Tuesday, January 13, 2015

காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையத் திட்டம்

சிவகங்கை மாவட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக 600 ஹெக்டேர் பரப்பில் வெண்டை, கத்தரி, தக்காளி, கொடி வகை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
இதைத் தவிர 5 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
இப் பயிர்களில் பாசனநீர், உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை சாதாரண முறையில் அளிக்கும்போது, செடிகளின் வேர்பகுதிகள் மட்டுமல்லாது சுற்றியுள்ள இடங்களிலும் அளிக்கப்பட்டு வீணாகிறது.
இதனைத் தவிர்த்து, நீர்ப்பாசனம் மற்றும் இடுபொருள்களை துல்லியமாக பயிர்களுக்கு கிடைக்கச் செய்து, குறைந்த செலவில் அதிக விளைச்சல் மற்றும் வருமானம் தரும் திட்டமே துல்லிய பண்ணைத் திட்டமாகும்.
இத் திட்டத்தின் கீழ் 2012-2013 ஆம் ஆண்டு விவசாயிகளின் நிலங்களில் 200 ஏக்கர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் (உரம் கரைத்து இடும் டேங்க்) உள்பட அமைக்கப்பட்டு காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படவுள்ளன.
வெண்டை, கத்தரி, தக்காளி மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், இதற்கென தேர்வு செய்யப்பட்டு தற்போது சொட்டுநீர் பாசனக் கருவிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கென நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 43,816 மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் அளிக்கப்படுகிறது.
பயிர் சாகுபடிக்கென வீரிய ஒட்டுரக விதை மற்றும் நீரில் கரையும் உரங்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு துல்லியப் பண்ணையம் அமைப்பது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

எனவே காய்கறி பயிர்களில் துல்லிய பண்ணையம் அமைத்து, அதிக வருமானம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பகுதி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் இருளப்பன் தெரிவித்துள்ளார்.


வேளாண் அரங்கம் மார்க்கெட்டில்

No comments:

Post a Comment