Thursday, December 17, 2015

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி விரட்டிகள்



அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit

இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

Thursday, December 10, 2015

வீட்டுக் காய்கறித் தோட்டம்


காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஒரு நபர் ஒரு நாளுக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது.

மேற்கண்ட கருத்துக்களை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது. மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது. மேலும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும். இதனால் காய்கறிகளில் நச்சு இரசாயணங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.

இடம் தேர்வு செய்தல்

வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம். ஏனெனில் குடும்ப நபர்களை கொண்டு முறையாக பராமரிக்கவும், வீட்டின் சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்திக் கொள்ளவும் இது சுலபமாக இருக்கும். காலியாக இருக்கும் இடத்தைப் பொறுத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொறுத்தும் காய்கறி தோட்டத்தின் அளவு நிர்ணயம் செய்ய வேண்டும். காய்கறித் தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் முடிந்தவரை சதுரவடிவத்தைவிட செவ்வக வடிவ வீட்டுக்காய்கறி தோட்டத்தை தேர்வு செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி மற்றும் தொடர் சாகுபடி முறையை மேற்கொள்ள வேண்டும். நான்கு அல்லது ஐந்து நபர்கள் உள்ள ஒரு சராசரி குடும்பத்திற்கு தேவைப்படும் காய்கறியை உற்பத்தி செய்ய 5 சென்ட் இடம் இருந்தால் போதுமானதாகும்.

நிலம் தயார் செய்தல்
நிலத்தை 30-40 செமீ ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு எருவை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும். தேவைக்கேற்ப 45 செமீ ஜ் 60 செமீ என்ற இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் படுக்கை முறையிலும் சாகுபடி செய்யலாம்.

பண்ணைக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பு

செயற்கை உரங்களால் மண் தனது வளத்தை இழந்து வரும் நிலையில், விவசாயிகளின் கவனம் இயற்கை உரங்களின் பக்கம் திரும்பியுள்ளது. செயற்கை உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்களின் விலை குறைவு என்பதை விட அவற்றை விவசாயிகளே உற்பத்தி செய்ய முடியும் என்பதே இதன் தனிச் சிறப்பு.


விவசாயிகள் பண்ணைக் கழிவுகளில் இருந்து அங்கக உரம் தயாரிக்கும் முறை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக சூழல் அறிவியல் துறை, வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறைப் பேராசிரியர் அ.பரணி கூறியதாவது:

மண்ணின் வளம் இயல்பாக இருந்தால் மட்டுமே பயிர் உற்பத்திக்கு ஏற்ற நிலை உருவாகும். பயிர்க் கழிவுகள், விலங்கினக் கழிவுகள் காலப்போக்கில் ரசாயன மாற்றம் அடைந்து மண்ணின் அங்ககப் பொருளாக மாற்றம் அடைகின்றன. இந்த ரசாயன மாற்றம் ஏற்படுவதற்கு மண்ணில் இயற்கையாக உள்ள ஏராளமான நுண்ணுயிர்கள் உதவுகின்றன.
இதைத் தவிர மண் புழுக்கள், பல்வேறு பூச்சிகள், நத்தை, கரையான், எறும்பு திண்ணி போன்ற பிராணிகளும் மண்ணின் வளம் சிறக்க வழிவகுக்கின்றன. 10 டன் குப்பை உரம் 50 முதல் 70 கிலோ தழைச் சத்தையும், 15 முதல் 20 கிலோ மணிச் சத்தையும், 50 முதல் 70 கிலோ சாம்பல் சத்தையும் தரவல்லது.
திடக் கழிவுகளில் பயிர்களுக்குத் தேவையான எல்லா சத்துகளும் அடங்கி உள்ளன. இந்த பண்ணைக் கழிவுகளைச் சரியான முறையில் பயன்படுத்தினால் அதில் இருந்து அதிக சத்துகளை பயிர் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றித் தர முடியும்.
மக்க வைத்தல்: மக்கும் நிகழ்வின்போது, கழிவுகளின் துகள்களின் அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. பண்ணைக் கழிவுகளை மக்கச் செய்வதற்கு முன் அவற்றை 2 முதல் 2.5 செ.மீ. கொண்டதாக நறுக்க வேண்டும். கரிமச் சத்து, தழைச் சத்தின் விகிதம்தான் மக்கும் காலத்தையும், வேகத்தையும் முடிவு செய்கின்றன.

