Monday, January 12, 2015

அடை காத்தலும் குஞ்சு பொரித்தலும்

அடை காத்தலும் குஞ்சு பொரித்தலும்

கோழி முட்டைகளை அடை காக்கும் இயந்திரங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
சூடாக்கும் ஆதாரத்தைப் பொருத்து:
  • சூடான காற்று உள்ள முட்டை அடைகாப்பான்
  • சூடான தண்ணீர் உள்ள முட்டை அடைகாப்பான்
உபயோகிக்கப்படும் எரிபொருளைப் பொருத்து
  • வாயுவால் இயங்கும் முட்டை அடைகாப்பான்
  • எண்ணெயால் இயங்கும் முட்டை அடைகாப்பான்
  • மின்சாரத்தால் இயங்கும் முட்டை அடைகாப்பான்
குஞ்சு பொரிப்பகங்கள் உள்ள இடம்
நவீன முறையில் வடிவமைக்கப்படும் குஞ்சு பொரிப்பகங்கள், குஞ்சு பொரிப்பகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு பல அறைகளுடன் கட்டப்படுகின்றன. குஞ்சு பொரிப்பகம் உள்ள இடம் அதற்கென தனியாக அமைக்கப்பட்ட உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கான வாயில்களுடன் கோழிப்பண்ணையிலிருந்து தனியாக இருக்கவேண்டும். கோழிக்கொட்டகைகளிலிருந்து குஞ்சு பொரிப்பகம் குறைந்தது ஆயிரம் அடி தொலைவு தூரத்தில் இருந்தால் தான் கோழிக் கொட்டகைகளிலிருந்து குஞ்சு பொரிப்பகத்திற்கு நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.

குஞ்சு பொரிப்பகத்தின் அளவு
முட்டை அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிக்கும் இயந்திரங்களின் கொள்ளளவுக்கு ஏற்றவாறு குஞ்சு பொரிப்பகத்தின் அளவு இருக்கும். தவிரவும், ஒரு வாரத்தில் அடைக்காக வைக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை மற்றும் ஒரு வாரத்தில் பெறப்படும் குஞ்சுகளின் எண்ணிக்கை போன்றவற்றைப் பொருத்தும் குஞ்சு பொரிப்பகத்தின் அளவு மாறுபடும். மேலும் பிற்காலத் தேவைக்கேற்ப குஞ்சு பொரிப்பகத்தை விரிவு படுத்துவதற்குத் தேவையான இடமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

குஞ்சு பொரிப்பகத்தின் வடிவமைப்பு 
குஞ்சுப் பொரிப்பகத்தில் ஒரு முனையில் முட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டு மற்றொரு முனையில் குஞ்சுகள் வெளியே எடுத்துச் செல்லும் வண்ணம் அமைக்கப்படவேண்டும். அதாவது எந்த ஒரு முட்டையும் அல்லது கோழிக்குஞ்சும் ஒரே வழியில் நேராக வெளியே அல்லது உள்ள செல்லுமாறு அமைக்கப்படவேண்டும். ஆனால் இவை பின்னோக்கி வரக்கூடாது. இதனால் குஞ்சு பொரிப்பகத்தில் உள்ள அறைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருப்பதுடன், மனிதர்களின் நடமாட்டமும் குறைக்கப்படுகிறது.

குஞ்சு பொரிப்பகத்தைக் கட்டுதல்
குஞ்சு பொரிப்பகத்தை கவனமாக வடிவமைத்து, முறையாக கட்டி, போதுமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாவன:
  • குஞ்சு பொரிப்பகத்தின் அகலம்:அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பான் இருக்கும் அறைகளின் அகலம் குஞ்சு பொரிப்பானின் வகையினைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. குஞ்சு பொரிப்பானின் அகலத்தைக் கணக்கிட்டு பிறகு அதனுடன் அருகில் வேலை செய்ய இடம், இயந்திரங்களுக்கும் சுவற்றுக்கும் இடையில் இடைவெளி, போன்றவற்றுக்காக இடத்தை ஒதுக்கி குஞ்சு பொரிப்பகத்தின் அகலத்தை முடிவு செய்யவேண்டும்.
  • கூரையின் உயரம்: கூரை 10 அடி உயரத்தில் அமைக்கப்படவேண்டும்.
  • சுவர்கள்: குஞ்சு பொரிப்பகத்தின் சுவர்கள் தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்கப்படவேண்டும். மேலும் இச்சுவர்கள் பூஞ்சான்களின் வளர்ச்சியை ஊக்குவிக்காத வண்ணமும் இருக்கவேண்டும்.
  • கூரை அமைக்கப் பயன்படும் பொருட்கள்: பெரும்பாலான குஞ்சுப் பொரிப்பகங்களில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும். குளிரான தட்பவெப்ப நிலையில் கூரையில் தண்ணீர் கசிவது பொதுவாக இருக்கும். எனவே கூரை அமைக்கப் பயன்படும் பொருள் தண்ணீரை உறிஞ்சாதவாறு இருக்கவேண்டும்.
  • கதவுகள்: குஞ்சு பொரிப்பகத்தின் கதவுகள் அகலமாக இருந்தால் தள்ளு வண்டிகள், குஞ்சுகளை எடுத்துச் செல்லும் பெட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும். கதவு நான்கு அடி உயரமும், நான்கு அடி அகலமும்,இரண்டு புறமும் திறக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.
  • தரை: குஞ்சுப் பொரிப்பகத்திலுள்ள அனைத்து தரைப்பகுதிகளும் காங்கிரீட்டினால் ஆனதாக இருக்கவேண்டும். சிமெண்ட் காங்கிரீட்டுக்கு இடையில் இரும்பு கம்பிகள் வைத்து தரையினை அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் தரை விரிசல் விடாமல் இருக்கும். எல்லா காங்கிரீட் தரைகளும் வழவழப்பாக இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். காங்கிரீட் தரையின் சாய்வு 10 அடிக்கு 0.5 இஞ்ச்க்கு மேல் இருக்கக்கூடாது.
குஞ்சு பொரிப்பகத்தில் உள்ள அறைகள் மற்றும் இதர அமைப்புகள்

குஞ்சு பொரிப்பகத்தில் உள்ள அறைகள் போதுமான அளவு இருக்கவேண்டும். நடுத்தர அளவிலுள்ள குஞ்சு பொரிப்பகங்களில் வாரத்திற்கு இரு முறை குஞ்சுகள் பொரிக்கப்படும். ஆனால் பெரிய குஞ்சு பொரிப்பகங்களில் ஒரு வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் குஞ்சுகள் பொரிக்கப்படும். எனவே இதற்கேற்றவாறு குஞ்சு பொரிப்பகங்களில் உள்ள அறைகளின் அளவும் வேறுபடும்.

குளிக்கும் அறை 
உயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதற்கு குஞ்சு பொரிப்பகத்துள் நுழையும் அனைவரும் குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டே உள்ளே செல்லவேண்டும். இந்த அறை மனிதர்கள் குஞ்சு பொரிப்பகத்தின் உள்ளே நுழைவதற்கும், வெளியே வருவதற்கும் உள்ள இடமாகும். மற்ற அறைகளைப் பொருத்தவரை மனிதர்களின் நடமாட்டத்திலிருந்து பெரும்பாலும் பிரிக்கப்பட்டே இருக்கும்.

குஞ்சு பொரிப்பதற்காக கருவுற்ற முட்டைகளை பெறும் இடம் 
முட்டைகளை குஞ்சு பொரிப்பகத்திற்கு எடுத்து வரும் மனிதர்கள் குஞ்சு பொரிப்பகத்திற்குள்ளே செல்லக்கூடாது. இவ்வாறு எடுத்து வரும் முட்டைகளை வாங்குவதற்கென்று தனியாக ஒரு இடம் குஞ்சு பொரிப்பகத்தில் இருக்கவேண்டும்.

புகை மூட்டும் அறை 
புகை மூட்டும் அறை எவ்வளவு சிறியதாக இருக்க முடியுமோ அவ்வளவு சிறியதாக இருக்கவேண்டும். இவ்வாறு இருப்பதால் புகை மூட்டப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் குறைந்த அளவே உபயோகப்படுத்தப்படும். குஞ்சு பொரிப்பகத்திற்குள் காற்றை சுழல வைப்பதற்கும், புகையினை வெளியேற்றுவதற்கும் ஒரு காற்றாடி புகை மூட்டும் அறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

முட்டையினை வைத்திருக்கும் அல்லது குளிர்வூட்டும் அறை
                                 
முட்டையை வைத்திருக்கும் அறை 8 அடி உயரமாகவும், கதகதப்பாகவும், மெதுவாக காற்றோட்டம் இருக்குமாறும், குளிர்ச்சியாகவும், இருக்கவேண்டும். இந்த அறை குளிர்வூட்டப்பட்டு அதன் வெப்பநிலை 65 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றினை வெளியே தள்ளக்கூடிய குளிர்வூட்டும் இயந்திரம் அறை முழுவதும் ஒரே வெப்பநிலையினை பராமரிப்பதற்கு ஏற்றது.

அடைகாக்கும் அறை

இந்த அறையில் அடைகாப்பான்கள் வைக்கப்பட்டிருக்கும். இதில் வைத்திருக்கும் அடைகாப்பான்களின் அளவிற்கேற்ப இந்த அறையின் அளவும் இருக்கவேண்டும். அடைகாப்பானுக்கு குறைந்த இட வசதி இருந்தாலே போதுமானது. இந்த அறையில் காற்று வெளியேறுவதற்கும் உள்ளே வருவதற்குமான சன்னல், முட்டைகளை நகர்த்துவதற்கும், குஞ்சுகளை வெளியே எடுப்பதற்கு வசதியாக இட வசதி இருக்கவேண்டும். ஒவ்வொரு குஞ்சு பொரிப்பானுக்கும் இடையில் குறைந்தது மூன்று அடி இடைவெளியும், குஞ்சு பொரிப்பானின் பின்பகுதிக்கும், சுவற்றும் இடையில் மூன்று அடி இடைவெளியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஒன்றையொன்று பார்த்தால் போல் அமைக்கப்பட்டிருக்கும் குஞ்சு பொரிப்பான்களுக்கு இடையில் 10 அடி இடைவெளி குறைந்தது இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

குஞ்சுகளை வைத்திருக்கும் அறை 
அடைகாக்கும் அறைக்கு அடுத்த அறையில் குஞ்சுகளை வைத்திருக்கும் அறை இருக்கவேண்டும். இதில் 65% ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். இதனால் குஞ்சுகளின் உடலிலிருந்து தண்ணீர் வெளியேறுவது தடுக்கப்படும். இந்த அறையில் குஞ்சுகளின் பாலினம் கண்டறியப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு, தடுப்பூசி அளிக்கப்பட்டு பெட்டிகளில் வைக்கப்பட்டு தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

கழுவும் அறை 
குஞ்சுகளைப் பெட்டிகளுக்குள் வைத்த பிறகு, குஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த தட்டுகளை கழுவுவதற்கு கழுவும் அறை பயன்படுகிறது. இந்த அறையில் அதிக அழுத்தத்துடன் தண்ணீர் வெளியேறுவதற்கு ஏற்ற வகையில் குழாய்கள் வைக்கப்பட்டிருக்கும்.

சுத்தமான அறை 
குஞ்சுகள் வைத்திருந்த தட்டுகளை கழுவிய பிறகு, அவற்றை நகரும் வண்டிகளில் வைத்து, சுத்தமான அறைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.

அடைகாப்பதின் முக்கிய நோக்கம்

முட்டைகளை அடை காத்து குஞ்சு பொரிப்பதில் ஐந்து முக்கிய செயல்கள் உள்ளன. அவையாவன:
  • வெப்பநிலை
  • ஈரப்பதம்
  • காற்றோட்டம்
  • முட்டைகளின் அமைவு
  • முட்டைகளைத் திருப்புதல்
வெப்பநிலை
முட்டைகளை அடைகாக்கும்போது வெப்பநிலை ஒரு முக்கியமான அம்சமாகும். ஏனெனில் முட்டையினுள் வளரும் கருவானது சிறிய வெப்பநிலை மாற்றங்களை மட்டுமே தாங்கிக்கொள்ளும். உடற்செயலியல் வெப்பநிலை பூச்சியத்திற்கு மேல் சென்றால் மட்டுமே முட்டையினுள் இருக்கும் கருவானது வளர்ச்சியடையத் தொடங்கும். உடற்செயலியல் வெப்பநிலை பூச்சியம் எனப்படுவது, இந்த வெப்பநிலைக்குக் கீழ் கருவின் வளர்ச்சி நிறுத்தப்பட்டும், இதற்கு மேல் கருவின் வளர்ச்சி ஆரம்பிக்கப்படும் என்பதாகும். கோழி முட்டைகளின் உடற்செயலியல் பூச்சிய வெப்பநிலை என்பது 75 டிகிரி பாரன்ஹீட்டாகும் (24 oC).
அடைகாப்பானில் கோழி முட்டைகள் அடைகாக்கும் காலத்தில் முதல் 18 நாட்கள் வெப்பநிலை 99.50 to 99.75 o Fஆகவும், குஞ்சு பொரிப்பானில் அடைகாக்கும் கடைசி மூன்று நாட்கள் இருக்க வேண்டிய வெப்பநிலை 98.5 o Fஆகும். 
ஈரப்பதம்
அடைகாக்கப்படும் போது முட்டைகளிலிருந்து வெளியேறும் ஈரப்பதத்தைப் பொருத்து அடைகாப்பானில் ஈரப்பதத்தின் அளவு பராமரிக்கப்படும். பொதுவாக அடை காப்பானில் பொருத்தப்பட்டிருக்கும் ஈரக்குழிழ் மற்றும் உலர்ந்த குமிழ் வெப்பநிலைமானிகளின் அளவுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை வைத்து ஈரப்பதம் அளவிடப்படுகிறது. அடைகாக்கும் காலத்தின் முதல் 18 நாட்களுக்கு 55-60% ஈரப்பதமும், கடைசி மூன்று நாளில் 65-75% ஈரப்பதமும் இருக்கவேண்டும். அதிகப்படியான ஈரப்பதம் குஞ்சு பொரிப்பகத்தில் இருந்தால், கோழிக்குஞ்சுகளின் உடலிலிருந்து தண்ணீர் வெளியேறி அவற்றின் உடலில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்.

காற்றோட்டம்
முட்டை அடைகாப்பான்களிலும், குஞ்சு பொரிப்பான்களிலும் காற்றோட்டம் நன்றாக இருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் வளரும் கருவின் முதல் நாள் வயதிலிருந்து அவை குஞ்சுகளாக வளர்ச்சியடையும் வரை போதுமான அளவு தூய ஆக்சிஜன் அதிகமுள்ள காற்று மிகவும் அவசியமாகும்.

கருவின் முதல் வளர்ச்சி காலத்தை விட கடைசி வளர்ச்சி காலத்தில் ஆக்சிஜன் தேவை மிகவும் அதிகமாக இருக்கும். கடல் மட்டத்தில் ஆக்சிஜனின் அளவு 21%. பொதுவாக அடைகாப்பானில் உள்ள காற்றிலுள்ள ஆக்சிஜனின் அளவு 21%. இதில் ஒவ்வொரு 1% ஆக்சிஜன் குறைந்தாலும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனில் 5% குறையும். 
கரு வளர்ச்சியடையும் போது நடக்கும் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் பொருட்களில் கார்பன் டை ஆக்சைடும் ஒன்றாகும். முட்டையினுள் உருவாகும் கார்பன் டை ஆக்சைடு முட்டை ஓட்டின் வழியாக வெளியே வருகிறது. நான்கு நாட்களுக்கு அடைகாப்பானில் வளரும் கரு தாக்குப்பிடிக்கும் கார்பன் டை ஆக்சைடின் அளவு 0.3% ஆகும். 0.5%க்கும் மேல் கார்பன்டை ஆக்சைடு அதிகமாக இருந்தால் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் குறையும். மேலும் கார்பன் டை ஆக்சைடின் அளவு 5%க்கும் மேல் இருந்தால் வளரும் கரு முற்றிலும் இறந்து விடும்.

முட்டைகளின் அமைவு
செயற்கையாக அடை காக்கப்படும் முட்டைகள் அவற்றின் அகலமான முனை மேலே இருக்குமாறு வைக்கப்படவேண்டும். இயற்கையாகவே வளரும் கோழிக்குஞ்சுகளின் தலை முட்டையின் அகலமான மேற்பகுதியில் காற்றுப்பைக்கு அருகில் இருக்கும். முட்டைகளை அடைக்கு வைக்கும் போது அவற்றின் குறுகலான முனை மேலே இருக்குமாறு வைத்தால் 60% கோழிக்குஞ்சுகளின் தலை குறுகிய முனையில் வளர்ச்சியடையும். எனவே முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் தருணத்தில் கோழிக்குஞ்சால் தன் அலகைப் பயன்படுத்தி முட்டை ஓட்டினை உடைத்து தன்னுடைய சுவாசத்தைத் துவக்க முடியாது. கிடை மட்டமாக வைக்கப்பட்ட முட்டைகள் அவைகளைக் குறித்த இடைவெளியில் அடிக்கடி திருப்பி விடுவதால் சாதாரணமாக வளர்ச்சி அடையும். சாதாரண சூழ்நிலைகளில் முட்டைகளை அவற்றின் அகன்ற மேல்பகுதி மேலே இருக்குமாறு முதல் 18 நாட்களுக்கும், கிடை மட்டமாக கடைசி மூன்று நாட்களுக்கும் வைக்க வேண்டும்.

முட்டைகளைத் திருப்பி விடுதல்
பறவைகள், பொதுவாக கோழிகளும், ஜப்பானியக்காடைகளும் அடைகாக்கும்போது தங்களுடைய கூட்டில் முட்டைகளைத் திருப்பிவிட்டுக் கொள்ளும். இதே போன்றே செயற்கை முறையில் அடைகாக்கும் போது முட்டைகளை ஒரு நாளைக்கு 8 முறை திருப்பி விட வேண்டும். அடைகாக்கும்போது முட்டைகளை திருப்பி விடுவதால் வளரும் கரு முட்டை ஓட்டில் ஒரு பக்கமாக ஒட்டிக்கொள்வது தவிர்க்கப்பட்டு கரு இறப்பதும் தடுக்கப்படும். பெரிய வணிக ரீதியான குஞ்சு பொரிப்பகங்களில் உள்ள குஞ்சு பொரிப்பானில் முட்டைகளைத் தானாகவே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திருப்பி விடப்படும் வசதி இருக்கும். பொதுவாக எல்லா முட்டைகளும் செங்குத்தாக 45oகோணத்திலும், பிறகு எதிர் திசையில் 45o கோணத்திலும் திருப்பி விட வேண்டும். 45oக்கு குறைவாக முட்டைகளைத் திருப்பி விட்டால் அதிகப்படியான குஞ்சு பொரிக்கும் திறன் இருக்காது. குஞ்சு பொரிப்பானில் முட்டைகளைத் திருப்ப வேண்டிய அவசியமில்லை.
காரணிகள்அடைகாப்பான்குஞ்சுபொரிப்பான்
வெப்பநிலை
99.50 to 99.75 o F
98.5 o F
ஈரப்பதம்
55-60 %
65-70 %
அமைவு
அகன்ற பகுதி மேல் நோக்கி இருக்குமாறு
கிடை மட்டமாக
திருப்புதல்
கையால் திருப்புதல்- 8 முறைகள் தானியங்கி முறை மூலம் - 24 முறைகள்
திருப்ப வேண்டியதில்லை

அடை காக்கும் முட்டைகளைக் கையாளுதல் மற்றும் சேமித்தல்

அடை வைக்கும் முட்டைகளைக் கோழிகள் இட்ட பிறகு அவற்றின் தரத்தை மேம்படுத்த முடியாது. ஆனால் அவற்றின் குஞ்சு பொரிக்கும் திறனை சில முறைகளைப் பயன்படுத்தி குறைக்காமல் பார்த்துக்கொள்ளலாம். 

இனப்பெருக்கக் கோழிக் கொட்டகையில் முட்டைகளின் தரத்தினைப் பராமரித்தல்

        கோழிகள் தங்களுடைய முட்டைகளை கூட்டிலுள்ள பொருட்களின் மேல் இடும். சுத்தமான, உலர்வான, பூஞ்சான் தாக்குதலற்ற பொருட்களைக் கூட்டுக்குள் வைப்பதால் முட்டைகள் அழுக்காவதையும், உடைவதையும் தடுக்கலாம். அதே போல கோழிகளைத் தரையில் முட்டையிடுவதற்குப் பதிலாக கூட்டுக்குள் முட்டையிடுவதற்குப் பழக்குவதற்கு அதிகப்படியான கூடுகளைக் கோழிகள் முட்டையிடுவதற்கு ஆரம்பிப்பதற்கு முன்பே கொட்டகையில் வைக்கலாம்.            
        கோழிகள் இட்ட முட்டைகளை அடிக்கடி சேகரிப்பது அவற்றின் தரத்தை தக்க வைப்பதில் ஒரு முக்கியமான அம்சமாகும். கொட்டகையில் கோழிகள் இட்ட முட்டைகளை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு முறை சேகரிக்கவேண்டும். கருவுற்ற முட்டைகள் எளிதில் நுண்கிருமிகளால் அசுத்தமடைந்து விடும். எனவே இதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எனவே முட்டைகளைக் கொட்டகையிலிருந்து எடுப்பதற்கு முன்னால் முட்டைகளை எடுப்பவர் தங்களுடைய கைகளை கிருமி நாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்த பிறகே முட்டைகளை சேகரிக்கவேண்டும்.முட்டைகளை அடுக்கப் பயன்படும் அட்டைகளும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, கரிமப் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
அடை வைப்பதற்கான முட்டைகளைத் தேர்வு செய்தல்
          இனப்பெருக்கக் கோழிகள் இட்ட அனைத்து முட்டைகளும் அடைக்கு வைக்க முடியாது. உடைந்த, அழுக்கான, ஒழுங்கற்ற வடிவமுடைய முட்டைகளை அடைகாப்பதற்கு பொதுவாக வைக்கப்படுவதில்லை. மிகவும் சிறிய அல்லலமு மிகவும் பெரிய முட்டைகளும் நடுத்தர அளவுடைய முட்டைகளுடன் ஒப்பிடும் போது நன்றாகக் குஞ்சு பொரிப்பதில்லை. மெல்லிய ஓடுடைய, அதிக ஓட்டைகள் உடைய முட்டைகளும், அவற்றிலிருந்து ஏற்பட்ட அதிகப்படியான நீர் இழப்பு காரணமாக சரியாகக் குஞ்சு பொரிப்பதில்லை.

அடைகாக்கும் முட்டைகள் அசுத்தமடைவதைத் தவிர்த்தல்
          சுகாதாரமற்ற அடை வைக்கப்படும் முட்டைகள் குறைந்த குஞ்சு பொரிக்கும் வீதத்திற்கும், தரம் குறைந்த குஞ்சுகளுக்கும் காரணமாகும். நுண்கிருமிகளற்ற முட்டை ஓடு என்பது இல்லவே இல்லை. முட்டைகளைக் கோழிகள் ஆசன வாய் வழியாக இடும்போதே எச்சத்திலிருந்தும், சிறுநீரிலிருந்தும் முட்டை ஓட்டில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொண்டு விடும். முட்டை இடப்படும் போது அதன் ஓட்டிலிருக்கும் நுண்கிருமிகளின் எண்ணிக்கை 300-500 ஆக இருக்கும். முட்டை இட்டவுடன் எந்தப் பகுதிகளிலெல்லாம் முட்டை வைக்கப்படுகிறதோ அங்கிருந்த நுண் கிருமிகளால் அதன் ஓட்டுப்பகுதி அசுத்தமடையும்.முட்டை இடப்பட்டவுடன் அது குளிச்சியாக ஆரம்பிக்கும். இவ்வாறு குளிர்ச்சியாகும் போது முட்டையிலுள்ள உட்பொருட்கள் சுருங்க ஆரம்பித்து முட்டையின் உள்ளே எதிர்மறை அழுத்தம் ஏற்படும். இந்த நிலையில் தான் முட்டை ஓட்டிலுள்ள பாக்டீரியாக்கள் முட்டையின் உள்ளே செல்ல ஆரம்பிக்கும்.

முட்டையில் இயற்கையாகவே பாக்டிரியாக்களின் ஊடுருவலைத் தவிர்ப்பதற்கென சில செயல்முறைகள் இருக்கும். இது தவிர முட்டை ஓடும் பாக்டீரியாக்களின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ளும் திறனுடையது. முட்டை ஓட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் க்யூட்டிகிள் பகுதி பாக்டீரியாக்களின் தாக்குதலுக்கு சிறப்பான எதிர்ப்பு சக்தியினைப் பெற்றுள்ளது. முட்டை ஓட்டின் உள்ளே இருக்கும் உட்புற மற்றும் வெளிப்புற சவ்வுகளும் பாக்டீரியாக்கள் உள்ளே வருவதைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவர்களாகச் செயல்படுகின்றன. முட்டையின் வெள்ளைக் கரு அல்லது அல்புமின் சிறிதளவு அசுத்தமடைவதைத் தடுக்கும் சக்தியுடையது. அல்புமினின் அமிலகாரத்தன்மை அதிகமாக இருப்பதால், அந்த அமிலக் காரத்தன்மையில் பாக்டீரியாக்கள் உயிரோடு இருக்க முடியாது. முட்டையின் உட்பகுதியிலுள்ள சலேசாவில் லைசோசைம் எனும் நொதி உள்ளது. இந்த நொதியிலும் பாக்டீரியாக்களுக்கான எதிர்ப்புத் திறன் இருக்கிறது.

