Thursday, July 9, 2015

உயிர் உரங்களின் பயன்கள் - Benefits of Bio- Fertilizers

தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் உரங்களை இட்டு உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து மேல்புறம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் தமிழ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 • தென்னை, ரப்பர் மரங்களுக்கு வேர் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்அசோஸ்பைரில்லம்பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் இட்டு மகசூல் அதிகம் பெறலாம்.
 • ஆனி, ஆடி சாரல் மழையைப் பயன்படுத்தி ரப்பர், தென்னை மரங்களுக்கு ரசாயன உரத்துடன் தொழு உரம் இடும் பழக்கம் மேல்புறம் வட்டாரப் பகுதியில் உள்ளது. பாதை வசதி இல்லாத மலைகளில் உள்ள தோட்டங்களுக்கு அதிக எடை கொண்ட ரசாயன உரம் மற்றும் தொழு உரத்தை கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான பணியாகும். அதிகமாக கூலி ஆள்கள் தேவைப்படுவதால் செலவும் அதிகமாகும்.
 • குறைந்த எடை கொண்ட உயிர் உரங்கள் மூலம் உரமிட்டால் அதிகச் செலவை தவிர்க்கலாம்.
 • பயிருக்குத் தேவையான தழைச் சத்தை அசோஸ்பைரில்லம் மூலமாகவும், மணிச்சத்தை பாஸ்போபாக்டீரியா என்னும் உயிர் உரமாகவும் இடலாம்.
 • அசோஸ்பைரில்லம் உயிர் உரம், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் சேர்ப்பதுடன் பயிர் ஊக்கிகளை வெளியிட்டு பயிர் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
 • உயிர் உரங்கள் இடப்பட்ட பயிர்கள் அதிக வேர் கிளைகளுடன் வளர்ந்து அதிகப்படியான நீர் மற்றும் உரச்சத்தை பயிர் கிரகிக்கச் செய்யும். இதனால் பயிர் வளர்ச்சி அதிகரிக்கும்.
 • ரசாயன உரங்கள் இடுவதால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதுடன் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் இயக்கத்தையும் தடுத்துவிடும். எனவே உயிர் உரங்கள் மூலம் மரப்பயிர்களுக்கு உரமிடுவது சிறந்தது.
 • மரம் ஒன்றிற்கு 50 மில்லி அசோஸ்பைரில்லம் மற்றும் 50 மில்லி பாஸ்போபாக்டீரியா உரத்தை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒரு வார காலம் நிழலில் வைத்திருந்து இடவேண்டும்.
 • விவசாயிகளுக்குத் தேவையான உயிர் உரங்கள் மேல்புறம் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை வாங்கி பயன்பெற விவசாயிகள் முன்வர வேண்டும் என்றார் அவர்.

கன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை - Things to look out for the birth of calves

 • கன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும். அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும்.
 • வைக்கோலை கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம்.
 • மூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும்.
 • பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலை கொண்டு கத்திரித்து விட வேண்டும். கத்திரித்த இடத்தில் உடனே “டிஞ்சர்’ அயோடின் தடவி விட வேண்டும்.

சீம்பால்:
 • பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
 • கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் “இம்முனோ கிளாபுலின்’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன.
 • பொதுவாக கன்றுக்குட்டிக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும்.
 • கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில் நோய் உண்டாகலாம்.
 • அப்போது இதர பசுக்களின் சீம்பால் அளிக்கலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட பொருட்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்கலாம். முட்டை 1 (55 – 60 கிராம்), தண்ணீர் 300லி, விளக்கெண்ணெய் 12 தேக்கரண்டி, பால்500மிலி.
தகவல்:வெ.மீனலோசனி, இரா.அன்னல்வில்லி, இரா.ஜோதிப்ரியா, கால்நடைப்பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி635 001.

கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கான சிக்கல்களைத் தவிர்க்கும் வழிமுறைகள் - Instructions to avoid problems for the dairy cows calving

கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று ஈரோடு கால்நடை மருத்துவப் பல்கலைப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியை நா.வீ.கவிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்று ஈன்ற கறவை மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குதல் மற்றும் கருப்பை வெளித்தள்ளுதல் ஆகிய இரண்டு முக்கிய சிக்கல்கள் உருவாகின்றன.

நஞ்சுக்கொடி:
 • மாடுகள் சினையாக இருக்கும்போது கருப்பையினுள் வளரும் சிசுவுக்கு தேவையான உணவு மற்றும் பிராண வாயுவை அளிப்பதுடன் சிசுவின் கழிவுப்பொருள்களை அகற்றும் உறுப்பாக செயல்படுவது நஞ்சுக்கொடி ஆகும். பொதுவாக கன்று ஈன்ற 3 முதல் 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி தானாகவே வெளித்தள்ளப்பட்டு விழுந்துவிடும். இதற்கு மேலும் அதாவது 8 முதல் 12 மணி நேரம் கழிந்தும் கூட நஞ்சுக்கொடி விழாமலிருந்தால் அதனை உடனடியாக கவனிக்க வேண்டும்.
 • சில விவசாயிகள் கன்று ஈன்ற மாடு நஞ்சுக்கொடி போடும் வரை பாலில் நச்சுத்தன்மை இருக்கும் என நினைத்துக்கொண்டு சீம்பாலினைக் கறக்காமல் இருப்பர். இது அறிவியல் ரீதியாக உண்மையல்ல. மாறாக கன்றினை பால் குடிக்க விடுவதால் அல்லது பாலினைக் கறப்பதால் ஈன்ற மாடுகளின் நாளமில்லாச் சுரப்பிகள் தூண்டப்பட்டு கருப்பை சுருங்கி விரியும். இதனால் நஞ்சுக்கொடி தானாகவே விழும் வாய்ப்புள்ளது.
 • சிலர் தொங்கிக் கொண்டிருக்கும் நஞ்சுக்கொடியை விழ வைப்பதற்காக அதை ஒரு குச்சியைக்கொண்டு சுற்றி இழுப்பார்கள் அல்லது அதில் ஒரு கல்லைக் கட்டி விடுவர். இவ்வாறு செய்வதால் நஞ்சுக்கொடியானது முழுமையாக பிரிந்து வராமல் மாட்டிற்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் பகுதி மட்டும் அறுந்து விழுந்துவிடும். மீதம் உள்ள பகுதி கருப்பையின் உள்ளேயே தங்கி நோயை உருவாக்கும்.
 • அடுத்து கன்று ஈன்றவுடன் மாடுகளுக்கு மூங்கில் இலை அல்லது வெண்டைக்காய் அல்லது சந்தனம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுப்பது வழக்கத்தில் உள்ளது. மூங்கில் இலை மற்றும் வெண்டைக்காயில் கருப்பையைச் சுருங்கி விரியச் செய்யக்கூடிய வேதிப்பொருள் உள்ளது. இது கருப்பையைச் சுருங்கி விரியச் செய்வதால் நஞ்சுக்கொடி தானாகவே பிரிந்து விழ வாய்ப்புள்ளது.
நஞ்சுக்கொடி தங்கியுள்ள மாடுகளில் காணப்படும் அறிகுறிகள்:
 • கன்று ஈன்று 8 மணி நேரத்திற்கு பின்பும் நஞ்சுக்கொடி தங்கியிருக்கும் மாடுகளில் காய்ச்சல், சோர்வு, தீவனம் உண்ணாமை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
 • கன்று ஈன்ற 24 மணி நேரம் கழிந்த பின் நஞ்சுக்கொடி அழுக ஆரம்பித்து துர்நாற்றம் அடிக்கும். அறையின் வெளிப்புறத்தில் ஈக்கள் மொய்க்கும். பால் உற்பத்தி குறைந்து விடும்.
 • சிவப்பான நீரைப்போன்ற திரவம் மிக அதிக அளவில் துர்நாற்றத்துடன் காணப்படும். இது ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்து விட்டதைக் குறிக்கும். நஞ்சுக்கொடி தொங்கிக் கொண்டிருக்கும்போது மாடு கீழே படுப்பதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும்.
 • நஞ்சுக்கொடிதானே என நினைத்து தகுதியற்றவர்களைக் கொண்டு எடுக்க முற்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவர்கள் கருப்பையில் உள்ள முடிச்சுகளை முறையாகப் பிரித்து எடுக்காமல் நஞ்சுக்கொடியை வெறுமனே பிடித்து இழுப்பார்கள். இதனால், கருப்பை முடிச்சுகள் அறுந்து ரத்தக் கசிவு ஏற்படும்.
கருப்பை வெளித்தள்ளுதல்:
 • கருப்பை வாய் தள்ளுதல், உறுப்புத் தள்ளுதல், அடி தள்ளுதல், சவுரி தள்ளுதல், நாய்த்தலை படுதல், சொவரொட்டி தள்ளுதல் எனப் பல்வேறு பெயர்களில் கருப்பை வெளித்தள்ளுதல் அழைக்கப்படுகிறது. கருப்பை வெளித்தள்ளுதலுக்கு முக்கியக் காரணம் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சில பசுக்களில் அதிக அளவில் சுரப்பதேயாகும். இதன் காரணமாக இடுப்புப் பகுதிச் சதைகள் மற்றும் கருப்பையின் பாகங்கள் தளர்ந்து போய்விடுகின்றன.
 • இந்த தளர்ச்சியின் காரணமாக முதலில் கருவறை சற்று வெளியே தெரிகிறது. இவ்வாறு வெளியே தள்ளப்பட்ட கருப்பையின் வாயை நுண்ணுயிரிகள் தாக்கும்போது இந்த மென்மையான உறுப்பிற்கு ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது. இந்த எரிச்சலின் காரணமாக கருப்பையானது மேலும் வெளித்தள்ளப்படுகிறது.
முதலுதவி சிகிச்சைகள்:
 • வெளித்தள்ளப்பட்ட கருப்பையினை உடல்மட்டத்திற்குச் சிறிது மேலே தூக்கிப் பிடித்தால் சிறுநீர் வெளியேற வாய்ப்புண்டு. மேலும் இவ்வாறு செய்வதால் கருப்பை வீங்கிப்போவதையும் தடுக்கலாம். மருத்துவரிடம் கொண்டு செல்லும் வரையோ அல்லது மருத்துவர் வரும் வெளித்ள்ளப்பட்ட கருப்பையினை முடிந்த வரை ஈரத்தன்மையுடன் இருக்கச் செய்ய வேண்டும்.
 • அதற்குச் சுத்தமான ஈரத்துணியை கருப்பையின் மேலே போட்டு மூடிவைக்க வேண்டும். துணி காயக் காய சுத்தமான குளிர்ந்த நீரினை ஊற்ற வேண்டும்.
 • தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரல்லாத மற்ற நபர்களைக் கொண்டு வெளித்தள்ளப்பட்ட உறுப்புக்களை மீண்டும் உள்ளே தள்ள முயற்சிக்கக் கூடாது.
 • கையால் அமுக்கவோ, அடிக்கடி கருப்பையினைத் தொட்டுப் பார்ப்பதோ கூடாது.கூடுமான வரையில் மாடு முக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு மாட்டிற்கு ஏதாவது உண்ணக் கொடுத்தோ அல்லது சிறிதளவு சமையல் உப்பினை மாட்டின் நாக்கில் தேய்த்துவிட்டோ மாடு அசைபோடும்படி செய்தால் மாடு முக்காமல் இருக்கும்.
 • மாட்டின் கீழ்தாடையில் வைக்கோல் பிரி அல்லது கயிற்றினைக் கட்டி விட்டாலும் மாடு அசைபோட்டுக் கொண்டு முக்காமல் இருக்கும்.
நோய்குறியீடு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்:
 • இக்கருப்பை வெளித்தள்ளுதல் தாது உப்புகள் மற்றும் சத்துக்கள் குறைவினாலும் ஏற்படும். ஆகவே சினைக்காலத்தில் பசும்புல் அளிப்பது அவசியம். நிறை சினைக் காலத்தில் மாடுகளுக்குத் தீவனத்தினை ஒரே வேளையில் அதிக அளவு அளிக்காமல் 3 அல்லது 4 பகுதியாகப் பிரித்து அளிக்க வேண்டும்.
தொழுவத்தில் மாடுகள் நிற்கும் இடம் முன்னோக்குச் சரிவு கொண்டதாக அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தியில் சுகாதாரம் பேணுவது எப்படி? (Paal Urpathiyil Sugaadhaaram) - Milk Production

பால் உற்பத்தியில் சுகாதாரமும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ள நிலையில், அதைப் பின்பற்றும் எளிய முறைகள் குறித்து கால்நடை பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் ச.சரஸ்வதி, ப.ராஜேஷ்குமார், ஆர்.ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்த யோசனைகள்:


பால் கறக்கும் முறை:
 • பசுக்கள்இடப்பக்கத்திலிருந்தே பால் தரும் இயல்புடையவை. இவற்றின் மடியில் பால் கறக்கும்போது முன்னிரு, பின்னிரு காம்புகளிலோ அல்லது பக்கங்களில் உள்ள காம்புகளிலோ இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கறப்பது நல்லது.
 • முதல் சில துளிகளை பாத்திரத்தில் விடாமல் பீய்ச்சிக் கீழே விட்டுவிட வேண்டும். இத்துளிகளில் அதிகமாக பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
 • இரு விரல்களை பயன்படுத்தியோ, முழு விரல்களையும் பயன்படுத்தியோ பால் கரக்கலாம். இரு விரல் முறையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து சிறிது அழுத்தம் தந்து கீழே இழுப்பதன் மூலம் பால் கறக்கலாம். முழு விரல்களைப் பயன்படுத்தும்போது, ஒரு கை விரல்களால் காம்பினைப் பிடித்து உள்ளங்கையின் மீது அழுத்துவதால் கன்றுக்கு ஊட்டுவது போல் எல்லாப் பக்கமும் ஒரே அழுத்தம் ஏற்பட்டு பால் கறக்கும்.
 • இருவிரல் முறையில் ஒரே அழுத்தம் கிடைக்காது என்பதால் காம்பின் மேல்பாகம் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காம்புகள் மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே இருவிரல் முறையைப் பயன்படுத்துவது நல்லது. மிக முக்கியமாக ஈரமான கைகளால் பால் கறப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 சுத்தமான பால்:
 • பசுவின் மடியில் அதிகம் அழுக்கு சேரும். எனவே பால் கரப்பதற்கு முன் மடியை நன்றாக கழுவ வேண்டும். பால் காம்புகளும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். முடிந்தால் நல்ல துணி மூலம் கழுவிய மடியை துடைப்பதும் நல்லது. ஒருமுறை பயன்படுத்தும் கைதுடைப்பு காகிதங்களை பயன்படுத்துவது சிறந்தது.
 •  பால் கறக்கும்போது உரோமங்கள் பாலில் விழுவதைத் தவிர்க்க அவ்வப்போது குளிப்பாட்டும்போது நன்கு தேய்த்து உடலில் உதிரும் ரோமங்களை அகற்ற வேண்டும். மாட்டுச் சாணத்தால் ஈக்கள் மொய்க்கும்.
 •  எனவே மாட்டுத் தொழுவம் அவ்வப்போது கிருமிநாசினியால் கழுவப்படுவதன் மூலம் அப்பகுதி சுகாதாரத்தைப் பேண முடியும். முக்கியமாக பால் கரக்கும் பாத்திரம் ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். கொதிக்கும் நீரை பால் கறக்கும் பாத்திரத்தில் ஊற்றினால் 2 நிமிடத்தில் பாத்திரத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து பாத்திரம் சுத்தமாகிவிடும்.
 •  இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் பாலில் பாக்டீரியாக்களின் பாதிப்பை தவிர்த்து சுத்தமான பாலை நுகர்வோருக்கு அளிக்க முடியும். பால் கெடாத தன்மை நீண்டநேரம் நீடிக்கும்.
 • மாடுகளுக்கும், தொழுவம் முழுவதும் அவ்வப்போது சாம்பிராணி போடுவதன் மூலம் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க முடியும்.
 • மாட்டுத் தொழுவத்தின் மிக அருகே தண்ணீர் தேங்கினால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். எனவே மாட்டுத் தொழுவம் சற்று மேடான இடத்தில் அமைவது நல்லது.
 • பால் கறக்கும்போது மணம் வீசும் தீவனங்களை மாடுகளுக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் பாலில் அந்த வாடை எளிதில் தொற்றிக் கொள்ளும்.
 மனித சுகாதாரம்:
 • மாடுகளை பராமரிப்போர், பால் கறப்போர் காச நோய், டைஃபாய்டு, டிப்தீரியா போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக மாடுகளிடம் நெருங்கக் கூடாது. இது மாடுகளுக்கும், சுகாதாரமான பால் கறவைக்கும் நல்லது.
 • பால் கறப்பவர்கள் கண்டிப்பாக விரல் நகங்களை வெட்டி, விரல் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 பால் பாத்திரங்கள்:
 • பால் கறவை, பால் சேமிப்புக்கான பாத்திரங்கள் இடுக்குகள், மடிப்புகள் இன்றி எளிதில் தூய்மை செய்யக் கூடிய வகையிலான அமைப்பில் இருக்க வேண்டும்.
 • அயோட்போர் போன்ற ரசாயனக் கலவை மூலம் அடிக்கடி இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதும் அவசியம். பாலைக் கறந்ததும் அதை மிதமான வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதிக வெப்பநிலை உள்ள இடத்தில் வைத்தால் எளிதில் கெட்டுவிடும்.