Thursday, December 8, 2016

ஆட்டு பண்ணைகளில் பொலி கிடாக்களின் முக்கியத்துவம்

விவசாயிகள் நல்ல தரமான ஆட்டு பண்ணையை உருவாக்க பண்ணையில் சிறந்த பொலிகிடாக்களை பராமரிப்பது அவசியமானது.

தரமான ஆடுகள்
ஆட்டு பண்ணைகளின் லாபம் என்பது அங்கு வளர்க்கப்படும் தரமான, ஆரோக்கியமுள்ள ஆடுகளை சார்ந்து இருக்கின்றது. தரமுள்ள ஆடுகளை உருவாக்க பெரிதும் துணை புரிவது அந்த பண்ணையில் உள்ள ஆரோக்கியமான பொலி கிடாக்களும், பெட்டை ஆடுகளுமே ஆகும். நல்ல தரமான ஆட்டு குட்டிகள் தொடர்ந்து கிடைப்பதற்கு நல்ல பெட்டை ஆடுகளும், தரமான பொலி கிடாக்களும் மிகவும் அவசியம் ஆகும். குறிப்பாக, நல்ல பொலிகிடாக்கள் நல்ல குட்டிகள் உருவாவதில் 80 முதல் 90 சதவிகிதம் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, நல்ல பொலி கிடாக்களை தேர்வு செய்வதும் பராமரிப்பதும் மிகவும் அவசியம்.
பொலி கிடாக்கள் தேர்வு
விவசாயிகள் புதிய பண்ணை தொடங்கும் போது கிடாக்களை வேறு பண்ணைகளில் இருந்தோ அல்லது சந்தையில் இருந்தோ வாங்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் குட்டிகள் நோயினால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது. அதே போல் தேர்ந்தெடுக்கும் கிடாக்கள் காய்ச்சல், நுரையீரல் நோய்கள், வயிற்று உப்புசம், கண்வலி, வாய்ப்புண், கால்புண் மற்றும் இனப்பெருக்க உறுப்பு போன்ற நோய் அறிகுறிகள் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஆண் தன்மை, பிரகாசமான கண்கள் மற்றும் ஆரோக்கிமான தோல் உடைய ஆடுகளை வாங்க வேண்டும். பொலி கிடாக்களை வாங்கும் பொழுது தரமான இனப்பெருக்க உறுப்புகள் உள்ளவற்றை வாங்க வேண்டும்.
பொதுவாக, கிடாக்களில் நன்றாக வளர்ச்சியடைந்த இரண்டு விரைகளும் ஒரே அளவில் இருக்கும்படியான ஆடுகளை தேர்வு செய்ய வேண்டும். இரண்டு விரைகளும் விரைப்பையில் இறங்காத ஆடுகளை தவிர்க்க வேண்டும். ஆடுகளில் விதைப்பையின் சுற்றளவு 25 முதல் 35 செ.மீ இருக்க வேண்டும். கால்கள் மற்றும் பாதங்கள் உறுதியானதாக இருக்க வேண்டும். விவசாயிகள் சொந்த பண்ணையில் உள்ள ஆடுகளின் இனத்திற்கு ஏற்ப ஒரே இனத்தை சேர்ந்த வயது வந்த கிடாக்களையே தேர்வு செய்ய வேண்டும். பொதுவாக, 8 முதல் 10 வயதுடைய கிடாக்கள் சினைக்கு விடத் தகுதியானவை. ஆனால், ஒரு ஆண்டு வயதுடைய ஆடுகளை சினைக்கு அனுமதிக்கலாம். ஆடுகளை சினைக்கு 6 வயது வரை பயன்படுத்தலாம். இனப்பெருக்கத்திற்கு தேவையான கிடாக்களை அவை குட்டிகளாக இருக்கும் பொழுது தேர்வு செய்வதுடன், தாயிடம் இருந்து பிரித்த பிறகு 3 மாத எடையின் படி அதிக எடை உடைய குட்டிகளை தேர்வு செய்யலாம்.

ஆடுகளில் நோய் பராமரிப்பு

ஆண்டுக்கு 4 முறை தடுப்பூசிகள் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அளிக்க வேண்டும்.
  1. மார்ச் ஏப்ரல் மாதங்களில் கால் வாய் நோய்க்கான தடுப்பூசி
  2. ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பி பி ஆர் தடுப்பூசி
  3. ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி
  4. அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும்.
  5. குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2, 3, 4, 6, 9வது மாதங்களில் போட வேண்டும்.
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவு.
குடற்புழு நீக்க அட்டவணை
ஆடுகளின் வயது
பரிந்துரைகள்
2வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
3வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
4வது மாதம்
நாடாப்புழுக்களுக்கான மருந்து
5வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
6வது மாதம்
உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
9வது மாதம்
உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12வது மாதம்
தட்டைப் புழுக்களுக்கான மருந்து
ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்கவேண்டும்.
மாதம்
பரிந்துரைகள்
ஜனவரி - மார்ச்
தட்டைப்புழுவிற்கான மருந்து
ஏப்ரல் - ஜீன்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜீலை - செப்டம்பர்
தட்டைப் புழுவிற்கான மருந்து
அக்டோபர் - டிசம்பர்
உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை.
  1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தைத் தேர்வு செய்யவேண்டும்.
  2. தூள் மருந்தைப் பயன்படுத்தும் பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
  3. அதிகாலையில், வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
  4. மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக கலந்துக் கொடுக்கக்கூடாது.
  6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் அறிந்து மருந்து கொடுப்பது சிறந்தது.
  7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.

மடிநோய் / மடிவீக்க நோய்

மடி நோய் என்றால் என்ன ?

மடிநோய் என்பது பராமரிப்பு சம்பந்தப்பட்ட நோய்
கிருமிகளின் தாக்குதலால் மடிவீக்க நோய் வருகிறது
எப்படி பரவுகிறது ?
- சுத்தமின்மை
¨ சுத்தமில்லாத கட்டுத்தரை /தொழுவம்,
¨ சுத்தமில்லாத கறவையாளர் கைகள்
¨ சுத்தமில்லாத மடி / காம்பு ஆகியவற்றின் மூலமாக மடி நோய் வரும்

எதனால் வருகிறது ?

பால் கறந்த பின் மடி காம்பின் துவாரம் ஒரு மணி நேரம் வரை திறந்து இருக்கும் , அச்சமயத்தில் பசு கிழே அமர்ந்தால் கிருமிகள் காம்பு துவாரம் மூலமாக கிருமிகள் உட்புகுந்து மடி நோய் வரும்.
காரணிகள்
  • பலவகையான கிருமிகளால் மடிநோய் வரக்கூடும்
  • பாக்டீரியா , வைரஸ் ,பாசி ஆகிய அனைத்து வகையான கிருமிகளால் மடிநோய் வரும்.

தடுப்பு முறைகள்

சுத்தமான பால் உற்பத்தியின் மூலம் மடிநோயை தவிர்க்கலாம்
சுத்தமான கட்டுத்தரை / கொட்டகை
¨ ஒருநாளுக்கு இருமுறை கட்டுதரையை சுத்தம் செய்யவேண்டும்
¨ மாட்டின் சாணம் மற்றும் கோமியம் கட்டுதரையில் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் .
¨ கட்டுதரையில் சுண்ணாம்பு மற்றும் ப்ளீசிங் பவுடர் தெளிப்பதன் மூலம் கிருமிகளின் பெருக்கத்தை கட்டுபடுத்தலாம்
சுத்தமான கறவைமாடு
¨ கறவை மாடுகளை தினமும் சுத்தபடுத்துதல் நல்லது (அ) இருநாட்களுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தலாம் .
¨ கறவை மாடுகளின் கால் / தொடை /மடி/காம்புகளில் சாணம் இருந்தால் பால் கறப்பதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டும்
¨ சுத்தமானநீர் (அ) வெந்நீர் (அ) Kmnoபயன்படுத்தலாம்
சுத்தமான கறவையாளர் கைகள்
  • பால் கறவையாளர் பால் கறப்பதற்கு முன்பு தன் இரு கைகளையும் சுத்தமாக கழுவிய பின்னரே பால் கறக்க வேண்டும்
  • கறவை இயந்திரம் பயன்படுத்தினால் இயந்திரத்தை சுத்தமாக கழுவிய பின்னரே பால்கறக்க வேண்டும்
  • KMno4 /சோப்பு பயன்படுத்தலாம்.

பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 சாகுபடி முறை

பசுந்தீவனச் சோளம்

  • நல்ல சத்துள்ள, தரமான பசுந்தீவனங்கள் போதிய அளவிலும், சரி விகிதத்திலும் கிடைக்காததே கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவதற்கு முக்கியக் காரணமாகும்.
  • இதனைக் கருத்தில் கொண்டு பசுந்தீவனச் சோளம் (கோ.எப்.எஸ். - 31) பயிரிட்டு கால்நடைகளுக்கு வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்கிறது.
  • பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 ரகத்தின் சிறப்பியல்புகள்: அதிக கிளைக்கும் திறன் கொண்டது. அகலமான இலைகள், கதிர்களில் இருந்து மணிகள் கொட்டாமல் இருக்கும் தன்மை கொண்டது.
  • அதிக புரதச்சத்து (9.86 சதவீதம்) கொண்டதும், அதிக பசுந்தீவன உற்பத்தி கொண்டதுமாகும்.
  • அதாவது 1 ஹெக்டேருக்கு 1 ஆண்டில் 190 டன் என்ற அளவில் அறுவடை செய்யலாம். மறுதாம்பு பயிருக்கு ஏற்றது. சுவையான பசுந்தீவனமாகும். கால்நடைகள் இவற்றை விரும்பி உண்கின்றன.
சாகுபடி தொழில்நுட்பம்
  • இந்த பசுந்தீவனப் பயிரை ஆண்டு முழுவதும் எல்லா மண் வகைகளிலும் பயிரிடலாம்.
  • நிலத்தை இரும்புக் கலப்பைக் கொண்டு 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பிறகு 1 ஏக்கருக்கு 10 டன் என்ற அளவில் மக்கிய தொழு உரம், 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பால்போ பாக்டீரியா கலந்து இட வேண்டும்.
  • பின்னர், 2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 6 மீட்டர் நீளமும், 60 செ.மீ. இடைவெளியும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.
  • மண் பரிசோதனையின் அடிப்படையில் உரங்கள் இட வேண்டும்.
  • மண் பரிசோதனை செய்யாவிடில் ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 8 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
  • மேலுரமாக விதைத்த 25 நாள்கள் கழித்து 12 கிலோ தழைச்சத்து போட வேண்டும்.
  • மறுதாம்புப் பயிரில் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் 18 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
  • 4-ஆவது அறுவடையின் போது ஏக்கருக்கு 18 கிலோ தழைச்சத்துடன் 16 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்தையும் இடுவது நல்லது.
  • ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை பாத்திகளின் இருபுறமும் விதைக்க வேண்டும்.
  • விதைக்கு விதை இடைவெளி 10 முதல் 15 செ.மீ. இருக்க வேண்டும். விதைத்த 20 நாள்கள் கழித்து களை எடுக்க வேண்டும்.
  • தேவைப்பட்டால், 35 முதல் 40-ஆவது நாளில் அடுத்த களை எடுக்கலாம்.

நீர் மேலாண்மை

  • நீர் மேலாண்மையைப் பொருத்தவரை விதைத்தவுடன் ஒரு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.
  • 3-ஆவது நாளில் உயர் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

  • பொதுவாக பயிர் பாதுகாப்பு தேவையில்லை. விதை உற்பத்திக்காக பயிர் செய்தால், குருத்து ஈ காணப்பட்டால் விதைத்த 10-ஆவது நாளில் புரபனோபாஸ் 300 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பசுந்தீவன அறுவடைக்கு 30 நாள்களுக்கு முன் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.

தீவனச் சோளம் கோ எஃப், எஸ் 29, கோ 31 சாகுபடி முறை

விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம்.


பருவம்

இறவைப் பயிராக ஜனவரி - பிப்ரவரி, ஏப்ரல் - மே மாதங்களில் தீவனச் சோளம் பயிரிட உகந்த மாதங்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரிப் பயிராக ஜூன் - ஜூலை, செப்டம்பர் - அக்டோபர் மாதங்களிலும் அனைத்து மாவட்டங்களில் பயிரிடும் வாய்ப்புள்ளது.
ரகங்கள்
கோ எஃப், எஸ் 29, கோ 31 (மறுதாம்பு சோளம்) ரகங்கள் சிறந்தவை. தீவனச் சோளத்துடன் கோ 5, கோ எஃப் சி 8 ரக தட்டைப்பயறு சேர்த்து ஊடுபயிராகப் பயிரிட்டால் சத்தான தீவனம் பெறலாம்.

சாகுபடிக் குறிப்புகள்

தீவனச் சோளம் கோ 31 ரகத்தை ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிரிடலாம். ஒருமுறை விதைத்து பலமுறை அறுவடை செய்யலாம்.
நிலம்
நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும்போது 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். உழும் முன்பு ஹெக்டேருக்கு 25 டன் தொழுவுரம் இடுதல் அவசியம்.
விதையளவு
ஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதும். 30-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும். விதை உற்பத்தி செய்ய 60-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

  • அடியுரமாக தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை 45: 40: 40 என்ற விகிதாசாரத்தில் இட வேண்டும்.
  • விதைத்த 30-ஆவது நாளில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வோர் ஆண்டு முடிவுக்குப் பிறகு 45: 40: 40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டியது அவசியம்.

கோடைக்கலத்திற்கேற்ற கால்நடைநோய்த் தடுப்புமுறைகள்

கோடைக்காலங்களில் கால்நடை மற்றும் கோழியினங்களுக்குச் சரியான பசுந்தீவனம் மற்றும் போதுமான குடிநீர் கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் கால்நடைகளை, அதிகவெப்பத்தின் காரணமாகக் கொட்டிலில் அடைத்து வளர்க்கும் சூழல் ஏற்படுகிறது. இச்சூழல் காரணமாகக் கொட்டிலில் உள்ள சுகாதாரம் மற்றும் காற்றின் தரம் ஆகியவை கால்நடைகளின் நலனில் பெரும் பங்குவகிக்கின்றன. கறவை மாட்டினங்கள் மற்றும் எருமை இனங்களில் கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப உளைச்சல் காரணமாகக் கறவை திறன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பன்றி மற்றும் கோழியினங்கள் போன்ற உற்பத்திசார் தொழில் முறைகளுக்காக வளர்க்கப்படும்.
கால்நடைகளை வெப்ப உளைச்சல் பெரிதளவில் பாதிக்கிறது. கோடைக்காலப் பிரச்சினைகளான அதிகவெப்பமும் மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவற்றைச் சரியான முறையில் கையாண்டு கால்நடைகளின் உற்பத்திதிறனை மேம்படுத்துவதற்கான மேலாண்மை முறைகள் இங்குத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

கோடைக் காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய நோய்கள்

கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்கள்
அடைப்பான் நோய்
கால்நடைகளில் விரைவில் மரணத்தை விளைவிக்கும் அடைப்பான் நோய் பேசில்லஸ் அந்தராசிஸ் எனும் நுண்ணுரியால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் உடல் துவாரங்களில் இருந்து இரத்தக் கசிவு ஏற்படுவதைத் தொடர்ந்து உடனடி மரணம் ஏற்படும். இவ்வாறாக இறந்த கால்நடைகளின் மூலம் இந்நோய் அதிக அளவு பரவ வாய்ப்புள்ளதால், இவற்றை உடனடியாக ஆழ்குழியில் 10 லி சுண்ணாம்பு (அல்லது) சலவை சோடா கரைசலைத் தெளித்துப் புதைத்துவிட வேண்டும். இறந்த கால்நடைகளில் அருகாமையில் இருந்து பிற கால் நடைகளுக்கு முறையான தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.
கோமாரிநோய் (கால்வாய் நோய்)
கோமாரிநோய் மாட்டினங்களை அதிகம் பாதிக்கின்றது. எருமை, வெள்ளாடு, செம்மறியாடு ஆகியவற்றை இந்நோய் பாதித்தாலும் இவற்றில் நோய்க்கான அறிகுறிகள் குறைந்த அளவிலேயே வெளிப்படுகின்றன. இந்நோயால் அதிக அளவில் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. ஆண்டிற்கு இரு முறை இந்நோய்க்கான தடுப்பூசியைக் கால்நடைகளுக்கு கட்டாயம் அளிக்கவேண்டும். இந்நோயின் அறிகுறிகளாகக் கால்நடைகளில் வாய், நாக்கு மற்றும் கால் குளம்பு பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்படும். கொட்டகைகளில் 10 லி சலவைசோடா அல்லது 0.2 லி சிட்ரிக் அமில கரைசல் ஆகியவற்றைத் தெளிப்பதன் மூலம் நோய் பரவுதலைக் தடுக்கலாம்.
அம்மைநோய்
அம்மை நோயானது மாடு, எருமை, ஆடு மற்றும் கோழியினங்களை தாக்கும்.  நோய்த்தாக்கம் ஏற்பட்ட கால்நடைகளில் காய்ச்சலுடன் சிறுகொப்புளங்கள் காம்புப் பகுதிகளிலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் ஏற்படும். பாதிக்கப்பட்ட மாடுகளை மந்தையில் இருந்து உடனடியாகப் பிரித்துத் தனியாகப் பராமரிக்க வேண்டும். வேப்ப எண்ணெயுடன் மஞ்சள் கலந்து புண்களின் மீது தடவுதலின் மூலம் இந்நோய், ஈக்கள் மூலம் பிறமாடுகளுக்குப் பரவுவதையும் இதர நோய்க்கிருமிகள் தாக்கத்தையும் தவிர்க்கலாம்.

Wednesday, December 7, 2016

கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை சைலேஜ் – ‘தீவன ஊறுகாய்’

கோடைக்காலத்தில் ஏற்படும் பசுந்தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க பசுந்தீவனம் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அதனை ஊறுகாய்ப் புல்லாக மாற்றி சேமித்து வைப்பதன் மூலம் கோடைக்காலங்களில் பசுந்தீவனமாகப் பயன்படுத்தலாம். மர இலைகளைத் தீவனமாகக் கொடுக்கலாம்.
ஊறுகாய்ப்புல் என்றால் என்ன? எவ்வாறு தயார் செய்வது?
பசும்புல்லினைப் பசுமை மாறாமல் காற்றுப்புகாத சூழலில் நொதித்தல் முறையில் சேமித்து வைக்கும் முறையே ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறையாகும்.  இம்முறையில் ஒரு பாலித்தீன் பையினுள் பசும்புல்லானது சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு வெல்லப்பாகுக் கரைசல், உப்புக்கரைசல் மற்றும் யூரியாக் கரைசல் தெளிக்கப்பட்டுக் காற்று இல்லாத அளவிற்குப் புல்லினை நன்கு அழுத்தி பாலித்தீன் பையினை இறுகக் கட்டிவிட வேண்டும். கட்டப்பட்ட பையினை 21-28 நாள்கள் திறக்காமல் வைத்துவிடவேண்டும். இந்த 28 நாள்களில் பசும்புல்லானது ஊறுகாய்ப்புல்லாக மாறிவிடும்.  பாலித்தீன் பையினை 28 நாள்களுக்கு பிறகு திறக்கும்பொழுது பசும்புல் பொன் நிறமாக மாறி இருக்கும். மேலும், பழவாசனை புல்லிலிருந்து வரும், ஊறுக்காய்ப்புல் தயாரிப்பது குறித்த விரிவான செயல்முறையினை அருகிலுள்ள கால்நடை மருத்துவர் அல்லது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின விரிவாக்க மையங்களை அணுகித் தெரிந்து கொள்ளலாம்.
கறவைமாடுகளுக்குக கோடைக்காலம் மற்றும் குளிர்க்காலம் ஆகியவற்றில் ஓரே மாதிரியான தீவனங்களை கொடுக்கலாமா?
கறவைமாடுகளுக்குக் கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் ஓரே மாதிரியான தீவனங்களைக் கொடுக்கக் கூடாது.  கோடைக்காலத்தில் அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் மாடுகள் அடர்தீவனத்தைக் குறைத்து உண்ணும். எனவே, உண்ணும் தீவன அளவில் அனைத்து ஊட்டச்சத்துகளையும் அடர்த்தியினை அதிகரிக்க வேண்டும். குளிர்க்காலத்தில் மாடுகளின் உடல் வெப்பநிலையினைப் பராமரிப்பதற்கு அதிக எரிசக்தி தேவைப்படும். எனவே எரிசக்தி அதிகமுள்ள (மக்காச்சோளம்) தீவனத்தினை அதிகமாகக் கொடுக்க வேண்டும். குளிர்க்காலத்தில் மாடுகள் உட்கொள்ளும் அடர்தீவனத்தின் அளவு அதிகரித்துக் காணப்படும்.

மர இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகள்

மாடுகளுக்கு மரஇலைகளைத் தீவனமாகக் கொடுக்காலம்.  மரஇலைகள் கோடைக்காலத்தில் பசுந்தீவனத்திற்கு மாற்றாக இருக்கும். ஆனால் பசுந்தீவனத்தின் மொத்த அளவினை மர இலைகளைக் கொண்டு ஈடுசெய்ய முடியாது. ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாளொன்றிற்கு 5 கிலோ மர இலைகளைத் தீவனமாக கொடுக்கலாம். மரஇலைகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கும்.  மரஇலைகளில் சில எதிர் ஊட்டச்சத்துக் காரணிகளாகிய டேனின், சுப்போனின் மற்றும்  நிம்பின் இருப்பதால் மரஇலைகளை மாடுகளுக்கு அதிகம் கொடுக்கக் கூடாது. ஆதிகமாக மர இலைகளை மாடுகளுக்குக் கொடுக்கும் பொழுது மாடுகளில் வயிறு உப்பசம் மற்றும் அஜிரணக் கோளாறுகள் ஏற்படும்.

கால்நடைகளுக்கான மாற்று உலர்தீவனம் ‘நிலக்கடலை செடி’

பால் உற்பத்தியில் உலகத்தில் முதலாம் இடத்தில் இந்தியா உள்ளது. இந்த நிலையில் பால் மற்றும் பால் பொருட்களின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு, தீவனத்தினால் ஏற்படும் செலவே முக்கிய காரணமாகும். பால் உற்பத்தியில் தீவனத் தேவைக்காக 70 சதவீதம் செலவழிக்கப்படுகிறது. இதனால் தீவன செலவை குறைக்க, புதிய தீவனங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் நிலக்கடலை செடியை, கால்நடைகளுக்கு சிறந்த மாற்று உலர்தீவனமாக பயன்படுத்தலாம்.

நிலக்கடலை செடி

  • இந்தியாவில் கடலை சாகுபடி வெகுகாலமாக நடைபெற்று வருகிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், பணப்பயிராக கடலை பயிரிடப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் நிலக்கடலை எண்ணெய் மிகச்சிறந்த ஏற்றுமதி பொருளாக விளங்குகிறது.
  • கடலை புண்ணாக்கு மிகச்சிறந்த புரதச்சத்து மிக்கதாக காணப்படுகிறது. இது அனைத்து கால்நடை மற்றும் கோழித்தீவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் கடலைச்செடியானது வெயிலில் காய வைக்கப்பட்டு, சிறிய அளவில் போராக அடுக்கி வைக்கப்படுகிறது. அவ்வாறு உலர்த்தப்படும் செடி, அதிக புரதம் கொண்டதாகவும், எளிதாக செரிக்கும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கப்பட்டு வருகின்றன.

நிறைந்துள்ள சத்துக்கள்

  • நன்கு பதப்படுத்தப்பட்ட கடலைச்செடியானது 14 சதவீத புரதத்தையும், உலராத கடலைச்செடியானது 17 சதவீத புரதத்தையும் கொண்டுள்ளன. இதேபோல் கொழுப்புச்சத்து 1 முதல் 2.5 சதவீதம் உள்ளது. இந்த சத்துக்கள் கடலைச்செடியின் ரகங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
  • அதேநேரத்தில் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும், மற்ற உலர் தீவனங்களில், புரதம் மற்றும் செரிமானத்தன்மை குறைவாகவும், செரிமானத் தன்மையற்ற நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால், கால்நடைகள் அவற்றை பெரும்பாலும் விரும்புவதில்லை. அவ்வகை உலர் தீவனங்களால் பால் உற்பத்தி குறைவும், உடல் வளர்ச்சி மற்றும் கன்று வளர்ச்சி பாதிக்கப்படும்.

அதிகளவு புரதம்

  • எளிதில் சினைப்பிடிக்காத நிலையும் ஏற்படும். பயறுவகை தீவனமான கடலைச்செடியானது, அதிக அளவு புரதமும், எளிதில் செரிக்கும் தன்மையும் உள்ளதால், கால்நடைகளால் பெரிதும் விரும்பி உண்கின்றன. தற்போது அதிக விளைச்சல் தரக்கூடிய நீண்ட தண்டு, அதிக இலை வளர்ச்சி கொண்ட ரகங்கள் அதிகம் உள்ளன. இது விவசாயிகளுக்கு வருமானத்தையும், கால்நடைகளுக்கு உலர்த்தீவனமாகவும் பயன்தருகிறது.
  • நிலக்கடலை செடியை நன்கு உலர வைத்து, நிலக்கடலையை பிரித்தெடுத்த பிறகு, மீண்டும் நன்றாக உலர வைக்க வேண்டும். ஈரப்பதம் 14 சதவீதத்திற்கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகாலை அல்லது மாலை வேளைகளில் கடலைச்செடியை உலர்த்துவது நல்லது. இதன்மூலம் தேவையற்ற இலை உதிர்வை தடுக்க முடியும்.

பூஞ்சை காளான் பாதிப்பு

  • மழை மற்றும் பனிக்காலங்களில் கடலைச்செடியை தார்பாலின் கொண்டு, மூடி வைத்து பாதுகாக்க வேண்டும். நன்றாக காய வைக்காத செடிகள், மழையில் அல்லது பனியில் நனைந்தால், ஈரப்பதம் 14 சதவீதத்திற்கும் அதிகமாகிவிடும். அதை போராக அடுக்கி வைக்கும் போது, பூஞ்சை காளான்களால் பாதிக்கப்பட்டு, நச்சுப்பொருட்கள் உண்டாகின்றன.
  • இதனால் கால்நடைகளில் செரிமானக் கோளாறு, உடல் கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டு பாதிக்கப்பை ஏற்படுத்தும். உலர்ந்த கடலைச்செடியை சிறு, சிறு கட்டுகளாகக்கட்டி வைக்கலாம். பரண் அமைத்தோ, நல்ல உயரமான இடங்களில் போர் அமைத்தோ, அதன் மேல் பாயை கொண்டு மூடி மழை மற்றும் பனியில் நனையாமல் பாதுகாக்க வேண்டும்.