செயற்கை உரங்களால் மண் தனது வளத்தை இழந்து வரும் நிலையில், விவசாயிகளின் கவனம் இயற்கை உரங்களின் பக்கம் திரும்பியுள்ளது. செயற்கை உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்களின் விலை குறைவு என்பதை விட அவற்றை விவசாயிகளே உற்பத்தி செய்ய முடியும் என்பதே இதன் தனிச் சிறப்பு.
விவசாயிகள் பண்ணைக் கழிவுகளில் இருந்து அங்கக உரம் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சூழல் அறிவியல் துறை, வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறைப் பேராசிரியர் அ.பரணி கூறியதாவது:
மண்ணின் வளம் இயல்பாக இருந்தால் மட்டுமே பயிர் உற்பத்திக்கு ஏற்ற நிலை உருவாகும். பயிர்க் கழிவுகள், விலங்கினக் கழிவுகள் காலப்போக்கில் ரசாயன மாற்றம் அடைந்து மண்ணின் அங்ககப் பொருளாக மாற்றம் அடைகின்றன. இந்த ரசாயன மாற்றம் ஏற்படுவதற்கு மண்ணில் இயற்கையாக உள்ள ஏராளமான நுண்ணுயிர்கள் உதவுகின்றன.
இதைத் தவிர மண் புழுக்கள், பல்வேறு பூச்சிகள், நத்தை, கரையான், எறும்பு திண்ணி போன்ற பிராணிகளும் மண்ணின் வளம் சிறக்க வழிவகுக்கின்றன. 10 டன் குப்பை உரம் 50 முதல் 70 கிலோ தழைச் சத்தையும், 15 முதல் 20 கிலோ மணிச் சத்தையும், 50 முதல் 70 கிலோ சாம்பல் சத்தையும் தரவல்லது.
திடக் கழிவுகளில் பயிர்களுக்குத் தேவையான எல்லா சத்துகளும் அடங்கி உள்ளன. இந்த பண்ணைக் கழிவுகளைச் சரியான முறையில் பயன்படுத்தினால் அதில் இருந்து அதிக சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றித் தர முடியும்.
மக்க வைத்தல்: மக்கும் நிகழ்வின்போது, கழிவுகளின் துகள்களின் அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்ணைக் கழிவுகளை மக்கச் செய்வதற்கு முன் அவற்றை 2 முதல் 2.5 செ.மீ. கொண்டதாக நறுக்க வேண்டும். கரிமச் சத்து, தழைச் சத்தின் விகிதம்தான் மக்கும் காலத்தையும், வேகத்தையும் முடிவு செய்கின்றன.
எனவே, கிளைரிசீடியா இலைகள், அகத்தி, தக்கைப் பூண்டு இலைகள் போன்ற பச்சைக் கழிவுகளையும், வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புல்கள் போன்ற கரிமச் சத்து அதிகமுள்ள பழுப்பு நிறக் கழிவுகளையும் சேர்த்தால் அது விரைவில் மக்கிவிடும். அதேபோல, கால்நடைகள், பறவைகள், பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளின் கழிவுகளிலும் தழைச் சத்து அதிகம் உள்ளது.
கம்போஸ்ட் உரம் தயாரிப்பு:
கம்போஸ்ட் உரக் குவியல் அமைக்க குறைந்தது 4 அடி உயரத்துக்கு கழிவுகளை போட்டு அவற்றின் அளவை சமப்படுத்த வேண்டும். மக்க வைக்கும் இடம் சற்று உயர்வாகவும், நிழலாகவும் இருக்க வேண்டும். கழிவுகள் அனைத்தையும் நன்கு கலக்கி விட வேண்டும். கரிமம், தழைச் சத்து நிறைந்த கழிவுகளை மாற்றி, மாற்றி பரப்பி, இடையிடையே கால்நடைக் கழிவுகளையும் கலந்து, போதுமான அளவு நீர் தெளிக்க வேண்டும்.
கழிவுகளைத் துரிதமாக மக்க வைக்க வேளாண் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிரிக் கூட்டுக் கலவையான பயோமினரலைசரை ஒரு டன் கழிவுக்கு 2 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். திடக்கழிவு குவியலில் தேவையான அளவுக்கு உயிர் வாயு இருக்க வேண்டும்.
குவியலை 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறி விடவேண்டும். மக்கும் நிகழ்வு முடிந்த பின் உரத்தின் அளவு குறைந்து, கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும், துகளின் அளவு குறைந்தும் இருக்கும். இதனையடுத்து மக்கிய உரக் குவியலை கலைத்து, சலித்து எடுக்க வேண்டும். மக்காதவற்றை மறுபடியும் உரக்குவியலில் போடலாம்.
மக்கிய உரத்தை செறிவூட்டுவது எப்படி?
அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில், கடினமான தரையில் குவித்து, நன்மை தரக்கூடிய நுண்ணுயிர்களான அசடோபாக்டர், அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா (0.2 சதம்) ஆகியவற்றை ஒரு டன் மட்கிய உரத்துடன் கலக்கவேண்டும்.
இதை 20 நாள்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட. துரிதப்படுத்தப்பட்ட மக்கிய உரத்தில் சாதாரண மக்கிய உரத்தைக் காட்டிலும் ஊட்டச் சத்தின் நிலை அதிகமாவும், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகமாகவும் இருக்கும்.
மண்புழு உரம் தயாரித்தல்:
அதிக சத்து கொண்ட மண்புழு உரத்துக்கு மண்புழு தேர்வு முக்கியமானது. இதற்கு ஆப்பிரிக்கன் மண்புழு, சிவப்பு மண்புழு, மட்கும் மண்புழு போன்றவை சிறந்தவையாகும். உரம் தயாரிக்க, நிழலுடன் அதிகளவு ஈரப்பதமும், குளிர்ச்சியுமான இடம் இருக்க வேண்டும். மாட்டுத் தொழுவம், கோழிப் பண்ணைக் கட்டடங்களை இதற்குப் பயன்படுத்தலாம்.