எனவே, கிளைரிசீடியா இலைகள், அகத்தி, தக்கைப் பூண்டு இலைகள் போன்ற பச்சைக் கழிவுகளையும், வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புல்கள் போன்ற கரிமச் சத்து அதிகமுள்ள பழுப்பு நிறக் கழிவுகளையும் சேர்த்தால் அது விரைவில் மக்கிவிடும். அதேபோல, கால்நடைகள், பறவைகள், பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளின் கழிவுகளிலும் தழைச் சத்து அதிகம் உள்ளது.

 கம்போஸ்ட் உரம் தயாரிப்பு:

கம்போஸ்ட் உரக் குவியல் அமைக்க குறைந்தது 4 அடி உயரத்துக்கு கழிவுகளை போட்டு அவற்றின் அளவை சமப்படுத்த வேண்டும். மக்க வைக்கும் இடம் சற்று உயர்வாகவும், நிழலாகவும் இருக்க வேண்டும். கழிவுகள் அனைத்தையும் நன்கு கலக்கி விட வேண்டும். கரிமம், தழைச் சத்து நிறைந்த கழிவுகளை மாற்றி, மாற்றி பரப்பி, இடையிடையே கால்நடைக் கழிவுகளையும் கலந்து, போதுமான அளவு நீர் தெளிக்க வேண்டும்.


கழிவுகளைத் துரிதமாக மக்க வைக்க வேளாண் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிரிக் கூட்டுக் கலவையான பயோமினரலைசரை ஒரு டன் கழிவுக்கு 2 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். திடக்கழிவு குவியலில் தேவையான அளவுக்கு உயிர் வாயு இருக்க வேண்டும்.

குவியலை 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறி விடவேண்டும். மக்கும் நிகழ்வு முடிந்த பின் உரத்தின் அளவு குறைந்து, கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும், துகளின் அளவு குறைந்தும் இருக்கும். இதனையடுத்து மக்கிய உரக் குவியலை கலைத்து, சலித்து எடுக்க வேண்டும். மக்காதவற்றை மறுபடியும் உரக்குவியலில் போடலாம்.
மக்கிய உரத்தை செறிவூட்டுவது எப்படி?
அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில், கடினமான தரையில் குவித்து, நன்மை தரக்கூடிய நுண்ணுயிர்களான அசடோபாக்டர், அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா (0.2 சதம்) ஆகியவற்றை ஒரு டன் மட்கிய உரத்துடன் கலக்கவேண்டும்.
இதை 20 நாள்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட. துரிதப்படுத்தப்பட்ட மக்கிய உரத்தில் சாதாரண மக்கிய உரத்தைக் காட்டிலும் ஊட்டச் சத்தின் நிலை அதிகமாவும், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகமாகவும் இருக்கும்.

குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி



விவசாயிகள் குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும் என, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.


 ரகங்கள்:
  • போனிவில்லி, புளுபேண்டம், அர்கெல், அலாஸ்கா லின்கோலின், அசாத் ரகங்கள் ஏற்றவை.
மண், தட்பவெப்பநிலை
  • மணல்சாரியான செம்மண் பூமியிலும், களிமண் நிறைந்த நிலங்களிலும் வளர்ந்தாலும், வடிகால் வசதி கொண்ட பொல பொலப்பான இருபொறை மண் நிலங்களில் நன்கு வளரும். களர், உவர் நிலங்களில் வளராது. பட்டாணி குளிர்காலத்தில் சிறந்த வளர்ச்சியும், மகசூலும் தரவல்லது.
பருவம்:
  • பிப்ரவரி – மார்ச், அக்டோபர் – நவம்பர் மாதங்கள் பயிரிட ஏற்ற பருவம்.
விதையளவு:
  • ஹெக்டேருக்கு 100 கிலோ விதை போதும். 40-க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்:
  • நிலத்தை 3 அல்லது 4 தடவை மடக்கி உழ வேண்டும். கடைசி உழவில் 20 டன் மக்கிய தொழு உரம் இட்டு உழவேண்டும். பின்பு 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

விதை, விதைப்பு:
  • விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது நான்கு கிராம் ட்ரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். பின்பு 2 கிலோ பாஸ்போ பாக்டீரியத்தை மண்ணுடன் கலக்கவேண்டும். பார்களின் பக்கவாட்டில் விதைகளை 34 செமீ ஆழத்தில் ஊன்றவேண்டும். விதைக்கு விதை 10 செமீ இடைவெளி விட்டு விதையை ஊன்றவேண்டும்.
  •  ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: பார்களின் ஓரங்களில் தழைச்சத்து 60 கிலோ, சாம்பல் சத்து 70 கிலோ கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை அடியுரமாக இடவேண்டும்.
நீர் நிர்வாகம்:
  • விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின்னர் 3 நாள் கழித்து உயிர்த்தண்ணீரும் விடவேண்டும். பின்னர் மண்ணின் தன்மையை அனுசரித்து 5 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் கட்டவேண்டும். மலைகளில் பயிரிட்டால் பனிக்கட்டி தோன்றும் காலத்தில் நீர் கட்டவேண்டும்.

கடலில் வீணாகக் கலக்கும் பாலாற்று நீர்

கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பெய்த பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும், போதிய தடுப்பணைகள் இல்லாததாலும், பல இடங்களில் மணல் வரைமுறையின்றி மொத்தமாக அள்ளப்பட்டதாலும் வீணாக உருண்டோடி கடலில் கலக்கிறது. எனவே பாலாற்றை சுற்றியுள்ள பகுதிகளின் நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடகத்தில் 93 கி.மீ. தொலைவும், ஆந்திரத்தில் 33 கி.மீ. தொலைவும், தமிழகத்தில் 222 கி.மீ. தொலைவும் ஓடி சென்னைக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ள வயலூர் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.
இந்த பாலாறு ஆசியாவின் தொன்மையான ஆறுகளில் ஒன்று. இதன் மணற்பரப்பின் உயரத்தைக் கொண்டு நீரியல் அறிஞர்கள் ஆற்றின் வயதை கணக்கிட்டு இதனை தொன்மையான ஆறு என்று உறுதியாகக் கூறுகின்றனர். இந்த ஆற்றின் வழியாகப் படகுகள் மூலம் பொருள்கள் வந்தது தொடர்பாக பெரும்பானாற்றுப்படை உள்ளிட்ட நூல்களில் குறிப்புகள் உள்ளன.


வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நகரங்கள் இந்த ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளன. வடதமிழ்நாட்டின் பெரும் பகுதிகளை வளமாக்கி வந்த பாலாற்றில் கடந்த 23 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. ஆற்காடு பகுதியில் அணை உள்ள இடத்தில் மட்டும் அவ்வப்போது தண்ணீர் வரும். ஆறுகளில் நீர் ஓடும்போது மணலில் நீர் ஊறி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும். ஆனால் இந்த ஆற்றில் மணல் பெருமளவு அள்ளப்பட்டு விட்டதால் வரும் நீர் அப்படியே உருண்டோடுகிறது என்றும், எனவே இந்த ஆற்று நீரை சேமிக்கும் வகையில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் காஞ்சி அமுதன் கூறியதாவது:
கோமதிநாயகம் என்னும் நீரியல் அறிஞர் ஆசியாவின் மிகத் தொன்மையானது பாலாறு என்று தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார்.