Showing posts with label கீரைகள். Show all posts
Showing posts with label கீரைகள். Show all posts

Monday, November 28, 2016

புதினா சாகுபடி


புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யகூடிய பயிர்களுள் ஒன்றாகும். இதற்கு பட்டம் எதுவும் கிடையாது.
மண் வகைகள்
வளமான ஈரப்பதம் உள்ள மண், புதினா விவசாயத்திற்கு மிகவும் அவசியமாகும். புதினா களிமண், வண்டல் மண், ஆற்று படுகை மண்களில் நன்றாக வளரக்கூடியது. மிதவெப்பமான பகுதிகளில் வடிகால் வசதியுள்ள செம்மண் நிலத்தைப் பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட்டால், புதினா நன்கு வளரும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்யவேண்டும்.
நீர் மற்றும் உர மேலாண்மை
புதினா சாகுபடிக்கு உப்பு நீரையோ, சப்பை நீரையோ பாய்ச்சினால், அது விளைச்சலைப் பாதிக்கும். எனவே நல்ல தண்ணீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளைப் பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதலோ இருந்தால் இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம். புதினாவிற்கு தொழு உரத்தை தவிர வேறு உரங்கள் தேவையில்லை. ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிடவேண்டும்.
அறுவடை
60 நாட்களில் பறிக்கும் நிலைக்குத் தயாராகிவிடும். ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோவரை பறிக்கலாம். சீசன் காலங்களில் ரூ.50 முதல் 70 வரை விலை போகிறது. சீசன் இல்லாத காலங்களிலும் ஒரு கிலோவுக்கு ரூ. 30 கிடைக்கும். செலவு போக அதிகபட்சமாக ரூ.1 லட்சம்வரை ஒரு அறுவடையில் லாபம் கிடைக்கும். 4 ஆண்டுகள்வரை தொடர்ந்து 60 நாட்களுக்கு ஒரு முறை புதினாவை அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.

வாழை, கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் ஊடு பயிராகவும் புதினாவை பயிரிட்டு கூடுதல் லாபம் பெறலாம்.

Thursday, August 27, 2015

முருங்கை சாகுபடி - Moringa Oleifera Drumstick Tree

தானிய பயிர், பணப்பயிர், சாகுபடிகளைக் காட்டிலும் அதிக லாபத்தை விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடியது நிச்சயம் தோட்டக் கலையின் கீழ் வரும் காய்கறி சாகுபடிதான். காய்கறி சாகுபடியில் விற்பனை விலை எனும் ஒரே ஒரு இடத்தில்மட்டும்தான் விவசாயிகள் பெரும் இன்னலையும் ஏற்ற இறக்கத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது.


மொரிங்கா ஒலிபெரா (Moringa Olefera) எனும் தாவரவியல் பெயருடைய முருங்கை ஆங்கிலத்தில் டிரம்ஸ்டிக் (Drumstick) என்று அழைக்கப்படுகின்றது. தமிழ்ப் பெயரும், ஆங்கிலப்பெயரும் இரண்டுமே காரணப் பெயர்கள்தான். முருங்கை மரத்தின் இலைகள் மிகவும் எளிதில் முறிந்துவிடும் தன்மையை உடையது. இப்படி முறிந்துவிடும் தன்மையை உடைய மரம் என்பதால் முருங்கை மரமானது ட்ரம் எனும் தாள வாத்தியம் வாசிக்கின்ற குச்சிப் போன்ற தோற்றத்தை உடையதால் ஆங்கிலத்தில் டிரம்ஸ்டிக் (Drumstick) எனும் பெயர் இந்த காய்க்கு சூட்டப்பட்டது.
உரைபனி, கொட்டும் பனியை அறவே விரும்பாத முருங்கை ஒரு வெப்ப மண்டல பயிர். லேசான அமிலத்தன்மையுள்ள, தண்ணீர் தேங்காத, வடிகால் வசதியுள்ள நல்ல மண்வளம் உள்ள பகுதியில் செழித்து வளரும். முருங்கை வறட்சியும், வெப்பத்தையும் விரும்புகின்ற மரவகை. இதை மிக எளிதில் சாகுபடி செய்யலாம். இந்தியாவில் உற்பத்தியாகும் சுமார் 1.5 மில்லியன் மெட்ரிக் டன் முருங்கைக் காயின் உற்பத்தியில் முதலிடத்தை பெறுவது தமிழகம் என நினைத்தால் அது தவறு. முருங்கை உற்பத்தியில் முதலிடம் ஆந்திராவிற்கும், இரண்டாம் இடம் கர்நாடகாவிற்கும் கிடைத்தபின் தமிழகத்திற்கு மூன்றாம் இடம்தான். இந்தியாவைத் தவிர தாய்லாந்து, இலங்கை, பிலிபைன்ஸ், தைவான்,மத்திய அமெரிக்கா, ஆப்ரிகா, கரீபியன் தீவுகளிலும் முருங்கை பயிரடப்படுகின்றது.
முருங்கையில் இரண்டே வகைகள்தான் உண்டு. ஒன்று மரமுருங்கை மற்றொன்று செடி முருங்கை. இதில் மர முருங்கை நீண்ட காலப் பயிர். இதனை குச்சி (பொத்து) மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். இது பல்லாண்டு கால நிரந்தர பயிர். சுமார் 1 ½ சுற்றளவும், 40 அடி உயரமும் வளரக் கூடிய மர வகை. செடி முருங்கை என்பது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுபவை. இது குறுகிய காலப்பயிர் மூன்று அல்லது நான்கு காய்ப்புகளுக்குப் பின் காய்க்கும் திறன் குறைவதால் இதனை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு வேறு முறை நடவு செய்ய வேண்டும். இதைச் செடி முருங்கை என பரவலாக அழைக்கின்றனர்.
செடி முருங்கையில் pkm1m pkm2, யாழ்பாண முருங்கை, ரோகிட் 1, துர்கா, கோகன், GKVK 1, GKVK 2, GKVK 3, KM 1, CO2 சாகவச்சேரி என பல்வேறு வகைகள் இருந்த போதிலும் pkm1 எனும் ரகம்தான் சக்கைப்போடு போடுகின்றது.
செடி முருங்கை எல்லாவகையான மண்ணிலும் வளரும் என்றாலும் மணல் கலந்த செம்மண் பூமி, கரிசல் பூமி, வடிகால் வசதியுள்ள வண்டல் நிலம் மிகவும் ஏற்றது. ஜூன், ஜூலை பட்டத்திலும், நவம்பர் டிசம்பர் பட்டத்திலும் நடவு செய்யாமல் எட்டு அடி X எட்டு அடி இடைவெளியில் 1 ½ X 1 ½ X 1 ½ அளவில் குழி எடுத்து ஆறவிட்டு அதில் மக்கிய தொழு எரு, மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து நிரப்பி, இரண்டு அடி வட்டப்பாத்தி அமைத்து வாய்க்கால் பாசனமோ, சொட்டி நீர்ப் பாசனமோ அமைக்க ஏற்பாடு செய்து விதை ஊன்ற வேண்டும். தரமான, நல்ல முளைப்புத் திறன் உள்ள பொறுக்கு விதையாக இருப்பின் ஏக்கருக்கு 300 கிராம் விதை போதுமானது. விதையின் முளைப்புத் திறனை அதிகரிக்க 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பஞ்ச காவ்யா கலந்து அதில் விதைகளை 12 மணி நேரம் ஊற வைத்து குழிக்கு 2 விதைகள் வீதம் விதை சேதமடையாமல் ஊன்ற நீர்ப் பாய்ச்சவேண்டும். மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் நிலத்தின் தன்மை, வெயிலின் அளவு, காற்றின் ஈரப்பதம் போன்ற காரணிகளை அனுசரித்து நீர்ப் பாசனம் மேற்கொள்ளவேண்டும்.

