Showing posts with label உயிர் உரங்கள். Show all posts
Showing posts with label உயிர் உரங்கள். Show all posts

Thursday, December 17, 2015

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் பூச்சி விரட்டிகள்



அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit

இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

Tuesday, August 4, 2015

மண்புழு உயிர் உர தொழில்நுட்பம் (TNAU) - BIOFERTILIZERS & VERMICULTURE


இந்த புவியியல் 120 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்தே மண்புழுக்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அங்கக கழிவுகளை மட்கவைத்து உரமாக்கி மீண்டும் பயிர்கள் கிரகித்துக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்கின்றன. இதனால் மண்ணில் மண்புழுக்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். மேலும் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, நோய் கிருமிகளை இந்த மண்புழுக்கள் அழித்து விடுகின்றன. மண்புழுக்களை சுற்றுப்புற சூழ்நிலை அமைப்பாளர்கள் எனக் கூறலாம். ஏனெனில் அவை மண்ணின் இயற்பியல் சுற்றை மாற்றி அமைக்கிறது.
மண்புழு உரத்தின் தொழில்நுட்பம்
மண்புழு உரத்தின் தொழில் நுட்பமானது, அங்ககக் கழிவுகளை, மண்புழுக்களை கொண்டு மதிப்பூட்டுதல், கழிவுகளை அந்த இடத்திலேயே மேம்படச் செய்தல் மற்றும் கழிவுகளில் உள்ள வேதியியல் மற்றும் உயிரியல் மாசுக்களை அப்புறப்படுத்துதல்.
மண்புழு உரம் தயாரிக்க உகந்த மண்புழுக்களை தேர்வு செய்வதற்கு வேண்டிய குணாதிசயங்கள்
  • அங்ககக் கழிவுகளில் அதிக எண்ணிக்கையில் வளரும் தன்மை உடையனவாக இருக்க வேண்டும்.
  • எல்லாச் சூழ்நிலைகளிலும் வளரும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிக எண்ணிக்கையில் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் இரகமாக இருக்க வேண்டும்.
  • அதிகஅளவில் உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
மண்புழு இரகங்கள்
வாழும் இடத்தை பொருத்து மண்புழு இரகங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன.
  1. மண்ணின் மேற்பரப்பில் அங்ககக் கழிவுகள், மற்றும் கால்நடைக் கழிவுகளில் வளரும் தன்மை உடையது.
  2. மண்ணில் சற்று உள்ளே வளரும் தன்மை உடையது.
  3. மண்ணின் கீழ்பரப்பில் வளரும் தன்மை உடையது.
மண்ணின் மேற்பரப்பில், அங்ககக் கழிவுகளில், கால்நடைக் கழிவுகளில் வளரும் மண்புழுக்களுக்கு, எப்பிஜிக் (Epigeic) என்று பெயர். இந்த மண்புழுக்கள் நிறமானதாகவும், எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் தன்மை உடையதாக இருக்கும். இதற்கு உதாரணம், லும்பிரிக்கஸ் மற்றும் எஹ்சீனியா மண்புழுக்கள். மண்ணில் சற்று கீழே வளரக் கூடிய மண்புழுக்களை, என்டோஜியிக் (Endogeic) என அழைப்பார்கள். இவைகள் மண்ணில் இருந்து 30 செ.மீ ஆழத்தில் வளரும் தன்மை உடையவை. இவை பொதுவாக மண் மற்றும் அங்கக பொருட்களை சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ளும். இவை மண்ணில் துளையிட்டு செல்லும் தன்மை உடையவை. இதனால் மேல் பாக மண்ணும் கீழ்பாக மண்ணும் ஒன்றாகக் கலந்துவிடும். மண்புழுக்கள் விட்டுச் செல்லும் துளைகளினால் காற்றும், நீரும், வேர்மண்டலத்தை சென்று அடைகிறது. இவ்வகை மண்புழுக்களுக்கு உதாரணம் அபரேக்டிடா (Aporrectedea) ஆகும்.
மண்ணின் கீழ்பாகத்தில் வசிக்கும் மண்புழுக்கள் அனிசிக் (Anecic) என்று அழைக்கப்படும். இவை மண்ணில் நீண்ட ஆழத்திற்கு (3 மீட்டர்) துவாரம் இட்டு செல்கிறது. இவை மண்ணில உள்ள அங்ககப் பொருட்களை மண்ணின் அடிப்பாகம் வரை எடுத்துச் செல்கிறது. இவ்வகை மண் புழுக்களுக்கு உதாரணம் லும்பரிக்கஸ் டெரஸ்டிரில், அபரோகிடா லாங்கா.
மண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா மற்றும் பிரியானிக்ஸ் மண்புழுக்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை.
2. மண்புழு உரம் தயாரிப்பதற்கான பல்வேறு நிலைகள்
நிலை – 1
மட்கக்கூடிய கழிவுகளை சேகரித்தல், சிறு சிறு துண்டுகளாக மாற்றுதல், உலோகம், கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை பிரித்து எடுத்தல்.

