தமிழர்கள் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். பசுவை செல்வத்தின் சின்னமாகவும் உற்பத்தியின் அடையாளமாகவும் வழிபடுதல் தமிழர்களின் வாழ்வியல் வழியாகும்.
மனிதன் பிறந்தது முதல் அவனுக்குப் பால் புகட்டப்படுகிறது. இறந்த பிறகும் எரித்த அல்லது புதைத்த இடத்தில் பால் ஊற்றப்படுகிறது. வாழ்விலும் சாவிலும் இணைபிரியாதது பால். பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லா நேரங்களிலும் உண்ணப்படுகின்றன.
தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பசு சாஸ்திரம், பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல கஜ சாஸ்திரம், அஸ்வ சாஸ்திரம் முதலான பல நூல்களில், அவற்றின் மரபுவழி சிகிச்சைக்காக என்னென்ன மூலிகைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாகப் பதிப்பித்து வைத்துள்ளார்கள்.
கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்களில் சுமார் 70 சதவீதத்தினர் கால்நடைகளின் துணைப் பொருள்களைக் கொண்டே வாழ்க்கை நடத்துகின்றனர். உலகக் கால்நடையில் 20 விழுக்காடு இந்தியாவில்தான் உள்ளது.
இன்றைக்கும் கிராமங்களில் பசு, கன்று ஈன்றவுடன் இளம் மூங்கில் தழைகளைத் தின்னக் கொடுப்பார்கள். அந்தத் தழைகளைத் தின்ற 3 மணி நேரத்தில் நஞ்சுக்கொடி கருப்பைப்பிடிப்பிலிருந்து தொடர்பை விலக்கி விட்டுவிடும். உடனே அப்படியே எடுத்துவந்து முருங்கை மரத்தின் அடியில் புதைத்து அதையும் உரமாக்கிவிடுவார்கள். ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு உதவும்.
வயலில் நெல் அறுக்கின்றபோது ஒரு பழமொழி சொல்வார்கள், ""நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு'' என்று. மாட்டுக்கு வைக்கோல் இடுவதைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள். மாட்டின் கழிவு சாணம், மீன்களுக்கு உணவாகப் போடப்படுகிறது. மீன் மனிதனுக்கு உணவாகிறது. மனிதக் கழிவு மண்ணுக்கு உரமாகிறது.
உயிர்ச்சங்கிலியின் ஒவ்வொரு தொடர்பும் இயற்கையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலவழி மருத்துவப் படையெடுப்பால் மரபுவழி மூலிகை மருத்துவம் வழக்கொழிந்து போனது. தஞ்சையில் இயங்கிவரும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கால்நடை மருத்துவ மூலிகைகளை உழவர் பயிற்சிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள், பயன்பாட்டுக்குக் கொண்டுவருகிறார்கள். கிராம கால்நடைக் காப்பாளர்களுக்கு தொடர்ந்து பத்தாண்டுகளாக மாதந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆண்டுகள்தோறும் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடைபெறுகின்றன.
கால்நடைகளில் கோமாரி நோயைக் குணப்படுத்த தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கில் செலவிடுகிறது. இன்றும் கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் இல்லாத கிராமங்களில், ஒரு முற்றிய தேங்காய்த் துருவலோடு மஞ்சளையும் வேப்பிலையையும் சம அளவு அரைத்துக் கொடுத்து குணப்படுத்துகிறார்கள்.
சினைக்கு வராத மாடுகளுக்கு தொடர்ந்து ஒரு மாதம் சோற்றுக்கற்றாழை மடல்களைக் கொடுத்து பருவமடைய வைக்கின்றனர். மாடுகளின் மலட்டுத்தன்மையை நீக்க, ஆனை நெருஞ்சி தழைகளைக் கொடுத்து குணப்படுத்துகின்றனர். கால்நடைகளின் சுவாசக் கோளாறுகளுக்கு ஆடாதொடை இலைகளையும் ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி தழைகளையும் தூதுவளைத் தழைகளையும் பயன்படுத்துகின்றனர்.
