இன்றைய தேதியில் நாம் மிக அதிக பணத்தைச் செலவு செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்குதான். இதுவரை இல்லாத பல நோய்கள் நம்மை தாக்கக் காரணம், செயற்கையான ரசாயன உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை நாம் பெருமளவில் உட்கொள்ள ஆரம்பித்ததுதான். செயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் காய்கறிகளை ஒதுக்கிவிட்டு, இயற்கையான உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு இப்போது மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இயற்கை உரங்களில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் மண் புழு உரம்.
ஒவ்வொருவர் வீட்டிலும் காய்கறிகள், பழங்கள், உணவு போன்ற மக்கும் கழிவுகள் நிறையவே கிடைக்கின்றன. தேவை இல்லாததால் தூக்கி எறியப்படும் இந்த கழிவுகளைக் கொண்டு மண் புழு உரம் தயாரிக்க பயன்படுத்தினால், நல்ல லாபம் பார்க்க முடியும். 'வெர்மி கம்போஸ்ட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மண் புழு உரம், நிலத்திற்கு மாசு ஏற்படாமல் தடுப்பதோடு, நம் உடலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத காய்கறிகளை அதிக அளவில் விளைவிக்கவும் உதவுகிறது. மண் புழு உரம் தயாரிக்கும் தொழிலில் அனைவரும் இறங்கி ஜெயிக்க முடியும். ஆனால், அதற்கென இருக்கும் தயாரிப்பு முறையை மட்டும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.
சந்தை வாய்ப்பு!
விவசாயத்திற்கும், தரிசுநில மேம்பாட்டிற்கும் மிகவும் பயன்படக்கூடியது இந்த மண் புழு உரம். வீடுகளில் செடி வளர்ப்பவர்களுக்கும், தோட்டம் அமைத்திருப்பவர் களுக்கும் இந்த மண் புழு உரம் அதிக நன்மை தருபவை. நஞ்சை நிலங்களில் பல விவசாயிகள் மண்புழு உரம் உபயோகிப்பதன் மூலம் தங்களது விளைச்சலை அபரிமிதமாகப் பெருக்கிக் காட்டியுள்ளனர். கோழி வளர்ப்பவர்கள் அதற்குத் தீனியாக மண் புழுக்களைப் போடுகிறார்கள். விலை உயர்ந்த மீன்குஞ்சுகளை வாங்கி வளர்த்தாலும் அதற்கு இரையாக மண் புழுக்களை உணவாகப் போடுகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், மண் புழு உரம் போட்டு பயிரிடப்பட்ட திராட்சைகள் நல்ல தரத்துடனும், அதிகளவில் விளைச்சலும் கொடுத்தது என தெரிய வந்துள்ளது. எனவே, இதுபோன்ற இயற்கை உரத்திற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
இந்த பிஸினஸ் ஆரம்பிக்க குறைந்தபட்சம் 500 சதுர அடி இடம் தேவைப்படும். கிராமப்புறங்களில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் தங்களது தோட்டத்திலேயே மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம். மொட்டை மாடியில், மேல் சுவர் கெடாதபடி பிளாஸ்டிக் ஷீட் போட்டு, அதன் மீது இந்த மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம்.
மூலப் பொருட்கள்!
மாட்டுச் சாணம், கோழி இறகு, மீன் கழிவுகள், அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற மக்கும் தன்மையுடைய அனைத்துப் பொருட்களையும் பயன்படுத்தலாம்.
தயாரிப்பு முறை!
மாட்டுச் சாணம், மக்கக்கூடிய இலை தழைகள், சருகுகள் என எல்லாவற்றையும் ஈரப்பதம் கலந்த மண்ணில் போட்டு, மாட்டுச் சாணத்தை கரைத்துத் தெளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் அந்த மண்ணில் போட்ட அத்தனை பொருட்களும் மக்கிவிடும். இதன் பிறகு மேற்கொண்டு தண்ணீர் ஊற்றாமல் காற்றுப்படுகிற மாதிரி வைக்க வேண்டும். இதில் மண் புழுக்களை விட்டால் 40-50 நாட்களில் மண் புழு உரம் தயாராகிடும். இதன் பிறகு உரங்களைத் தனியாகவும், மண் புழுக்களைத் தனியாகவும் எடுத்து விற்பனை செய்யலாம்.
முதலீடு!
