Tuesday, November 29, 2016

இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி


இப்படித்தான் செய்யணும் பப்பாளி சாகுபடி!


ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி செய்யும் விதம் குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக....





பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள் நிலத்தை காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் (சாதாரண கலப்பை) ஒரு சால் உழவு செய்துவிட்டு.. அடுத்த நாள் அரை அடி ஆழத்தில், செடிக்குச் செடி 10 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளி விட்டு அரையடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 436 குழிகள் வரை எடுக்கலாம். (நிலத்தின் அமைப்பைப் பொறுத்து, இவர், 400 குழிகள் மட்டுமே எடுத்துள்ளார்). குழி எடுத்த மறுநாள் ஒரு குழிக்கு அரை கிலோ தொழுவுரம் போட்டு, நடுவிரல் அளவு குழி எடுத்து, பப்பாளி கன்றை வைத்து, மேல் மண் கொண்டு குழியை மூடிவிட வேண்டும். நடவு செய்த உடனே பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.



ஏக்கருக்கு அரை கிலோ விதை!


பப்பாளியை கன்றாக வாங்காமல், விதையை வாங்கி நாமே நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வதுதான் சிறந்தது. 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் நாற்றங்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான அரை கிலோ விதையை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் பஞ்சகவ்யா ஊற்றி அதில் விதையைப் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு,  ஓலைப்பாய் விரித்து, அதில் விதையை கொட்டி, அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதையை நாற்றாங்காலில் தூவிவிட்டு 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைத் தூவிவிட்டு ஒரு முறை கிளறிவிட்டால் விதையும், தொழுவுரமும் கலந்துவிடும். தண்ணீர் பாய்வதற்கு வசதியாக 4 அடிக்கு ஒரு பாத்தி வீதம் 5 பாத்திகள் எடுத்துக் கொள்ளலாம். விதைத்ததில் இருந்து, 8 முதல் 10 நாட்களில் முளைப்பு தெரியும். 30 நாளில் அரை அடி உயரமும், 60 நாளில் ஓர் அடி உயரமும் வரும். 30-ம் நாளிலேயே எடுத்து நடவு செய்யலாம். ஆனால், ஓர் அடி உயரம் வந்தால் நடவு செய்ய வசதியாக இருக்கும். 



15 நாள் இடைவெளியில் பஞ்சகவ்யா!



பப்பாளியை நடவு செய்ததில் இருந்து, 20-ம் நாள் மட்டும் ஒரு களை எடுத்துவிட்டு, 10 லிட்டருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 40 நாளுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 



பூ பூக்கும் நேரத்தில் பிண்ணாக்குக் கரைசல்!



6-ம் மாதம் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் 5 கிலோ பாசிப்பயறு, 5 கிலோ தட்டைப்பயறு, 5 கிலோ கொள்ளுப்பயறு, 5 கிலோ கொண்டைக்கடலை, ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு, அந்தக் கரைசலை ஒவ்வொரு தூரிலும் 500 மில்லி ஊற்றி, மண் அணைக்க வேண்டும். இதனால் பூக்கும் பூக்கள் உதிராமல், காய் பிடித்து நன்கு வளரும். 



பூ பூக்கும் நேரத்தில்தான், பப்பாளியில் ஆண் பெண் அடையாளம் காணமுடியும். கிளைகளுக்கும் தண்டுக்கும் இடையே ஒரே பூ மட்டும் பூத்தால் அது பெண் பப்பாளி எனவும், கொத்தாக பூ காணப்பட்டால் அது ஆண் பப்பாளி எனவும் அடையாளம் தெரிந்து கொள்ளலாம். 



400 பப்பாளி மரங்களில் குறைந்தது 20 ஆண் பப்பாளியாவது இருந்தால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். சில விவசாயிகள் ஆண் பப்பாளி மரங்களை மொத்தமாக பிடுங்கிவிடுவார்கள். இதனால் அயல்மகரந்தச்சேர்க்கை நடைபெறாமல் காய்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது. 



7-ம் மாதம் காய் காய்க்கத் தொடங்கும். 8-ம் மாதம் காய் பறிக்கலாம். 9-ம் மாதத்தில் இருந்து மகசூல் அதிகரிக்கும். 12-ம் மாதம் வரை நல்ல மகசூல் கிடைக்கும். 13-ம் மாதத்தில் இருந்து மகசூல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பிறகு, மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் தரமில்லாமல் இருக்கும்.

இயற்கை முறையில் மல்லிகைப் பூ சாகுபடி


ஆறு மாதத்தில் முதல் வருமானம்!
“நெல், கரும்பு மாதிரியான பயிர்கள்ல சிலசமயம் நஷ்டம் வந்துடும். அதனால, நிரந்தர வருமானம் கிடைக்கணுங்கிறதுக்காக 15 சென்ட் இடத்துல மல்லிகை நடவு செய்யலாம்னு முடிவு பண்ணினேன். ராமேஸ்வரத்துல இருந்து நாற்று வாங்கிட்டு வந்து நடவு செய்தேன். முழுக்க இயற்கை முறையில சாகுபடி செய்றதால, செடியோட வளர்ச்சி சிறப்பா இருக்கு. ஆறாவது மாசத்துல இருந்து வருமானம் எடுத்துக்கிட்டிருக்கேன். நட்டு 14 மாசமாகுது.
ஆரம்பத்துல தினமும் 100 கிராம், 200 கிராம்னு கிடைச்சது. ஆறாவது மாசத்துக்குப் பிறகு ஒரு கிலோ அளவுல கிடைச்சது. ஒவ்வொரு மாசமும் மகசூல் கூடிக்கிட்டே இருக்கு. இப்போ, தினமும் ரெண்டு கிலோவுல இருந்து, பத்து கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்குது. அடுத்த வருஷத்துல தினமும் 25 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.
இடையில ஊடுபயிரா மிளகாய், வெங்காயம் போட்டேன். மிளகாய் மூலம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. வெங்காயத்தை வீட்டுத் தேவைக்கு வெச்சுக்கிட்டோம். ரசாயன உரம் போட்டு சாகுபடி செய்யுற விவசாயிகளுக்கு சிலசமயம் பூ இல்லாம போயிடுது. ஆனா, இயற்கை முறையில எப்பவுமே பூத்துக்கிட்டே இருக்கு. இப்ப, என்னோட ஒரு ஏக்கர்ல 50 சென்ட் கரும்பு, 15 சென்ட் தீவனப்புல், 15 சென்ட் மல்லிகைப்பூ இருக்கு. மீதி 20 சென்ட், நெல் நடவுக்குத் தயாரா இருக்கு. குத்தகை நிலம் ஒரு ஏக்கர்ல நெல் போட்டிருக்கேன்” என்ற செந்தில்குமார் மல்லிகை மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துச் சொன்னார்.

15 சென்ட்டில் மாதம் 150 கிலோ!
“ஒரு கிலோ மல்லிகைப்பூ 50 ரூபாய்ல இருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகும். தினம் சராசரியா எனக்கு 5 கிலோ பூ கிடைக்குது. அந்த வகையில மாசத்துக்கு 150 கிலோ. கிலோவுக்கு சராசரி விலையா 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே மாசம் 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். செலவு 5 ஆயிரம் ரூபாய் போக, மீதம் 10 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்” என்ற செந்தில்குமார்,
“ரெண்டு வருஷத்துக்குப் பிறகு தினம் சராசரியா 10 கிலோ வீதம் பூ கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அப்படி கிடைச்சா, மாசம் 20 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். எப்படியும் வருஷத்துல எட்டு மாசத்துக்கு இந்த வருமானம் கிடைச்சுக்கிட்டே இருக்கும்” என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் தவிர்க்க பூண்டுக் கரைசல்



கத்திரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் (கோஜலம்) ஊறவைத்து, நன்றாகக் கொதிக்கவைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து பிஞ்சுப்பருவம் மற்றும் காய்ப்பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் செடிகள் நனையும்படி தெளிக்கலாம். செடிகளைத் தாக்கும் பூச்சிகளை விரட்டியடிக்கும் ஆற்றல், இந்த புகையிலை+பூண்டுக் கரைசலுக்கு உண்டு.

நொச்சி, வேம்பு, ஆடுதொடாஇலை (ஆடாதோடை), நிலவேம்பு, பப்பாளி இலை என கிள்ளினால், பால் வடியும் ஐந்து இலைகளையும் சம அளவில் சேகரித்து 2 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் (கோஜலம்) ஒரு நாள் முழுக்க ஊறவைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி விகிதம் கலந்து, அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் செடிகள் மீது தெளிக்கவேண்டும். தொடர்ந்து பிஞ்சுப்பருவம், காய்ப்பருவம் ஆகிய நாட்களில் தெளித்துவர, காய்ப்புழு, அசுவணி, இலைப்பூஞ்சணம் உள்ளிட்ட நோய்கள் அகன்று சீரான மகசூலைப் பெறலாம்.

பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை


ஆவாரை, புங்கன், வேம்பு, எருக்கன், நொச்சி, நித்யகல்யாணி ஆகியவற்றின் இலைகளை தலா 3 கிலோ எடுத்து ஒன்றாகச் சேர்த்து நன்கு இடித்து, இவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீர் ஊற்றி மூடி வைத்து 20 நாட்கள் தினமும் கலக்கி வர வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் வாசனையுடைய 5 கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரைக் கலந்து 20 நாட்களுக்கு ஊற வைக்கவேண்டும். பிறகு இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து.. 100 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம். இது, குருத்துப்பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல்


பப்பாளி சாகுபடியில் இரண்டாவது மாதத்தில் இருந்தே உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு மேல்புறம், இலைக்கு பின்புறம் என வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சி தென்படும். மாவுப்பூச்சி எப்போது தென்பட்டாலும் தண்ணீரை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
தண்ணீர் தெளித்த இரண்டு மணி நேரத்துக்குள், 10 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 50 மில்லி, புங்கன் எண்ணெய் 50 மில்லி, இலுப்பை எண்ணெய் 50 மில்லி ஆகியவற்றைக் கலந்து, இதோடு சிறிதளவு காதி சோப் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும்.

பப்பாளியில் வேர் அழுகலைத் தடுக்க சுண்ணாம்பு துத்தநாகக் கரைசல்


சில கன்றுகளின் வேர்ப்பகுதியில் பாக்டீரியாக்கள் தாக்குவதால், கன்றுகள் சரிந்து விடும். இலைகள் பழுப்பு நிறமாகி, கன்று வாடலாகக் காணப்பட்டால், தூர்ப்பகுதியில் லேசாக குழிதோண்டிப் பார்த்தால் வேர் அழுகல் தெரியும். இதைத் தடுக்க 10 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சுண்ணாம்பு, 200 கிராம் மயில்துத்தம் ஆகியவற்றைக் கலக்க வேண்டும்.
மயில்துத்தத்தை நேரடியாகத் தூவினால் பொங்கி, முகத்தில் தெறித்துவிடும். அதனால் ஓரமாகத் தூவி, மெதுவாகக் கலக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மயில்துத்தக் கரைசலைக் கலந்து, ஒரு கன்றுக்கு 100 மில்லி அளவில், தூர்ப்பகுதியைச் சுற்றி ஊற்றினால், வேர் அழுகலைத் தடுக்கலாம்.

வெண்டையில் பூச்சி தாக்குதலுக்கு தீர்வு


10 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா!
விதை நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். 20-ம் நாளிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்யா, செடி வளர சிறந்த பயிர் ஊக்கியாகச் செயல்படும். வேறு எந்த இடுபொருளும் தேவையில்லை.
மாவுப்பூச்சிக்கு இஞ்சி-பூண்டு கரைசல்
வெண்டையில் மாவுப்பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வருமுன் காப்போம் முறையில் நடவு செய்த 25-ம் நாளில் இருந்தே, வாரம் ஒரு முறை பூச்சி விரட்டியைத் தெளித்து வர வேண்டும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றில் தலா அரைக்கிலோ எடுத்து அவற்றை உரலில் இடித்து வெள்ளைத் துணியில் கட்டி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஊறவைக்க வேண்டும். 5 நாட்கள் ஊறிய பிறகு கரைசலை எடுத்து வடிகட்டினால் இஞ்சி-பூண்டு கரைசல் தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும். 2 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பைத் தூளாக்கிப் போட்டுக் கலக்க வேண்டும். அதனுடன், 200 கிராம் கல் உப்பைச் சேர்த்துக் கலக்கி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற கணக்கில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
இந்த இரண்டு கரைசல்களையும் சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை கைத்தெளிப்பானால் தெளித்து வந்தால் பூச்சித்தாக்குதல் இருக்காது. அதோடு சோலார் விளக்குப் பொறிகளையும் அமைத்துவிட்டால் அனைத்து வகையான தீமை செய்யும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தி விட முடியும்.
தவிர, வரப்பில் தட்டைப்பயறு, செண்டுமல்லி, காராமணி ஆகிய செடிகளை நடவு செய்து விட்டால்.. பயிரைத் தாக்க வரும் மாவுப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈ, இலைத்துளைப்பான் ஆகியவை வரப்போரப் பயிரில் அமர்ந்துவிடும். இதனால் முதன்மைப் பயிரான வெண்டையை பூச்சிகளில் இருந்து காப்பாற்றி விடலாம்.

Monday, November 28, 2016

தினசரி வருமானம் பெற காய்கறி சாகுபடி

வருஷத்துக்கு ஒரு முறை காசை கண்ணால் பார்க்கும் விவசாயிகள் அன்றாடம் காசு பார்க்க அவர்கள் காய்கறிகள் என்னும் அதிர்ஷ்ட தேவதையை கைபிடிக்க வேண்டும்.

உலக அளவில் காய்கறி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருப்பது சீனா.

2009 ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 7.958 மில்லியன் எக்டரில் 133.74 மில்லியன் டன் காய்கறிகளை நாம் உற்பத்தி செய்கிறோம்.

தமிழ்நாட்டின் மொத்த காயகறி சாகுபடி பரப்பளவு 2.63 லட்சம் எக்டர்

இந்தியாவில் ஒரு எக்டரில் காய்கறி மூலம் கிடைக்கும் சராசரி விளைச்சல் 16.7 டன்.

ஆனால் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன் ஒரு எக்டருக்கு 28.9 டன்

ஒரு நாளைக்கு ஒரு நபர் சாப்பிடும் காய்கறிகளின் அளவு 210 கிராம்
சிபாரிசு செய்யப்படும் அளவு 300 கிராம்.



சுமார் 50 வகை காயகறிகளை நாம் பயிர் செய்கிறோம்

தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டைகொடிவகைக் காய்கள், வெங்காயம், முட்டைக்கோசு,பூக்கோசு, கேரட், பீட்ரூ;ட், கிழங்குகள், முருங்கை, கீரைகள் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய காயகறிகள்.

நாம் ஏன் காய்கள் சாகுபடி செய்ய வேண்டும் ?

தினசரி வருமானம், கூடுதல் லாபம், அதிக வேலை வாய்ப்பு, குறுகிய பயிர் வயது, மதிப்பு கூட்டுவதற்கான வாய்ப்பு, ஏற்றுமதிக்கு வாய்ப்பு, இவை எல்லாமே காய்கறி சாகுபடியில் பிரகாசமாக உள்ளது.

அதுசரி, காய்கறி சாகுபடியில் அதிக லாபம் பெற என்ன செய்ய வேண்டும் ?
உயர் தொழில் நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும்.

உயர் தொழில் நுடபங்கள் என்றால் என்ன ?

வீரிய ஒட்டு ரகங்களை தெரிந்தெடுத்தல்குழித்தட்டு நாற்றங்கால் முறையை கையாளுதல்,சொட்டு நீர்ப்பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல், பாசனம் அளிக்கும் நீருடன் கலந்து உரமிடுதல் பசுமைக் கொட்டகையில் சாகுபடி செய்தல்நிழல் வலைக் கொட்டகை அமைத்து பயிர் செய்தல்.

தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, பூசணி, சுரைக்காய், கோவைக்காய் ஆகியவற்றில் என்னென்ன உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு ரகங்கள் உள்ளன என்று பார்க்கலாம்.

கோ.டி.எச். 2 வீரிய ஒட்டுத் தக்காளி

செடிகள் 80 முதல் 85 செமீ உயரம் வளரும். அடர் நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் வெண்மை கலந்த பச்சை நிறமாக இருக்கும். கொத்துக்கு 3 முதல் 5 பழங்கள் தரும். ஒவ்வொரு பழமும் 60 முதல் 70 கிராம் எடையுடன், உருண்டை அல்லது நீள் உருண்டை  வடிவத்தில் இருக்கும். இலை சுருட்டு நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. விளைச்சல் ஒரு எக்டரில் 90 முதல் - 96 டன் தரும்.

கோ.டி.எச். வீரிய ஒட்டுத் தக்காளி

செடிகள் 90 முதல் 95 செமீ உயரம் வளரும். அடர் நடவு முறைக்கு ஏற்றது. பழங்கள் சிவப்பு நிறமாக இருக்கும். கொத்துக்கு 3 முதல் 5 பழங்கள் தரும். ஒவ்வொரு பழமும் 55 முதல் 60கிராம் எடையுடன், உருண்டை  வடிவத்தில் இருக்கும். இலை சுருட்டு, மற்றும் வைரஸ் நோய்க்கும் எதிர்ப்புத் திறனும் வேர் முடிச்சு நூற்புழுவுக்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது. விளைச்சல் ஒரு எக்டரில் 90 முதல் - 96 டன் தரும்.

ஜீவாமிர்தம் இயற்கையான நுண்ணுயிர் கலவை

ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்:
நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு முறை
நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)
இவற்றைத் தொட்டியில் விட்டு கலக்க வேண்டும் தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன்.
இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.
பயன்படுத்தும் முறை
ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.
ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?
தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும் .ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும் .அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர் ,முளைகட்டிய தானியக் கலவை ,தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும் தெளிக்க வேண்டும் .இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் .

இயற்கை முறையில் புளியமரம் சாகுபடி


புளியமரம் சகுபாடி குறைந்த செலவில் நீண்ட காலம் பலன் தரக்கூடிய ஒன்றாகும். புளி அணைத்து காலங்களிலும் தேவைப்படும் ஒன்றாகும். ஆடிப்பட்டம் புளி சாகுபடி செய்ய சிறந்த பட்டமாகும். புளி வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கி வளரும்.
ரகங்கள்
புளி ரகங்களில் உரிகம்புளி என்பது தருமபுரி அருகில் உரிகம் என்ற ஊரின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. பிகேஎம்1, தும்கூர் மற்றும் ஹாசனூர் என்பது மேலும் சில ரகங்கள் ஆகும்.
நாற்று பெறும் முறை
உரிகம் ரகம் தருமபுரியில் உள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் பிகேஎம் ரகம் பெரியகுளம் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறையில் கிடைக்கும். விதைகளை வைத்தும் நாற்று தயாரிக்கலாம்.
நடவு முறை
உரிகம் ரகத்தை நடுவதற்கு 6 x 6 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். அடர் நடவு முறையில் பிகேஎம்1 ரகத்தை 5 X 5 மீட்டர் இடைவெளியில் நடலாம். சித்திரை – வைகாசி மாதங்களில் 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அதில் காய்ந்த இலை தழைகளை போட்டு தீ எரித்து சாம்பலாக்கி வைக்க வேண்டும். பிறகு அந்த குழியில் சிறிதளவு போர் மண், மணல் மற்றும் குப்பை கொண்டு 1 அடி மூடவேண்டும். அதை அப்படியே ஆடி மாதம் வரை ஆறவிட வேண்டும். பிறகு அதில் புளியங்கன்றை நடவு செய்யலாம்.
நீர்ப்பாசனம்
கன்றுகள் நன்கு துளிர்த்து வளரும் வரை நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு தேவைகேற்ப நீர் பாய்ச்சினால் போதும்.
ஊடுபயிர்
அறுவடைக்கு வரும் வரை கடலை, உளுந்து, எள்ளு, பாசிபயிறு போன்றவைகளை நாம் ஊடுபயிர் செய்யலாம். குறைந்த உயரம் வளரும் பயிர்கள் ஊடுபயிர் செய்ய ஏற்றது.
அறுவடை
உரிகம் ரகம் 5 முதல்  8 வருடம் வரை பூ வைத்து பிறகு காய் பிடிக்கும். இதற்கு பருவநிலை மிகவும் முக்கியம். பிகேஎம் ரகம் 3 வருடம் முதல் பூ வைத்து 5 வருடத்தில் காயப்பிற்கு வரும்.

புதினா சாகுபடி


புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யகூடிய பயிர்களுள் ஒன்றாகும். இதற்கு பட்டம் எதுவும் கிடையாது.
மண் வகைகள்
வளமான ஈரப்பதம் உள்ள மண், புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும். புதினா களிமண், வண்டல் மண், ஆற்று படுகை மண்களில் நன்றாக வளரக்கூடியது. மிதவெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட்டால், புதினா நன்கு வளரும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்யவேண்டும்.
நீர் மற்றும் உர மேலாண்மை
புதினா சாகுபடிக்கு உப்பு நீரையோ, சப்பை நீரையோ பாய்ச்சினால், அது விளைச்சலைப் பாதிக்கும். எனவே நல்ல தண்ணீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளைப் பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதலோ இருந்தால் இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம். புதினாவிற்கு தொழு உரத்தை தவிர வேறு உரங்கள் தேவையில்லை. ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிடவேண்டும்.
அறுவடை
60 நாட்களில் பறிக்கும் நிலைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோவரை பறிக்கலாம். சீசன் காலங்களில் ரூ.50 முதல் 70 வரை விலை போகிறது. சீசன் இல்லாத காலங்களிலும் ஒரு கிலோவுக்கு ரூ. 30 கிடைக்கும். செலவு போக அதிகபட்சமாக ரூ.1 லட்சம்வரை ஒரு அறுவடையில் லாபம் கிடைக்கும். 4 ஆண்டுகள்வரை தொடர்ந்து 60 நாட்களுக்கு ஒரு முறை புதினாவை அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.

வாழை, கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் ஊடு பயிராகவும் புதினாவை பயிரிட்டு கூடுதல் லாபம் பெறலாம்.

பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை

பீஜாமிர்தம் என்றால் என்ன

விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும்.

தயாரிக்க தேவையான பொருட்கள்

  • தண்ணீர் 20 லிட்டர்
  • பசு மாட்டு சாணம் 5 கிலோ
  • பசு மாட்டு கோமியம் 5 லிட்டர்
  • சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்
  • ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு

பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை

முதல் நாள் மாலை 6 மணிக்கு மேற்ச் சொன்ன அனைத்தை பொருள்களையும் ஒன்றாக ஒரு கலனில் கலந்து வைத்துவிட வேண்டும்.  பின்னர் இந்த கலவையை மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும்.  இக்கலவையே பீஜாமிர்தம்மாகும். முதல் நாள் மாலையில் கலந்து வைத்தால் அடுத்த நாள் காலையில் இதை விதைகளின் மேல் தெளிக்கலாம்.

பீஜாமிர்தம் எப்படி பயன்படுத்துவது

விதை நேர்த்தி செய்ய வேண்டிய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை  இந்த கரைசலில் நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

விதை நெல்லை எவ்வாறு நேர்த்திசெய்வது

  • 10 லீட்டர் தண்ணிரில் 1 கிலோ கல்லுப்பை கரைத்து, அதில் 10 கிலோ விதை நெல்லை இடவேண்டும். தண்ணிரில் மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு, மூழ்கிய நெல்லை மட்டும் எடுத்து நீரில் அலசி, அதிலிருந்து 9 கிலோ நெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அடுத்து சணல் சாக்கில் நெல்லை கொட்டி மூட்டையாகக் கட்டி 12 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
  • பின்னர் பிஜாமிர்தத்தில் 2 மணிநேரம் ஊறவைத்து எடுத்து அதன்பின் 24 மணிநேரம் இருட்டில் வைத்து பின்னர் விதைக்க வேண்டும்.
  • இந்த விதைகளை நாற்றங்காலில் தூவி, விதைகள் வளர்ந்து 25 முதல் 30 நாட்களில் நாற்றானதும் அவற்றை எடுத்து வயலில் நடுகிறோம். நெல் நாற்றுகளை வயலில் நட்ட பிறகு, முதல் நீர் பாய்ச்சும்போது ஜீவாமிர்தம் என்னும் மற்றொரு கலவையை சேர்த்துப் பாய்ச்ச வேண்டும்.

பீஜாமிர்த்தின் நன்மைகள்

  • வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தாக்குதள் தடுக்கப்படும்
  • எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை

பயிர்களும் பட்டங்களும்

பட்டம் என்றால் என்ன?
பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும். பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள். வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள். ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவைற்றைச் சாகுபடி செய்வார்கள். மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள். ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம். மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம். மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர். நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது. மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை. நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை. இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.



பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள்
  • ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
  • பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.
  • மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
  • ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
  • மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.
  • ஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.
  • ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.
  • ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.
  • செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
  • அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.
  • நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.
  • டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

அமெரிக்காவிற்கு பறக்கும் பெரியகுளம் முருங்கை விதை

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி முருங்கை விதையை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர்.
பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய வகையில் ஓராண்டு பயிராக செடிமுருங்கை ரகங்களை உருவாக்கி, 5 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இந்த செடிமுருங்கையின் இலைகள், பூக்கள் மற்றும் காய்களில் புரதம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ போன்றவை அடங்கியுள்ளன. இதனால் செடி முருங்கைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியில் பி.கே.எம் 1 என்ற ரகத்தை சேர்ந்த செடி முருங்கையின் விதைகள் விற்பனைக்கு உள்ளன. 100 கிராம் ரூ.300 க்கு விற்கப்படும் இந்த விதைகள் அனைத்து வகையான மண்ணிற்கும் ஏற்றதாக உள்ளன. இந்த ரக முருங்கை செடிகளில் இருந்து160 முதல் 170 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு சுமார் 275 காய்கள் கிடைக்கும். இவற்றின் எடை 33 முதல் 35 கிலோ வரை இருக்கும்.

இச்செடி முருங்கையை மறுதாம்பு பயிராக 3 ஆண்டுகள் வரைப் பராமரிக்கலாம்.முருங்கை விதைகளில் இருந்து எடுக்கப்படும் ‘பெண் ஆயில்’ என்ற எண்ணெய், முருங்கை இலைப்பொடி உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் செடி முருங்கை விதைகளை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும், அமெரிக்கா, அரபு நாடுகளிலும் பயிரிட அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.இத்தகவலை கல்லுாரி முதல்வர் பாலமோகன், பேராசிரியை கீதா தெரிவித்துள்ளனர். முருங்கை விதை தேவைக்கு 04546231726 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

இயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்

இயற்கை விவசயம் மூலம் முருங்கை சாகுபடி செய்யும் சடையாண்டி கூறுகிறார்
செடிமுருங்கை… நாட்டுமுருங்கை ஓர் ஒப்பீடு
முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில், நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். செடிமுருங்கை விதை மூலமும், நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.
காய் விலை பற்றி கவலையே இல்லை!
ஆண்டு முழுவதும் முருங்கைக்கு விலை கிடைக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அறுவடை செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும். அதில் இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு 240 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட காய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், விதை மூலம் கிடைத்து விடும்.
இலைக்கும் கிராக்கி!
முருங்கை இலைக்கும் (கீரை) தேவை அதிகமாகவே இருக்கிறது. இதைப் பற்றி சொன்ன சடையாண்டி, “இயற்கையில விளையுற முருங்கை இலைக்கும் (கீரை), காய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கு. குறிப்பா முருங்கை இலைக்கு காயை விட அதிகத் தேவை இருக்கு. இலை பறித்தால் காய் மகசூல் குறையும். அதனால, விவசாயிகள் இலை விற்பனையில் கவனம் செலுத்துறதில்லை. இலைக்காக சாகுபடி செய்றவங்க, அடர் நடவு முறையில் 5 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். 40 நாட்களுக்கு ஒரு முறை இலைகளை அறுவடை செய்து விற்பனை செய்யலாம். மதுரை மாவட்டத்துல இலைக்கான வியாபாரிகள் இருக்காங்க. இலைக்கான விற்பனை வாய்ப்பை, விசாரிச்சிட்டு, இலை சாகுபடியில் இறங்கலாம்” என்றார்.

விண்பதியன் முறையில் ஒட்டு நாற்றுகள்!
சடையாண்டி, ‘‘விண்பதியன் முறையில் ஒட்டுக்கட்டி புதிய முருங்கை நாற்றுகளை உருவாக்குவது இப்படித்தான்-
தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து 40% ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும் (ஈரமாக இருக்க வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. இதுதான் ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு).
முருங்கை மரம் பூவெடுக்கும் தருவாயில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில் பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக் காகிதத்தால் காயத்துக்குக் கட்டு போடுவது போல இறுக்கமாக கட்டி வைக்கவேண்டும்.
40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். பிறகு, அந்தக் குச்சியை வெட்டி எடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்றி 60 நாட்கள் வளர்த்து நிலத்தில் நடவு செய்யலாம். விவசாயிகள் இப்படி நாற்று தயாரித்து விற்பதன் மூலமும் வருமானம் பார்க்க முடியும்” என்றார்.