நிலை – 2
மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிடுதல். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்கலாம்.

நிலை – 3
மண்புழு உரப்படுக்கை தயாரித்தல். மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுக்கையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்றுவிடும்.

Wednesday, March 18, 2015

பயிர்களுக்கு ஏற்ற வேர்பூசண உட்பூசண நுண்ணுயிர் உரம்


கண்ணுக்கு புலப்படாத மிகச்சிறிய உயிரினங்களையே நுண்ணுயிரிகள் என்கிறோம். இவை பயிர்களுக்கு பலவகையான நன்மைகளை செய்கின்றன. குறிப்பாக பயிர்சாகுபடியில் சத்துக்கள் தரவல்லவை நுண்ணுயிர் உரமாகும். இவற்றில் தாவர வேர்களில் கட்டாய கூட்டு வாழ்க்கை நடத்தும் வேர் உட்பூசணம் முக்கியமானதாகும். இந்த நுண்ணுயிர்கள் பயிர்களுக்கு மிகச்சிறந்த நுண்ணுயிர் உரமாக இருக்கின்றன.



வேர் உட்பூசணத் தாவர கூட்டு வாழ்க்கை
வேர் உட்பூசணங்கள் மண்ணில் சிதல்லித்தாகவும், பூஞ்சாண இழைத்தண்டுகளாகவும் காணப்படும். வேர் உட்பூசணம் வளர ஆதாரத் தாவரம் தேவை. அவ்வகை ஒத்த பயிர்கள் மண்ணில் பயிரிடப்படும் போது மண்ணில் இருக்கும் வேர்ப்பூசண வித்துக்கள் முளைத்து மண்ணில் வளரத் தொடங்கும் தாவரத்தின் வேரை சூழ்ந்து கொண்டு தானும் வளரத் தொடங்குகின்றன. வேரில் ஒட்டிக் கொண்டு இவ்வாறு வளரும் உட்பூசணங்கள் அப்ரசோரியா எனும் பூஞ்சாண தொகுப்பை உருவாக்குகின்றன. இதன் மூலம் வேரினுள்ளும் நுழைகின்றன. வேரிலிருந்து பூஞ்சாண இழைகள் மண்ணில் சென்று ஊட்டங்களை கிரகின்றன.

வேரினுள் நுழைந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் பூஞ்சாண இழை முளைத்து பயிர் உயிரணுக்களின் உள்ளே சென்று அர்பஸ்குல்ஸ் என்னும் உறிஞ்சிகளை உண்டாக்குகிறது. இந்த உறிஞ்சிகள் தான் ஊட்டச்சத்தை பரிவர்த்தனை செய்யும் மையமாக செயல்படுகின்றன. 



வேர் உட்பூசண செயல்பாடு
பூசணத்தின் வேர்த்தூவிகள் மண்ணில் வெகு தூரத்திற்கு சுலபமாக பரவி விடுகிறது. ஆகவே, தாவரத்தின் வேர் பரவ முடியாத இடத்திற்கு கூட இந்த பூசணங்கள் பரவி சத்தை கிரகித்து வந்து தாவரத்திற்கு கொடுக்கிறது. குறிப்பாக வேர்களுக்கு எட்டாத மணிச்சத்தை தனது இழைகளின் மூலம் பூசணங்கள் கிரகித்து தனது இழைகளின் மூலம் தான் சார்ந்திருக்கும் தாவரத்திற்கு கொண்டு வந்து தருகிறது. இவ்வாறு மணிச்சத்தை பயிர்களுக்கு கொடுப்பதுடன், கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்புச் சத்து போன்றவற்றையும் மண்ணிலிருந்து பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறது.