விதைத்த இரண்டு மாதங்கள் வரையிலும் நிலத்தில் களைகளின்றி பராமரிக்க வேண்டும். செடி முருங்கை நடவு செய்யும்போதே ஊடுபயிராக வெங்காயம், தட்டைப்பயறு, கொத்துமல்லி போன்ற மிகக் குறுகிய காலப் பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம்.
செடி முருங்கை நமது நெஞ்சு மட்டத்திற்கு வந்ததும் சுமார் 3 ½ அடி உயரம் அதன் நுனியைக் கிள்ளி செங்குத்து வளர்ச்சியை நிறுத்திப் பக்கவாட்டு வளர்ச்சியை அதிகப்படுத்தவேண்டும். ரசாயன விவசாயிகள் செடி ஒன்றிற்கு 100 கிராம் யூரியா, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 கிராம் பொட்டாஷ் உர உப்பை விதைத்த மூன்றாவது மாதத்திலும், ஆறாவது மாதத்தில் 100 கிராம் யூரியா மட்டும் இடவேண்டும். இயற்கை வழியில் சாகுபடி செய்வோர் அதற்கு ஈடான இயற்கை உரத்தை கொடுக்க வேண்டும். அதிக காய்ப்புத் திறனுள்ள செடி முருங்கைகளுக்கு அதன் உற்பத்தி திறனுக்கு ஏற்ற ஊட்டச் சத்து கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
நஞ்சில்லா காய்கறி சாகுபடி செய்ய வேண்டும் என நினைத்தால் முருங்கையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு அவசியம். முருங்கை விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் சுடோமோனாஸ் புளூரசன்ஸ் எனும் உயிர் மருந்தைக் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். உயிர் உர நேர்த்தியாக அசோஸ்னபரில்லம் 200 இளம், பாஸ்போ பேக்ட்ரீயம் 200 எடுத்துக்கொண்டு ஆறிய அரிசி வடிகஞ்சி அல்லது ஆறிய மைதாமாவு பசைக் கரைசலுடன் கலந்து இந்தக் கரைசலுடன் 1 கிலோ முருங்கை விதையை புரட்டி நிழலில் காயவைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நடவு குழியில் மக்கிய தொழு உரம் 15 கிலோ, மண்புழு உரம் 5 கிலோ, அசோஸ்பைரில்லம் 50 கிராம், பாஸ்போ பேக்ட்டீரியம் 50 கிராம், வேம் (VAM) எனும் வேர் நுண் உட்பூசணம் 100 கிராம், வேப்பம் புண்ணாக்கு 250 கிராம் கலந்து இட வேண்டும். 5% வேப்பங் கொட்டை கரைசல் 0.03% நிமிசிடின் கரைசல் போன்றவற்றை காய் மடிப்புப் பருவத்தில் ஒரு மரத்திற்கு 2 லிட்டர் தெளித்துப் பூச்சி நோயைக் கட்டுப்படுத்தலாம். பஞ்சகாவ்யம் 3 சதம் தெளித்து அதிக மகசூல் பெறலாம்.
ஒரு வருடம் கழித்து காய்ப்பு முடிந்த பிறகு, செடிகளைத் தரை மட்டத்திலிருந்து சுமார் மூன்று அடி உயரத்தில் வெட்டிவிட வேண்டும். இதனால் புதிய குருத்துகள் வளர்ந்து மீண்டும் 4 முதல் 5 மாதங்களில் காய்க்கத் துவங்கும். இதுபோல் ஒவ்வொரு காய்ப்புக்கு பிறகும் மரத்தை வெட்டி மூன்று ஆண்டுகள் வரை மறு தாம்புப் பயிராக பராமரிக்கலாம். ஒவ்வொரு முறை கவாத்து செய்தபின்னும் தேவையான ஊட்டச் சத்து உரங்களை இட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

Saturday, March 28, 2015

கீரையில் மாதம் ரூ.45 ஆயிரம் (Keerai) - Spinach

முன்னோர்களிடம் கீரையை உணவில் அதிகம் சேர்க்கும் பழக்கம் இருந்தது. இதற்காக, வீட்டு தோட்டங்களிலேயே முருங்கை, அகத்தி, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைகளை பயிரிட்டனர். காலப்போக்கில், வீட்டு தோட்டங்கள் மறைந்து, உணவில் கீரை சேர்க்கும் பழக்கம் குறைந்தது. இதனால் உடலில் பாதிப்பு அதிகரித்தது. டாக்டர்களின் ஆலோசனைப்படி, இன்றைக்கு “வாக்கிங்’ செல்வோர், வீட்டிற்கு திரும்பும் போது, “கீரை கட்டுகளை’ வாங்கிச் செல்கின்றனர்.அதற்கேற்றார் போல், சிவகங்கை அருகே மேலசாலூரை சேர்ந்த விவசாயி பி.போஸ், தனது நிலத்தில் முற்றிலும் கீரை பயரிட்டு, லாபம் பார்த்து வருகிறார்.அவர் கூறியதாவது:

  • கடும் வறட்சிக்கு இடையே கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து, கீரை பயிரிட்டு வருகிறேன். நான் மட்டுமின்றி, எனது சகோதரர்களும் சேர்ந்து, ஒட்டு மொத்தமாக 1.5 ஏக்கரில் கீரை நடவு செய்துள்ளோம்.
  • நான் மட்டுமே 50 சென்ட்டில்,200 பாத்தி அமைத்துள்ளேன்.
  • ஒரு பாத்திக்கு 50 கிராம் விதையை தூவ வேண்டும். விதை தூவிய பின், தினமும் தண்ணீர் பாய்ச்சுவதோடு, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து தெளித்து,முறையாக கவனித்து வரவேண்டும்.
  • ஒரு மாதத்திற்கு பின் கீரை நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராகும்.
  • இங்கு தண்டுகீரை, அரைக்கீரை, சிறு கீரை, பாலைக்கீரை, பருப்பு கீரை, வெந்தயகீரை, புளிச்சகீரை, பொன்னாங்கண்ணி கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை போன்று, மருத்துவ குணமுள்ள கீரைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளேன்.
மாதம் ரூ.45 ஆயிரம்
  • நாள் ஒன்றுக்கு, 300 முதல் 500 கட்டு (ஒரு கட்டு 250 கிராம்)அறுவடை செய்து விற்பேன். ஒரு கட்டு ரூ.5க்கு விற்கிறது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.2,500 வருவாய் கிடைக்கும். உரம், பூச்சி மருந்து, விவசாய கூலியாட்கள் சம்பளம் என்ற விகிதத்தில் ரூ.1,000 செலவு போக, தினமும் கீரை மூலம் ரூ.1,500 வீதமும், மாதம் ரூ.45 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். நல்ல மழை பெய்தால் இன்னும் அதிக நிலங்களில் கீரை பயிரிடலாம், என்றார்.

கொத்தமல்லி சாகுபடி (Kothamalli Saagubadi) - Coriander and Cilantro: Planting, Growing and Harvesting

குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது.
கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.  தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது.

கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காகப் பயிரிடப்படுகிறது.
  • குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது.
  • மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது.
  • கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி பாசனப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது.
  •  விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலப் பணப்பயிராக உள்ளது.
  • இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாகப் பயிரிடாமல், 20 சென்டுகளாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம்.
  • 400 கிராம் எடை கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
  • கொத்தமல்லியை பயிரிட்டு குறுகிய காலத்தில் விவசாயிகள் லாபம் பெறலாம்.


சாகுபடி முறைகள்:
  • நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர் பாத்திகள் அமைக்க வேண்டும்.
  • பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதைகளைப் போட்டு, மண் போட்டு மூடிவிட வேண்டும்.
  • பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் முளைவிடும்.
  • நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக் கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்க வேண்டும்.
  • கோடை பட்ட சாகுபடியில் களைக் கொல்லிகள் தேவையில்லை.
  • முளைத்த 20-ம் நாள் 17:17:17 உரம் ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும்.
  • இலைவழி உரமாக 19:19:19-ஐ 30-வது நாளில் தெளிக்க வேண்டும்.
  • விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலைகளாகவும் இருக்கும்.
  • பயிர் பாதுகாப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • முறையாகப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் மகசூல் 6 ஆயிரம் கிலோ கொத்தமல்லி தழை கிடைக்கும். ஒரு கிலோ விலை ரூ.10 வீதம் கணக்கிட்டால் மொத்த வருவாய் ரூ.60 ஆயிரம். சாகுபடிச் செலவு ரூ.11,600 போக லாபம் ரூ.48,400 ஆகும்.
  • ஆண்டு முழுவதும் பயிரிட்டால் வருடத்திற்கு ஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் வரை கொத்தமல்லி கீரை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
  • கொத்தமல்லி கீரை 50 நாள்களில் அறுவடைக்கு வரும்.
  • நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்கும்போது விலை குறைந்துவிடும்.
  • ஆனால் 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்தால் இலை நன்றாக இருக்கும். நல்ல விலை கிடைக்கும். சில்லறையாக விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும்.