வளரும் கோழிகளின் கொட்டகையில் கோழிகளை விடுவதற்கு முன்னால் அக்கொட்டகையினை நன்றாக சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அவற்றிற்கு இட வசதி, தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆழ்கூளக் கொட்டகைகளில் ஆழ்கூளத்தை 4 இஞ்ச் உயரத்திற்குப் பரப்பி விட வேண்டும்.
தீவன மற்றும் தண்ணீர்த் தொட்டிகளை கொட்டகையில் அமைக்க வேண்டும்.
கோழிகளின் தேவைக்கேற்றவாறு தண்ணீர் மற்றும் தீவனத்தட்டுகளை மாற்ற வேண்டும்.
கோழிகளின் வளரும் பருவத்தில் வரையறுக்கப்பட தீவன மேலாண்மை முறையினைப் பின்பற்றுவதால் கோழிகளின் வளரும் பருவத்தில் அவை அளவிற்கு அதிகமான உடல் எடையினை அடைவதையும், விரைவில் இனப்பெருக்க முதிர்ச்சியையும் தடுத்து அதிக முட்டை உற்பத்தியைப் பெறலாம்.
ஆழ்கூளத்தை முறையாக மேலாண்மை செய்வதால் இரத்தக்கழிச்சல் போன்ற நோய்கள் கோழிகளுக்கு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
திறந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைகளில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வெளிச்சம் இருந்தாலே போதுமானது. செயற்கை வெளிச்சம் தேவையில்லை.
கொட்டகையில் ஒரே மாதிரியாக கோழிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை கோழிகளின் எடையினைப் பரிசோதித்து கோழிக்குஞ்சு உற்பத்தியாளர்களின் ஆலோசனைப் படி உடல் எடை அதிகரிக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி, மருந்துகள் அளித்தல் மற்றும் இதர மேலாண்மை முறைகளான குடற்புழு நீக்கம் செய்தல், அலகு வெட்டுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
வரையறுக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட அளவு மட்டுமே தீவனம் அளித்தல்
இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் வளரும் பருவத்திலிருக்கும் முட்டைக் கோழிகளுக்கு இந்தத் தீவன மேலாண்மை முறை பின்பற்றப்படுகிறது. இதில் இரண்டு முறைகள் உள்ளன.
தீவனத்தின் அளவினைக் குறைத்தல்
இம்முறையில் கோழிகளுக்குத் தேவைப்படும் தீவனத்தில் குறைந்த அளவையே அவைகளுக்குக் கொடுக்கப்படும். தினந்தோறும் தீவனத்தின் அளவினைக் குறைக்கலாம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ தீவனம் அளிக்கலாம். ஆனால் இவ்வாறு தீவனமளிப்பதைக் குறைப்பது பண்ணையிலுள்ள மொத்தக் கோழிகளின் உடல் எடை மற்றும் உற்பத்தியாளர் பரிந்துரைக்கப்பட்ட உடல் எடை போன்றவற்றைப் பொறுத்து கணக்கிடப்பட வேண்டும்.
கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் தரத்தைக் குறைத்தல்
இம்முறையில் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் தரம் குறைக்கப்படுகிறது. மரபு சாராத தீவனங்களையோ அல்லது சத்து குறைவாகவுள்ள தீவன மூலப்பொருட்களையோ, புரதச்சத்து மற்றும் எரிசக்தி அதிகமுள்ள தீவன மூலப்பொருட்களுக்குப் பதிலாக உபயோகப்படுத்த வேண்டும். ஆனால் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தின் அளவு குறைக்கப்படுவதில்லை.
வரையறுக்கப்பட்ட தீவனமளிக்கும் அதிக எண்ணிக்கையிலான தீவனத் தட்டுகளை கோழிக் கொட்டகையில் வைத்து அனைத்து கோழிகளும் தீவனத்தை ஒரே சமயத்தில் எடுக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் அதிகாரமுடைய கோழிகள் தீவனத்தை அதிகம் எடுத்துக் கொள்ளும், ஆனால் பலம் குறைந்த கோழிகள் குறைவான தீவனத்தை எடுத்துக் கொள்வதால், கோழிக்கொட்டகையில் உள்ள அனைத்து கோழிகளும் ஒரே மாதிரி இருப்பது தடுக்கப்படுகிறது.
கோழிகளின் வளரும் பருவத்தில் தீவனத்தை வரையறுக்கப்பட்ட அளவு கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
- கோழிகளுக்குத் தேவைப்படும் தீவனச்செலவு குறைகிறது. ஏனெனில் கோழிகளுக்குத் தேவைப்படும் தீவனத்தில் 80 சதவிகிதம் மட்டுமே அளிக்கப்படுகிறது.
- இவ்வாறு வரையறுக்கப்பட்ட தீவனமளிக்கப்பட்டு வளர்க்கப்படும் கோழிகள் ஒரு டஜன் முட்டைகளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் தீவனத்தின் அளவு குறைவாகிறது.
- வளரும் பருவத்தில் குறைவான தீவனம் அளிக்கப்படுவதால் இக்கோழிகளின் உடலில் கொழுப்பு கட்டும் அளவு குறைந்து அதிக முட்டைகளை முட்டையிடும் பருவத்தில் உற்பத்தி செய்கின்றன.
- தீவனத்தைக் குறைத்துக் கொடுக்கும் போது பலம் குறைந்த கோழிகளை அவற்றின் குறைவான வயதிலேயே கண்டுபிடிக்கலாம். இந்தக் கோழிகளை பண்ணையிலிருந்து நீக்கி விடுவதால், தீவனம் மிச்சமாவதுடன், முட்டைக் கோழிக் கொட்டகையில் உயிரோடிருக்கும் கோழிகளின் எண்ணிக்கையும் உயர்வதால், ஆரோக்கியமான கோழிகளை மட்டும் முட்டைக்கோழிக் கொட்டகைக்கு மாற்றிடலாம்.
- தேவைக்கேற்றவாறு தீவனம் அளித்து வளர்க்கப்படும் கோழிகளை விட தீவனம் வரையறுக்கப்பட்ட அளவு அல்லது தேவையை விடக் குறைவாக கொடுக்கப்பட்ட கோழிகள் பெரிய முட்டைகளை இடும்.
சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238
ReplyDelete