கோழிகளை இனப்பெருக்கம் செய்து முட்டையினை வணிக ரீதியாக உற்பத்தி செய்பவர்கள் முட்டையின் மேற்புறத்தில் பாக்டீரியாக்களின் அளவினைக் குறைப்பதற்கு சில முறைகளைக் கையாளுகின்றனர். கருவுற்ற முட்டைகளை மணல் கொண்டு மூடி வைப்பது, துடைப்பது போன்றவை கருவுற்ற முட்டைகளை சுத்தப்படுத்தும் சரியான முறைகள் அல்ல. மணல் கொண்டு மூடி வைப்பதால் முட்டை ஓட்டின் வெளிப்பகுதியிலுள்ள க்யூட்டிகிள் பகுதியினை சேதப்படுத்தி விடும். பார்மால்டிஹைடு வாயு மூலம் புகை மூட்டுவது கருவுற்ற முட்டைகளை சுத்தப்படுத்தும் சிறந்த முறையாகும். குவார்ட்டனரி அமோனியம் பொருட்கள், ஃபார்மலின், ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனங்கள் கலந்த கரைசல்களும் முட்டைகளின் மீதுள்ள பாக்டீரியாக்களின் அளவினைக் குறைப்பதற்கு உதவி புரிகின்றன. தேவையில்லாமல் கருவுற்ற முட்டைகளைக் கழுவக்கூடாது. கருவுற்ற முட்டைகளைக் கழுவ வேண்டிய அவசியம் இருந்தால் முட்டையின் வெப்பநிலையினை விட அதிக வெப்பநிலையிலுள்ள தண்ணீரில் சுத்தமான துணியினை நனைத்து அதை வைத்து முட்டையினைத் துடைக்க வேண்டும். இதனால் முட்டையின் ஓட்டிலுள்ள ஓட்டைகளின் வழியாக அழுக்குகள் வேர்த்து வெளியே வந்து விடும். எப்போதும் முட்டைகளின் வெப்பநிலையினை விட குறைவான வெப்பநிலையினை உடைய தண்ணீரில் துணியினை நனைத்து முட்டைகளைத் துடைக்கக்கூடாது. மேலும் முட்டைகளை தண்ணீரில் நனைக்கக்கூடாது.

கருவுற்ற அடைகாக்கும் முட்டைகளை சேமித்து வைத்தல்
          பொதுவாக குஞ்சு பொரிப்பகங்களில் முட்டைகளை கோழிகள் இட்டவுடனேயே அடை வைப்பதில்லை. பெரும்பாலான குஞ்சு பொரிப்பகங்கள் முட்டைகளை வராத்திற்கு இரண்டு முறை மட்டுமே அடை வைக்கின்றன. கருவுற்ற முட்டைகளை ஒரு வாரத்திற்கு சேமித்து வைக்க வேண்டுமென்றால் அவற்றை முட்டைகள் சேமித்து வைத்திருக்கும் அறையில் 65 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையிலும் 75 சதவிகிதம் ஈரப்பதத்தில் வைத்திருக்க வேண்டும். பத்து நாட்களுக்குக் குறைவாக முட்டைகளை சேமித்து வைக்கும் போது அவற்றின் அகலமான முனை மேலே இருக்குமாறு வைத்திருக்க வேண்டும். பத்து நாட்களுக்கு மேலாக முட்டைகளை சேமித்து வைக்கும் போது அவற்றின் குறுகிய முனை மேலாக இருக்குமாறு வைத்திருந்தால் முட்டைகளின் குஞ்சு பொரிப்புத் திறன் அதிகமாகும்.

குஞ்சு பொரிப்பகத்தின் செயல்பாடுகள்


அதிக எண்ணிக்கையிலான கோழிக்குஞ்சுகள் கருவுற்ற முட்டைகளிலிருந்து உருவாக்குவது குஞ்சு பொரிப்பகத்தின் செயல்பாடாகும். இது தவிர கோழிக்குஞ்சுகளைக் குறைவான செலவில் உற்பத்தி செய்வதும் இதன் மற்றொரு முக்கியமான நோக்கமாகும்.
வணிக ரீதியாக செயல்படும் குஞ்சு பொரிப்பகத்தின் செயல்பாடுகள் பின்வருமாறு.
  • கருவுற்ற முட்டைகளைப்பெறுதல்
  • கருவுற்ற முட்டைகளை அட்டைகளில் அடுக்குதல்
  • புகை மூட்டம் செய்தல்
  • முட்டைகளைக் குளிர் பதனம் செய்தல்
  • முட்டைகளை அடை வைப்பதற்கு முன்பாக அவற்றின் வெப்பநிலையினை அதிகரித்தல்
  • முட்டைகளை ஏற்றுதல்
  • முட்டைகளில் கரு உயிரோடு இருக்கிறதா என்பதை கண்டுபிடித்தல்
  • முட்டைகளை மாற்றுதல்
  • பொரித்த குஞ்சுகளை வெளியே எடுத்தல்
  • கடினப்படுத்துதல்
  • கோழிக்குஞ்சுகளைத் தரம் வாரியாகப் பிரித்தல்
  • பாலினத்தைக் கண்டறிதல்
  • தடுப்பூசி போடுதல்
  • குஞ்சுகளை பண்ணைகளுக்கு அனுப்புதல்
  • கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல்
  • கழிவுகளை அப்புறப்படுத்துதல்
கருவுற்ற முட்டைகளைப் பெறுதல் 
          கருவுற்ற முட்டைகளைக் குஞ்சு பொரிப்பகங்கள் கீழ்க்கண்டவர்களிடமிருந்து பெறுகின்றன:
  • தங்களுடைய சொந்த இனப்பெருக்கம் செய்யும் கோழிகளிலிருந்து
  • மற்ற இனப்பெருக்கக் கோழிப் பண்ணைகளிலிருந்து
  • மற்ற குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து
கருவுற்ற முட்டைகளை அடைகாப்பானில் உள்ள அட்டைகளில் அடுக்குதல்
          முட்டைகளை இனப்பெருக்கக் கோழிகளிடமிருந்து பெற்ற உடனே, அட்டைகளில் அடுக்க வேண்டும்.

