Saturday, May 3, 2014

கூட்டு மீன் வளர்ப்பில் விரால்

மீன் வளர்ப்பு குளமொன்றில் குளத்தின் மேல் மட்டம் முதல் அடிமட்டம் வரையிலான பல்வேறு பகுதிகளிலும் பரவி அப்பகுதிகளில் இருக்கும் பலவகையான உணவினங்களை தமது உணவுப் பழக்கத்திற்கேற்ப உண்டு, இடத்திற்கும் உணவிற்கும் போட்டியில்லாமலும் சண்டையில்லாமலும் கூடி வாழ்ந்து நன்கு வளர்ந்து உயர்வான உற்பத்தியைத் தரக்கூடிய வேக வளர்ச்சிக் கெண்டைகளான கட்லா (நீரின் மேற்பரப்பு), வெள்ளிக்கெண்டை (நீரின் மேற்பரப்பு), ரோகு (நீரின் நடுமட்டம்), மிக்கால் (நீரின் அடிமட்டம்), சாதாக்கெண்டை (நீரின் அடிமட்டம்), புல்கெண்டை (குளத்தின் கரையோரப்பகுதி), வெள்ளிக்கெண்டை ஆகிய கெண்டைமீன்களை உயிரியல் சூழல் மற்றும் வளர்ப்பியலுக்கு உரிய இன விகிதாச்சாரப்படி சரியாக இருப்பு அடர்த்தியில் இருப்புச்செய்து வளர்ப்பது கூட்டுமீன் வளர்ப்பாகும்.
கூட்டுமீன் வளர்ப்புக் குளத்தில் புதிய மீன் இனங்களைச் சேர்த்து வளர்க்கையில் ஏற்கனவே உள்ள மீனினங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. கெண்டை, பால்மீன், நன்னீர் இரால் மற்றும் விரால் ஆகியவை கூடுதலாகச் சேர்த்து வளர்க்கலாம். புதிய மீன் இனங்களைச் சேர்க்கும்போது அவற்றுக்கு எவ்வளவு இடம் கொடுக்கலாம் என்பதை அதற்கான மீன்வளர்ப்பு அறிவியல் அறிஞரே வழிகாட்டவேண்டும்.
விரால்களைச் சேர்த்து வளர்ப்பதால் பல பலன்கள் உண்டு. விரால்களை வளர்ப்பதற்கு தனியான வசதி (குளம்) இல்லாதபோது கூட்டு மீன்வளர்ப்பு குளத்தில் விரால்களைக் கெண்டைகளோடு சேர்த்து வளர்த்து பயன்பெறலாம். விரால்கள் மற்ற வளர்ப்பு மீன்களுடன் உணவுக்காக போட்டியிடுவதில்லை. விரால்களுக்கு விசேட சுவாச உறுப்புகள் உண்டு. தோலாலும் சுவாசிக்கும். வெளிமடைக் காற்றையும் சுவாசிக்கும். சில பயனற்ற, சிறிய நாட்டுக்கெண்டைகள் மற்றும் களை மீன்களை விரால்மீன்கள் உண்டு அழித்துவிடும். எனவே களை மீன்களால் உணவு வீணாவது தடுக்கப்பட்டுக் கெண்டை மீன்களுக்கான தீனி, கெண்டைகளுக்கு முழுமையாகக் கிடைக்கும்.
கெண்டை மீன்களின் உற்பத்தியோடு விரால் மீனின் உற்பத்தியும் குளத்தின் உற்பத்தியாகச் சேர்ந்து கிடைப்பதால் குளத்தின் மொத்த மீன் உற்பத்தியும் லாபமும் அதிகமாக இருக்கும். கூட்டுமீன் வளர்ப்பில் இருப்புச் செய்யப்படும் மீன்களுள் 2-5 சதம் மட்டும்விரால் மீன்களை இருப்புச் செய்தால் போதுமானது.

விரால்களுக்கு அவற்றுக்குத் தேவையான மாமிச உணவுகளையும் தருவதாயின் அவற்றின் இருப்பளவு 2 சதவீதத்துக்கு மேல் இருக்கலாம் (5 சதவீதத்திற்குள்). இல்லையேல் இருப்பளவு குறைவாகவே இருக்க வேண்டும்.
கெண்டை மீன்களை குறைந்தது 150-200 கிராம் அளவுவரை வளர்த்த பின்னரே விரால் குஞ்சுகளை அல்லது ஓரளவு வளர்ந்த விரால்களை கெண்டைகளின் குளத்தில் இருப்புச் செய்யவேண்டும். இதில் கவனக்குறைவு ஏற்பட்டால் விரால் மீன்கள் கெண்டைகளையும் தின்று தீர்த்துவிடும்.
இம்முறைப்படி கெண்டைகளின் வளர்ப்புக்காலம் முழுமையாகவும் (அதிகமாகவும்) விரால்களின் வளர்ப்புக்காலம் குறைவாகவும் இருக்கும். அதாவது விரால்கள் அறுவடைக்கான முழு வளர்ச்சியைப் பெற்றிருக்காது. இக்குறைபாட்டைத் தவிர்க்க, கெண்டை குஞ்சுகளை தனிக்கவனமுடன் சிறப்பாக வளர்த்து, ஒவ்வொன்றும் 150 கிராமுக்குக் குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் கெண்டைகளையும் விரால் குஞ்சுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இருப்புச் செய்யலாம். கெண்டைகள் ஏற்கனவே ஓரளவு (தப்பித்துக்கொள்ளும்மட்டில்) வளர்த்துவிட்டபடியால் விரால்களால் அவற்றுக்கு ஆபத்துவராது.
ஒரு எக்டர் குளத்தில் அதிகபட்சமாக 10,000 மீன்களை (சதுர மீட்டருக்கு ஒன்று) இருப்புச் செய்வதாகக் கொண்டால் அதில் விரால் மீன்களை 2 சதம் மட்டும் இருப்புச் செய்வதாகக் கொண்டால், ஒரு எக்டர் குளத்தில் 200 விரால்களை விளர விடமுடியும். வளர்ப்புக் காலத்தில் ஒவ்வொரு விராலும் ஒரு கிலோ வளர்வதாகக் கொண்டால் (சிறப்புத் தீனியும் தந்து) மொத்தம் 200 கிலோ உற்பத்தி கிடைக்கும். விரால்களை குறைந்தது கிலோ 200 ரூபாய்க்கு (உயிருடன்) விற்கலாம். விரால்களால் மட்டும் ரூ.40,000 வருமானம் கிட்டும்.
(தினமலர் தகவல்:
டாக்டர் வெ.சுந்தரராஜ், 90030 13634,
செ.பெரியசாமி, 94431 38573)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238

    ReplyDelete