Friday, March 27, 2015

எருமை மாடு பால் பண்ணை (Erumai Maadu Paal Pannai) - Dairy Buffalo

ஊருக்குள் நுழைந்து, எருமை மாடு வளர்க்கிறார் என்று ஆரம்பித்தாலே சிறு குழந்தைகள் கூட அடையாளம் காட்டிவிடுகின்றனர், ஸ்டீபனின் எருமைப் பண்ணையை! அந்தளவிற்கு தஞ்சாவூர்  மாவட்டம், திருவையாறு, காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்டீபனின் பால் பண்ணை ஏக பிரபலாம். பண்ணையை நெருங்கும் போதே, மேனகா.. இந்தப்பக்கம் வந்து நில்லு. ராஜகுமாரி .. நீ தண்ணீர் குடிக்க மாட்டியா? என்று பாலர் பள்ளிக்கூடத்தில் கேட்பது போன்ற செல்ல அதட்டல்கள். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ஸ்டீபன். எருமைகள் நம்ம சொல்லிற்கு கட்டுப்படாது. வளர்ப்பது சிரமம் என்று  சொல்வார்கள். ஆனால், அதெல்லாம் தப்பான கருத்து. நாம் நன்றாக பழகினால் எல்லா பிராணிகளும் நன்றாகவே பழகும். அதற்கு எருமைகளும் விதிவிலக்கல்ல என்றார் ஸ்டீபன்.அன்று மூன்று மாடுகள் ! இன்று 31 மாடுகள்!
1998ம் வருடம், கறவையிலிருக்கும் நாட்டு எருமைகள் கன்னுக்குட்டிகளோட  வாங்கினேன். நான் வாங்கியது மூன்று மாடுகள. அதிலிருந்து பெருகி, இப்போது 17 கிடேரி எருமை, 8 கிடேரி கன்னுக்குட்டி, 6 கிடா கன்னுக்குட்டிகள் என்று மொத்தம் 31 உருப்படிகள் இருக்கு.

சுத்தம் அவசியம் !
எங்க பண்ணையை எப்பவும் சுத்தமாக இருக்கிற மாதிரி பார்த்துக்குவோம். முழுமையாக மேய்ச்சல் மூலமாகத்தான் மாடுகளை வளர்க்கிறோம். அதனால், எல்லா மாடுகளுமே நோய் நொடி இல்லாமல் நன்றாக இருப்பதோடு பராமரிப்புச் செலவும் குறைகிறது.

கொட்டகை இருந்தால் ஆரோக்கியம் !
பொதுவாக எருமை மாடுகளை திறந்த வெளியில்தான் கட்டி வைப்பாங்க. நாங்க கொட்டகை போட்டுதான் வளர்க்கிறோம். அப்போதுதான் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். 40 அடி நீளம், 30 அடி அகலம், 14 அடி உயரத்தில் கொட்டகை போட்டிருக்கிறோம். கொசு, மாதிரியான பூச்சிகள்கிட்டயிருந்து காப்பத்தருதுக்காக தினமும் ராத்திரியில் கரனட்டில் இயங்கும் கொசு விரட்டிகளை போட்டு வைப்போம்.

மேய்ச்சல் முறையில் செலவு குறைவு!
தினமும் காலையில் ஆறு மணிக்குள் பாலைக் கறந்துவிடுவோம். ஏழு மணியிலிருந்து மதியம் பன்னிரண்டு மணி வரைக்கும் மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். வெயில் ஏறிடுச்சுனா.. பக்கத்தில் இருக்கும் குளத்திற்குள் இறக்கி விட்டுவிடுவோம். திரும்ப மூன்று மணிக்கு பண்ணைக்கு அழைச்சுட்டு வந்து பால் கறந்துவிட்டு திரும்பவும் மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். பொழுது சாய்ந்த பிறகு பண்ணைக்கு அழைச்சுட்டு வந்து, குழாயில் தண்ணியைப் பீய்ச்சி அடித்து மாடுகளைச் சுத்தப்படுத்தி கொட்டகையில் கட்டிடுவோம். கோதுமைத் தவிடை ஊற வைத்து பருத்திக் கொட்டையைக் கலந்து வைத்துவிடுவோம். முழு மேய்ச்சல் என்பதால் தீவனச் செலவும் மிகவும் குறைவுதான். ஆரம்பத்தில் நான் வாங்கின மாடுகளில் இரண்டு மாடுகளுக்கு கிட்டத்தட்ட 20 வயசு நெருங்கிடுச்சு. இரண்டுமே பதிமூன்று முறை கன்று போட்டிருக்கு. ஆனாலும், அந்த மாடுகள் இன்னமும் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. முறையாக பராமரிப்பதுதான் இதற்கு காரணம்.

ஆண்டுக்கு 15,000 லிட்டர் பால்!
காலை... மாலை இரண்டு வேளையும் ஒவ்வொரு லிட்டர் பாலை கன்னுக்குட்டிக்காக விட்டுட்டுத்தான் கறப்போம். ஒரு எருமையில் இருந்து எட்டு மாதம் வரை பால் கிடைக்கும். எட்டு மாதத்தில் ஒரு மாடு மூலமாக 1,000 லிட்டர் வரை கிடைக்கிறது. போன வருடம் என்கிட்டயிருந்த மாடுகள் மூலமாக மொத்தம் 14 ஆயிரம் லிட்டர் கிடைத்தது
கறவை குறைவதற்கு, முதல் ஈத்து என்று கணக்குப் பார்த்தால், வருடத்திற்கு சராசரியாக எப்படியும் 15 ஆயிரம் லிட்டர் பால் கிடைத்துவிடும். ஒரு லிட்டர் பால் 25 ரூபாய் என்று வைத்து கொண்டால் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமான் கிடைக்கும். தீவனம், பராமரிப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் போ 3 லட்சத்து 25 ஆயிரம் லாபமாக கிடைக்கும். இதில்லாமல் கிடைக்கும் கிடா கன்னுக்குட்டிகளை இரண்டு வயது வரைக்கும் வளர்த்து விற்றுவிடுவோம். ஒரு கிடாவுக்கு, 10 அயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். கிடேரிக் கன்னுகளை நாங்களே வைத்துக் கொள்வோம். மாடுகள் மூலமாக சம்பாதிக்க பணத்தில்.. இப்போது மூன்றரை ஏக்கர் நிலம் வாங்கி இருக்கோம். அதில் பசுந்தீவனங்களை சாகுபடி செய்யலாம் என்று இருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று வருடத்திற்குள் பண்ணையில் 100 எருமைகளை நிப்பாட்டணும் என்பது என்னோட இப்போதைய கனவு.

எருமை மாடுகளை வளர்ப்பதற்கு ஸ்டீபன் தரும் ஆலோசனைகள்
காற்றோட்டம் முக்கியம் : வளர்க்கப் போகும் மாடுகளின் எண்ணிக்கைக்கேற்ற அளவிற்கு கொட்டகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். மேற்கூரை உயரமாக இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் காற்றோட்டம் இருக்கும். தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிய பிறகு கொட்டகைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். காலை சூரியன் உதிப்பதற்கு முன்னரும், மாலை மூன்று மணியளவிலும் பாலைக் கறந்துவிட வேண்டும். கன்றுகளுக்கு போதுமான அளவு பால் விட வேண்டியது அவசியம். நீர் நிலைகள் இருக்கும் பகுதியில்தான் மாடுகளை மேய்க்க அனுப்ப வேண்டும். நன்பகல் நேரத்தில் மாடுகளை நீர்நிலைகளில் இறக்கிக் குளிப்பாட்ட வேண்டும்.

வைக்கோல் கவனம் : 2 கிலோ பருத்திக்கொட்டையை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து, அதனுடன் 10 கிலோ கோதுமைத் தவிடைச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவில் கொட்டகையில் அடைப்பதற்கு முன், பெரிய மாடுகளுக்கு இந்தக் கலவையில் தினமும் கால் கிலோ அளவிற்க்கு தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். வளரும் கன்றுகளுக்கு 100 கிராம் அளவிற்க்கு கொடுக்க வேண்டும்
என்னுடைய அனுபவத்தில் எருமைகளுக்கு வைக்கோல் கொடுப்பதைக் காட்டிலும் பசுந்தீவனம் கொடுப்பதுதான் லாபகரமாக இருக்கிறது. நமது வயலில் கிடைக்கும் பட்சத்தில் வேண்டுமானால் வைக்கோல் கொடுப்பதில் தவறில்லை. அப்படிக் கொடுக்கும் போது, கண்டிப்பாக ஈரமான வைக்கோலைக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் பூஞ்சணத்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.


குறைந்த இடைவெளியில் சினை ஊசி : கிடேரி கன்று இரண்டு வயதில் பருவத்திற்கு வந்துவிடும். அந்த நேரத்தில் சினை ஊசி போட்டால், பத்து மாதங்களில் கன்று ஈன்று விடும். கன்று போட்டதிலிருந்து இருபதாம் நாள் மீண்டும் பருவத்திற்கு வந்து விடும். அதிலிருந்து ஒவ்வொரு இருபதாம் நாளிலும் பருவத்திற்கு வரும். கன்று போட்டதிலிருந்து ஆறு மாதம் வரை காத்திருக்காமல் 2 மாதங்களிலேயே மீண்டும் சினை ஊசி போட்டு விட வேண்டும். அதனால், அடுத்த ஈற்றுக்கான இடைவெளியைக் குறைத்து கூடுதல் லாபம் பார்க்க முடியும். இப்படிச் செய்தால் வருடத்திற்கு ஒரு கன்று கிடைத்துவிடும். ஒவ்வொரு முறையும் கன்று ஈன்ற எட்டு மாதங்கள் வரை பால் கறக்கலாம். கன்ற ஈன்ற மூன்று மாதங்கள் வரை ஒரு மாடு எட்டு லிட்டர் பால் கறக்கும். அதன் பிறகு 5 லிட்டர் வரைதான் பால் கறக்கும்
கன்றுக்கு, பிறந்த 8,38, 68, 98 – ம் நாட்களில் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். முறையாகப் பராமரித்தால் வேறு நோய்கள் தாக்குவதில்லை. அதனால் மருத்துவச் செலவும் குறைவாகத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment