இயற்கை வேளாண்மையை நோக்கி ஓர் இனிய பயணம்
“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.
தரணியைக் காக்கும் தலையாய தொழிலாம் வேளாண்மை, ஆண்டவனால் அனுப்பப்பட்ட ஆதி மனிதன் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு வழிவகுத்தது விவசாயம் தான்.
வேளாண்மை என்பது உலக உயிர்களின் பசியைப் போக்குவதற்கு பயிர்களை விளைவிப்பதாகும்.
இன்று உலகில் பல்வேறு மக்கள் பல முறைகளில் வேளாண்மை செய்கின்றனர், அதில் பண்பட்ட மக்கள் மண்ணைப் புண்படுத்தாத இயற்கை வேளாண்மை செய்கின்றனர்.
இயற்கை பற்றாளர்
இயற்கை வேளாண்மை பற்றி பேசும் இந்த நேரத்தில் நாம் கண்டிப்பாக இயற்கை வேளாண்மையின் தந்தை மசானபு ஃபுகோகா அவர்களை பற்றியும், அவர்களின் கருத்துகளைப் பற்றியும் இங்கு கட்டாயம் நினைவு கூற வேண்டும். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஃபூகோகா அவர்கள் இயற்கையின் பின்னணியில் செடிகள் வளர்ப்பில் பல ஆராய்ச்சிகள் செய்து தமது “ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் நூலின் மூலம் இவ்வுலகிற்கு இயற்கை வேளாண்மையின் .இன்றியமையாமை பற்றி எடுத்தியம்பினார்.
அவர் தன் நூலில் இயற்கை வேளாண்மைக்கு என சில கொள்கைகளை கூறுகின்றார். அவை
௧. எந்த ஒரு இரசாயன உரங்களும் தேவை இல்லை
௨. பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவை இல்லை
௩. அடிக்கடி களை எடுக்கத்தேவை இல்லை
௪. அடிக்கடி மண்ணை உழத்தேவை இல்லை
௫. இயந்திரங்களும் தேவை இல்லை
இயற்கையே அனைத்தையும் நிகழ்த்தும், மனிதன் எதுவும் செய்யத் தேவை இல்லை என்கிறார். அவருடைய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகில் பல இடங்களில் இயற்கை விவசாயம் நடை பெற்று வருகிறது.