கருவேப்பிலை இல்லாத சமையல் இருக்காது. கருவேப்பிலை சாகுபடி எப்போதும் நல்ல லாபம் தருவதாக இருக்கிறது. தொடக்கத்தில் பயிரிட்டு வளர்ப்பது கடினம் போல் தோன்றினாலும், வளர தொடங்கி விட்டால் விவசாயிகளை வியாபாரிகள் நிலத்திற்கு தேடிவந்து எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். கருவேப்பிலை களர்நிலம் தவிர மற்ற நிலங்களில் நன்றாக வளரக்கூடியது. செம்மண்ணில் சிறப்பாக வளரும். விதைகளை சேகரித்து எடுத்துக் கொண்டு சிறிய பாலிதீன் பைகளில் மண்நிரப்பி அதில் விதைகளை ஊன்ற வேண்டும். ஆடி மாதத்தில் விதை வாங்கி வந்து நாற்று விட்டு, ஐப்பசி மாதத்தில் வயலில் எடுத்து நட வேண்டும். ஆடி மாதத்தினை தவிர மற்ற காலங்களில் விதை எடுக்க கருவேப்பிலை பழங்கள் கிடைக்காது. விதை ஊன்றும் போது அரை விதை மண்ணின் உள்ளேயும், மீதி விதை வெளியேயும் இருக்குமாறு ஊன்ற வேண்டும். விதை சற்று ஆழமாக மண்ணிற்குள் புதைந்து விட்டால் முளைக்காமல் போய்விடும். ஏக்கருக்கு எட்டாயிரம் பாலிதீன் பைகள் கொண்ட விதை நாற்றுகளை தயார் செய்யலாம். இப்படி விதை ஊன்றப்பட்ட பைகளின் மேல் வைக்கோலினை பரப்பி 15 நாள்கள் வரை வைக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு பிறகு வைக்கோலினை நீக்கி விட வேண்டும். தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை நீர் விட்டு வரவேண்டும். இந்த நிலையில் அரை அடி உயரத்திற்கு செடி வளர்ந்திருக்கும். இந்த கட்டத்தில் செடிகளை எடுத்து வயலில் நடவேண்டும்.
ஒவ்வொரு செடிக்கும் இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும். தண்ணீர் செல்லும் பாரின்அளவு இரண்டரை அடி இருக்க வேண்டும். செடியினை அரை அடி ஆழத்தில் குழி தோண்டி நடவேண்டும். செடி வைத்த உடன் தண்ணீர் விட வேண்டும். பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டு வர வேண்டும். கருவேப்பிலை வறட்சியை தாங்கி வளரும் பயிர் ஆகும். முதல் அறுவடை செய்ய ஆறு மாதம முதல் எட்டு மாதம் ஆகும். அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது எண்பது நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
கருவேப்பிலையை இலைப்புள்ளி மற்றும் அசுவனி போன்ற நோய்கள் தாக்குவதுண்டு. இந்த நோயை அகற்ற மோனோசில், பெவிஸ்டின், ஸ்பார்க், செப்டோசைக்கிள் போன்ற மருந்துகளை தெளிக்கலாம். கராத்தே அல்லது மோனோசில் மருந்துடன், பெவிஸ்டின் பவுடர் 25 கிராம் அல்லது செப்டோ 25 கிராம் கலந்து கைத்தெளிப்பான் கலந்து தெளிக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை 20:20 பாக்டம்பாஸ் உரம் இடவேண்டும். (ரசாயன உரம் பயன்படுத்த விரும்பாதவர்கள் கடைகளில் கிடைக்கும் இயற்க்கை பூச்சி கொல்லிகளை பயன்படுத்தலாம்) ஆண்டிற்கு ஒரு முறை அறுவடைக்கு பின் தொழுஉரம் அல்லது கோழி உரம் இட்டு மாட்டு ஏர் மூலம் பார் போட வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை தரை மட்டத்திலிருந்து ஒரு இன்ச் விட்டு மீதி உள்ள இலைகளை அறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் ஏக்கருக்கு குறைந்த பட்சம் நான்குடன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். சித்திரை மாதத்திலிருந்து ஆவணி மாதம் வரை கருவேப்பிலை நன்றாக வளரும். அதாவது வெயில் காலத்தில் நல்ல மகசூல் இருக்கும். விலை எட்டு ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரை இருக்கும். இதனால் ஏக்கருக்கு80 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.
No comments:
Post a Comment