வேர் உட்பூசணம் வளர்க்கும் முறை
இதர நுண்ணுயிர்களை போல் வேர் உட்பூசணத்தை சர்க்கரை கரைசல் ஊடகங்களில் வளர்க்க முடியாது. இது தாவர வேர்களிலேயே இயற்கையாக வளரக்கூடியது.  எனவே, வேர் உட்பூசணம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வெர்மிகுலைட் அல்லது கிருமி நீக்கப்பட்ட மணல் கலந்த பாத்திகளில் வளர்க்கப்பட்ட சோளம் அல்லது புல்வகைகளின் வேரில் வளர்க்கப்படுகிறது. பூசணம் வேரில் நன்கு வளர்ந்த பின் பயிரின் வேரும் வேர் பரவிய மண்ணும் எடுக்கப்பட்டு துகள்களாக்கி பாலிதீன் பைகளில் கொடுக்கப்படுகின்றன. இந்த கலவையை வயலில் இட பரிந்துரைக்கப்படுகின்றது.

உபயோகிக்கும் முறைகள்
ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிராம் வேர் உட்பூசணங்கள் போதுமானது. விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் மண்ணிற்கு கீழே 2 முதல் 3 சென்டிமீட்டர் ஆழத்தில் இடவும். 

பாலிதீன் பைகளில் வளர்க்கப்படும் நாற்றுக்களுக்கு
ஒரு பைக்கு 10 கிராம் வேர் உட்பூசணம் போதுமானது. பைகளுக்கு தேவைப்படும் மண் கலவையை தயார் செய்யும் பொழுது, 100 கிலோ மண் கலவைகளில் 10 கிலோ வேர் உட்பூசணங்கள் கலந்து பாலித்தீன் பைகளில் இடவும்.

வளர்ந்த பயிர்களுக்கு
ஒரு மரத்திற்கு சுமார் 200 கிராம் வேர் உட்பூசணம் தேவைப்படும். வேர் உட்பூசணத்தை வேர் பாகத்தில் இட்டு மண் அணைக்கவும்.

Saturday, March 7, 2015

ஈ எம் நுண்ணுயிரி பற்றி

ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி டீரோஹைகா எனும் அறிஞர் 1986 ல் கண்டுபிடித்த இந்த அற்புத கலவையினை தமிழில் திறமிகு நுண்ணுயிரி என அழைக்கலாம. 80 வகையான நுண்ணுயிகளை தேர்வு செய்து அதனை திரவ வடிவத்தில் ஒருங்கிணைத்து செய்யப்படும் பழுப்பு நிறதிரவம் ஈ.எம். 
இக்கலவையில் ஏற்கனவே பிரபலமாக உள்ள அசோஸ்பைரில்லம், அசட்டோபேக்டர், அசிட்டோபேக்டர், ட்ரைகோடர்மா, சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிகளும். லேக்டிக் ஆசிட் பேக்க்டீரியா,ஈஸ்ட்,ஒளிச்சேர்க்கைக்கான பேக்டீரியா, ரே பூசணம், ஆக்டினோமைசிட்ஸ் போன்ற நுண்ணுயிர்களும் உள்ள. ஈஎம் பற்றி அறிமுகம் போதுமானது. இது கால்நடை வளர்ப்பில் என்ன வகையில் பயன் படுகின்றது என்பதை மட்டும் பார்க்கலாம்.
ஈ எம் 1 என அழைக்கப்படுவது தாய் திரவம். இது 6 மாதம் வரை வைத்திருக்கலாம். இதில் உள்ள நுண்ணுயிர்கள் உறக்க நிலையில் இருக்கும். இதனை வெளியில் வாங்குவது எளிது.

உறக்க நிலையில் இருக்கும் இந்த மூலக்கரைசலை உயிருள்ள இரண்டாம் நிலை திரவமாக நாம் தயார் செய்ய வேண்டும்.இதன் பெயர் ஆக்டிவேட்டேட் ஈ.எம் திரவம்.

ஆக்டிவேட்டேட் ஈ எம் திரவம் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
1.ஈ எம் 1 லிட்டர்.
2.குளோரின் கலக்காத தண்ணீர். போர் தண்ணீர் நல்லது [ஆர். ஓ தண்ணீரும் தவிர்க்கவும்] 20 லிட்டர்.
3.ரசாயனம் சேர்க்காத வெல்லம், பனங்கருப்பட்டி மிக நல்லது. தனி கரும்புசாறும் பயன் படுத்தலாம் 1 கிலோ.

செய்முறை.
ஒருகிலோ வெல்லத்தை நன்கு கரைத்து எடுக்கவும், இதற்கு நாம் ஏற்கனவே வைத்துள்ள தண்ணீரில் தேவையான அளவு பயன் படுத்தவும். மீதம் உள்ள தண்ணீர் 1 லிட்டர் ஈ.எம். அனைத்தையும் காற்றுபுக முடியாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வாரம் வைக்க வேண்டும். அப்போது உறங்கும் நிலையில் உள்ள நுண்ணுயிர்கள் உயிர் பெற்று வளரத்துவங்கும். அதன் எண்ணிக்கை பல மடங்குகளாகும். இந்த செயலினால் பிளாஸ்டிக் கலனில் வாயு உருவாகும்.தினசரி அதன் மூடியை திறந்து அந்த வாயுவை வெளியேற்ற வேண்டும்.

Wednesday, February 11, 2015

இயற்கையான உயிர் உரங்கள்

இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம்.
அனைத்து தாவரங்களுக்கும் தழைச்சத்து இன்றியமையாதது. நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தில் இருந்துதான் தாவரங்களில் உள்ள புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தழைச்சத்தை பெறுவதற்கு நுண்ணுயிர் அடங்கிய உரங்களையோ அல்லது நுண்ணுயிரோடு இயைந்து வாழும் உயிரினங்களையோ உரமாக இட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம்.
மணிச்சத்தை மண்ணில் இருந்து செடிகளுக்கு கிடைக்குமாறு செயல்படும் பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேர் உட்பூசணங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ரைசோபியம்:
உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைத் தாவரங்கள், நிலக்கடலை போன்ற பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை ரைசோபியட் என்னும் பாக்டீரியாவின் துணை கொண்டு செடிகளில் சேர்க்கின்றன. பயறு வகை பயிர்களின் விதையுடன் ரைசோபியம் உயிர் உரங்களை கலந்து விதைத்தால் வேர் முடிச்சுகள் அதிகரித்து அதிக தழைச்சத்து நிலைநிறுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கிறது.
சாதாரணமாக 20 கிலோ விதைகளுக்கு 200 கிராம் ரைசோபியத்தை சோற்றுக்கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து ஒரு நாள் கழித்து விதைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது. மேலும் 3-ல் ஒரு பங்கு உரத் தேவையும் குறைகிறது.
அசோஸ்பைரில்லம்:
அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிர் பாக்டீரியா நெல், மக்காச்சோளம், கம்பு, பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்களின் வேர்ப்பகுதிகளில் வளர்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. இதை பயன்படுத்தும்போது ஏக்கருக்கு 10 கிலோ வரை தழைச்சத்து (22 கிலோ யூரியா அளவு) சேர்க்கப்படுகிறது. மேலும் ஜிப்பர்லிக் அமிலம், இன்டோல் அசிட்டிக் அமிலம் போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் அசோஸ்பைரில்லம் உற்பத்தி செய்வதால் பயிர் நன்கு வளர்ந்து விளைச்சல் அதிகமாகிறது. இதை விதை நேர்த்தி செய்தும், நாற்றின் வேர்ப்பாகத்தில் நனைத்தும் மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட்டும் பல வகைகளில் பயன்படுத்தலாம்.
பாஸ்போ பாக்டீரியா:
இது மண்ணில் உள்ள மணிச் சத்தை கரைத்து பயிர்களுக்கு வழங்குகிறது. சிலவகை அமிலங்களை இந்த பாக்டீரியா உற்பத்தி செய்து மண்ணிலுள்ள கரையாத பாஸ்பேட்டை கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது. இதை பயன்படுத்துவதால் 20 சதவீதம் மணிச்சத்து தரும் ரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம். வேர்கள் செழித்து வளரவும், திசுக்கள் வளம் பெற்று கதிர்கள் செழித்து வளரவும், தழைச்சத்தை அதிக அளவு ஈர்க்கவும் பாஸ்போ பாக்டீரியாபயன்படுகிறது.