Showing posts with label துல்லிய பண்ணையம். Show all posts
Showing posts with label துல்லிய பண்ணையம். Show all posts

Tuesday, June 9, 2015

பண்ணையின் பொருளாதாரப் பண்புகள் (Pannaiyin Porulaathaara Panbugal) - Dairy Farming Day Today Activities

பால்பண்ணையின் பல்வேறு பொருளாதாரப் பண்புகளாவன:

  1. ஒரு கன்றுப் பருவத்தில் பால் உற்பத்தி அளவு
  2. ஒரு பருவக் காலத்தில் பால் தரும் நாட்கள் / பால் உற்பத்திக் காலம்
  3. பால் உற்பத்தி நிலைத்தன்மை
  4. முதல் கன்று ஈனும் வயது
  5. சினைப் பருவம்
  6. பால் வற்றிய நாட்கள்
  7. அடுத்தடுத்த கன்றுகள் ஈனுவதற்கு இடையே உள்ள இடைவெளி
  8. இனப்பெருக்கத் திறன்
  9. தீவனம் உட்கிரகிக்கும் நாள்
  10. நோய் எதிர்ப்புத் திறன்
1.ஒரு பருவத்தில் பால் உற்பத்தி அளவு

ஒரு கன்று ஈனும் பருவத்தில் பெறப்பட்ட மொத்தப் பால் உற்பத்தியே ஒரு பருவ பால் உற்பத்தி ஆகும். பொதுவாக அயல்நாட்டு இனங்களை விட நம் நாட்டுப் பசுக்களில் உற்பத்தி குறைவு. இது மொத்தம் ஈன்ற கன்றுகள், பால் கறக்கும் இடைவெளி மற்றும் பாலின் நிலைத்தன்மையைப் பொறுத்தது. முதல் பருவத்திலிருந்து போகப்போக 3 - 4 வது பருவம் வரை பால் உற்பத்தி 30 - 40 சதவிகிதம் அதிகரிக்கிறது. அதன் பின்பு குறைய ஆரம்பிக்கும். இரு இனங்களுக்கிடையே பால் உற்பத்தியின் அளவை ஒப்பிட அதன் பால் உற்பத்திக் கொழுப்பு சரிசெய்யப்பட வேண்டும். 4 சதவிகிதம் கொழுப்பு சரிசெய்த பால் = 0.4 மொத்த பால் + 15 மொத்தக் கொழுப்பு கன்று ஈன்ற (Parturition) பிறகு பால் உற்பத்தி அதிகரித்து ஈன்ற 2 - 4 வாரங்களுக்கு உற்பத்தி மிக அதிகமாக இருக்கும்.
இதுவே அப்பருவத்தின் (நிறை) அதிக உற்பத்தி அளவாகும். இந்த அதிக உற்பத்தி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நம் இந்திய இனங்களில் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும்.

2.பால் உற்பத்திக் காலம்

ஒரு கன்றுப் பருவத்தில் பால் தரும் மொத்த நாட்கள் பால் உற்பத்திக் காலம் ஆகும். சராசரி பால் உற்பத்தி நாட்கள் ஒரு வருடத்திற்கு 305 நாட்கள் ஆகும். குறுகிய காலமாக இருந்தால் 33 நாட்கள் குறையும். குறுகிய இந்திய இனங்கள் குறைந்த உற்பத்திக் காலமே கொண்டவை. சில இனங்களில் உற்பத்திக்காலம் அதிகமாக இருந்தாலும் பால் மிகக்குறைந்தளவே இருக்கும்.

3.பால் உற்பத்தியின் நிலைத்தன்மை.

அதிக உற்பத்தியால் பாலின் உற்பத்திக்காலம் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் 2-4 வாரங்களில் வரும் பாலின் உற்பத்தி விரைவில் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுவதே நிலைத்தன்மை, பால் குறையும் தன்மை குறைந்தளவே இருக்குமாறு பராமரித்தல் அதிக உற்பத்திக்கு உதவும்.

4.முதல் கன்று ஈனும் வயது

அதிக நாள் உற்பத்திக்கு முதல் கன்று ஈனும் வயது முக்கியமான ஒன்று. இந்திய இனங்களில் முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்கள். கலப்பினங்களில் 2 வருடங்கள். எருமை மாடுகளில் மூன்றரை வருடங்கள் ஆகும். முதல் கன்று ஈனும் வயது அதிகமாக இருந்தால் பால் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். ஆனால் மொத்தம் ஈனும் கன்றுகள் அளவு குறைவதால் பால் பருவமும் குறையும்.

5.சினைக்காலம்ள

இது கன்று ஈன்று பால் வற்றிய பின்பும் அடுத்த கருத்தரிப்புக்கும் உள்ள இடைவெளியாகும். சரியான நேரத்தில் சினை எய்த வைத்தல் மன அழுத்தத்தைப் போக்கிப் பசுவை ஆரோக்கியமாக வைக்கும். மேலும் இனப்பெருக்க உறுப்புக்கள் சரியான வயதில் தன்னிலை எய்தவும் இது உதவுகிறது. சராசரி சினைக்காலம் 60-90 நாட்கள். இந்நாட்கள் நீடித்தால், அடுத்த கன்று ஈனுவதும் தள்ளிப்போகும். அதே சமயம் மிகக் குறைவாக இருந்தாலும், பசுவின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உடனடி கர்ப்பத்தால் பால் உற்பத்தி குறையும். எனவே சரியான இடைவெளியுடன் இருத்தல் வேண்டும்.

6.பால் / மடி வற்றிய நாட்கள்

இது பால் கறப்பது நின்ற நாளிலிருந்து அடுத்தக் கன்று ஈனும் நாள் வரை உள்ள காலமாகும். முந்தய ஈற்றில் இழந்த சத்துக்களைத் திரும்ப பெற்றுக் கொள்ள சிறிது ஓய்வு தேவை. இக்காலமானது இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் இருக்கலாம். இவ்வாறு போதிய இடைவெளி இல்லையெனில் பசுவின் பால் உற்பத்தி படிப்படியாகக் குறைவதோடன்றி பிறக்கும் கன்றும், ஆரோக்கியமாக இருக்காது.

7.கன்று ஈனும் இடைவெளி

அடுத்தடுத்த இரு கன்றுகள் ஈனுவதற்கு இடையே உள்ள இடைவெளி கன்று ஈனும் இடைவெளியாகும். மாடுகளில் ஆண்டுக்கு 1 கன்றும், எருமை மாடுகளில் 15 மாதங்களுக்கு ஒரு கன்றும் ஈனுதல் வேண்டும். கன்றுகளுக்கிடையே இடைவெளி அதிகமாக இருந்தால், அதன் மொத்தம் ஈனும் கன்றுகள் எண்ணிக்கை குறையும்.

8.இனப்பெருக்கத் திறன்

பசுவின் அதிகக் கன்றுகள் ஈனும் திறன், அதன் இனப்பெருக்கத் திறனைப் பொறுத்தது. இனப்பெருக்கத் திறன் மரபியல் குணாதிசியங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்து அமையும். பசுவின் இனப்பெருக்கத் திறனை முதல் கன்று ஈனும் வயது, அடுத்தடுத்த கன்று இடைவெளி, சினையாகும் காலம் போன்றவற்றின் மூலம் அறியலாம். சில மரபியல் பண்புகளால் ஒவ்வொரு கால்நடைக்கும் இத்திறன் மாறுபடுகிறது. சாதகமற்ற சூழ்நிலையில் குறைந்த பால் உற்பத்தி செய்யும் மாடுகள் அதிக உற்பத்தி உள்ள மாடுகள் அளவு பாதிக்கப்படாது.

9.தீவனம் உட்கொள்ளும் எடுக்கும் மற்றும் உட்கிரகிக்கும் திறன்

மாடானது நிறைய தீவனம் உட்கொள்வதோடு அதை நன்கு உட்கிரகித்துப் பாலாக மாற்றும் திறனுடையதாக இருக்க வேண்டும்.

10.நோய் எதிர்ப்பு

இந்திய இனங்கள் அயல் நாட்டு இனங்களை விட நோய் எதிர்ப்புத் திறன் மிகுந்தவையாக உள்ளன. கலப்பினச் சேர்க்கை மூலம் அயல் இனங்களில் இப்பண்பைப் பெறலாம்.

(ஆதாரம் : http://bieap.gov.in/)

Saturday, January 17, 2015

துல்லிய பண்ணையம்

மண்ணினைத் தயார் செய்தல்
மண்ணின் ஹியுமிக் அமிலம், நுண்ணுயிரிகள், காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி ஆகியவை சரியான அளவில் பேணப்படுவதோடு மண் வளம் கீழ்க்கண்ட முறைகளில் அதிகரிக்கப்படவேண்டும்.
பசுந்தாள் உரம்
வாழை ஒன்றுக்கு ஜிப்சம் 2 கிலோ இடுதல்
வேப்பம் புண்ணாக்கு
பாஸ்போபாக்டீரியா
  • பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பையை பயிரிடுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு விதைத்து, அது பூக்கும் பருவத்தில் வயலினுள் மடித்து உழவு செய்யவேண்டும்
  • செஸ்பேனியா மற்றும் சணப்பையினை வாழைக்கன்று நட்ட பின் விதைத்துப் பின் 60 நாட்களில் அவற்றில் விதை வரும் முன்பு மடித்து உழுது விடவும்.
  • வாழை ஒன்றுக்கு ஜிப்சம் 2 கிலோ, அதோடு ஒரு வாழை மரத்துக்கு 15 கிலோ தொழு உரம் அல்லது ஒரு எக்டருக்கு 45 டன்கள் என்ற அளவில் இடுவதால் மண்ணின் அமில காரத்தன்மை சரியான அளவில் அமைந்து, நுண் மற்றும் பேரூட்டச் சத்துக்கள் பயிருக்குச் சரியான அளவில் கிடைக்கின்றன.
  • எக்டருக்கு 25 லிட்டர் பொட்டாசியம் ஹியுமேட் கன்று நட்ட 3 மற்றும் 5வது மாதங்களில் இடுவதால் அங்ககத் தன்மை அதிகரிக்கச் செய்யும்.
  • வாழைக்கன்று ஒன்றிற்கு 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு + தென்னை நார்க் கழிவு அல்லது கோழிக் குப்பை அல்லது நெல் உமிச் சாம்பல் 14 கிலோ என்றளவு இடுவதாலும் மண்ணில் அங்கக தன்மை அதிகரிப்பதோடு, நூற்புழுக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றது.
  • வேம் (VAM- வெஸிகுலார் அர்பஸ்குலார் மைக்கோரைசா) 20 கிராம் + பாஸ்போபாக்டீரியா 20 கிராம் + அஸோஸ்பைரில்லம் 50 கிராம் + டிரைக்கோடெர்மா ஹர்ஸியானம் 20 கிராம் கலந்த கலவையினை வாழை ஒவ்வொன்றுக்கும் இடுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை வேர் மண்டலத்தில் அதிகரிக்கச் செய்யலாம்.

நாற்றங்கால் தயார் செய்தல்
துல்லிய பண்ணைய முறை பயிரிடுதலுக்கு திசு வளர்ப்பு வாழைகளைப் பயன்படுத்தவும், திசு வளர்ப்பு வாழைக்கன்றுகளை சாதாரண இடைக்கன்று வாழைகளைக் காட்டிலும் சீரான மற்றும் வேகமான வளர்ச்சி கொண்டவை. இவை கிட்டதட்ட 20 நாட்களுக்கு முன்பே பூப்பதோடு, 35 நாட்கள் சாதாரண வாழைகளை விட குறைந்த பயிர்க் காலம் கொண்டவை. அதோடு, அதிக மகசூல் தரக்கூடியவை. திசு வளர்ப்பு வாழைகளை தேர்வு செய்யும் போது கீழ்க்கண்ட கருத்துக்களை நினைவில் கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

திசு வளர்ப்பு வாழைக் கன்றுகள்
திசு வளர்ப்பு நாற்றுகள் வளர்ச்சியடைதல்
செடி வளர தேவையான ஊடகமும் மணலும் பாலிதீன் பையில் நிரப்புதல்
5 இலைகளுடன் கூடிய திசு வளர்ப்பு வாழைக்கன்று
  • 45 முதல் 60 நாட்கள் நன்கு கடினப்படுத்தப்பட்ட குறைந்தது 30 செ.மீ. உயரமும், 5 – 6 செ.மீ. வெளித்தண்டுச் சுற்றளவும் கொண்ட கன்றுகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் கன்றில் நன்கு ஒளிச்சேர்க்கை நடைபெறும் 5 இலைகள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள இடைவெளி 5 செ.மீ. க்கு குறையாமல் இருப்பது மிக முக்கியம்.
  • இரண்டாம் நிலை கடினப்படுத்தலின் முடிவில் சுமார் 25-30 ஆணி வேர்கள் கிழங்கில் இருக்கவேண்டும்.
  • ஆணி வேரின் நீளம் 15 செ.மீ க்கு அதிகமாக, இரண்டாம் நிலைப் பக்க வேர்களுடன் அமைந்திருக்கவேண்டும்.
  • பாலித்தீன் பையானது 20 செ.மீ. நீளமும், 16 செ.மீ. விட்டமும் கொண்டதாக இருக்கவேண்டும். இந்த பையின் முக்கால் பாகத்திற்கு மண் கலவையை நிரப்பவேண்டும்.
  • இந்த மண் கலவையானது உலர் எடை அளவில் 750 – 800 கிராம் எடை இருக்கவேண்டும்
  • இலைப்புள்ளி, தண்டு அழுகல் மற்றும் வினையியல் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏதுமற்று இருக்கவேண்டும்.
  • கன்றுகள் எர்வினியா அழுகல் நோய், நூற்புழுவினால் ஏற்படும் புள்ளிகள், வேர் முடிச்சுகள் போன்ற வேர் நோய்க்காரணிகளற்று ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். கன்றுகளை வாங்குவதற்கு முன் சரி பார்த்து வாங்க வேண்டும்.
  • அபரிமித வளர்ச்சி பெற்றிருக்கும் கன்றுகளை தேர்வு செய்யக்கூடாது.