ஆண்டுக்கு 200 மெட்ரிக் டன் மண் புழு உரம் தயாரிக்க குறைந்த முதலீடே போதுமானது. செயல்பாட்டு மூலதனம், முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் என மொத்தம் சுமார் 62,000 ரூபாய் வரை செலவாகும்.
இயந்திரங்கள்!
மிகப் பெரிய அளவிலான இயந்திரங்கள் கொண்டு செய்யப்படும் தயாரிப்பு அல்ல இது. பெரும்பாலும் நம் உடலுழைப்பைக் கொண்டே தயார் செய்யக்கூடியது. எனினும், பெரிய அளவில் செய்யும்போது வேலை சுலபமாக பவர் டிரைவன் சாஃப் கட்டர், எடை போடும் இயந்திரம், தண்ணீர் பாய்ச்சுவதற்கு குழாய் மற்றும் விவசாயம் சார்ந்த சில கருவிகள் இந்த தொழிலுக்குப் போதுமானவை. இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தாராளமாகக் கிடைக்கிறது.
வேலையாட்கள்!
தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்ற வேலையாட்கள் இதற்கு வேண்டும் என்று கிடையாது. விவசாய வேலைக்குப் போகும் ஆட்கள் போதும். கிராமப்புறங்கள் எனில் ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது. ஆண்டுக்கு 200 மெட்ரிக் டன் மண் புழு உரம் தயாரிக்க மொத்தம் ஐந்து நபர்கள் போதுமானது.
சாதகங்கள்!
இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப் படும் விளைபொருட்களை அதிக ஆர்வத்துடன் மக்கள் வாங்குகின்றனர். உடல் நிலையை பேணுவது குறித்த விழிப்புணர்வு அதிகளவில் மக்களிடம் ஏற்பட்டு வருவதால், இயற்கையான உரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அதிகளவு மவுசு ஏற்பட்டிருக்கிறது.
பாதகங்கள்!
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரத் தயாரிப்பு படுக்கையை மாற்றுவது.
இப்படி பாதகங்களை விட சாதகங்களே அதிகமாக இருப்பதால், புதிதாக பிஸினஸ் செய்ய நினைப்பவர்களும், ஏற்கெனவே வேறு பிஸினஸ் செய்பவர்களும், வீட்டிலிருப்பவர்களும் மண் புழு தயாரிப்பு தொழிலில் அருமையாக இறங்கலாம்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் : கி.ச.திலீபன்
படங்கள் : கி.ச.திலீபன்
''இயற்கை விவசாய ஆர்வலர்கள் மண்புழு உரங்களையும், மண்புழுக்களையும் வாங்க ஆவலாக இருந்தும், இத்தயாரிப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. தோட்டம், காடு இருக்கிற விவசாயிகள் விவசாயம் செய்துகொண்டே சைடு பிஸினஸாக இந்த தொழிலை செய்தால் மகத்தான வருமானம் பார்க்கலாம். தவிர, குறைந்தளவு முதலீட்டில் புதிதாக பிஸினஸ் செய்ய நினைப்பவர்களும் இத்தொழிலில் இறங்கலாம். இப்போது ஒரு கிலோ மண் புழு 300 ரூபாய் என்கிற அளவிலும் மண்புழு உரம் கிலோ எட்டிலிருந்து பத்து ரூபாய் வரையும் விற்பனை ஆகிறது. மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மண்புழு உரம் தயாரிக்க நிழலான இடம் தேவை.
சிறிய அளவில் செய்கிறவர்கள் மரத்து நிழலில்கூட மண் புழு படுக்கையை அமைக்கலாம். ஆனால், கொஞ்சம் பெரிய அளவில் செய்ய நினைப்பவர்கள் அதற்கென தனியாக ஷெட் போடுவது அவசியம். மண் புழு உரம் பதப்படுத்தும்போது, எந்நேரமும் அது ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். உரம் தயாரிக்கிற இடம் இருட்டாக இருப்பது நல்லது. மண்புழு உரம் தயாரிக்க பெரிதாகப் பாடுபட வேண்டியதில்லை என்றாலும், சரியானபடி பராமரிக்க வேண்டும். மண் புழு உரம் தயாரிப்பது தொடர்பாக யார் வந்து கேட்டாலும், இலவசமாக சொல்லிக் கொடுக்கவும் நாங்கள் தயார்!''
|
No comments:
Post a Comment