கால்நடைகளின் கழிச்சல் நோய் குணமாக கொய்யா மரத்தின் இலைகளைக் கொடுத்தும் மாதுளம் பிஞ்சுகளைக் கொடுத்தும் குணப்படுத்துகின்றனர்.
செரிமானக் கோளாறுகளுக்கு இஞ்சி, உப்பு அல்லது சுக்கு, பிரண்டை பயன்படுத்துகின்றனர். காயங்களை ஆற்றுவதற்கு குப்பைமேனி, திருநீற்றுப்பச்சிலைகளைக் கசக்கித் தடவுகின்றனர்.
ஆடுகளைப் பற்றிய ஒட்டுண்ணிகளை விரட்டத் தும்பைச் செடிகளைப் பயன்படுத்துகின்றனர். காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்புப் பொடியைக் கொடுக்கின்றனர். வேம்பும் மஞ்சளும் கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தோல் நோய்களுக்கு மருதாணி இலைகளை அரைத்துத் தடவுகின்றனர்.
விஷக்கடிகளுக்கு அருகம்புல் சாற்றைக் கொடுக்கின்றனர்.
மாடுகளுக்கு மடிநோய் கண்டால் மரபுவழி மருத்துவத்தைக் கடைப்பிடித்தால் ஒராண்டுக்கு சுமார் 3 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். இப்போது ஆங்கில மருத்துவத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி ஒரு வாரத்தில் குணப்படுத்துகிறார்கள். ஆனால் மடியில் செலுத்தப்படும் நஞ்சு, 3 வாரங்களுக்கு கறக்கப்படும் பாலில் கலந்து வெளியேறுகிறது. அந்தப் பாலை குடிக்கிறவர்களுக்கு - குறிப்பாக - குழந்தைகளுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குகின்றன. பல வீரியமிக்க மருந்துகள் கால்நடைகளின் உடலிலேயே தங்கிவிடுகின்றன.
2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட உணவுப்பொருள் பாதுகாப்புச் சட்டத்தின்படி கால்நடைகளிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களான பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் மருந்துப் பொருள்களின் எச்சம் கலப்பது குற்றமாகும். கால்நடைகளுக்கு ஆன்டிபயாடிக் ஊசி போட்டால் அதன் பாலை குறைந்தபட்சம் 21 நாள்களுக்குப் பயன்படுத்தக்கூடாது.
இப்போது ரசாயன உரங்களின்றி பூச்சி மருந்துகள் அடிக்கப்படாமல் வளர்க்கப்படும் பசுந்தீவனங்களையும் பசுந்தீவனப் புல்லையும் கொடுத்து பராமரிக்கப்படும் பசுவின் பால் லிட்டருக்கு ரூ.40 என விற்கப்படுகிறது. இயற்கை உணவுக்கு எப்போதும் பற்றாக்குறை உள்ளது.
1967-ஆம் ஆண்டு தி.மு.க. முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது ஒரு கால்நடை மருத்துவமனைப் பெருவிழாவில் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை பங்கேற்றார். ""நம் நாட்டு வேளாண்குடிமக்கள் மிகவும் ஏழைகள். அவர்கள் கால்நடை வளர்ப்பதை தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கால்நடைகளைப் பராமரித்து வருகிறவர்கள். அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே கிடைக்கும் சித்த, ஆயுர்வேத மருத்துவ மூலிகைகளைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்த நீங்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.
அப்போது கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநராக இருந்த டாக்டர் மந்திரமூர்த்தி, டாக்டர் எஃப்.டி. வில்சன் முதலானோர் தனியாக ஆணை பிறப்பித்து, அரசு கால்நடை மருத்துவமனைகளில் சுக்கு, சீரகம், மஞ்சள், அதிமதுரம் முதலான மருந்துகளை வாங்கிவந்து அன்றாடம் பயன்படுத்தவைத்தார்கள். மரபுவழி மருத்துவத்தைக் கெüரவக் குறைவு என்று கருதியோ என்னவோ கால்நடை மருத்துவர்கள் பிறகு கைவிட்டுவிட்டார்கள்.
No comments:
Post a Comment