Thursday, January 15, 2015

இயற்கை முறையில் இமாம்பசந்த் - மகசூல் கூட்டும் மகத்தான தொழில்நுட்பங்கள்

ரசாயன விவசாயமாக இருந்தாலும் சரி... இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும் சரி... வழக்கமாகக் கடைப்பிடிக்கும் சாகுபடி முறைகளோடு சில தொழில்நுட்பங்களைச் சேர்க்கும்போது விளைச்சலில் அபரிமிதமான மாற்றங்கள் உண்டாகின்றன. பல விவசாயிகள் இதை அனுபவப்பூர்வமாக நிரூபித்து வருகின்றனர். திண்டுக்கல், துரைபாண்டியன் அத்தகையோரில் ஒருவர். இவர், கிட்டத்தட்ட 98% இயற்கை முறை விவசாயத்தில் மா சாகுபடி செய்துவருகிறார்!
திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் 19-வது கிலோமீட்டரில் உள்ள கம்பிளியம்பட்டி எனும் கிராமத்தில் இருக்கிறது, துரைபாண்டியனின் மாந்தோப்பு. தோப்பைச் சுற்றியுள்ள நிலங்களில் கடுமையான வறட்சி காரணமாக புற்கள்கூட கருகியிருக்கும் நிலையிலும், இவருடைய மாந்தோப்பு மட்டும் பசுமை கட்டி நிற்கிறது. முறையாக கவாத்து செய்யப்பட்ட மா மரங்களில் கொத்துக்கொத்தாக காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. நான்கு மா மரங்களுக்கு இடையில் ஒரு தென்னை... ஒவ்வொரு தென்னையைச் சுற்றியும் வாழை மரங்கள்... என அணிவகுத்து நிற்கின்றன. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கொட்டகையில் அமர்ந்திருந்த துரைபாண்டியனைச் சந்தித்தோம்.
இமாம்பசந்த் ரகத்துக்கு அதிக விலை!
''லாரி டிரான்ஸ்போர்ட்தான் எனக்கு பிசினஸ். திண்டுக்கல்லுல ஒரு கல்யாண மண்டபம் இருக்கு. ரெண்டையும் பாத்துக்கிட்டு விவசாயத்தையும் செஞ்சிட்டு இருக்கேன். இந்த இடம் ஒரு காலத்துல கல்லுக் காடா இருந்துச்சி. 30 வருஷத்துக்கு முன்ன மா நடலாம்னு முடிவு செஞ்சேன். இது சம்பந்தமா என்னோட சொந்தக்காரர் பாஸ்கரன்கிட்ட பேசினப்போ, 'நல்ல யோசனை’னு தெம்பு கொடுத்தார். உடனே, ஆந்திர மாநிலம் 'ஜிதிகுப்பா’ங்கிற இடத்துக்குப் போய், கல்லாமை, செந்தூரம், பெங்களூரா, இமாம்பசந்த்னு பல ரகங்கள்ல தரமான மாங்கன்னுகளை வாங்கிட்டு வந்து நட்டோம். எல்லாம் வளர்ந்து காய்ப்புக்கு வந்த சமயத்துல, 4 இமாம்பசந்த மரங்கதான் இருந்துச்சு. ஆனா, அந்த ரகத்துக்குத்தான் அதிக விலை கிடைச்சிது. அதனால, தோப்பு முழுக்க இமாம்பசந்த் ரகத்தையே நட்டுடலாம்னு முடிவு செஞ்சிட்டோம். அதுக்காக, இமாம்பசந்த் பத்தின விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்னு நானும், பாஸ்கரனும் அலைஞ்சப்போ, ஒரு தகவல் கிடைச்சிது.
ஒட்டுச்செடியில் ஆண்டு முழுவதும் காய்ப்பு!
ஆந்திராவைச் சேர்ந்த தோட்டக்கலைப் பேராசிரியர் ஒருத்தர், 'இமாம்பசந்த், ஒரு வருஷம்விட்டு ஒரு வருஷம்தான் நல்ல மகசூல் கொடுக்கும். ஆனா, ஒரு சின்ன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வருஷம் முழுக்க காய்க்க வைக்க முடியும். ஃபீனா ரக மாஞ்செடியை (நீலம் ரக மாம்பழத்தை ஆந்திர மாநிலத்தில் இந்தப் பெயரில்தான் அழைக்கிறார்கள்) வேர்ச்செடியாகவும், இமாம்பசந்த்தை தாய்ச் செடியாகவும் வெச்சி ஒட்டுக்கட்டி... தரமான இமாம்பசந்த் செடிகளை உருவாக்கினா, மகசூலும் நல்லா இருக்கும். வருஷம் முழுசும் காய்க்கும்’னு சொல்லி... ஃபீனா ரகச் செடிகளை வாங்கிக் கொடுத்து, ஒட்டுக் கட்டுறதுக்கு ஆட்களையும் ஏற்பாடு செஞ்சி கொடுத்தாரு. ஃபீனா ரகம் நல்ல சுவையா இருக்கறதோட பழமும் பெருசா இருக்கும். அவர் சொன்ன மாதிரி ஒட்டுக் கட்டி நாத்து உருவானதும்... தோட்டத்துல இருந்த மத்த மரங்களை எல்லாம் வெட்டிட்டு... முழுக்க இமாம்பசந்த் செடிகளை நட்டுட்டோம். இப்போ, மொத்தம் 21 ஏக்கர்ல 800 இமாம்பசந்த் இருக்கு. கூடவே, மகரந்தச் சேர்க்கைக்காக சேலம், பெங்களூரா, செந்தூரம் ரகங்கள்ல 250 மரங்களை வெச்சிருக்கோம்'' என்ற துரைபாண்டியன், தொடர்ந்தார்.
''மரங்கள் எல்லாம் ஒவ்வொரு வருஷமும் நல்ல மகசூல் கொடுக்குது. ஆரம்பத்துல வெச்ச நாலு தாய் மரங்களும் இன்னமும் நல்லா காய்ச்சிட்டு இருக்கு. அதுல மறுபடியும் ஒட்டுக் கட்டி அடர்நடவு முறையில
20 ஏக்கர்ல இமாம்பசந்த் நடப்போறோம். தோப்புக்கு கிணத்துப் பாசனம்தான். ரெண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கற கிணத்துல இருந்து, தண்ணி கொண்டு வந்து சொட்டு நீர் மூலமா பாசனம் பண்றோம். கடுமையான வறட்சியிலயும் மரங்களைக் காய விடாம வெச்சிருக்கறது, சொட்டு நீர்தான்'' என்ற துரைபாண்டியன், இமாம்பசந்த் சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே.

