ஊட்டச்சத்துக்களின் தேவை:
அ)புரதச்சத்தின் தேவை:
ஆடுகளின் கம்பள மயிர் அதாவது கிராட்டின் எனப்படும் முழுப்புரதம் மொத்தமும் புரதத்தால் ஆனவை. எனவே புரதச் சத்தின் தேவை செம்மறி ஆடுகளில் கொஞ்சம் அதிகமாகவே காணப் படுகிறது. புரதமில்லா நைட்ரஜன் சத்து பொருள்களை அசையும் இரைப்பையில் நல்ல தரம் மிக்க நுண்ணுயிர் புரதமாக மாற்றும் தன்மை செம்மறி ஆடுகளில் உள்ளது.
கம்பள மயிர்களில் சிஸ்டைன் மற்றும் மெத்தியோனைன் ஆகிய இரண்டு அமினோ அமிலங்களும் அதிக அளவில் காணப்படும். அன்றாடத் தேவையான இவ்விரு அமினோ அமிலங்களையும் தினசரி கொடுக்கப்படும் தீவனமே சரிபார்த்துக்கொள்ளும். இருப்பினும் ஒரு வேளை ஆடுகளின் தீவனத்தில் எதிர்பாராமல் சிஸ்டன் பற்றாக்குறை ஏற்பட்டால், இவ்விரு அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ள புரத உபபொருட்களை தீவனத்தில் கலப்பது நன்மை பயக்கும். தோராயமாக நாள் ஒன்றுக்கு நிலைகாப்புக்காக தேவைப்படும் புரதச் சத்தின் அளவு ஒரு கிலோ உயிர் எடைக்கு ஒரு கிராம் செரிமான கச்சா புரதம் வீதம் ஆகும். இந்த ஒரு கிராம் புரதமானது சினைப்பருவ காலங்களில் 50 விழுக்காடுகள் வரையிலும் வளர்ச்சி மற்றும் கறவை காலங்களில் 100 விழுக்காடுகள் வரையிலும் அதிகமாகும்.
புரதச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் ஆடுகளின் உணவு உண்ணும் அளவு குறையும். தீவன மாற்றுத்திறன் குறையும். உடல் மற்றும் தசை வளர்ச்சி குறையும். இனவிருத்தி திறன் குறையும். கடைசியாக கம்பள மயிர் உற்பத்தியும் குறைந்துவிடும்.
ஆ. எரிசக்தி அல்லது மொத்த செரிமான சத்துக்களின் தேவை:
செம்மறி ஆட்டுக்குட்டிகளுக்கு மொத்த செரிமான சத்துக்களின் தேவை பருவமடைந்த ஆட்டைவிட அதிகமாகும். அதுபோல, சினை ஆடுகள் இனப்பெருக்கத்திற்கான பெட்டை செம்மறி ஆடுகள் மற்றும் கறவை ஆடுகளுக்கு சினையில்லா மற்றும் கறவையில்லா பெட்டை ஆடுகளைவிட அதிகளவு எரிசக்தி தேவைப்படும். அடிப்படையாக ஒரு சினையில்லா மற்றும் கறவையில்லா பெட்டை ஆட்டுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ உயிர் எடைக்கு10 கிராம் மொத்த செரிமான சத்துக்கள் வீதம் தேவைப்படும்.
இ. கொழுப்புச்சத்தின் தேவை:
செம்மறி ஆடுகளின் தீவனத்தை குறைந்தபட்சம் 3 விழுக்காடுகள் கொழுப்புச்சத்து இருப்பது அவசியமாகும். பொதுவாக ஆடுகளின் அடர்தீவனத்தில் 5 விழுக்காடுகள் வரை கொழுப்பு சேர்க்கப் படுகிறது. உருக்கப்பட்ட மாட்டின் கொழுப்பு தவிட்டு எண்ணெய், சோயா எண்ணெய் போன்ற கொழுப்புச்சத்து தீவனப்பொருட்கள் அடர்தீவனத்தில் கலக்கப்படுகிறது.
ஈ. தாது உப்புக்களின் தேவை:
பொதுவாக செம்மறி ஆடுகளுக்கு 15 தாது உப்பு வகைகள் தேவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகளுள் மிக முக்கியமானவை சோடியம், குளோ ரைடு, சுண்ணாம்பு, மணிச்சத்து, மெக்னீசாம்பல் சத்து மற்றும் சல்பர் ஆகும்.
உ. உப்பு:
செம்மறி ஆடுகள் பசுமாடுகளைவிட அதிகளவு உப்பு உட்கொள்ளும். எந்தவகை பண்ணை மேலாண்மை செய்முறையானாலும் தினசரி உப்பு கொடுப்பதை ஒரு அடிப்படை நியதியாக பின்பற்ற வேண்டும். பொதுவாக முழுமைத் தீவன மாயின் 0.5 சதவீதம் அல்லது அடர் தீவனமாயின் ஒரு சதவீதம் என்ற விகிதத்தில் உப்புச்சத்தை சேர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment