Friday, October 10, 2014

ஒரு மீன் முக்கால் கிலோ! ஒரு கிலோ 250 ரூபாய்!

10 மாதங்களில் அறுவடை! ஒரு மீன் முக்கால் கிலோ! ஒரு கிலோ 250 ரூபாய்!
 
விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால், விவசாயிகளுக்கு என்றைக்குமே தோல்வி இல்லை. இதை நிரூபிக்கும் வகையில், தென்னந்தோப்புக்கு நடுவே விரால் மீன்களை வளர்த்து வருகிறார்கள், நண்பர்களான மாரிமுத்து, செல்லப்பாண்டியன்.திருநெல்வேலி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மூன்றாவது கிலோ மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சென்றால், ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வீரகளப்பெருஞ்செல்வி கிராமம். திரும்பியப் பக்கமெல்லாம் வாழை மரங்கள், அந்த ஊரின் வளமையைச் சொல்லாமல் சொல்கின்றன. இக்கிராமத்தில்தான் இந்த நண்பர்களின் மீன் பண்ணை இருக்கிறது.
சிறிய இடமே போதும் 

ஒரு ஏக்கரில் அம்பை பதினாறு ரக நெல்லும், ஒரு ஏக்கரில் ரஸ்தாளி வாழையும் போட்டிருக்கிகோம். இது போக அரை ஏக்கரில் 21 தென்னை இருக்கிறது. எல்லாம் ஏழு வயதான மரங்கள்.  நடவு செய்யும்போதே 25 அடி இடைவெளி கொடுத்திருக்கிறார்கள். 6 சென்ட் குளம், 10 மாதம், 30 ஆயிரம் என்று விறு விறு லாபம் தரும் விரால் மீன் என்று சமீபத்தில் பசுமை விகடனில்  (10.11.10 தேதியிட்ட இதழ்) ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்ததும்தான், சின்ன இடத்திலேயே இவ்வளவு லாபம் கிடைக்கும்போது  அரை ஏக்கர் இருக்கின்ற தென்னைக்கு இடையில் ஏன் விரால் மீன்கள் வளர்க்கக் கூடாது என்று  நண்பர் செல்லப்பாண்டியனிடம்  கூறி அவரும் இதில் ஆர்வமானதும் இரண்டு பேரும் சேர்ந்து விரால் வளர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.சேவியர் கல்லூரியின் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்துக்குச் சென்று, விரால் மீன் வளர்ப்புப் பற்றி தெரிந்து கொண்டு, உடனடியாக வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது பத்து மாதம் ஓடிவிட்டது. மீனெல்லாம் விற்பனைக்குத் தயாரா இருக்கிறது என்றபடியே ஒரு மீனைப் பிடித்துக் காட்டிவிட்டு, விரால் மீன் வளர்ப்பு முறைகளை அடுக்க ஆரம்பித்தார், மாரிமுத்து.

நான்கடி உயரத்துக்குத் தண்ணீர் 
தென்னைக்கு இடையில், 150 அடி நீளம், 18 அடி அகலம், 5 அடி ஆழத்தில் தனித்தனியாக இரண்டு குளங்கள் வெட்டியிருக்கிறார்கள். இவர்கள் தோட்டம் முழுக்கவே களிமண் பூமி என்பதால் வண்டல் கொண்டு வந்து போட வேண்டிய அவசியமில்லை. நாலடி உயரத்துக்குத் தண்ணீர் நிறுத்தி ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஒரு மாத வயதுள்ள விரால் குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளனர். ஒரு குளத்துக்கு ஐயாயிரம் குஞ்சுகள் என்று இரண்டு குளத்திலும் பத்தாயிரம் குஞ்சுகள்.

நிழல் கொடுக்க தாமரை 
மீன் குஞ்சுகளை, பறவைகளிடமிருந்து காப்பாத்தறதுக்காக குளத்துக்கு மேல் வலையைக் கட்டியிருக்கிறார்கள். தென்னை மரங்களோட நிழல் கிடைப்பதால், மீன்களுக்கு வெயிலின் பாதிப்பு அதிகளவில் இருக்காது. கூடுதல் பாதுகாப்புக்கு, தாமரையையும் படர விட்டிருக்கிறார்கள்.

நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்

ஆண், பெண் கோழி விகிதாச்சாரம்:
நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும்.
முட்டைகளை சேகரிக்கும் காலம்:
கோடைக்காலங்களில் இடப்படும் முட்டைகளை, முட்டைகள் இடப்பட்டு நான்கு நாட்கள் வரையிலும் குளிர்காலங்களில் 5 முதல் 7 நாட்கள் வரை இடப்பட்ட முட்டைகளையும் ஒன்றாக அடைக்கு சேர்த்து வைத்து குஞ்சு பொரிக்க பயன்படுத்தலாம். இதற்கு மாறாக 10 நாட்களுக்கு முன் போட்ட முட்டைகளை இன்று போட்ட முட்டைகளுடன் இணைத்து அடைக்கு வைத்தால் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு முன் இட்ட முட்டைகளில்இருந்து குஞ்சுகள் வெளிவராது. இயற்கையில் கோழிகளின் மூலம் அடைகாத்தல் செய்யும்போது குறைந்த நாட்கள் இடைவெளியில் முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சுகள் அதிகம்பெற விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும்.
அடைகாத்தலுக்கு பெட்டைக் கோழியினை உட்கார வைக்கும் நேரம்:
பொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு பெட்டைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து அடைமுட்டை மீது உட்கார வைக்கும்போது அடைக்கோழி 21 நாட்கள் அடைக்காலம் வரை அதிகநேரம், அடிக்கடி கூடையை விட்டு வெளியே எழுந்திருக்காமல் முட்டையோடு உடன் இருப்பது, அதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும். அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் ஒருநாளில் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது. அந்திசாயும் மாலை வேளையில் ஒரு கோழியை அடைக்கு உட்கார வைக்கும்போது இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல் 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. எனவே 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை.

மாறாக முதன்முதலில் அடைக்கு வைக்கும்போது காலை நேரத்தில் அடைக்கு உட்காரவைத்தால் தீவனம் எடுக்கும் நோக்கம் அதிகமாகி 21 நாட்கள் அடைக்காலத்தில் இடையிடையே வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்து உட்காரும் நிலை வரும். இவ்வாறு அடைக்கோழி முட்டையை விட்டு அடிக்கடி சென்று வருவதால் குஞ்சு வளர தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு குஞ்சு இறப்பு ஏற்பட்டு குறைந்தளவில் மட்டுமே முட்டைகள் பொரிப்பதற்கு காரணமகிவிடுகிறது.

குலைகுலையாய் காய்த்து குலுங்கும் பேரீச்சை வளர்ப்பு


பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம்.  உரிய முறையில் பேரிச்சையை  சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத்தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர்ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருகவேல். அவர் கூறியதாவது:

 திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்ற விவசாயி புதிய ரக திசு பேரீச்சையை வளர்த்து லாபம்  சம்பாதிப்பது பற்றி தெரிய வந்தது.  அங்கு சென்று விவரங்களை கேட்டேன்.
நிச்சயம் இதில் நல்ல லாபம்  சம்பாதிக்கலாம் என நம்பிக்கை துளிர்த்தது. கையில் காசில்லாத நிலையில்,  இடத்தை விற்று பேரீச்சை சாகுபடியில் ஈடுபட்டேன். இது புது வகையான திசு வளர்ப்பு பேரீச்சை. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது. இங்கிலாந்தில் மட்டும் ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திசு கன்றுகள் வளைகுடா நாடுகளில் பராமரிக்கப்பட்டு, பின் இந்தியா கொண்டு வரப்படுகிறது. குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து  கன்றுகளை பெற்றேன்.
முருகம்பாளையத்தில் 2.5 ஏக்கரில் 200 திசு வளர்ப்பு பேரீச்சை கன்றுகளை, 2009ம் ஆண்டு பிப்ரவரியில் நடவு செய்தேன். பாலைவனத்தில் விளையும் சாதாரண பேரீச்சைக்கு தண்ணீர் தேவையில்லை. ஆனால் திசு பேரீச்சைக்கு தண்ணீர் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்று ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். முறையான பராமரிப்பு காரணமாக எங்கள் தோட்டத்தில் 28மாதங்களிலேயே காய்க்க துவங்கியது. பராமரிப்பு மட்டும் சரியாக இருந்தால் ஒரு ஏக்கரில், மூன்றாம் ஆண்டில்  இருந்து நல்ல வருவாய் கிடைக்கும்.
ரூ.8 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருஷம்தோறும் வருமானம் பார்க்க முடியும். ஆரம்ப கட்ட முதலீட்டை முதல் அறுவடையிலேயே பெற்றுவிடலாம். பிறகு,பராமரிப்பு மட்டும் செய்தால் போதும். வேறு எந்த விவசாயத்திலும் இதுபோன்று லாபம் பார்க்க முடியாது. பேரீச்சையை பொருத்தவரை, டேனின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் அதை அப்படியே உட்கொள்ள முடிவதில்லை. எனவே பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகின்றன. இதற்கு முற்றிலும் மாறாக, திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் பர்ரி வகை பேரீச்சைகளை அப்படியே சாப்பிடலாம்.
இவை இரும்பு சத்து மிக்கவை. சிறிய விவசாயிகள் இதை பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம். விவசாயம் தெரியாத இளைஞர்கள்கூட முறைப்படி கற்றுக்கொண்டால்,இது சிறந்த தொழில். கோவை மண்டலத்தில் முதலாவதாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவதாகவும் எங்களது திசு வளர்ப்பு பேரீச்சை பண்ணை உள்ளது. திருப்பூர் கலெக்டர் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு பாராட்டினார்.

கொப்பரை தேங்காய். கொழிக்குது காசு!

தேங்காய் ஆண்டு முழுவதும் உற்பத்தியாக கூடியது. நம் நாட்டில் விளையும் தேங்காயில் 75 சதவீதம் கொப்பரை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் தொழிலை தங்குதடையின்றி மேற்கொள்ள முடியும். நல்ல லாபமும் கிடைக்கும் என்கிறார் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம்  எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த கொப்பரை உற்பத்தியாளர் பஞ்சலிங்கம்.
அவர் கூறியதாவது: காய வைத்த தேங்காய் பருப்புதான் கொப்பரை. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. எனவே கொப்பரை தயாரிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளேன். கொப்பரை தயாரிப்பில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அடிக்கடி மழை மற்றும் குளிர் நிலவுவது, கொப்பரை உற்பத்திக்கு பாதகம். மற்ற மாவட்டங்களில் தென்னை சாகுபடி குறைவாக இருந்தாலும், கொப்பரை காய வைப்பதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அங்கு உள்ளவர்கள் இப்பகுதியில் தேங்காய் வாங்கி கொப்பரை தயாரிப்பில் ஈடு பட்டால் நல்ல வருமானம் பார்க்கலாம். தேங்காய் விலை ஏற்ற, இறக்கம்உள்ளது. கொப்பரை உற்பத்தி செய்ய செலவு ஒரு தேங்காய் விலையோடு, கூடுதலாக ரூ.1.50 ஆகும். தேங்காய் விலையை பொருத்து உற்பத்தி செலவை கணக்கிடலாம்.உற்பத்தி செய்யப்படும் கொப்பரைக்கு, எண்ணெய் உற்பத்தியாளர்கள் விலை நிர்ணயிக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி அளவை பொருத்து கொப்பரையின் விலை இருக்கும். விலை குறையும் போது இருப்பு வைத்து, ஏறும்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதே போல் கொப்பரை விலை ஏறினால், தேங்காய் விலை ஏறுகிறது. கொப்பரை விலை குறையும் போது தேங்காய் விலையும் குறைகிறது. கொப்பரை விலை குறையும்போது தேங்காய்களை வாங்கி போட்டால், கொப்பரை உற்பத்தி செலவு குறையும்.
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம் கிராம கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவ்வப்போது கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயித்து, தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பரைகளை கொள்முதல் செய்துகிறார்கள். அங்கு ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வதில்லை. நிர்ணயிக்கப்படும் விலை குறைவாக உள்ளது. ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்து, கிலோவுக்கு ரூ.60ஐ உடனடியாக கொடுத்தால் தென்னை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் பிசினஸ்

வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
சந்தை வாய்ப்பு!
உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள்  தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.
முதலீடு!
எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.
கட்டடம்!

ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.
வேலையாட்கள்!
இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு லாபகரமான தொழிலா?
‘நான் அம்பானி ஆகணும், நான் அம்பானி ஆகணும்!”
- அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடிகர் கருணாஸ் ஒற்றைக் காலில் நின்று கொண்டு சொல்லும் வசனம் இது. அதுபோல நானும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்கிற கனவு கண்டு வருகிறவர்கள் பலர். உங்கள் கனவை நிஜமாக்க இதோ வந்துவிட்டது சூப்பர் பிஸினஸ் ஐடியாக்கள்.

 


ஒரு தொழிலைத் தொடங்க முதலீடு முதல் மூலப்பொருள் வரை, உற்பத்தி முதல் விநியோகம் வரை, கடன் முதல் ரிஸ்க் வரை அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தரவே இந்த பகுதி. வாரம் ஒரு தொழில் வீதம் இதில் சொல்லப்படும் பல்வேறு தொழில்களைப் படித்து, உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து, பயனடைந்து வருங்கால அம்பானிகளாக வாழ்த்துகள். இந்த வாரம், உங்களுக் காக தேங்காய் நாரிலிருந்து கயிறு தயார் செய்யும் பிஸினஸ்!

இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே உலகள வில் இத்தொழிலில் இருக்கும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகள் நமக்கு போட்டியாக வர இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதும் இன்னொரு பிளஸ் பாயின்ட்.

தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ளவர்கள் இந்தத் தொழிலை உடனடியாகத் தொடங்கலாம்.


தேங்காய் நார் கயிறுகள் கட்டடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும், கிணறுகள் இல்லாத நிலை உருவானதாலும் இந்தத் தொழிலில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட, இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது.

வாழை நார் பிரிக்கும் எந்திரம்

கல்லூரி மாணவர்களின் கலக்கல் கண்டுபிடிப்பு…
கண்டுபிடிப்பு
”கழிவுகளைக் காசாக்கும் வித்தையைத் தெரிஞ்சுக்கிட்டாதான்… நம்ம விவசாயி களும் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும். அந்த வகையில நம்ம நாட்டுல பெரும்பாலான விவசாயிகள், சாகுபடி செய்யுற வாழையில இருந்து கூடுதல் வருமானம் எடுக்கணும்னுதான் எங்க படிப்பறிவைப் பயன்படுத்தி இந்தக் கருவியைக் கண்டு பிடிச்சுருக்கோம்” என்று பெருமை யுடன் சொல்கிறார்கள், தூத்துக்குடி, அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் இறுதி யாண்டு இளநிலை இயந்திரவியல் பயிலும் ராம்குமார், ஹரிகுமார், வசந்தகுமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர். இவர்கள் வடிவமைத் திருப்பது… வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் கருவி!
கல்லூரி தேடிச் சென்ற நம்மிடம் பேசிய ஹரிகுமார், ”இன்ஜினீயரிங் படிப்புல மாணவர்கள் குழுவா சேந்து ஒரு மெஷினை வடிவமைக் கணும். அதுக்கும் மார்க் உண்டு. எங்க ‘டீன்’, ‘மார்க்குக்காக மட்டும் ஏதாவது ஒரு மெஷினை உருவாக்கா தீங்க. சமுதாயத்துக்கும் மக்களுக்கும் தொடர்ந்து பயன்படுற மாதிரியான ஒண்ணை உருவாக்குங்க’னு சொன்னார். விவசாயக் குடும் பத்தைச் சேந்தவங்களான எங்க நாலு பேர் மனசுலயும் அது நல்லா பதிஞ்சுட்டுது. விவசாயியோட கஷ்ட, நஷ்டம் புரிஞ்ச நாங்க… ‘விவசாயிகளுக்கான மெஷின் தயாரிப் போம்’னு முடிவு பண்ணி… விவசாயிகளோட தேவை என்னனு தெரிஞ்சுக்கறதுக்காக நிறைய அலைஞ்சோம். அப்போ உருவானது தான் இந்த மெஷின்!
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்துல வாழை சாகுபடி அதிகமா நடக்குது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில வாழை நார்களுக்கானத் தேவை அதிகமா இருக்கு. எங்க மாவட்டத்துல இருந்து பிளேடு மூலமா நாரைப் பிரிச்சு எடுத்துதான், கன்னியாகுமரிக்கு அனுப்பு றாங்க. அதனால, ‘அதுக்கான மெஷினையே உருவாக்கிடலாம்’னு முடிவு பண்ணிட்டோம். கரன்ட் தட்டுப்பாடு அதிகமா இருக்கறதால கையால இயக்குற மாதிரி இதை வடிவமைச் சோம். இதன் மூலமா பூக்கட்டுறதுக்கு மட்டுமில்ல… புடவை, கைவினைப் பொருட்கள் தயாரிக்கனு வாழையிலிருந்து நார் எடுத்து பயன்படுத்தலாம்” என்றவரைத் தொடர்ந்த ராம்குமார், இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விளக்கினார்.

இயற்கை முறையில் இனிப்பான லாபம் கலக்குது கற்பூரவல்லி

வலுத்தவனுக்கு வாழை… இளைச்சவனுக்கு எள்ளு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது, ‘வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பண வசதி இருப்பவர்கள் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய முடியும். ஆனால், எள்ளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால், யார் வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம்’ என்பதுதான் இதன் பொருள். ஆனால், இக்கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, ”இளைத்தவனுக்கும் ஏற்றதாக இருக்கிறது… கற்பூரவல்லி வாழை!’’ என்று குஷியோடு சொல்கிறார், விழுப்புரம் மாவட்டம், சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.
உள்ளே வருபவர்களை தலை வணங்கி வரவேற்பு கொடுப்பதுபோல் வாழைத்தார்கள் தொங்கிக் கொண்டிருக்க… பசுமையான அந்த வாழைத் தோட்டத்தில் சுப்ரமணியனைச் சந்தித்தோம்.
கை விட்ட விவசாயம்!
”எங்க குடும்பத்தொழில் விவசாயம்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை நான். எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதுமே, அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். 35 வருஷமா விவசாயம் செஞ்சுட்டிருக்கேன். நெல், கேழ்வரகு, கத்திரி, வெண்டை, கரும்பு, வாழைனு பலவிதமான பயிர்களை சாகுபடி செய்வேன். சமயங்கள்ல விவசாயத்துல செலவு கட்டுபடியாகாமப் போய்… நகை, நட்டையெல்லாம் அடகு வைக்க வேண்டியதாயிடும். இப்படி கஷ்டப்பட்டு செய்தாலும், வர்ற வருமானம், அடகுல இருக்கற நகையை மீட்கறதுக்குகூட உதவாதுங்கறதுதான் நெஜம். அடுத்தடுத்து இப்படியே இருந்ததால… நிரந்தர வருமானத்துக்காக ‘பால் உற்பத்தி பண்ணலாம்’கற யோசனையோட… வீட்டுல இருந்த நாட்டு மாடுகளை எல்லாம் வித்துட்டு, கலப்பின மாடுகளை வாங்கினேன். ஆனா… பால்ல கிடைச்ச வருமானம்… மாடுகளுக்கு தீவனம் வாங்கறதுக்கே போதல.
வழிகாட்டிய பசுமை விகடன்!
பிறகு, விவசாயத்துல நல்ல லாபம் தர்ற பயிர்களா தேட ஆரம்பிச்சேன். இதுக்காக நிறைய புத்தகங்கள வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். நண்பர் கொடுத்த தகவலை வெச்சு, நம்மாழ்வார் நடத்தின இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அதுக்கப்பறம், பக்கத்து வீட்டுக்காரர் மூலமா ‘பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல தெரிஞ்சுகிட்ட தொழில்நுட்பங்களை சோதனை செஞ்சு பார்த்தப்போ… நல்ல பலன் கிடைச்சுது. அதுக்கப்பறம்தான் இயற்கை விவசாயத்துல சின்ன நம்பிக்கை வந்துச்சு” என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், தொடர்ந்தார்.