Tuesday, January 13, 2015

விதை மூலம் சின்ன வெங்காயம் நாற்றங்கால் மேலாண்மை

சின்ன வெங்காயம் பொதுவாக இரண்டு பட்டங்களாகப் பிரித்து சாகுபடி செய்யப்படுகின்றது.
  • ஒன்று: சித்திரை – வைகாசி பட்டம்,
  • இரண்டு: ஐப்பசி-கார்த்திகைப்பட்டம்.
நாற்று வெங்காயம் (விதை மூலம்) மேற்கூறிய இரண்டு பட்டங்கள் தவிர்த்து இடைப்பட்ட மார்கழி முதல் சித்திரை மாதம் வரை உள்ள காலங்களில் மிகச் சிறப்பாகவும், வெயிலைத் தாங்கி விளையும் சக்தி கொண்டவையாகவும், கூடுதல் மகசூல் தரக்கூடியனவாகவும் சிறப்பான விற்பனைத் தரம் கொண்டவையாகவும், அளவில் பெரியதாகவும் இந்த நாற்று வெங்காய ரகங்கள் உள்ளன. இவைகள் விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நாற்று வெங்காய ரகங்கள்:
கடலூர் மாவட்டம் – நானமேடு என்ற கடற்கரைக் கிராமத்தைத் தாயகமாகக் கொண்ட கடலூர் ரகம். இது “மொட்லூர்’ எனவும் அழைக்கப்படுகின்றது. கோவை பல்கலைக்கழக வெளியீடான சிறப்பு பொறுக்கு ரகம் – கோ.ஓ.எண்.5 (கோயம்புத்தூர் ஆனியன் – எண்:5) இதுவே இன்று விவசாயிகளிடம் அதிக அளவு சாகுபடியில் – நடைமுறையில் உள்ளது. கோ.ஓ.எண்.5 என்று அழைக்கப்படுகிறது.
இது தவிர தனியார் கம்பெனிகளின் சில ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.கோ.ஓ.எண்:5: கோவை பல்கலைக்கழகத்தின் சிறப்புத் தேர்வு ரகமான கோ.ஓ.எண்:5 பற்றி விரிவாகப் பார்ப்போம். * விதை மூலம் உற்பத்தி, * அறுவடைக் காலம் 90 முதல் 100 நாட்கள். * உருண்டை வடிவம் கொண்ட மார்க்கெட் ரகம். * இளம் சிவப்பு காய்கள் – தரைக்குப் பக்கவாட்டில் விளையும் கிழங்குகள். * ஏக்கருக்கு 8000 முதல் 12,000 கிலோ கூடுதல் மகசூல் * அறுவடைக்குப் பின் சேமித்து வைக்க உகந்த ரகம். * கடலூர் ரகம் போலவே அறுவடை சமயத்தில் மழை பெய்தால் முளைக்கும் தன்மை உண்டு.
விதைக்கும் பட்டம்: சிறிய வெங்காய விதைகள் மூலம் சாகுபடி செய்வதற்கு சரியான பட்டம் – மழை அளவு குறையும் கார்த்திகை பின்பகுதியில் ஆரம்பித்து சித்திரை 15 வரை தொடர்ந்து நாற்று பாவி நடவு செய்யலாம். வைகாசி முதல் வாரத்திலிருந்து கார்த்திகை 15 வரை அல்லது 20 வரை நாற்று விடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையத் திட்டம்

சிவகங்கை மாவட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக 600 ஹெக்டேர் பரப்பில் வெண்டை, கத்தரி, தக்காளி, கொடி வகை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
இதைத் தவிர 5 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
இப் பயிர்களில் பாசனநீர், உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை சாதாரண முறையில் அளிக்கும்போது, செடிகளின் வேர்பகுதிகள் மட்டுமல்லாது சுற்றியுள்ள இடங்களிலும் அளிக்கப்பட்டு வீணாகிறது.
இதனைத் தவிர்த்து, நீர்ப்பாசனம் மற்றும் இடுபொருள்களை துல்லியமாக பயிர்களுக்கு கிடைக்கச் செய்து, குறைந்த செலவில் அதிக விளைச்சல் மற்றும் வருமானம் தரும் திட்டமே துல்லிய பண்ணைத் திட்டமாகும்.
இத் திட்டத்தின் கீழ் 2012-2013 ஆம் ஆண்டு விவசாயிகளின் நிலங்களில் 200 ஏக்கர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் (உரம் கரைத்து இடும் டேங்க்) உள்பட அமைக்கப்பட்டு காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படவுள்ளன.
வெண்டை, கத்தரி, தக்காளி மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், இதற்கென தேர்வு செய்யப்பட்டு தற்போது சொட்டுநீர் பாசனக் கருவிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கென நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 43,816 மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் அளிக்கப்படுகிறது.
பயிர் சாகுபடிக்கென வீரிய ஒட்டுரக விதை மற்றும் நீரில் கரையும் உரங்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு துல்லியப் பண்ணையம் அமைப்பது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணையம் – பட்டுக்கோட்டை விவசாயி பற்றிய ஒரு கண்ணோட்டம்

ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து நண்பர்களிடமும் என் குடும்பத்தினரிடமும் சில முறை பேசியிருக்கிறேன். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வமின்மையோ அல்லது என் மீது உள்ள அபரிமிதமான நம்பிக்கை(!)யோ யாரும் செவி மடுத்துக் கேட்பாரில்லை. ஏற்கனவே சிறிய அளவிளான ஒரு ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி தினமணி செய்தியை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன் (மீன் குழி மற்றும் நெல்).
பசுமை விகடனின் இந்த பதிப்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நைனான் குளத்தைச் சேர்ந்த விவசாயி திரு வெங்கட்ராமன் செயல்படுத்தியிருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வந்துள்ளது.  பசு, எருமை, ஆடு மற்றும் கோழி முதலான கால்நடைகள், அவற்றிற்கான தீவனப் புல் வளர்ப்பு, குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை, அத்துடன் மீன் குட்டை  அத்துடன் பண்ணையைச் சுற்றி ஆடாதொடை, நொச்சி என்று இயற்கை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்.
திரும்ப கட்டுரையை மீள் பதிப்பு செய்ய இயலாது என்றாலும் அவர் கூறிய செயல்முறைகளையும் இயற்கை விவசாயம் வழியான பயன்களையும் சொல்ல விரும்புகிறேன்.
வெங்கட்ராமன் பண்ணையம்
பட்டுக்கோட்டை விவசாயி வெங்கட்ராமனின் ஒருங்கிணைந்த பண்ணையம்

மக்காச்சோளம் சாகுபடி – இயற்கை மற்றும் செயற்கை

மக்காச்சோளத்திற்கான தேவை அதிகரித்துள்ளது என்பதை ஏற்கனவே இங்கே வெளியிட்டு இருந்தோம். தேவையுடன் சேர்த்து இதற்கான செய்யும் பக்குவமும் குறைவே. இறைவை மற்றும மானாவாரி இரண்டுக்குமே ஏற்ற இந்தப் பயிருக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. குறுகிய காலத்தில் மகசூல். ஓரளவு கட்டுபடியாகக்கூடிய வேலை. வில்லங்கமில்லாத விற்பனை என்பதால் விவசாயிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
வழக்கமான முறையில் விவசாயம் செய்து வருவோர் மத்தியில் சொட்டுநீர் பாசனத்தின் உதவி கொண்டு அதிக மகசூல் அடைந்திருக்கிறார் கோயமுத்தூர் மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விவசாயி ம. கோவிந்தராசன்.
அவரது சொல்படி
  • உற்பத்தி செலவு ரொம்ப கம்மி.
  • அதிக உரம் பூச்சி மருந்துக்கு வேலை இல்லை
  • ஓரளவு கட்டுபடியாகக்கூடிய விலையும் கிடைக்கும்
சமச்சீர் உரமேலாண்மை முறையில் இயற்கை ரசாயனம் கலந்து மூன்று ஏக்கரும் இயற்கை முறையில் ஒரு ஏக்கரும் சாகுபடி செய்திருந்த இவர் இயற்கை வழிப்படி கூடுதல் மகசூல் கிடைக்கும் என்கிறார்.
  • நுட்பம் : மக்காச்சோளம்
  • வயது : 110 நாள்
  • நிலம் : வடிகால் வசதி உள்ள அனைத்து நிலங்களும்
  • சாகுபடி காலம் : இறவையில் வருடம் முழுவதும்
உழவு
சாகுபடி நிலத்தை இரண்டு முறை உழவு செய்து 5 டிராக்டர் அளவு கோழி எருவைக் கொட்டி இறைத்து மீண்டும் ஒரு உழவு செய்து நிலத்தை ஆறப்போட வேண்டும். சொட்டுநீர் பாசணம் பயன்படுத்தும்போது பார் மற்றும் வரப்பு எடுக்கவேண்டியதில்லை. உழவு ஓட்டிய வயலில் அப்படியே நடவு செய்துவிடலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் தேவைப்படும். செடிக்கு செடி ஒரு அடியும், வரிசைக்கு வரிசை ஒரு அடியும் இடைவெளி விட்டு நடவு செய்யவேண்டும். ஒன்றரை அடி லேட்டரல் குழாய்களை ஒன்றரை அடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுவது போல் அமைக்கவேண்டும். வரிசைக்கு வரிசை 3 அடி இடைவெளியில் இந்தக் குழாய்களை அமைத்தால் போதும்.

