தமிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசின் வேளாண்மை துறை மூலம் எண்ணெய்ப்பனை வளர்ச்சி திட்டத்தை தேசிய எண்ணெய்பனை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பாமாயில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப்பனை என்பது பனை மர குடும்பத்தை சார்ந்தது. எண்ணெய்ப்பனை ஒரு ஆண்டிற்கு எக்டரில் 4 முதல் 6 டன்கள் வரை எண்ணெய் கொடுக்கக்கூடிய ஒரு மரப்பயிராகும். இது மற்ற எண்ணெய் வித்துபயிர்களுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிக எண்ணெய் மகசூல் தரவல்லது.
பொதுவாக ஒரு எக்டரில் பயிரிடப்படும் கடலையில் இருந்து 375 கிலோ அளவும், கடுகு பயிரிலிருந்து 560 கிலோவும், சூரியகாந்தியிலிருந்து 545 கிலோவும், எள்ளிலிருந்து 160 கிலோவும், தேங்காயிலிருந்து 970 கிலோ அளவுக்கு தான் எண்ணெய் கிடைக்கிறது. ஆனால் ஒரு எக்டரில் பயிரிடப்படும் எண்ணெய் பனையிலிருந்து 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கிலோ எண்ணெய் கிடைக்கிறது.
இந்த மரம் நட்ட மூன்றாம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 25 ஆண்டுகள் வரை மகசூல் தரக்கூடியது. எண்ணெய்ப்பனை மரத்திலிருந்து இரண்டு விதமான எண்ணெய் கிடைக்கிறது. பழத்தின் சதைப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சுத்திகரிக்கப்படாத பாமாயில் எனவும், பழத்தில் உள்ள கொட்டையில் உள்ள பருப்பில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பருப்பு எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
1. எண்ணெய் பனை நட்டு மகசூலுக்கு வந்தது முதல் 25 ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடியது.
2. குறைவான சாகுபடி செலவு, பழக்குலை உற்பத்தி செலவீனம் டன் ஒன்றுக்கு ரூ.650 முதல் ரூ.750 வரை மட்டுமே.
3. வேலை ஆட்கள் மிகவும் குறைவு. ஆகவே சிறு விவசாயிகள் 5 ஏக்கர் வரை வெளி ஆட்கள் உதவியின்றி தாங்களே முழுமையாக பராமரிக்கலாம்.
4. மழை, வெள்ளம், களவு, சேதம் கிடையாது.
5. பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு.
6. தண்ணீர் வசதி மற்றும் உர நிர்வாகத்திற்கேற்ற மகசூல் கூடும்.
7. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஊடுபயிர் செய்து உபரி வருமானம் பெறலாம்.
8. எண்ணெய் பனை கன்றுகள் அரசு மானிய விலையில் கன்று 20 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
9. எண்ணெய் பனை சாகுபடிக்கு நான்கு ஆண்டுகளில் அரசு மானியம் எக்டர் ஒன்றிற்கு 15 ஆயிரத்து 500.
10. அரசு மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன் பெறலாம்.
11. உத்தரவாதமான பழக்குலைகள் கொள்முதல் மற்றும் உடனடியாக பணப்பட்டுவாடா.
12. தேவைப்பட்டால் பனை பராமரிப்புக்கு வங்கிகளில் இருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment