். கடுமையான பஞ்சம் ஏற்படும்போது ராஜஸ்தான் பகுதியில் ஓர் ஆடும், ஒரு வன்னி மரமும் தம்மைக் காத்துக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளாட்டு இனங்கள்
பள்ளை ஆடு இவை பலவகையான நிறத்துடன் இருக்கும். குட்டையானவை. இவற்றின் சிறப்பு. இவை பல குட்டிகளைப் போடுவதுதான். சில 4, 5 குட்டிகள் – ஏன்? ஒன்றே கூட ஈனும். சில பகுதிகளில் இவை சீனி ஆடுகள் எனப்படும். இவற்றிற்கு மூழிக் காதுகள் உண்டு.
கொடி ஆடு இவை மிக உயரமானவை. பல்வகை நிறங்களுடன் இருக்கும். ஒன்று அல்லது இரு குட்டிகள் மட்டுமே ஈனும். இவை செம்மறி ஆடுகளுக்கு வழி காட்டியாகவும் வைத்துக் கொள்ளப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பல இனச் செம்மறி ஆடுகள் இருப்பினும் வெள்ளாடுகளில் ஓர் இனம் கூட இல்லாமல் இருப்பது ஒரு குறைபாடே. உலகெங்கும் புதிய இனங்களைத் தேற்றுவித்தவர்கள் தனிப்பட்ட முற்போக்குப் பண்ணையாளர்களே. நமது காங்கேயம் இன மாடுகள் பழைய கோட்டைப் பட்டைக்காரரால் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறே இறைச்சிக்கொன்றும், பாலுக்கொன்றும் வெள்ளாட்டு இனம் நமது வேளாண் குடி மக்களால் தோற்றுவிக்கப்படும் என உறுதியாக நம்புகின்றேன். இப்போது முற்போக்குக் கால்நடை வளர்ப்பபோர் வெள்ளாடு மீது காட்டும் ஆர்வம் நிச்சயமாக ஓர் இனத்தை உருவாக்கும்.
தற்போது சில முக்கிய, வெளி நாட்டு இனங்கள் பற்றிப் பார்க்கலாம்.
வெளி நாட்டு இனங்கள்
சமுனாபாரி (Jamunapari) இவ்வினம் உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்தது. இவ்வின ஆடுகள் உயர்ந்த கால்களையும், பெரிய உடலமைப்பையும் கொண்டவை. இவை, பல்வேறு உடல் நிறத்துடன் இருக்கும். வெள்ளை, மஞ்சள் நிறம் கலந்த செம்மை நிறத்துடனோ, செம்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளுடனோ இருக்கும். இவற்றின் சிறப்பு அம்சங்கள் என்னவெனின், இவை நீண்ட, பெரிய, தொங்கும் காதுகளையும், ரோமானிய மூக்கையும் கொண்டிருப்பதாகும்.
கிடாக்கள் 60 முதல் 90 கிலோ எடை இருக்கும். பெட்டை ஆடுகள் 50 முதல் 60 கிலோ எடை இருக்கும். பொதுவாக, ஆண்டிற்கு ஒரு முறை ஒரு குட்டி மட்டும் போடும். இரு குட்டிகள் போடுவதும் உண்டு. தினமும் சராசரியாகக் கொடுக்கும் பாலளவு 2 முதல் 3 கிலோ. சின்ன சேலம், செட்டிநாடு ஆகிய அரசுப் பண்ணைகளில் இவ்வினங்கள் வளர்க்கப்படுகின்றன.
பார்பாரி (Barbari) இது சோமலாய நாட்டைச் சார்ந்தது. தற்போது உத்திரப்பிரதேசப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவ்வின ஆடுகள் குட்டையான கால்களுடன் காணப்படும். இவை பொதுவாக, வெள்ளை நிறத்துடன் இருக்கும். சிலவற்றிற்கு வெள்ளையில் செம்மை நிறப் புள்ளிகளும் உடலில் இருக்கும். கிடாக்கள் 40 முதல் 50 கிலோ எடையுடனும் பெட்டை ஆடுகள் 35 முதல் 40 கிலோ எடையுடனும் இருக்கும். இந்த இன வெள்ளாடுகள் 12-15 மாத இடைவெளியில் இருமுறை குட்டி போடும். பொதுவாக இரட்டைக் குட்டி போடும். தினசரி பால் அளவு 750 கிராம்.
பீட்டல் (Beetal) இவை பெரிய ஆடுகள், சராசரி பாலளவு 1 கிலோ. இவ்வினம் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தது. இந்த ஆடுகளுக்கென்று சிறப்பான நிறம் என்று ஏதும் கிடையாது. பொதுவாகக் கறுப்பு, செந்நிறம், வெள்ளை மற்றும் அரக்கு நிறப் புள்ளிகளுடன் இருக்கும். சமுனாபாரி இனம் போன்று ரோமானிய மூக்கு இவ்வினத்திற்கும் உண்டு. ஆனால், குட்டையான தொங்கும் காதுகள் மட்டுமே உள்ளன. பின்னோக்கித் திருகிய கொம்புகளை உடையன. கிடாக்களுக்கு மட்டும் தாடி உண்டு. கிடாக்களின் எடை 50 – 75 கிலோ; பெட்டை ஆடுகள் 40 முதல் 50 கிலோ. 9 மாத வயதில் இறைச்சிக்கு வெட்டலாம். எடை 16 கிலோ.
மார்வாரி (Marwari) இந்த வெள்ளாட்டினம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தது. இது நடுத்தர உடலமைப்புக் கொண்டது. இது சிறந்த இறைச்சி இனமாகும். இது கருமையான நிறம் கொண்டது. கொம்புகள் திருகி இருக்கும். தினசரி பாலளவு 0.5 கிலோ. ஆண்டிற்கு 300 கிராம் முடியும் கொடுக்கும்.
சுர்த்தி (Surti) இவ்வினம் குஜராத்திய மாநிலத்தைச் சார்ந்தது. சிறிய இனம். தூய வெள்ளை நிறம் கொண்டது. சிறந்த பால் வழங்கும் இனம். சராசரி பாலளவு 2.5 கிலோ. ஆழ்கூள முறை வளர்ப்பிற்குச் சிறந்தது. உடல் எடை ஆண் 30 கிலோ பெண் 32 கிலோ.
ஓஸ்மானாபாடி (Osmanabadi) இது மராட்டிய மாநிலம்தைச் சார்ந்தது. பெரிய உடலமைப்புக் கொண்டது. நீண்ட கொம்புகளையும், கருமை நிறத்தையும் உடையது. சில வெள்ளையானவை. இது இறைச்சிக்கும் பாலுக்கும் ஏற்ற இனம். ஆண் எடை 34 கிலோ, பெண் எடை 32 கிலோ.
தலைச்சேரி (Tellichery) மலபாரி எனவும் அழைக்கப்படும். இது கேரள மாநிலத்தின் இனமாகும். நடுத்தர உடலமைப்புக் கொண்டது. பெரும்பாலும் வெண்மை நிறமுடையவை. பிற நிறங்களும் இவ்வினத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இரண்டு, மூன்று குட்டிகள் போடும். பாலுக்கு ஏற்ற இனம். ஆண், பெண் இரண்டிலும் சிறு கொம்புகள் உள்ளன. ஆண் எடை 39 கிலோ. பெண் எடை 31 கிலோ. புதுக்கோட்டைப் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன.
வங்காளக் கறுப்பு (Black Bengal) இது வங்க மாநிலம் மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள இனமாகும். இது இறைச்சிக்கு சிறந்தது. அவ்வாறே அதன் தோலுக்கு பெயர் பெற்றது. பொதுவாக இரண்டு குட்டிகள் போடும்.
காஷ்மீரி (Kashmiri) இது காஷ்மீரிலும் திபேத்திலும் உள்ள இனமாகும். வெள்ளை மற்றும் கறுப்பும் வெள்ளையும் இணைந்த நிறத்துடன் காணப்படும். இந்த ஆடுகள் கடுமையான குளிரையும், தாங்க வல்லவை. இதற்காக பாஸ்பினா எனப்படும் மெல்லிய கம்பளி முடிக்கடியில் வளர்க்கின்றது. இவை குளிர்காலத்தில் வளர்ந்து, வசந்த காலத்தில் உதிர்ந்து விடுகின்றன. இவை சீப்பு மூலம் சீவிச் சேகரிக்கப்பட்டு, உயர்ந்த கம்பளங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆடுகள் இறைச்சியும் வழங்குவதுடன் சுமையையும் எடுத்துச் செல்லவல்லவை.
பாஸ்மினா (Pashmina) இவை இமாசலப்பிரதேசம் மற்றும் லடாக் பகுதியில் உள்ளன. இவை சிறியவை. இவ்வின ஆடுகளில் பாஸ்மினா கம்பளி முன்சந்துகளிலும், உடல் ஓரங்களில் மட்டும் வளரும். இலை வெள்ளை மற்றும் அரக்கு நிறமுடையவை. சாம்பல் நிறம் கொண்டவையும் உண்டு. இவை உயர்ந்த மலைப் பகுதிகளில் சுமை ஏற்றிச் செல்ல உதவுகின்றன.
No comments:
Post a Comment