பச்சை வர்ணத்தின் X குறிகள் – நாற்றுக்கள்
கருப்புவர்ணம் சொட்டு நீர் குழாய்கள்

Monday, December 29, 2014

மழை இல்லாத கோடையிலும் விவசாயம்



எதிர்பாராத வறட்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வறட்சி வரும் என்பதை கணித்து அதில் இருந்து பயிர்களை தற்காத்துக் கொள்ள நமது முன்னோர்கள் பல உத்திகளை கையாண்டுள்ளனர். அதில் பண்ணைக் குட்டைகள் என்ற நீர் சேமிப்பு குழிகளும் ஒரு வகை உத்தி ஆகும்.

மழை காலத்திலும், கோடை மழை காலங்களிலும் பெய்யும் மழைநீரை பண்ணைகுட்டை எனப்படும் குழிகளில் தேக்கி வைத்தனர். வறட்சி காலத்தில் பயிர்களுக்கு இதில் சேமிக்கப்பட்டிருக்கும் நீரை பயன்படுத்தியுள்ளனர்.சில நேரங்களில் இதே குழிகளில் விவசாய கழிவுகளை மக்க வைத்து உரமாக மாற்றி இயற்கை உரமாக பயிர்களுக்கு அளித்து நல்ல மகசூலையும் பெற்று வந்துள்ளனர்.

வேளாண்மையின் உயிர்நாடிகள்
போதிய நீரும், வளமான மண்ணும் வேளாண்மையின் உயிர் நாடி ஆகும். புவியியல் அமைப்பு அடிப்படையில் தமிழகம் மிகக் குறைந்த நிலத்தடி நீரை கொண்டதாக இருக்கிறது. மழைநீரை நம்பித்தான் பெரும்பாலான விவசாயிகள் பயிர் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. பொதுவாக, மானவாரி நிலங்களில் மழைநீரை சேமித்து பயிர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. மேலும், அதிக மழை பொழியும் காலங்களில் நிலத்தில் விழுந்து ஓடும் மழைநீரும் அதனால் ஏற்படும் மண்அரிமானமும் மண்ணின் வளத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி வழிந்து ஓடும் நீரை கட்டுப்படுத்த வயல் தோறும் ஒரு பண்ணைக்குட்டையை அமைக்கலாம். குறிப்பிட்ட நீள, அகல மற்றும் ஆழத்தில் அமைக்கப்படும் இந்த அமைப்பில் மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம் பயிரிடப்படும் நிலங்களில் மண் அரிப்பை தடுக்கலாம்.

எருக்குழி
மழை பெய்யும் போது, நிலத்தில் வழிந்தோடும் நீரால் பயிரிடப்படும் மண்ணில் உள்ள சத்துக்கள் நீரால் அரித்து செல்லப்படும். அப்போது அந்த மண்ணில் பயிரிட தேவையான சத்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். அப்போது, நிலத்தில் மக்கு மற்றும் தொழுஉரங்களை இட்டு மீண்டும் மண்ணில் பயிர் செய்வதற்கான போதிய சத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. 

பொதுவாக, இது போன்ற நிலைகளில் விவசாயிகள் அவசர நிலை கருதி நன்கு மக்காத எருவை வயலில் இடுவார்கள். அப்போது, அந்த மக்காத எருவில் இருக்கும் களைவிதைகளும் நிலத்தில் விழுந்து முளைக்க தொடங்குகின்றன. இந்த நிலையில் முக்கிய பயிரை சாகுபடி செய்யும் போது அதனுடன் சேர்ந்து நிலத்தில் முளைத்திருக்கும் களைகளும் உணவுக்கும், ஊட்டச்சத்திற்கும் போட்டி போடுகின்றன. இதனால் மகசூல் குறைகிறது. 

நீடித்த நவீன கரும்பு சாகுபடி