கருவுற்ற முட்டைகளைப் புகைமூட்டம் செய்தல்
          முட்டைகளை அட்டைகளில் அடுக்கிய பின்பு, புகை மூட்டுவதற்காக புகை மூட்டும் அறையில் வைக்க வேண்டும். மூன்று மடங்கு திறனுடைய ஃபார்மால்டிஹைடு கரைசலின் மூலம் 20 நிமிடத்திற்கு புகை மூட்டுவதால் முட்டையின் ஓட்டிலுள்ள 97.5 முதல் 99.5% கிருமிகள் கொல்லப்பட்டு விடும். ஒரு மடங்கு திறன் எனப்படுவது ஒரு கன அடிக்கு 20 கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட் தூளை 40 மிலி ஃபார்மால்டிஹடு கரைசலில் கலந்து உபயோகப்படுத்துவதாகும் (மூன்று மடங்கு என்பது 60 கிராம் பொட்டாசியம் பர்மாங்கனேட்டுடன் 120 மிலி ஃபார்மால்டிஹடு கரைசலுடன் கலந்து 100 கன அடிக்கு உபயோகப்படுத்துவதாகும்.

முட்டைகளைக் குளிர் பதனம் செய்து சேமித்தல் 
          முட்டைகளைப் பெற்றவுடன் உடனடியாக அடை வைக்கவில்லை எனில் அவற்றை 65 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், 75% ஈரப்பதமும் உள்ள குளிர் பதன அறையில் வைத்து சேமிக்கலாம்.

முட்டைகளை அடை வைப்பதற்கு முன்பாக வெதுவெதுப்பாக்குதல் 
          முட்டைகளை அடைகாப்பானில் அடை வைப்பதற்கு முன்பாக, அவற்றை குளிர் பதன அறையிலிருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டும். இப்போது வளி மண்டலத்திலுள்ள காற்று முட்டை ஓட்டின் மீது பட்டு குளிர்ந்து நீர்த்திவலைகளாக மாறும். இதற்கு வேர்த்தல் என்று பெயர். முட்டைகளை அடைகாப்பானில் வைப்பதற்கு முன்பாக முட்டைகளை அறை வெப்பநிலையினை அடையுமாறு வைப்பதால் குளிர்ந்த முட்டைகளால் அடை காப்பானின் வெப்பநிலை குறைந்து விடுவது தடுக்கப்படுகிறது.

முட்டைகளைஏற்றுதல்
          முட்டைகளை அடைகாப்பானில் வைப்பது முட்டைகளை ஏற்றுதல் என்று அழைக்கப்படுகிறது. முட்டைகளை மொத்தமாகவோ அல்லது தனித்தனிக் குழுக்களாகவோ அடைகாப்பானில் வைக்கலாம். பெரும்பாலான வணிகரீதியாக செயல்படும் குஞ்சு பொரிப்பகங்களில் முட்டைகளைக் குழுக்களாக அடை வைக்கின்றனர். இதனால் அடைகாப்பானில் அடைகாக்கும் வெப்பநிலை சீக்கிரம் அடைந்து விடுகிறது. இவ்வாறு குழுக்களாக முட்டைகள் அடை வைக்கப்படும் போது குஞ்சு பொரிப்பகத்திலுள்ள ஒவ்வொரு அடை காப்பானிலும் முட்டைகள் பல்வேறு விதமான கரு வளர் நிலையிலிருக்கும்.

முட்டைகளில் கரு உயிரோடு இருக்கிறதா என்பதை கண்டுபிடித்தல்

முட்டையினுள் உள்ளிருக்கும் கருவின் வளர்ச்சி நிலையினை பார்ப்பதற்கும், முட்டை ஓட்டில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய முட்டைகளை ஒரு ஒளி ஆதாரத்தின் மீது வைத்து கண்டறியலாம். முட்டைகளை அடை வைத்த 5ம் நாள் முதல் அவற்றை ஒளி ஆதாரத்தின் அருகில் வைத்துப் பார்க்கலாம். ஆனால் இந்நிலையில் கருவில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளைக் கண்டறிவது கடினம். வணிகரீதியாகச் செயல்படும் குஞ்சு பொரிப்பகங்களில் முட்டைகள் அடைகாப்பானிலிருந்து குஞ்சு பொரிப்பானுக்கு மாற்றப்படும் நாளன்று (அடை வைத்து 19ம் நாள்) ஒளி ஆதாரத்திற்கு அருகில் வைத்துப் பார்க்கப்படுகின்றன. இரண்டு முறையில் கேண்டிலிங் எனப்படும் ஒளி ஆதாரத்திற்கு அருகில் வைத்து கருவின் வளர்ச்சியினைக் கண்டறிவது செய்யப்படுகிறது. விரைவாகச் செயல்படும் முறையில் முட்டைகளை ஒரு மேசை அல்லது பெரிய கருவியின் மீது முட்டை அட்டையிலுள்ள அனைத்து முட்டைகளையும் அட்டையோடு வைத்து குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன. தனித்தனியாக முட்டைகளை கேண்டலிரில் வைத்துப் பார்ப்பது நேரம் அதிகமாகத் தேவைப்படும் என்றாலும் அதுவே மிகவும் நுண்ணிய முறையாகும்.