நெல் உமி, தென்னை நார்க்கழிவு, கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிபாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்கு பரப்பி, ஆற்று மணலை அந்தப் படுக்கையின் மேல் 3 செ.மீ. உயர்த்துக்கு தூவவேண்டும். பின்னர் 3 செ.மீ. உயரத்துக்கு தோட்டக்கால் மண்ணைப் பரப்பி தண்ணீர் தெளிக்க வேண்டும்.
கால்நடைக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், பயிர்க் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், மலர் அங்காடிக் கழிவுகள், வேளாண் சார்ந்த தொழிற்சாலைக் கழிவுகள் அனைத்தும் மண்புழு உரம் தயாரிக்கச் சிறந்தவை. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட படுக்கையில் ஒரு சதுர மீட்டருக்கு 2 கிலோ மண்புழுக்களைத் தூவ வேண்டும்.
இதனையடுத்து, வாரம் ஒரு முறை படுக்கையின் மேல் பகுதியில் உள்ள உரத்தை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும்.
மண்புழு வெளியில் தெரியும் நிலை வரை அறுவடை செய்யலாம். சிறிய படுக்கை முறையில் கழிவுகள் முழுவதும் மக்கிய பின் அறுவடை செய்தால் போதுமானதாகும். சேகரிக்கப்பட்ட உரத்தை ஈரப்பதத்துடன் திறந்த வெளியில் சேமித்து வைக்க வேண்டும்.
தென்னை நார்க் கழிவுகளை கொண்டு மக்கும் உரம் தயாரித்தல்:
தென்னங்கயிறு தொழில்சாலைகளில் இருந்து கிடைக்கும் நார்க் கழிவுகள் சாலையோரம் கொட்டப்பட்டு வீணாகின்றன. தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 5 லட்சம் டன் நார்க் கழிவுகள் இவ்வாறு வீணாகின்றன. இந்த நார்க்கழிவில் விரைவில் மக்காத லிக்னின், செல்லுலோஸ் ஆகியவை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன.
இதில் கரிமம், தழைச்சத்து 21:1 என்ற விகிதத்தில் இருப்பதால் இதை அப்படியே உபயோகிக்க முடியாது. எனவே, தென்னை நார்க்கழிவை புளுரோட்டஸ் என்ற காளானைக் கொண்டு மக்க வைத்து, சத்துகளின் அளவை அதிகரிக்கச் செய்து சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம்.
உரக் குவியல் அமைக்கும் முறை:
முதலில் நாரற்ற கழிவுகளை 3 அங்குல உயரத்துக்கு பரப்பி நன்கு நீர் தெளித்து ஈரப்படுத்த வேண்டும். பின்னர் தழைச் சத்துள்ள ஏதேனும் ஒரு மூலப் பொருள், உதாரணமாக கோழிப் பண்ணைக் கழிவுகளை சேர்க்க வேண்டும். தழைச் சத்துக்காக ஒரு டன் கழிவுக்கு 200 கிலோ கோழி எரு பரிந்துரைக்கப்படுகிறது.
முதலில் ஒரு டன் கழிவை 10 சம பாகங்களாக பிரித்து, முதல் அடுக்கின் மேல் 20 கிலோ கோழி எருவைப் பரப்ப வேண்டும். பின்னர் நுண்ணுயிர்க் கலவைகளான புளுரூட்டஸ், பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக் கலவை (2 சதவீதம்) கழிவின் மேல் இட வேண்டும்.
இதேபோல, நார்க்கழிவு, தழைச் சத்து மூலப் பொருள்களை ஒன்றன் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். குறைந்தபட்சம் 4 அடி உயரத்துக்கு இது இருக்க வேண்டும். இந்த கழிவுக் குவியலை 15 நாள்களுக்கு ஒரு முறை கிளறிவிட வேண்டும். தரமான உரத்தைப் பெற ஈரப்பதத்தைத் தக்க வைத்தல் அவசியம். கழிவுகள் 60 நாள்களில் மக்கி உரமாகிவிடும். கழிவுகளின் நிறம் கருப்பாக மாறி, துகள்கள் சிறியதாக மாறும், மக்கிய உரத்தில் இருந்து மண்வாசனை வருவதைக் கொண்டு உரம் தயாரானதை அறியலாம்.
அங்கக உரங்களைப் பயன்படுத்துவது எப்படி?
மேற்கண்ட அனைத்து வகையான அங்கக உரங்களையும் எல்லா வகையான பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு 5 டன் என்ற அளவில் இட வேண்டும். இந்த உரங்களை விதைப்பதற்கு முன் அடியுரமாக இட வேண்டும்.
நாற்றாங்கால்களுக்கும், பாலித்தீன் பைகள், மண் தொட்டிகளில் நிரப்ப வேண்டிய மண் கலவைகளுக்கு 20 சதவீதம் மக்கிய நார்க் கழிவை மணலுடன் கலந்து தயாரிக்க வேண்டும். தென்னை, மா, வாழை உள்ளிட்ட நன்கு வளர்ந்த பழ வகை மரங்களுக்கு ஒரு மரத்துக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.
Do you need Finance? Are you looking for Finance? Are you looking for finance to enlarge your business? We help individuals and companies to obtain finance for business expanding and to setup a new business ranging any amount. Get finance at affordable interest rate of 3%, Do you need this finance for business and to clear your bills? Then send us an email now for more information contact us now via (financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 Thank
ReplyDelete