களர் உவர் நிலங்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும், அவற்றின் செயல் திறனும் குறைந்து காணப்படும். நுண்ணுயிர்கள் போதிய எண்ணிக்கையில் இருந்தால்தான் இடப்படும் கம்போஸ்ட் மற்றும் தழை உரங்கள் சிதைக்கப்பட்டு வளரும் பயிர்களுக்கு கிடைக்கும்.
மேலும், இம் மண்ணில் இடப்படும் ரசாயன உரங்களும், பயிர்களுக்கு கிடைக்க வேண்டுமானால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருத்தல் வேண்டும்.
களர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யும் போது நெல் நடவு செய்த 10 நாள்களில் நீலப்பச்சைப்பாசி என்னும் ஒரு வகைப் பாசியை இடுவதால் நெல் பயிர் நன்கு வளரும். இப் பாசி களர் உவர் தன்மையைத் தாங்கி வளரும் திறன் கொண்டது. மண்ணின் இயக்கம் (டஏ) 7.5 முதல் 10 வரை உள்ள நிலங்களில் இது நன்கு வளரும். இந்தப் பாசியை மண்ணில் இடும்போது மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் ஈரப்பதம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இப் பாசி ஆக்சாலிக் அமிலம் எனப்படும் ஒரு வகை அமிலத்தை வெளியிடுகிறது.
இந்த அமிலம் மண்ணின் காரத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. ஒரு ஏக்கருக்கு 4 கிலோ நீல பச்சைப்பாசியை இடுவதால், அது 10 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேர்ப்பித்து, அதில் வளரும் நெல் பயிருக்கு கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூலைப் பெறலாம்.
No comments:
Post a Comment