முட்டைகளை மாற்றுதல்
          நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட குஞ்சு பொரிப்பான்களில் முட்டைகள் அடைகாப்பானிலிருந்து அடை வைத்த 19ம் நாள் (கோழி முட்டைகள்) அல்லது அடை வைத்த முட்டைகளில் 1% முட்டைகளில் குஞ்சுகள் முட்டை ஓடுகளை ஓட்டையிட்ட பிறகோ குஞ்சு பொரிப்பான்களுக்கு மாற்ற வேண்டும்.

பொரித்த குஞ்சுகளை வெளியே எடுத்தல்
          குஞ்சுகள் பொரித்து அவற்றின் உடல் 95% உலர்ந்த பிறகு அவற்றை குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து வெளியே எடுத்து விட வேண்டும். குஞ்சு பொரிப்பகங்களில் குஞ்சுகள் முற்றிலுமாக உலருவதைத் தடுக்க வேண்டும்.

கடினப்படுத்துதல்
          பொரித்த குஞ்சுகளை பண்ணைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக அட்டைப் பெட்டிகளில் வைக்கும் போது, அவற்றின் அடி வயிற்றுப் பகுதி மென்மையாக இருப்பதாலும், அவற்றின் உடல் முற்றிலும் உலராததாலும் அவைகளால் நிற்க முடியாது. எனவே பெட்டிகளில் குஞ்சுகளை அடைப்பதற்கு 4 முதல் 5 மணி நேரத்திற்கு முன்பாக அவற்றைக் கடினப்படுத்த வேண்டும். இவ்வாறு கடினப்படுத்துவதால் குஞ்சுகளைத் தரம் வாரியாகப் பிரிப்பது எளிதாவதுடன், குஞ்சுகளின் பாலினத்தை எளிதாகக் கண்டறியலாம்.

குஞ்சுகளைத் தரம் வாரியாகப் பிரித்தல்
          குறைந்தபட்ச தரம் இல்லாமல் எந்த ஒரு கோழிக் குஞ்சும் நுகர்வோரைச் சென்றடையக் கூடாது. கோழிக்குஞ்சுகளின் தரத்தினை மதிப்பிடும் வரைமுறைகளாவன 1. உடலமைப்பில் குறைபாடுகள் இல்லாமல் இருத்தல் 2. தொப்புள் பகுதி நன்றாக மூடி ஆறியிருக்க வேண்டும் 3. குறைந்த பட்ச எடை இருத்தல் 4. நன்றாக நிற்பது.

பாலினத்தைக் கண்டறிதல்
          முட்டைக்கோழிக் குஞ்சுகளை பண்ணைகளுக்கு அனுப்புவதற்கு முன்பாக அவற்றின் ஆசன வாய்ப்பகுதியில் பரிசோதித்தோ அல்லது அவற்றின் இறகுகளின் அமைப்பை வைத்தோ பாலினம் வாரியாகப் பிரிப்பது மிகவும் அவசியமான செயல் முறையாகும்.

தடுப்பூசி போடுதல் 
          குஞ்சு பொரிப்பகங்களில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான கோழிக்குஞ்சுகளுக்கு பண்ணையாளர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாகவே அவற்றுக்கு மேரக்ஸ் நோய்க்கெதிரான தடுப்பூசி அளிக்கப்படுகிறது. பெரும்பாலான கோழிக்குஞ்சுகளுக்கு அவற்றின் கழுத்துப் பகுதியில் தோலுக்கடியில் தடுப்பூசி போடப்படுகிறது.

குஞ்சுகளைப் பண்ணைகளுக்கு அனுப்புதல்
          குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து கோழிக்குஞ்சுகளைப் பண்ணைகளுக்கு அனுப்பும் போது அவை பண்ணைகளை அதிகாலையில் செல்லுமாறு திட்டமிட்டு அனுப்பி வைக்க வேண்டும். அதிகாலையில் தட்ப வெப்பநிலை குளிர்ச்சியாக இருப்பதுடன், குஞ்சுகள் காலையில் வந்தால் நாள் முழுவதும் அவற்றை கவனிப்பவர்கள் நுணுக்கமாக கவனிப்பதற்கு உதவியாக இருக்கும்.

கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல்
          ஒவ்வொரு குழு குஞ்சு பொரித்ததற்குப் பின்னும் குஞ்சு பொரிப்பகத்தை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமான செயல் முறையாகும். இந்த சுத்தம் செய்யும் செயல்முறை முழுமையாக இருக்கவேண்டும்.

கழிவுகளை அப்புறப்படுத்துதல்
          கருவுறாத முட்டைகள், குஞ்சு பொரிக்காத முட்டைகள், இறந்த கோழிக்குஞ்சுகள், கழித்த குஞ்சுகள் போன்றவற்றை குஞ்சு பொரிப்பகத்திற்கு அருகில் உள்ளவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இக் கழிவுப் பொருட்கள் குஞ்சு பொரிப்பகத்தை அசுத்தப் படுத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment