Tuesday, June 9, 2015

பண்ணைப் பதிவேடுகள் (Pannai Pathivedugal) - Farm Records

கால்நடைப் பதிவேடுகள் பராமரித்தல்:


ஒரு நல்ல இலாபகரமான பண்ணைப் பராமரிப்பிற்கு கீழ்க்கண்ட பதிவேடுகள் அவசியம் ஆகும்.

1) கால்நடைகளை அடையாளம் காண உதவும் கையேடு.

2) வளர்ச்சிப் பதிவேடு.

3) உடல்நலம் பற்றிய பதிவேடு.

4) கால்நடை இழப்பு / இறப்பு குறித்த பதிவேடு.

5) கன்றுகளின் இறப்பு பற்றிய பதிவேடு.

6) இனக்கலப்பு மற்றும் கன்று ஈனுதல் பற்றிய தகவல்
அடங்கிய பதிவேடு.

7) கறவை மாடுகளின் பால் உற்பத்தி பற்றிய பதிவேடு.

8) அடர் மற்றும் கலப்பு தீவனங்கள் பற்றிய பதிவேடு.

9) வேலை ஆட்களின் பதிவேடு.

10) நீர்ப் பயன்பாடு / தேவை குறித்த பதிவேடு.

11) சரியான வளர்ச்சியற்ற மாடுகள் (நீக்கிய மாடுகள்) பற்றிய பதிவேடு.

12) விற்ற கால்நடைகள் பற்றிய தகவல் பதிவேடு.

13) வாங்கிய கால்நடைகள் பற்றிய தகவல் பதிவேடு.

பண்ணையின் பொருளாதாரப் பண்புகள் (Pannaiyin Porulaathaara Panbugal) - Dairy Farming Day Today Activities

பால்பண்ணையின் பல்வேறு பொருளாதாரப் பண்புகளாவன:

  1. ஒரு கன்றுப் பருவத்தில் பால் உற்பத்தி அளவு
  2. ஒரு பருவக் காலத்தில் பால் தரும் நாட்கள் / பால் உற்பத்திக் காலம்
  3. பால் உற்பத்தி நிலைத்தன்மை
  4. முதல் கன்று ஈனும் வயது
  5. சினைப் பருவம்
  6. பால் வற்றிய நாட்கள்
  7. அடுத்தடுத்த கன்றுகள் ஈனுவதற்கு இடையே உள்ள இடைவெளி
  8. இனப்பெருக்கத் திறன்
  9. தீவனம் உட்கிரகிக்கும் நாள்
  10. நோய் எதிர்ப்புத் திறன்
1.ஒரு பருவத்தில் பால் உற்பத்தி அளவு

ஒரு கன்று ஈனும் பருவத்தில் பெறப்பட்ட மொத்தப் பால் உற்பத்தியே ஒரு பருவ பால் உற்பத்தி ஆகும். பொதுவாக அயல்நாட்டு இனங்களை விட நம் நாட்டுப் பசுக்களில் உற்பத்தி குறைவு. இது மொத்தம் ஈன்ற கன்றுகள், பால் கறக்கும் இடைவெளி மற்றும் பாலின் நிலைத்தன்மையைப் பொறுத்தது. முதல் பருவத்திலிருந்து போகப்போக 3 - 4 வது பருவம் வரை பால் உற்பத்தி 30 - 40 சதவிகிதம் அதிகரிக்கிறது. அதன் பின்பு குறைய ஆரம்பிக்கும். இரு இனங்களுக்கிடையே பால் உற்பத்தியின் அளவை ஒப்பிட அதன் பால் உற்பத்திக் கொழுப்பு சரிசெய்யப்பட வேண்டும். 4 சதவிகிதம் கொழுப்பு சரிசெய்த பால் = 0.4 மொத்த பால் + 15 மொத்தக் கொழுப்பு கன்று ஈன்ற (Parturition) பிறகு பால் உற்பத்தி அதிகரித்து ஈன்ற 2 - 4 வாரங்களுக்கு உற்பத்தி மிக அதிகமாக இருக்கும்.
இதுவே அப்பருவத்தின் (நிறை) அதிக உற்பத்தி அளவாகும். இந்த அதிக உற்பத்தி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நம் இந்திய இனங்களில் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும்.

2.பால் உற்பத்திக் காலம்

ஒரு கன்றுப் பருவத்தில் பால் தரும் மொத்த நாட்கள் பால் உற்பத்திக் காலம் ஆகும். சராசரி பால் உற்பத்தி நாட்கள் ஒரு வருடத்திற்கு 305 நாட்கள் ஆகும். குறுகிய காலமாக இருந்தால் 33 நாட்கள் குறையும். குறுகிய இந்திய இனங்கள் குறைந்த உற்பத்திக் காலமே கொண்டவை. சில இனங்களில் உற்பத்திக்காலம் அதிகமாக இருந்தாலும் பால் மிகக்குறைந்தளவே இருக்கும்.

3.பால் உற்பத்தியின் நிலைத்தன்மை.

அதிக உற்பத்தியால் பாலின் உற்பத்திக்காலம் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் 2-4 வாரங்களில் வரும் பாலின் உற்பத்தி விரைவில் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுவதே நிலைத்தன்மை, பால் குறையும் தன்மை குறைந்தளவே இருக்குமாறு பராமரித்தல் அதிக உற்பத்திக்கு உதவும்.

4.முதல் கன்று ஈனும் வயது

அதிக நாள் உற்பத்திக்கு முதல் கன்று ஈனும் வயது முக்கியமான ஒன்று. இந்திய இனங்களில் முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்கள். கலப்பினங்களில் 2 வருடங்கள். எருமை மாடுகளில் மூன்றரை வருடங்கள் ஆகும். முதல் கன்று ஈனும் வயது அதிகமாக இருந்தால் பால் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். ஆனால் மொத்தம் ஈனும் கன்றுகள் அளவு குறைவதால் பால் பருவமும் குறையும்.

5.சினைக்காலம்ள

இது கன்று ஈன்று பால் வற்றிய பின்பும் அடுத்த கருத்தரிப்புக்கும் உள்ள இடைவெளியாகும். சரியான நேரத்தில் சினை எய்த வைத்தல் மன அழுத்தத்தைப் போக்கிப் பசுவை ஆரோக்கியமாக வைக்கும். மேலும் இனப்பெருக்க உறுப்புக்கள் சரியான வயதில் தன்னிலை எய்தவும் இது உதவுகிறது. சராசரி சினைக்காலம் 60-90 நாட்கள். இந்நாட்கள் நீடித்தால், அடுத்த கன்று ஈனுவதும் தள்ளிப்போகும். அதே சமயம் மிகக் குறைவாக இருந்தாலும், பசுவின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உடனடி கர்ப்பத்தால் பால் உற்பத்தி குறையும். எனவே சரியான இடைவெளியுடன் இருத்தல் வேண்டும்.

6.பால் / மடி வற்றிய நாட்கள்

இது பால் கறப்பது நின்ற நாளிலிருந்து அடுத்தக் கன்று ஈனும் நாள் வரை உள்ள காலமாகும். முந்தய ஈற்றில் இழந்த சத்துக்களைத் திரும்ப பெற்றுக் கொள்ள சிறிது ஓய்வு தேவை. இக்காலமானது இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் இருக்கலாம். இவ்வாறு போதிய இடைவெளி இல்லையெனில் பசுவின் பால் உற்பத்தி படிப்படியாகக் குறைவதோடன்றி பிறக்கும் கன்றும், ஆரோக்கியமாக இருக்காது.

7.கன்று ஈனும் இடைவெளி

அடுத்தடுத்த இரு கன்றுகள் ஈனுவதற்கு இடையே உள்ள இடைவெளி கன்று ஈனும் இடைவெளியாகும். மாடுகளில் ஆண்டுக்கு 1 கன்றும், எருமை மாடுகளில் 15 மாதங்களுக்கு ஒரு கன்றும் ஈனுதல் வேண்டும். கன்றுகளுக்கிடையே இடைவெளி அதிகமாக இருந்தால், அதன் மொத்தம் ஈனும் கன்றுகள் எண்ணிக்கை குறையும்.

8.இனப்பெருக்கத் திறன்

பசுவின் அதிகக் கன்றுகள் ஈனும் திறன், அதன் இனப்பெருக்கத் திறனைப் பொறுத்தது. இனப்பெருக்கத் திறன் மரபியல் குணாதிசியங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்து அமையும். பசுவின் இனப்பெருக்கத் திறனை முதல் கன்று ஈனும் வயது, அடுத்தடுத்த கன்று இடைவெளி, சினையாகும் காலம் போன்றவற்றின் மூலம் அறியலாம். சில மரபியல் பண்புகளால் ஒவ்வொரு கால்நடைக்கும் இத்திறன் மாறுபடுகிறது. சாதகமற்ற சூழ்நிலையில் குறைந்த பால் உற்பத்தி செய்யும் மாடுகள் அதிக உற்பத்தி உள்ள மாடுகள் அளவு பாதிக்கப்படாது.

9.தீவனம் உட்கொள்ளும் எடுக்கும் மற்றும் உட்கிரகிக்கும் திறன்

மாடானது நிறைய தீவனம் உட்கொள்வதோடு அதை நன்கு உட்கிரகித்துப் பாலாக மாற்றும் திறனுடையதாக இருக்க வேண்டும்.

10.நோய் எதிர்ப்பு

இந்திய இனங்கள் அயல் நாட்டு இனங்களை விட நோய் எதிர்ப்புத் திறன் மிகுந்தவையாக உள்ளன. கலப்பினச் சேர்க்கை மூலம் அயல் இனங்களில் இப்பண்பைப் பெறலாம்.

(ஆதாரம் : http://bieap.gov.in/)

Friday, June 5, 2015

பழங்கால கோழித் தீவனங்கள் (Palangaala Khozi Theevanangal) - Traditional Poultry Feed Ingredients

பழங்கால (பாரம்பரிய) கோழித் தீவனப் பராமரிப்பு:


தீவனப் பராமரிப்பு
தீவனப் பராமரிப்பு கோழி வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கோழி வளர்ப்புச் செலவின் 60-70 சதவிகிதம் அளவு தீவனத்திற்காகவே செலவிடப்படுகிறது. அவ்வாறு கொடுக்கும் தீன வீணாகாமல் முழுமையாக கோழிகளால் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே ஒரு லாபகரமான பண்ணையை உருவாக்க முடியும். 40க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் கோழிகளுக்கு தேவைப்படுகிறது.

இவை கீழ்க்கண்ட ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

நீர், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகும்.

கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களே ஆற்றலுக்கு பிரதானமானவை. கொழுப்பில் கார்போஹைட்ரேட் விட 2.25 மடங்கு ஆற்றல் அதிகமாக உள்ளது. மேலும் இதில் லினோலெயிக், லினோலெனிக், அராக்கிடியோனிக் அமிலம் போன்ற இன்றியமையாத கொழுப்பு அமிலங்களும் உள்ளன. அமினோ அமிலத் தேவையினைப் பூர்த்தி செய்யப் புரதம் அவசியம் ஆகும்.

கோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்
அர்ஜினைன், கிளைசின், ஹிஸ்டிடின், லியூசின், ஐசோலியூசின், லைசின், மெத்தியோனைன், சிஸ்டைன், ஃபினைல் அலனின், த்ரியோனைன், டிரைப்டோபன் மற்றும் வெலைன் இவற்றில் மிக முக்கியமாகத் தேவைப்படுபவை அர்ஜினைன், லைசின் மெத்தியோனைன், சிஸ்டைன் மற்றும் டிரிப்டோபன்.

விட்டமின்களும், தாது உப்புக்களும் ஆற்றலை அளிக்கவில்லை எனினும் உடல் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தேவையான முக்கிய தாதுக்கள்

கால்சியம்,  பாஸ்பரஸ், சோடியம், தாமிரம், ஐயோடின், இரும்பு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம்.

விட்டமின்கள்
விட்டமின் ஏ, விட்டமின் டி3, விட்டமின் ஈ, பைரிடாக்ஸின், ரிபோஃபிளேவின், பேன்டாதொனிக் அமிலம், நியாசின்ஃபோலிக் அமிலம் கோலைன்.மேற்கண்ட ஊட்டச்சத்துக்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கொடுக்க வேண்டும். சரிவிகித உணவே சிறந்த வளர்ச்சிக்கும் அதிக உற்பத்திக்கும் வித்தாகும்.


தீவனக் கூட்டுப் பொருட்கள்
பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தானியப் பயிர்களான அரிசி, சோளம், கோதுமை, ஓட், பார்லே போன்றவையும் மற்றும் உபதானியப் பொருட்களான நெல் / கோதுமை, உமி, தவிடு போன்றவைகளையும் தீனியாகக் கொடுக்கலாம். மேலும் விலங்கு, காய்கறிப் புரதங்களான மீன் தோல்க்கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், சோயாபீன் எண்ணெய்க் கழிவுகள், கடலை மற்றும் எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றையும் கோழித்தீவனமாகப்  பயன்படுத்தலாம். இதோடு தாதுக்களும் விட்டமின்களும் கலந்து சரிவிகித உணவாகக் கொடுத்தல் வேண்டும்.

கீழ்க்காணும் தீவனப் பொருட்கள் நம் நாட்டில் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

1.சோளம்
இதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரித்தல் எளிதாகிறது. குறைந்தளவு புரதமும், அதிக ஆற்றலும் கொண்டது. லைசின், சல்ஃபர் அமினோ அமிலங்களைப் பெற்றுள்ளது. மஞ்சள் நிறச் சோளத்தில் விட்டமின் மற்றும் சோன்த்தோடஃபில்  நிறமி நிறைந்துள்ளது. இந்த நிறமிகள் தான் சிலவகைப் பறவைகளின் மஞ்சள் தோலிற்குக் காரணம்.

2.பார்லே
இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் 15 சதவிகிதத்திற்கு மேல் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.

3.ஓட்ஸ்
ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகமிருப்பதால் 20 சதவிகிதம அளவே சேர்க்கவேண்டும். இதில் மாங்கனீசு சத்து அதிகம் இருப்பதால் கோழிகளில் வரும், கால் பிரச்சினை, இறகை பிடுங்கிக் கொள்ளுதல் மற்றும் தன்னின ஊன் ஊன்றுதல் போன்ற குறைபாடுகளைக் குறைக்க முடியும்.

4.கோதுமை
சோளத்திற்குப் பதில் அதிக ஆற்றல் அளிக்க கோதுமை பயன்படுகிறது.

5.கோதுமை தவிடு
இது மாங்கனீஸ் பாஸ்பரசுடன் சிறிது நார்ச்சத்தும் மிகுந்துள்ளது.

தீவன மேலாண்மை (Theevana Mealanmai) - Feeding Management

கன்றுகளுக்கு சீம்பால் ஊட்டம்

ஊட்டப்பராமரிப்புகள் கன்றிலிருந்தே தொடங்க வேண்டும். கன்று ஈன்றவுடன் பசுவிலிருந்து சுரக்கும் முதல் பால் சீம்பால் எனப்படுகிறது. இளம்கன்றிற்கு இது மிகவும் அவசியம். நாளொன்றிற்கு 2-21/2 லிட்டர் வீதம் முதல் 3 நாட்கள் கண்டிப்பாக சீம்பால் அளிக்கப்பட வேண்டும். இது கன்றின் செரிக்கும் தன்மையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. முடிந்தால் எஞ்சிய பாலை சேகரித்து சிறிது இடைவெளி விட்டு கன்றிற்கு ஊட்டச்செய்யலாம். 

பசுவின் சாதாரண பாலில் உள்ளதை விட சீம்பாலில் புரதச்சத்து மிகவும் அதிகம். இதன் புரதத்தில் உள்ள குளோபுலின் கால்நடைகளைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்த்துத் தாக்கும் சக்தி கொண்டது. இதில் காமா - குளோபுலின் அளவு 0.97 மி.கி. / மி.லி கன்று ஈன்ற உடனும் 16.55 மி.கி. / மி.லி அளவு கன்று ஈன்ற 2 மணி நேரத்திலும் இரண்டாவது நாளில் 28-18 மி.கி. / மி.லி அளவாகவும் உள்ளது.


சீம்பால் ஊட்டம்
  • சீம்பாலில் புரதம் 3 மடங்கும், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவையும் உள்ளன.
  • சாதாரண பசும்பாலை விட 5-15 மடங்கு அதிகவிடடமின் ‘ஏ’ சீம்பாலில் உள்ளது. இது பசுவுக்கு சினைத்தருணத்தில் அளித்த உணவைப் பொறுத்து அமையும்
  • இது தவிர ரிபோஃபிளோவின், குளோரின், தையமின் மற்றும் பேன்டோதொனிக் அமிலம் ஆகியவையும் அதிகம் உள்ளன.
  • இது செரித்தலை துரிதப்படுத்துகிறது.
பசும்பால் ஊட்டம்
  • முடிந்த அளவு தாய்ப்பசுவின் பாலை ஊட்டச்செய்யவும்.
  • பால் கறந்த உடனே கன்றை ஊட்டவிட வேண்டும்.
  • முதல் ஒரு வாரத்திற்கு நாளொன்றுக்கு 3-4 முறையும் அதன் பின்பு 2 முறையும் பாலூட்டுவதைப் பழக்கப்படுத்தலாம்.
கொழுப்புச்சத்து நீக்கிய பால்

பெரும்பாலான பண்ணைகளில் இப்போது கொழுப்பு நீக்கிய பாலையே கன்றுகளுக்குக் கொடுக்கின்றனர். சரியான அளவு கொழுப்பு நீக்கிய பாலையும் சீரான இடைவெளியில் அளிக்கலாம்.

மோர், தயிர்த் தெளிவு, கொழுப்பு, நீக்கி உலர்த்திய பால்: (Dried skim milk, whey/butter milk):


மேற்கண்ட அனைத்தையும் கலந்து 1கி-9கி அளவு நீருடன் கலந்து கொழுப்பு அற்ற பாலாக கன்றுகளுக்குக் கொடுக்கப்படுகிறது. இதில் செரித்தல் எளிதாகிறது.

அடர்தீவனம் (calf starter): 


இதில் கம்பு, சோளம், கேழ்வரகு, உடைத்த கோதுமை, அரிசி போன்ற தானயங்களை அரைத்து கலந்து பயன்படுத்தப்படுகிறது. சில (2) வாரங்களுக்குப் பிறகு தாய்ப்பால் ஊட்டத்தை நிறுத்திவிட வேண்டும். அடர்தீவனத்தை பால் ஊட்டியபின்பு கன்றின் வாயில் தேய்க்க வேண்டும். பின்பு கன்று அதை சாப்பிட்டு பழகிவிடும். கன்று வளர தானியங்களின் விகிதத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.


கொழுப்பு, நீக்கி உலர்த்திய பால் ஊட்டம்

கலப்புத்தீவனம்

தாய்ப்பாலை நிறுத்திவிட்டால் கன்றிற்கு சரியான தீவனம் அளித்தல் அவசியம். அடர்தீவனத்தில் கலந்துள்ள தானியங்களுடன் மேலும் பிண்ணாக்கு வகைகள், தவிடு வகைகள், பருப்பு நொய், வெல்லப்பாகு, உப்பு, தாது உப்புக்கலவை ஆகியவற்றைத் தேவையான விகிதத்தில் சரியாகக் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாலூட்டத்தை நிறுத்தும் முன்பே இத்தீவனத்தை ஊட்டச் செய்ய வேண்டும். பாலூட்டம் இருக்கும்போது அதிக புரதம் உள்ள தானியங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏஎனனில் ஏற்கனவே பாலில் புரதம் அதிகம் உள்ளது. மேற்கூறிய தானியங்களில் ஓட்ஸ் - 35%, லின்ஸீடு புண்ணாக்கு - 5%, தவிடு - 30%, பார்லே - 10%, கடலைப்பிண்ணாக்கு - 20%, கலவை சிறந்தது. அல்லது அரைத்த சோளம் 2 பங்கு கோதுமைத்தவிடு 2 பற்கு என்ற அளவினும் கலந்து அளிக்கலாம்.

((ஆதாரம்: டாக்டர்.சி.பால் பிரின்ஸ்ஸி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை)

கறவை மாடு வளர்ப்பு உத்திகள் (Karavai Maadu Valarppu) - Dairy Cow


கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகளை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும்.


முக்கிய பராமரிப்பு உத்திகள்:
  • சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.
  • கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துகளையும் உடலில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரிவிகித சத்தான உணவை வழங்க வேண்டும்.
  • ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே நுண்மக் கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்தை டியூப் மூலம் செலுத்தினால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
தீவனப் பராமரிப்பு:
  • சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாவிடில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
  • கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல், 20 கிலோவுக்கு குறைவாக உள்ள கன்று பிறக்கும். நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.
  • இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 8-வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும், 9-ஆவது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.
  • இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
  • கன்று ஈனும்போது காணும் அறிகுறிகள்: நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இதைச் சட்டம் உடைதல், தட்டு உடைதல் அல்லது குழி விழுதல் எனக் கூறுவர். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.
  • மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தலையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.
  • இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் கோர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.
  • பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும். இதுபோல் முறையாக சினைப் பசுவைப் பராமரிக்க வேண்டும்.